மத்திய அரசு, இளம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது. மாநில அரசுகளும் சிலவும் இவ்விஷயத்தில் முற்போக்காக செயல்படுகின்றன. இது குறித்து, இதோ ஒரு விரிவான அலசல்!
தொழில் முனைவோருக்கு உகந்த சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் சீனா, இஸ்ரேல் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா. முதல், இரண்டாமிடங்களை முறையே இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன. தொழில்நுட்பத்தில் தேர்ந்த இளைஞர் பட்டாளம் ஒன்று கார்ப்பரேட் வேலைதான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்காமல் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று துணிந்த இளைஞர்களால்தான் இந்த சாதனை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனையை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.
கடந்த 1990 களில் பொருளாதார தாராளமயமாக்கல் அறிமுகமானது. அதற்கடுத்த பெரிய அளவிலான பொருளாதார சீர்திருத்தம் என்றால் அது ஜனவரி 16 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா’ திட்டம்தான். சிவப்பு நாடா முறையும் தெளிவற்ற கொள்கை விதிகளும் தொழில் முனைவோருக்கு தடைக்கற்களாக இருந்தபோதிலும் இந்திய மாநிலங்கள் பலவும் தொழில் முனைவோருக்கு சாதகமாகவே இருக்கின்றன. அம்மாநிலங்கள் எத்தகைய பங்களிப்பைச் செய்துள்ளன என்பதையும் அவை இன்னும் எவ்வகைகளில் மேலும் சாதிக்க முடியும் என்பதையும் யுவர் ஸ்டோரி அலசுகிறது.
இதுவரை நடந்த கதை:
தொழில்முனைவோருக்கு இணக்கமான சூழலை உருவாக்குவதில் தென்னிந்தியா கலக்குகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகியவை தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கொள்கை உருவாக்கத்தில் நாட்டின் இதர மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக, இடவசதி, போக்குவரத்து தொடர்பின்மை பிரச்சனையில் உள்ள இரண்டாம் கட்ட நகரங்களில் அடிப்படைக் கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் இவை கவனம் செலுத்தியிருக்கின்றன.
2015 நவம்பரில் கர்நாடக அரசு நாட்டிலேயே முதன்முறையாக தொழில்முனைவோர் கொள்கையை அறிமுகம் செய்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது. அக்கொள்கையின்படி ஆய்வு நிறுவனங்களுடன் கைகோர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் தொழில் முனைவோர் அடைகாப்பகங்கள் உருவாக்கப்படும். இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் 2013ல் மாநில அரசு தொழில் முனைவோருக்கான மையத்தைத் தொடங்கியது. இரண்டாவது மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
கேரள அரசு, தனது தொழில் முனைவோர் கொள்கையை ‘கேரளா ஐ.டி. மிஷன்’ என்ற பெயரில் 2014ல் அறிவித்தது.. இதற்காக ரூ.5,000 கோடியை முதலீடாகத் திரட்டப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. 2012ல் நாட்டின் முதல் தொலைத்தொடர்புத்துறை தொழில்முனைவோர் கிராமத்தைக் கேரளம் உருவாக்கியது. மேலும் 10 புதிய தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்கள், 10 லட்சம் சதுர அடியில் தொழில்முனைவோர் அடைகாப்பகம் ஆகியவற்றைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்தது. இக்கொள்கையின்படி மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 1 விழுக்காட்டை ‘இளைஞர் தொழில்முனைவோர் செயல்பாடுகளுக்’காக (2019 வரை) அரசு ஒதுக்கும். வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்களை தொழில் முனைவோருக்கு கடனுதவி செய்ய அரசு அழுத்தம் கொடுக்கும். மேலும் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட துவக்க நிலை துணிகர முதலீட்டு நிறுவனங்களில் 25%வரை அரசு முதலீடு செய்யும். இதுதவிர அடைகாப்பகங்களுக்கு அவை திரட்டும் முதலீட்டுக்கு இணை மானியம் அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்யும்.
தெலங்கானா அரசு இன்னும் ஒரு படி முன்னே சென்று ‘தெலங்கானா அகாடமி ஃபார் ஸ்கில் அண்ட் நாலெட்ஜ்’( டாஸ்க்) என்ற பெயரில் தொழில்முனைவுப் பயிற்சிகளை வழங்குகிறது. நாட்டின் இளைய மாநிலமான அது, ‘டி-ஹப்’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய தொழில்முனைவு அடைகாப்பகத்தை ஓராண்டுக்கு முன்பு தொடங்கியபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அதன் இரண்டாவது கட்டம் தொடங்கவிருக்கிறது.
ஆந்திர அரசு 17,000 சதுர அடி பரப்பில் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் புதுமைக்கண்டுபிடிப்புப் பூங்காவைத் தொடங்கியிருப்பதுடன் புத்தாக்க படைப்புகளுக்கான ரூ.100 கோடி நிதியத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிதியம் செபியால் அங்கீகரிக்கப்பட்ட துணிகர முதலீட்டு நிதியங்களில் முதலீடு செய்ய (அதிக பட்சம் 15%) இருக்கிறது. அதேப்போல தொழில் தொடங்க அனுமதி, வரி மற்றும் இதர பதிவுகளுக்காக ஒற்றைச் சாளர அலகு ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது.
அதேபோல மத்தியப் பிரதேச அரசும் சிட்பி-யுடன் இணைந்து ரூ.200 கோடிக்கு துணிகர முதலீட்டு நிதியம் ஒன்றை உருவாக்க இருக்கிறது. அரசின் பங்காக ரூ.75 கோடி இருக்கும். அண்மையில் மேற்கு வங்க அரசு தொழிற்கொள்கை ஒன்றை (இடிசிஎன்) உருவாக்கியிருக்கிறது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தொழில்முனைவு மேம்பாட்டு மைய நெட்வொர்க் உருவாக்கப்படும். இதற்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 லட்சம்வரை மாநில அரசு நிதியுதவி செய்யும். மேலும் தொழில்நுட்ப அடைகாப்பகங்களை உருவாக்குவதற்கும் மே.வங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
ராஜஸ்தான் மாநில அரசும் கடந்த அக்டோபரில் தொழில்முனைவோர் கொள்கையை அறிவித்தது. ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டுக் கழகத்தில் (RIICO) ‘தொழில்முனைவோருக்கான பாலைவனச் சோலை’ என்ற பெயரில் ஒரு தொழில்முனைவோர் அடைகாப்பகத்தை அரசு தொடங்கியிருக்கிறது. புதிய தொழில் ’ஐடியா நிலை’யில் இருந்தால்கூட (உரிய அனுமதிக்குப் பிறகு )குறிப்பிட்ட தொழில் முனைவோருக்கு மாதம் ரூ.10,000ஐ உதவித் தொகையாக அளித்து தொழில் முனைவை ஊக்குவிக்க இருப்பதாக அம்மாநில அரசு சொல்லியிருக்கிறது. தொழில் வழிகாட்டிகள், அடைகாப்பகத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வது, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு மாநிலப் பல்கலைக் கழகங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி ஆகியவை இலவசமாகவே வழங்கப்பட உள்ளன. துவக்க நிலை தொழில் முனைவோருக்கு சந்தைப்படுத்துதலுக்கு உதவ தலா ரூ.10 லட்சம்வரை உதவி தரப்படுகிறது.
துடிப்பான தொழில்முனைவுச் சூழல் இருந்தும் தொழில்முனைவோருக்கு உகந்த கொள்கைகள் குஜராத் அரசிடம் இல்லை. பெரும்பாலான தொழிற்கொள்கைகள் உற்பத்தித் துறையைக் கருத்தில்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. பிஹாரின் நிதிஷ்குமார் அரசு ரூ.500 கோடிக்கு துணிகர முதலீட்டு நிதியம் ஒன்றை பிஹார் தொழில்முனைவோர் கூட்டமைப்புடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறது. அவ்வமைப்பு ரூ.50 கோடியை ஏஞ்சல் முதலீடாகத் தருகிறது.
பரவாயில்லையே!
மாநில அரசுகள் பலவும் தங்களுக்கு ஆதரவாகவும் எளிதில் அணுகும்படியாகவும் இருப்பதாக தொழில்முனைவோர் பலரும் சிலாகிக்கின்றனர். “இதுவரை நாங்கள் சந்தித்த அரசு அலுவலர்கள் அனைவரும் எங்களைப் புரிந்துகொண்டு உதவிவருகின்றனர்” என்கிறார் பெங்களூருவில் செயல்படும் வூனிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுஜாயத் அலி.
தே.ஜ.கூட்டணி, நாடெங்கும் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அறிவித்தது. அது ஓரளவுக்கு நடைமுறைக்கு வருகிறது. “மத்தியப் பிரதேச அரசு புதிய யோசனைகளுக்கு செவி கொடுக்கிறது. 2013ல் நாங்கள் ஒரு தகவல் மையத்தைத் தொடங்கியபோது பல சவால்களைச் சந்தித்தோம். ரூ.5000 கோடி இருந்தால்தான் சந்தைக்குள்ளேயே நுழைய முடியும் என்கிற நிலை இருந்தது. ஆகவேதான் அரசிடம் ஒரு தகவல் பூங்காவை உருவாக்குமாறு கோரினோம். அடுத்த 45 நாட்களில் ரூ.17 கோடி செலவில் அரசு, ஒரு டேட்டா சென்டரைத் தொடங்கியது” என்கிறார் இந்தூரில் ராக் பேங்க் தகவல் மையத்தை நடத்திவரும் நரேந்திர சிங். மாநில அரசு, இப்பூங்காவுக்காகவே தனிக் கொள்கையை உருவாக்கி சலுகைகளை வழங்குவதாகச் சொல்கிறார் சிங். எடுத்துக்காட்டாக, நீங்கள் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவதாக இருந்தால் அரசு உங்களுக்கு கடன் அளிக்கிறது. 5% வட்டியில் கடன் தருவதுடன் ரூ.5 கோடி அளவுக்கு மானியத்தையும் மாநில அரசு வழங்குகிறது.
தெலங்கானாவின் டி-ஹப், ஹைதராபாதை ஒரு அடுத்த ஸ்டார்ட் அப் நகரமாக்க இருப்பதாகக்கூறி தொழில்முனைவோருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. ”தெலங்கானாவில் தொழில் தொடங்குவது முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் எளிது” என்கிறார் ஹைதராபாதிலிருந்து இயங்கும் ஸிப்பர் (Zippr) நிறுவனத்தின் நிறுவனர் ஆதித்ய வுச்சி. மத்திய, மாநில அரசுகள் தொழில் முனைவு விஷயத்தில் கூட்டாக சேர்ந்து இயங்க வேண்டும் என்கிறார் அவர்.
பாதை தெரிகிறது பார்!
புதிய தொழில்முனைவோரை உருவாக்க வேண்டுமென்றால் துணிகர முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு சலுகைகள் வழங்குவது, தொழில் முனைவோருக்கு வரிச்சலுகை தருவது ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் கூட்டாக வலியுறுத்துகின்றனர். அதேபோல போட்டித்திறனும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
“தற்போது ஆங்காங்கே நடைபெற்றுவரும் ஹேக்கத்தான் நிகழ்வுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். மேலும் அனுபவமுள்ள தொழில்முனைவோரை, தொழில் வழிகாட்டிகளாக ஆக்குவதற்கு ஒரு மேடை உருவாக்கப்பட வேண்டும்” என்கிறார் ஸிப்பர் நிறுவனத்தின் ஆதித்யா. தெளிவான அரசுக் கொள்கை மூலம் நடைமுறை சிக்கல்கள் களையப்படும் என்று வூனிக் நிறுவனத்தின் சுஜாயத் நம்புகிறார். அவரது நிறுவனத்தைத் தொடங்குவதற்கு அவருக்கு இரண்டு மாதங்கள் பிடித்திருக்கிறது. சிவப்பு நாடா முறை தனக்கு பெரிய தொந்தரவாக இருந்தது என்கிறார் அவர். “நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாகவே எங்களிடம் அலுவலக முகவரி கோரப்பட்டது. அரசின் சில கொள்கைகள் தொழிலையும் வாடிக்கையாளர்களையும் துன்புறுத்துகின்றன. எடுத்துக்காட்டாக கேரளாவில் சந்தை நன்றாக இருந்தும் அங்கு எங்கள் சேவையை வழங்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை” என்கிறார் சுஜாயத்.
கேரளாவில் தொழில்முனைவோருக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்கிறார் திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் ஆன்லைன் மளிகைக் கடை நிறுவனமான கடா-வின் இணை நிறுவனர் ஷான் எம்.ஹனிஃப். நேரக்கட்டுப்பாடு, அமைப்பில் உள்ள குளறுபடிகள் ஆகியவற்றால் தொழில்முனைவோர் சிரமத்துக்கு ஆளாவதாக அவர் கூறுகிறார். “விற்பனை வரி, வருமான வரி, சேவை வரிச் சட்ட நடைமுறைகள் என்று எல்லாவற்றுக்கு தனித்தனியே வெவ்வேறு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஒற்றைச் சாளர முறை இருந்தால் உதவியாக இருக்கும்” என்கிறார் எம்.ஹனிஃப்.
“நாற்பத்தைந்து அனுமதிகளுக்கு மேல் வாங்க வேண்டியிருக்கும் சூழலில் ஒற்றைச் சாளர முறையால் என்ன பயன்?” என்று கேட்கிறார் தொழில்முனைவுத்துறை வல்லுநரான சஞ்சய் ஆனந்த்ராம். அவரது கருத்துப்படி கம்பெனிகள் சட்டம் ஏகப்பட்ட சான்றிதழ்கள், அனுமதிகளை வலியுறுத்துகிறது. “தொழில்முனைவோருக்கான சட்டங்களில் எளிமையும் தெளிவும் இருக்க வேண்டும்” என்கிறார் அவர். ஷான் எம்.ஹனிஃப், இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். “வரிச்சட்டங்கள், நிதியுதவிகள் குறித்து ஆலோசனை தர வழிகாட்டிகள் குழு ஒன்றை அரசு உருவாக்க வேண்டும் என்கிறார் எம்.ஹனிஃப்.
மிகவும் தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவு நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் சவால்கள் இருக்கின்றன. வேலூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தகவல் பாதுகாப்பு நிறுவனமான ஃபிக்ஸ் நிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சண்முகவேல் சங்கரன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துவக்க நிலை தொழில்முனைவோராக இருந்தேன். முதலீட்டைத் திரட்டுவதற்காக நான் தட்டாத கதவுகள் இல்லை. கடைசியாக தமிழக அரசின் கடனுதவியாக ரூ.1 கோடி கிடைத்தது” என்கிறார். அவரது கருத்துப்படி புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை கடனுதவி கிடைத்தாலே பெரும் மாற்றங்களை சாத்தியப்படுத்திவிட முடியும் என்கிறார் அவர். முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட துறையில் மட்டுமே போய் கொத்துக்கொத்தாக விழுவதைச் சாடுகிறார் சண்முகவேல் சங்கரன். இளைய தொழில் முனைவோருக்கு அரசே துவக்க முதலீட்டை வழங்க வேண்டும் என்பது அவரது கருத்து.
ஆனால் அரசு, ஒரு இடைநிலையாளராக செயல்பட்டு முதலீட்டாளர்களையும் தொழில் முனைவோரையும் இணைக்க வேண்டுமே தவிர, அதுவே ஒரு முதலீட்டாளராகக் களம் இறங்கிவிடக்கூடாது என்பது சஞ்சயின் வாதம். வங்கிகள் கடன் தருவோராகச் சுருங்கிவிடாமல் பங்குதாரர்போல செயல்பட வேண்டும் என்பது அவரது கருத்து. தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை நவீனப்படுத்துவதன் மூலமாக லஞ்சம் போன்ற தேவையற்ற குறுக்குவழிகளைத் தவிர்த்துவிட முடியும் என்கிறார் அவர்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்குவது மட்டும்தான் கஷ்டம் என்றில்லை, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை மூடுவதும் கடினம்தான். ”ஓராண்டுக்கு முன்பு எனது புதிய நிறுவனம் தோல்வியடைந்தது ஆனால் இப்போதுவரை நிறுவனத்தை மூடமுடியவில்லை. தொடர்ச்சியாக அரசுக்கு பல்வேறு படிவங்களை சமர்ப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் முன்னாள் தொழில் முனைவோரும் அஸ்படா இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியுமான சஹில் கினி.
அவரது கருத்துப்படி, தோல்வியடைந்த தொழில்முனைவோர் பிக்கல் பிடுங்கலின்றி தொழிலிருந்து வெளியேவர அரசு அனுமதிக்க வேண்டும். “ஐக்யா (IKEA) நிறுவனம் இந்தியாவுக்குள் வர விரும்பியபோது, ஒரு துணிகர முதலீட்டு நிதியம் உள்ளே வரும்போது அவர்கள் இரு வகைகளில் முதலீட்டை மேற்கொள்கின்றனர். இவ்விரு நிறுவனங்களையும் ‘அந்நிய நேரடி முதலீடு’ என்கிற ஒரே பார்வையில் பார்க்கக்கூடாது” என்கிறார் மேலும் அவர்.
யுவர்ஸ்டோரியின் கருத்து:
பலரும் நினைப்பதுபோல இந்தியாவில் தோன்றியுள்ள ஸ்டார்ட் அப்-களுக்கு இணக்கமான சூழல், வெறும் நீர்க்குமிழியல்ல. 2015இல் 850 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1005 ஒப்பந்தங்கள்மூலம் 9 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியிருக்கின்றன. வணிகம் செய்ய உகந்த சூழல் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி (2016 ஆம் ஆண்டுக்கானது) தொழில் தொடங்க தொழில் முனைவோர் கடனுதவி பெறும் விஷயத்தில் இந்தியா 42 ஆவது இடத்தில் இருக்கிறது. அதாவது, இங்கு மூலதனம் திரட்டுவது கடினம்.
மக்கள் தொகைய்ல் 80% பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்ற சூழல் இருக்கும் நம்மைப் போன்ற ஒரு நாட்டில், வேலையின்மை மிகுந்த ஒரு நாட்டில் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம்.
சிங்கப்பூரை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு தொழில் முனைவோருக்கு அவ்வளவு சலுகைககள். இஸ்ரேலை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஜிடிபி-யில் 4.3% அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல இங்கிலாந்தும் முதலீட்டாளர்களுக்கு தள்ளுபடிகள், வரிச்சலுகைகளை வழங்குகிறது. நாமும் இவர்களைப்போல செயல்பட்டு தொழில்முனைவோரின் நண்பனாக ஆக முடியும்.
அனைவரும் சேர்ந்து உழைத்தால்தான் முன்னேற்றம் சாத்தியம். இந்தியாவில் திறமை, அர்ப்பணிப்பு எல்லாம் இருக்கிறது. இப்போது முடிவு அரசின் கையில். சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் இவ்விஷயத்தில் நாம் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் எளிதில் முந்திச் செல்ல முடியும்.
ஆக்கம்: ஆதிரா நாயர் | தமிழில்: தூரிகை
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் பற்றிய தொடர்பு கட்டுரைகள்:
பிரதமர் மோடியின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!
இந்தியா அடுத்த சிறந்த தொழில்முனை நாடு என்பதற்கான 16 காரணிகள்!
வாடிக்கையாளர் திருப்தி அடைந்தால் முதலீடு குவியும்: நிகேஷ் அரோரா