3 அடி உயரம்; உதாசீனப்படுத்திய மருத்துவக் கவுன்சில் - சட்டப் போராட்டத்தில் வென்று டாக்டர் ஆகிய கணேஷ் பரையா!
“உருவத்தை வைத்து ஒருவருடைய திறமையை எடைபோடக்கூடாது” என்பதை 3 அடி உயரமுள்ள மருத்துவர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
“உருவத்தை வைத்து ஒருவருடைய திறமையை எடைபோடக்கூடாது” என்பதை 3 அடி உயரமுள்ள மருத்துவர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இளம் தலைமுறையினருக்கு கல்வி மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவும், கனவுகளை அடையவும் உயர்கல்வி பெறுவதை முக்கியமானதாக கருதுகின்றனர். படிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தாலும்.. இயலாமையால் சிலர் சிரமப்படுவார்கள். குறிப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் சிறுவயதிலிருந்தே பல வகையான அவமானங்களைச் சந்திப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், சிலர் அத்தகைய ஊனத்தை கருத்தில் கொள்ளாமல் தடைகளை தகர்த்தெறிந்து சாதிக்கிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும், 3 அடி உயரமே இருந்தாலும், தனது மருத்துவக் கனவில் சாதித்துக்காட்டிய கணேஷ் பரையா என்ற இளைஞரின் வெற்றிக்கதைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
யார் இந்த கணேஷ் பாரையா?
குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் பாரையா சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டார். பரையா சமீபத்தில் எம்பிபிஎஸ் முடித்து ஜூனியர் டாக்டராக பணியாற்றி வருகிறார். ஆனால், 3 அடி உயரம் கொண்ட இவர், அந்த நிலைக்கு வருவதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், உயரம் குறைந்ததால் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஆம், வெறும் 3 அடி உயரமே உள்ள கணேஷால் அவசரகாலத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கவோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியது.
சட்டப்போராட்டம்:
தடையை ஏற்றுக்கொண்டு கணேஷ் சும்மா இருக்கத் தயாராக இல்லை. தனது கனவை எப்படி நினைவாக்குவது என்று தீர்மானித்த அவர், தனது பள்ளி முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அமைச்சரை கூட சந்தித்து உதவி கேட்டார். இறுதியாக நியாயம் கேட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தின் படிகளில் ஏறினார். ஆனால், குஜராத் நீதிமன்றம் இவரது வழக்கை தள்ளுபடி செய்தது.
எத்தனை தடைகள் வந்தாலும் தன் விருப்பத்தை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். இறுதியாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 2018ல் வெற்றி பெற்றார். அதற்குள் அந்த ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கை முடிந்து விட்டது. எனவே, 2019 ஆம் ஆண்டு MBBS இல் சேர்க்கை கிடைத்தது. பாவ்நகர் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே படிப்பை முடித்து டாக்டர் ஆனார்.
சமீபத்தில் கணேஷ் பரையா அளித்த பேட்டி ஒன்றில்,
“பெரிய லட்சியம் கொண்டவர்களுக்கு ஊனம் ஒரு தடையல்ல. நாம் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால், அதை விடாமுயற்சியுடன் சாதிக்க வேண்டும்,” எனக்கூறியுள்ளார்.
தற்போது அவர் பாவ்நகரில் உள்ள சுர்தி அரசாங்கத்தில் இளநிலை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.