இந்தியாவிற்கு அவமானத்தை தேடித்தந்த 8 மிகப்பெரிய ஊழல்கள்!
உலகம் முழுவதும் 2 ட்ரில்லியன் டாலர் தொகை ஊழலில் வீணாக்கப்படுவதாக இன்டர்னேஷனல் மானிட்டரி ஃபண்ட் (IMF) தெரிவிக்கிறது. இது உலகின் ஜிடிபியில் இரண்டு சதவீதம் பங்களிக்கிறது. ஊழலை ஒழித்து ஒற்றுமையை ஊக்குவித்து உலகளவில் நட்பை வலுப்படுத்துவதற்கான தேவை உள்ளது என்பதால் ஐக்கிய நாடுகள் டிசம்பர் 9-ம் தேதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது. ஊழலை எதிர்த்து வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பை சாத்தியப்படுத்துவதற்காக ஒருங்கிணையவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
இந்தியாதான் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக ஊழல் நிறைந்த நாடு என்று ஊழலுக்கு எதிராக போராடும் பெர்லின் சார்ந்த அரசு சாரா நிறுவனமான ட்ரான்ஸ்பரன்சி இண்டர்னேஷனல் தனது சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பத்து பேரில் ஏழு பேர் பொதுப்பணி சேவைகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலை உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஊழலை சமாளித்து கருப்புப் பணப்புழக்கத்தின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசியளவில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. பல்வேறு கொள்கைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்தியதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதற்கான சில நடவடிக்கைகளாகும்.
சமீபத்தில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து உலகின் பல நாடுகள் ஊழலை ஒழிக்க தீர்மானித்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்த சில மிகப்பெரிய ஊழல்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
1. அபிஷேக் வர்மா ஆயுத ஒப்பந்த ஊழல்
ஒரு நபர் மூன்று ஊழல்கள்...
பிரபல ஆயுத வியாபாரியாக நம்பப்படும் அபிஷேக் வர்மா ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஒப்பந்த வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி சொகுசு ஹெலிகாப்டர் லஞ்ச ஊழல் மற்றும் கடற்படை போர் அறை ரகசியங்களை கசியவிட்ட வழக்கு ஆகியவற்றில் பிரதான சந்தேக நபராவார்.
இவரது பெற்றோர் இருவரும் அரசுத் துறையில் இருந்ததால் அபிஷேக் குழந்தைப் பருவம் முதலே ஊடகங்களுக்கும் பொதுவாழ்க்கைக்கும் புதிதல்ல. 1997-ம் ஆண்டு 28 வயதிலேயே இளம் பில்லியனர் என பெயரிடப்பட்டார்.
பிஎஸ்என்எல், பன்னாட்டு எஃப்எம்சிஜி ப்ராண்டுகள், சர்வதேச விமானநிலைய கட்டுமானங்கள் என பல்வேறு வணிக கூட்டணியுடன் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் நிறுவனங்கள் வட்டாரத்தில் இவர் ‘லார்ட் ஆஃப் வார்’ என்றே அறியப்பட்டார்.
இந்திய அரசாங்கத்தால் வாங்கப்பட்ட 6 ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான 4-5 பில்லியன் டாலர் இந்திய இராணுவ ஒப்பந்தத்திற்காக சுமார் 200 மில்லியன் டாலர் லஞ்சம் வாங்கியதாக 2006-ம் ஆண்டு அபிஷேக் குற்றம்சாட்டப்பட்டார். மேலும் 2012-ம் ஆண்டு அபிஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் எதிராக பல்வேறு ஊழல் மற்றும் பணமோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டதால் அவரது வீடும் நிறுவனங்களும் சிபிஐ அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
2013-ம் ஆண்டு அகஸ்டா வெஸ்ட்லாண்ட் விவிஐபி ஹெலிகாப்டர்ஸ் லஞ்ச ஊழலில் சந்தேகத்திற்குரிய நபர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இருந்தது. இந்த ஊழலில் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு 50 மில்லியன் யூரோவிற்கும் அதிகமான தொகை லஞ்சமாக வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த தம்பதியை விடுவித்தது.
2. வக்ஃப் வாரிய நில மோசடி
நாட்டின் மிகப்பெரிய நில மோசடியாக கருதப்படும் கர்நாடக வக்ஃப் வாரியம் நில மோசடியில் 2,000 பில்லியன் ரூபாய் மதிப்புடைய நில ஒதுக்கீட்டில் மோசடி செய்யப்பட்டது.
கர்நாடக வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 27,000 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாக 2012-ம் ஆண்டு கர்நாடக மாநில சிறுபான்மை கமிஷன் சமர்பித்த அறிக்கையில் குற்றம்சாட்டியது. இந்த நிலமானது நலிந்த மற்றும் ஏழை மக்களுக்கு முஸ்லீம் தொண்டு நிறுவனத்தின் மூலம் நன்கொடையாக வழங்கப்படவேண்டியதாகும்.
நிலத்தின் 50 சதவீதத்தை அரசியல்வாதிகள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக கர்நாடக மாநில சிறுபான்மை கமிஷன் தலைவர் அன்வர் மனிபட்டி தெரிவித்தார். கர்நாடக வக்ஃப் வாரியத்தின் ஒப்புதலோட ரியல் எஸ்டேட் மாஃபியாவுடன் இணைந்து நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பைக் காட்டிலும் மிகக்குறைவாக மதிப்பிடப்பட்டு மோசடி செய்யபட்டது.
இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
3. தெல்கி ஊழல்
2002-ம் ஆண்டில் அப்துல் கரீன் தெல்கி இந்தியாவில் போலி முத்திரைத் தாள் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு தரகு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு முத்திரத் தாள்களை விற்பனை செய்வதறகாக 350 போலி தரகர்களை நியமித்தார். 12 மாநிலங்கள் முழுவதும் நடந்த இந்த ஊழலின் மதிப்பு சுமார் 200 பில்லியன் ரூபாய்.
முத்திரைத் தாள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை சார்ந்த அரசுத் துறையிடமிருந்து தெல்கிக்கு ஆதரவு கிடைத்ததாக விசாரணையில் தெரியவந்தது. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் தெல்கி மற்றும் பல்வேறு கூட்டாளிகளுக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
4. நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்
2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளும் அரசியல் கட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தொடர்பான ஊழல் வெளிப்பட்டது. 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி புகாரளித்தார்.
ஆரம்பத்தில் 10.7 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் ஊழல் தொகை 1.86 லட்ச ரூபாய் என இறுதி அறிக்கை தெரிவித்தது.
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசாங்கம் ஏலம் விடும் முறையையே பின்பற்றும். எனினும் அரசாங்கம் தனியாருக்கு கொடுத்திருப்பதாக சிஏஜியின் விசாரணை தெரிவிக்கிறது.
இதன் காரணமாக தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறைவாக பணம் செலுத்தியததால் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி குறிப்பிட்டது.
5. 2ஜி அலைக்கற்றை ஊழல்
2008-ம் ஆண்டு மொபைல் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் குறைவான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரியவந்தது. மொபைல் ஃபோன்களுக்கு 2ஜி அலைக்கற்றை சந்தா உருவாக்குவதற்காக இந்த உரிமம் பயன்படுத்தப்பட்டது.
இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குறிப்பிடுகையில்,
”வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கும் கட்டாயமாக வசூலிக்கப்படவேண்டிய கட்டணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு 1.76 ட்ரில்லியன் ரூபாய்.”
2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடானது என்று அறிவித்த உச்சநீதிமன்றம் அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் ஏ ராஜா பதவியில் இருந்தபோது 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
6. ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு ஊழல்
மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் 31 அடுக்கு மாடி கட்டிடமானது போரில் உயிர் தியாகம் செய்தோரின் குடும்பங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஆகியோரின் நலனுக்காக கட்டப்பட்டது. பத்தாண்டுகளாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பல்வேறு விதிகளை மீறியதாக 2011-ம் ஆண்டு தலைமை கணக்குத் தணிக்கையாளர் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் போன்றோருக்காக முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது.
உறுப்பினர்கள் தங்களுக்காக சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைவாக மதிப்பிட்டு ஒதுக்கீடு செய்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 2011-ம் ஆண்டு தலைமை கணக்குத் தணிக்கையாளர் குறிப்பிடுகையில்,
முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் சுய லாபத்திற்காக அரசு நிலங்களை அபகரிக்க எவ்வாறு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு புறம்பாக நடந்துகொண்டார்கள் என்பதை ஆதர்ஷ் குடியிருப்பு சம்பவம் உணர்த்தியுள்ளது.
இந்த ஊழல் காரணமாக மஹாராஷ்டிராவின் அப்போதைய முதலமைச்சரான அஷோக் சவான் 2010-ம் ஆண்டு ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷீல்குமார், சிவாஜிராவ் நிலங்கேகர் பட்டீல் ஆகிய மூன்று முன்னாள் முதலமைச்சர்கள், ராஜேஷ் டோப், சுனில் தட்கரே ஆகிய இரண்டு முன்னாள் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் 12 உயர் அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பான பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டுளதாக சிஏஜி குற்றம்சாட்டியது.
7. காமன்வெல்த் விளையாட்டு ஊழல்
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 70,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததுள்ளதாக தெரியவந்தது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆரம்பத்திலிருந்தே சட்டவிரோதமான ஒப்பந்தங்கள், குற்றவியல் சதி, ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துவந்ததாக கூறப்படுகிறது.
அப்போது புனே மக்களவை எம்பியாக இருந்த சுரேஷ் கல்மாடிக்கு ஊழலில் முக்கிய பங்கு இருப்பதாக கூறப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டு கல்மாடி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஸ்விஸ் டைமிங் சாதனம் தொடர்பான ஒப்பந்தத்தில் 141 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் 95 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் இந்திய விளையாட்டு வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு பதிலாக மோசமான குடியிருப்புகளில் தங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
8. சத்யம் ஊழல்
2009 கார்ப்பரேட் ஊழல் இந்திய முதலீட்டாளர்களையும் பங்குதாரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சத்யம் கணிணி நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு நிறுவனத்தின் கணக்குகளை தவறாக காட்டி 14,000 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜுவிடம் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது. ராஜு உள்பட 10 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிறுவனத்தை டெக் மஹிந்திரா பெற்றுக்கொண்டது.
ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா