1947க்கு முன்பே தொடங்கி இன்றும் நிலைத்திருக்கும் 3 இந்திய ப்ராண்ட்கள்!
இந்தியா 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு தொடங்கப்பட்டு, நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மூன்று பிராண்டுகள் பற்றிய தொகுப்பு இது.
இந்தியா 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு தொடங்கப்பட்டு இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மூன்று பிராண்டுகள் பற்றி இங்கு பார்ப்போம்.
இந்த பிராண்டுகள் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், காலத்திற்கேற்ப செயல்பாடுகளை மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது.
இந்த பிராண்டுகள் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், காலத்திற்கேற்ப செயல்பாடுகளை மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது.
சுதந்திரத்துக்கு முன் தொடங்கப்பட்ட 3 இண்டிய ப்ராண்ட்கள்
Dabur
Dabur நிறுவனம் 1884-ம் ஆண்டு டாக்டர் எஸ்கே பர்மன் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்.
இந்தியாவின் ஹெல்த்கேர் வணிகத்திற்கு இந்த பிராண்ட் அடித்தளம் போட்ட காலகட்டம் இது. அப்போது கொல்கத்தா, நாட்டின் தலைநகராக இருந்தது. நாட்டின் சுதந்திரம் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தது. நரேந்திரநாத் தத்தா, அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசியுடன் சுவாமி விவேகானந்தராக மாறிய காலகட்டம் அது. டாபர் நிறுவனம் தொடங்கப்பட்டு சரியான ஓராண்டிற்குப் பிறகு, அதாவது, 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.
டாக்டர் எஸ்கே பர்மன் ஆயுர்வேதத்தின் உதவியுடன் மருந்துகள் தயாரிக்கத் தொடங்கினார். இவை காலரா, மலேரியா போன்ற நோய்களுக்கு பலனளித்ததாக நிரூபிக்கப்பட்டது. படிப்படியாக கூடுதல் மூலிகைகளை சேர்த்து மற்ற மருந்துகளையும் தயாரிக்கத் தொடங்கினார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
1896-ம் ஆண்டு தொழிற்சாலை அமைத்தார். இந்த சமயத்தில்தான் சுவாமி விவேகானந்தர் பிரிட்டனில் மாக்ஸ் முல்லரை சந்தித்தார். இவர்தான் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர்.
நாடு சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைத்த சமயத்தில் Dabur நிறுவனமும் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
டாக்டர் எஸ்கே பர்மன் 1907-ம் ஆண்டு உயிரிழக்க Dabur நிறுவனம் அடுத்த தலைமுறையின் கைகளுக்கு மாறியது. மென்மேலும் வளர்ச்சியடைந்தது.
கொல்கத்தாவின் குறுகிய சாலையில் தொடங்கப்பட்ட Dabur, 1972-ம் ஆண்டு டெல்லி சாஹிபாபாத் பகுதியில் தொழிற்சாலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் விரிவடைந்தது. இன்று பர்மன் குடும்பத்தின் மொத்த நிகர மதிப்பு 11.8 பில்லியன் டாலர்.
Mysore Sandal Soap
மைசூர் நகரம் ராயல் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, சந்தனத்திற்கும் பிரபலமான நகரம். இங்கு சந்தனம் அதிகளவில் கிடைக்கின்றன.
இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது. உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். போர் காலத்தில் சந்தனமர வர்த்தகம் முற்றிலுமாக ஸ்தம்பித்தது. மைசூரிலிருந்து சந்தனமரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. மைசூரிலேயே அதிகளவில் சந்தன கட்டைகள் தேங்கிவிட்டன. இதைப் பார்த்த மைசூர் திவான் மோக்சகுண்டம் விசுவேஸ்வரய்யா 1916-ம் ஆண்டு சந்தன எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்து தொழிற்சாலை அமைத்தார்.
சந்தன எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சிக்கல் எழுந்தது. அரண்மனையில் வேலை செய்தவர்கள் மகாராஜா குளிக்கும் நீரில் சந்தன எண்ணெயைக் கலக்க ஆரம்பித்தனர். மெல்ல அந்த எண்ணெய் சோப்பாக மாறியது. சந்தனத்தால் ஆன சோப்பைப் பயன்படுத்திய ராஜா இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு சேர்க்க விரும்பினார்.
மகாராஜரின் திவான் மோக்சகுண்டம் விசுவேஸ்வரய்யா மும்பையிலிருந்து தொழில்நுட்ப நிபுணர்களை வரவழைத்து இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (IISc) வளாகத்தில் சோப்பு தயாரிப்பை பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
விரைவில் சோப்பு சந்தையில் கிடைக்கத் தொடங்கியது. கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த சோப்பு பிரபலமானது. மைசூர் சாண்டல் சோப்பு ராயல் மக்கள் பயன்படுத்துவது என்கிற எண்ணம் இன்றளவும்கூட மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
Hamdard
வலியில் பங்கெடுப்பது என்பதே Hamdard என்கிற வார்த்தையின் அர்த்தம். ஹக்கீம் ஹஃபிஸ் அப்துல் மஜீத் பழைய டெல்லியின் சாலைகளில் சின்ன சின்ன வியாதிகளுக்கு சிகிச்சையளித்து வந்தார். 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Hamdard டிஸ்பென்சரி இவருடையதுதான்.
பிரிட்டிஷ் அரசின் பிரித்து ஆளும் கொள்கை இந்து பெரும்பான்மையினரையும் முஸ்லீம் பெரும்பான்மையினரையும் பிரித்தது. ஆனால், ஹக்கீம் சாஹப் பின்பற்றிய வழிமுறைகள் இந்து ஆயுர்வேத முறையும் கிரீஸ் நாட்டின் யுனானி முறையும் ஒன்று சேர்ந்தது.
டெல்லியின் கடும் வெப்பத்தில் மக்கள் தவிப்பதைப் பார்த்து ஹக்கீம் சாஹப் மூலிகைகள், மசாலாக்கள் போன்றவற்றைக் கொண்டு சிரப்/சர்பத் தயாரித்தார். இந்த சர்பத் தான் Rooh Afza. டெல்லி முழுவதும் இந்த சர்பத் பிரபலமானது.
அந்த சமயத்தில்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. அதேபோல், Hamdard செயல்பாடுகளும் இரண்டாக பிரிந்தன. ஹக்கீம் மஜீத்தின் மூத்த மகன் ஹக்கீம் அப்துல் ஹமீத் இந்தியாவில் தங்கிவிட, இளைய மகன் ஹக்கீம் மொஹம்மத் சயீத் பாகிஸ்தான் சென்றார். இவர் பாகிஸ்தானில் Rooh Afza தயாரிக்கத் தொடங்கினார். 1953-ம் ஆண்டு ஹக்கீம் மொஹம்மத் சயீத் தாக்காவில் இரண்டாவது கிளையைத் திறந்தார்.
Hamdard, Roof Afza ஆகிய தயாரிப்புகள் எத்தனையோ ஆண்டுகள் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
தமிழில்: ஸ்ரீவித்யா