'வீ சேஞ்ச் யூ': குடி பழக்கத்தில் சிக்கிய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கல்வி
ஹைதராபாத்தை மையமாகக் கொண்டியங்கும் "வீ சேஞ்ச் யூ" (VChangeU) அதாவது நாங்கள் மாற்றுவோம் உங்களை எனும் அமைப்பு இலாப நோக்கமில்லாமல் இயங்குகிறது. உள்ளூர்ப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் இளந்தலைவர்களை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒருமைப்பாடு, படைப்பூக்கம், புத்தாக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை ஆதார மதிப்பீடாகக் கொண்டு இயங்குகிறது இந்த அமைப்பு. நாடுமுழுவதிலும் உள்ளூர் மட்டத்தில் இயங்கும் சிறிய சமூக குழுக்களிடையே செயல்படுவதன் மூலம் ஒரு விரிவான மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இயங்குகிறது வீ சேஞ்ச் யூ அமைப்பு.
இத்தகைய விரிவான இலக்கை மனதிற்கொண்டு இயங்கும் வீ சேஞ்ச் யூ அமைப்பை சேர்ந்த ஒரு குழு, ஆரோக்கியத்திலும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்விலும் சிறப்பான கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. தனிப்பட்ட ஒருவரின் ஆரோக்கிய வாழ்க்கையானது ஒட்டுமொத்த சமூகத்தையும் உடலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மலர்ச்சி பெறச் செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகின்றனர் மேற்படி அமைப்பினர். மதுப் பழக்கமும் புகையிலைப் பழக்கமும் தான் இந்தியாவில் அனைத்து நோய்களுக்குமான பொதுக் காரணியாக இருக்கிறது. உலகத்தின் பார்வையில் இந்தியாவின் அடையாளமே அதுதான் என்கிற அளவிற்கு மாறி வருகிறது. அதனின்று மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் இந்த அமைப்பினர்.
மதுவும், புகையிலையும் எவ்வளவு பயங்கரமான ஆபத்து நிறைந்தவை என்பதை பள்ளி மட்டத்திலும், பொது அரங்கிலும் உணர்த்தக் கூடிய கல்வித் திட்டத்தை தம் கைவசம் வைத்துள்ளனர். புகையிலை, மதுவின் வர்த்தகம் உலகமயமாகி, இவ்விரண்டு தொழில்களும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சக்தியாக வளர்ந்திருப்பதால் அவை எதிர் கொள்வதற்கு கடினமான சவால்கள் இருப்பதைப் பார்க்கிறார்கள். இளைஞர்களுக்கு கல்வி வழங்குவதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக எதிர்காலத்தில் அவற்றின் பரவலைத் தடுக்க முடியும் என்று கருதுகின்றனர். பல்வேறு விதமான விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கான திறன் வளர்ப்புத் திட்டங்களைப் பயன்படுத்தி மது, புகையிலைப் பழக்கத்தை முற்றிலுமாகத் துடைத்தொழிக்க விரும்புகிறது வீ சேன்ஞ்ச் யூ அமைப்பு. அமைப்பின் நிறுவனருவனரும், தலைவருமான விஜய் பாஸ்கர் அவை இரண்டும் மிகப் பெரிய ‘’அபாயம்’’ என கூறுகிறார்.
மது, புகையிலை மீது ஏன் இவ்வளவு கடுமையான எதிர்ப்புணர்வு கொண்டிருக்கிறார் என்பதற்கான காரணத்தை விஜய் சமீபத்தில் நமக்களித்த நேர்காணலில் விளக்கினார். அதிலிருந்து சில முக்கிய பகுதிகள் –
கேள்வி: தற்போது என்ன விதமான சவால்களை நாம் சந்திக்கிறோம், வீ சேஞ்ச் யூ இதில் எந்தவிதமாக செயல்படுகிறது?
ஆண்டு தோறும் உலகில் 80 லட்சம் மக்கள் ஏதேனும் ஒரு வகையில் நாட்டிற்கு மிகப்பெரிய பாரமாக மாறிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து குறித்து நாங்கள் பேசுகிறோம். இந்த ஆபத்தில் மாணவர்களும், இளைஞர்களும் வீழ்ந்து விடாமல் தடுப்பதற்காக தொடர்ந்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று பேசுகிறோம்.
என்கள் குழுவில் சுகாதாரத்துறை வல்லுனர்கள் என்று தனியாக இல்லாமல் இருந்தாலும், சுகாதாரத்தை எங்கள் முக்கிய அம்சமாக கொண்டு செயலாற்றி அதில் மாற்றங்கள் கொண்டு வருவதில் வெற்றி அடைந்தும் வருகிறோம்.
எடுத்துக்காட்டாக புகையிலையற்ற உலகம் – புகையிலை பழக்கத்தைக் கட்டுப்படுத்த புத்தாக்க மற்றும் படைப்பூக்க அணுகுமுறை என்ற எங்களது விளம்பரச் சுவரொட்டி 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 – 16 பாஸ்டனில் உள்ள வெஸ்டின் பாஸ்டன் வாட்டர் ஃபிரண்ட் ஹோட்டலில் நடைபெற்ற நிக்கோடின் மற்றும் புகையிலை ஆய்வுக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தின் விளக்கவுரை நிகழ்ச்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு முன்பு 2010 இல் மும்பையில் நடைபெற்ற இரண்டாவது தேசிய மாநாட்டில் பயில்தொகை பெறுநர்களாகத் தேர்வு செய்யப்பட்டோம். 2012 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற புகையிலை அல்லது ஆரோக்கியத்தின் 15 வது சர்வதேச மாநாட்டிலும் பயில்தொகைப் பெறுநர்களாகத் தேர்வு பெற்றோம்.
புத்தாக்கம் என்பது வியாபாரத்திற்கு மட்டுமே தேவைப்படுகிற ஒன்று என்று நாங்கள் கருதவில்லை. சமூக நலனில் அக்கறையோடு இலாப நோக்கமற்ற ஒரு செயலுக்கும் படைப்பூக்கம் தேவைப்படுவதாகவே நினைக்கிறோம்.
கேள்வி: உங்கள் அமைப்பு தனது இலக்கில் வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணிகளாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்…?
சமூகப் பிரச்சனைகளை நோக்கிச் சென்றதும், அவற்றைக் கையில் எடுப்பதற்கான துணிச்சலும், தொழில்நுட்பத்தின் பால் எங்களுக்கிருந்த ஈடுபாடும் தான் காரணம் என்று நினைக்கிறோம். நாங்கள் தயாரித்த படைப்பூக்கமிக்க சுவரொட்டிகளும், குறும்படங்களும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தன. எனவே மனப்பூர்வமாக சாதகமான வழியில் சிந்தித்தார்கள். அதுவே வாழ்நாள் முழுவதும் மது, புகையிலையிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வழி வகுத்தது.
அவர்களது ஆயுளைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வே முக்கிய பங்கு வகிக்கிறது. மது, புகையிலை ஆபத்து பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது. மது, புகையிலையைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் மேற்கொண்ட புத்தாக்க ரீதியிலான முயற்சி, அந்த பழக்கத்தை கட்டுப்பாட்டுக் கொள்கையிலும், அவற்றை அமல்படுத்துவதிலும் பெருமளவு பலனளித்திருப்பது கடந்த மூன்றாண்டு ஆய்வில் தெரிய வருகிறது.
மது, புகையிலைக்கு எதிராக நாங்கள் வடிவமைத்த எண்ணற்ற சுவரொட்டிகளும், எதிர்ப்பு இயக்கங்களும், புத்தாக்கச் சிந்தனைகளும் இளந்தலைமுறையினர் மத்தியில் பெரும் விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது. முப்பரிமாண, இரட்டைப் பரிமாண குறும்படங்களைத் தயாரித்து அவற்றை நாங்கள் புகையிலை எதிர்ப்புப் பரப்புரைகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் திரையிட்டும் காட்டி வருகிறோம்.
அதுமட்டுமல்லாது பல்வேறு விதமான சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 150 முகநூல்களின் ஆதரவுடன் முன்னூறுக்கும் மேலான பதிவேற்றமும், பின்னூட்டமும் பெற்றுள்ளோம். சமூக நலன்களுக்காக இத்தகைய வெளிப்பாட்டு நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி புதிய புதிய தீர்வுகளை படைப்பாக்கத் திறனுடன் உருவாக்குவோம்.
கேள்வி: இன்னமும் மது, புகையிலை பழக்கம் சமூகத்தில் பரவலாகவே நிலவி வருகிறது. இந்த இரண்டின் பயன்பாடும் இனி ஒரு துளியளவும் இல்லாத வண்ணம் முற்றாக நிறுத்துவதற்கு எத்தகைய இயக்கம் துவங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர எந்தப் பகுதியில் கூடுதலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் கிராமப் புறத்திலா நகர்ப்புறத்திலா?
தற்போது நடைப்பெறும் பாதி கொலை, விபத்து மரணங்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை, குழந்தைப் புறக்கணிப்பு, தற்கொலை போன்ற குற்றங்கள் மதுப் பயன்பாட்டால் நிகழ்கின்றன. எங்ளைப் பொறுத்தவரை மதுவிற்கு ஆதரவாக இருப்பவர்கள், மதுவை வாங்குபவர்கள் இது போன்ற குற்றங்களையும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் வன்முறையையும் ஆதரிப்பவர்கள் என்றே கருதுகிறோம். மது, புகையிலை அபாயத்தையும் அது தொடர்பான நிகழ்வுகளையும், அச்சூழல் காரணிகளையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது தான் மது, புகையிலையைத் தடுப்பதற்கான ஒரே வழி.
மதுவையும், புகையிலையையும் தடைசெய்வதை நாங்கள் தீவிரமாக ஆதரிக்கிறோம். சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் சம்பவம் குறித்துப் பலரும் பேசுகிறார்கள். ஆனால் ஒருவரும் அந்த சம்பவத்தில் மதுவிற்கு உள்ள முக்கியத்துவம் குறித்துப் பேசுவதில்லை. ஏனென்றால் மது அத்தகைய ஆபத்தான வேலையைச் செய்கிறது. மதுவின் பயன்பாடு அவ்வளவு சர்வ சகஜமாக மாறி வருவது குறித்துப் பேசுகிற துணிச்சல் இங்கு யாருக்கும் இல்லை.
புகையிலை வர்த்தகமும், சந்தைப்படுத்தலும் உலகமயமாக்கப்படுவதால், புகையிலைத் தீமையில் இருந்து பாதுகாப்பது நமக்கு மெய்யான சவாலாக இருக்கிறது. புகையிலை தொழில் மிகப்பெரிய உலகச் சக்தியாகச் செயல்படுகிறது. எனவே புகையிலைப் பயன்பாட்டையும், அதை நிறுத்துவதையும் தனிப்பட்ட ஒருவரின் செயல்பாடாக மட்டுமே நாம் கவனப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. அதனைப் பொதுச் சுகாதார அம்சமாகவும், சுற்றுச் சூழல் கேடாகவும் கருத வேண்டியுள்ளது.
மது மற்றும் புகையிலையற்ற கிராமங்கள், வீடுகள் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் பெருகி வரும் ஆபத்தைத் தணிக்கலாம். நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடுகையில் கிராம மக்களுக்கு மருத்துவச் சேவை குறைவாக வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும் மது, புகையிலைக்கு எதிராகப் போராடுகிறவர்களும், செயல்பாட்டாளர்களும் நகர்ப்புறங்களிலேயே சேவையாற்றி வருகின்றனர். எனவே அப்பகுதிகளில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மாற்றங்களும் பெருமளவு நிகழ்ந்து வருகிறது.
கேள்வி: மது, புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு அரசாங்கம் என்ன செய்யமுடியும் என்று கருதுகிறீர்கள்? பல இடங்களில் சோதனை மையங்களை உருவாக்கி இருக்கிறார்கள். கடைகளில் சிறுவர்களுக்கு சிகரட் விற்பதை ஓரளவு குறைத்துள்ளனர். சட்டப்படியான வயதை அடைந்தவர்கள் தான் சிகரட் வாங்க முடியும் என்பது தீவிரப்படுத்தப்பட வேண்டுமா? அல்லது வேறு ஏதேனும் வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?
புகையிலை தொடர்பாகத் தோன்றும் புற்று நோய், இருதய மற்றும் நுரையீரல் நோய் போன்றவற்றிற்குச் சிகிச்சை அளிக்க அரசு உண்மையில் மூன்று மடங்கு பெருந்தொகையைச் செலவழித்து வருகிறது. புகையிலையைத் தடை செய்யுமானால் இந்தப் பணம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்குச் செலவிட முடியும்.
மதுவும், புகையிலையும் ஆரோக்கியக் கேட்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் மருத்துவ செலவு உயர்வைக் காரணம் காட்டி அவற்றின் உற்பத்தி மீது அரசாங்கம் கடுமையாக வரி விதிக்க வேண்டும். வரி விதிப்பு அவற்றின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், பரவலாவதைத் தடுக்கவும் ஓரளவு உதவி புரியும்.
மது, புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்க பல சட்டங்களைப் போட்டு வைத்துள்ளது. ஆனால் உண்மையில் அவை போதிய கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதில்லை. கண்காணிப்புத் தேவைப்படுகிறது. இன்றும் கூட சிறுவர்கள் புகையிலை, மது போன்றவற்றை எளிதாக வாங்க முடிகிறது. பொது இடங்களில் சிகரட் புகைப்பது இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கேள்வி: சமூக ஈடுபாடு உடையோருக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
லாபகரமான தொழில் நடத்துவோர் தாங்கள் பணத்தை ஆடம்பரத்திற்குச் செலவிடுவதற்குப் பதிலாக சமூக நலனுக்குச் செலவிடுமாறு சமூக நலனில் அக்கறை கொண்ட தொழில் முனைவருக்குக் கூறுகிறோம்.
கேள்வி: எமது வாசகர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களது தனிப்பட்ட அல்லது தொழில்ரீதியான கட்டுப்பாடுகள் அவர்களின் விருப்பப்படி இயங்க அனுமதிப்பதில்லை. அல்லது பலர் சமூக ஈடுபாட்டை எப்படி வெளிப்படுத்துவது எங்கிருந்து துவங்குவது என்று புரியாமல் இருக்கின்றனர். சுதந்திர இந்தியா பல கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது என்றாலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. ஒருவர் ஒரு காபிக்கு 50 ரூபாய் செலவழித்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் மொத்தக் குடும்பத்தின் உணவுக்கும் 50 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடிகிறது. இந்த இடைவெளியை நாம் குறைத்தாக வேண்டும். சமூகம் எப்போதும் மாற்றங்களை வரவேற்கவே செய்கிறது. ஆனால் இளைஞர் சமூகம் முழுவதும் மாற்றத்திற்காக எழுந்து நிற்க வேண்டும். மாற்றத்தைச் சரியான திசை வழியில் கொண்டு செல்ல வேண்டும்.