கிராமத்தில் தொழில் தொடங்கி லாபம் ஈட்ட 3 சூப்பர் யோசனைகள்!
கிராமத்தில் தொழில் தொடங்கி லாபம் ஈட்ட விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் 3 தொழில் யோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தொழில் தொடங்குவது பலரின் கனவாக இருக்கும். இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதவிதமாக தொழில் செய்வார்கள். அதாவது, தொழிலின் தன்மை மாறுபடும். இடம் மாறுபடும். தொழில் செய்யும் அளவு மாறுபடும். விற்பனையை அதிகரிக்கச் செய்ய வகுக்கப்படும் உத்திகள் மாறுபடும்.
இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரது மனதிலும் எப்போதும் இருப்பது ஒரே கேள்வி:
என்ன தொழில் செய்தால் அதிக லாபம் பார்க்கமுடியும்?
இந்தியாவில் பெரும்பாலானோர் கிராமத்தில் வசிப்பவர்கள். இவர்களுக்கும் தொழில் செய்து லாபம் ஈட்டவேண்டும் என்கிற விருப்பம் இருக்கும்.
அப்படி கிராமத்தில் இருந்துகொண்டே தொழில் செய்து லாபம் ஈட்ட விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் 3 வணிக யோசனைகள் இதோ.
லாபம் ஈட்டும் 3 தொழில் யோசனைகள்
மளிகைக் கடை
இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அனைத்தையும் விரலசைவில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாங்கிவிடுவது சாத்தியமாகிவிட்டது. இருந்தாலும் கிராமங்களுக்கும் சிறுநகரங்களுக்கும் சென்றால் இன்றும் மளிகைக் கடைகளில் கூட்டம் இருப்பதைப் பார்க்கமுடியும்.
எனவே, மளிகைக் கடை தொடங்கலாம். மலிவு விலை, தரம் என மக்களின் தேவையறிந்து அதற்கேற்றவாறு பொருட்களை விற்பனை செய்தால் வாடிக்கையாளர்களை அதிகம் கவரமுடியும்.
அதேபோல், இந்த தொழிலுக்கு இவ்வளவு தொகை முதலீடு போட்டுதான் தொடங்கவேண்டும் என்றில்லை. நம்மிடம் இருக்கும் தொகையைக் கொண்டு தொழில் தொடங்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
மலர் சாகுபடி
கிராமத்தில் இருந்துகொண்டு தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு மலர் சாகுபடி சரியான தேர்வாக இருக்கும். உங்களுக்கென்று பிரத்யேகமாக நிலம் இருக்குமானால் அதில் பூக்களை சாகுபடி செய்யலாம். அல்லது ஒப்பந்த அடிப்பையில் விவசாயம் செய்யலாம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மலர் சாகுபடி செய்து பலர் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து மலர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் நல்ல வாய்ப்பு இருக்கிறது. எப்படி சந்தைப்படுத்துவது என்பதைத் தெரிந்துகொண்டால் போதும் நல்ல விலையில் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.
கோழிப்பண்ணை அல்லது மீன் வளர்ப்பு
கிராமத்தில் இருக்கும் மக்கள் மீன் வளர்ப்பிலோ கோழிப்பண்ணை தொழிலிலோ ஈடுபடலாம். இவற்றிற்கான தேவை அதிகமிருப்பதால் தொழிலில் சிறக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் மீன் அல்லது கோழிக்கு நோய் எதுவும் பரவாமல் பராமரிக்கவேண்டியது அவசியம். இல்லையெனில் இதுவே தொழிலுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என்பதால் அதிக கவனம் தேவை.
தமிழில்: ஸ்ரீவித்யா