'பொறியாளன் ஆகுங்கள், பொறியியல் பட்டதாரியாக அல்ல'- சிவகுமார் பழனிப்பன்
சிலரை பார்த்தவுடன் நம் மனதுக்குள் உற்சாகம் தோன்றும், நம்பிக்கை பிறக்கும். மேலும் அவர்களோடு நீண்ட நாட்கள் பழகிய உணர்வும் ஏற்படும். இவை அனைத்தும் சிவகுமார் பழனியப்பனை சந்தித்தப் போது எனக்கு நிகழ்ந்தது. அவரது பேச்சாற்றல் மற்றும் கருத்துகளை முன்வைக்கும் விதம் ஊரறிந்த விஷயம். இன்றும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்வில் அடுத்து என்ன செய்வது என்ற புரிதலை வழங்கி வரும் ஊக்கமிகு பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் சிவகுமாரின் பயணம் எங்கிருந்து துவங்கியது? அவரோடு தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய நேர்காணல் இதோ...
கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?
பதில்: எனது பெயர் சிவகுமார் பழனியப்பன். ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். தந்தை இரண்டாம் வகுப்பு வரையிலும் தாய் ஐந்தாம் வகுப்பு வரையிலும் மட்டுமே படித்தவர்கள் . விவசாயக் குடும்பத்தை சார்ந்தவர்கள். இருப்பினும் கல்வி மிகவும் முக்கியமானது, நம் வாழ்வை மாற்றும் வல்லமை பெற்றது என்ற எனது பெற்றோரின் நம்பிக்கை, என் வாழ்விலும் எனது சகோதரியின் வாழ்விலும் பெரிய மாற்றத்தை உருவாக்கியது .
முதலில் தமிழ் வழிக்கல்வி மூலம் பள்ளியில் கற்று பின்பு ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் திருப்பூரில் இருந்த ஒரு பள்ளியில் படித்தேன். பின்னர் மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டம் பெற்று, பெங்களுருவிற்கு வேலை தேடிச் சென்றேன். அங்கு சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களில் வடிவமைப்புப் பொறியாளராக, தலைமை பொறியாளராக, திட்டத்தலைவராக பணிபுரிந்தேன்.
கேள்வி: உங்கள் மனதில் தொழில்முனைவு பற்றிய சிந்தனை எப்போது வந்தது ?
பதில்: பள்ளிப்பருவம் முதலே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததால், புதியவற்றை கற்கும் ஆர்வம் இயல்பாகவே என்னிடம் இருந்தது. பெங்களுருவில் பிலிப்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த போது, அங்கு பணியாற்றுபவர்கள், தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள பல பயிற்சி வகுப்புகள் இருந்தன. அவற்றில் இணைந்து பயிற்சி பெற மேலதிகாரிகள் மற்றவர்களை வற்புறுத்திக் கொண்டிருக்கையில், நான் மட்டும் தானாகவே அனைத்து வகுப்புகளிலும் இணைந்து பயிற்சி பெற்றது அவர்களுக்கு ஆச்சர்யத்தை தந்தது.
அங்கு இருந்த சில மூத்த பயிற்சியாளர்களோடு நட்பு ஏற்பட்டது. அவர்கள் செய்த பணி என்னை மிகவும் கவர்ந்தது. அவர்கள் எந்த நிறுவனத்தோடும் இணைந்தவர்கள் அல்ல. பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள பணியாளர்களுக்கு பல துறைகளில் பயிற்சியளித்து, அவர்களை சிறந்த பணியாளராக மாற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான் நானும் அவர்களை போன்று சுயமாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மெல்ல மெல்ல நான் பேச்சாளராகவும், பயிற்சியாளராகவும் மாறி வந்த சமயத்தில் தான் “தனிமனித நிபுணவத்துறை” உருவாகி வளர்ச்சி பெறத் துவங்கியது. நானும் அதில், தனி மனித தொழில்முனைவராக என்னை இணைத்துக்கொண்டேன்.
கேள்வி: முழுநேர பணியை விடுத்து தொழில்முனையும் முடிவை எடுப்பது எவ்வளவு கடினமாக இருந்தது?
பதில்: அந்த முடிவு மிகக் கடினமானதாக எனக்கு தெரியவில்லை. ஏன் என்றால் அதைப் பற்றி நன்கு சிந்தித்து, நன்கு திட்டமிட்டு பின் செயலாற்றிய ஒரு முடிவு அது. நான் பெங்களுருவில் இருந்து கோயம்புத்தூர் வந்தடைந்ததே இங்கு ஒரு பயிற்சி அளிக்கும் தொழில் முனைவை துவங்கத்தான்.
நான் என்னைத் தயார் செய்து கொண்டேன் என்று சில அம்சங்களை குறிப்பிடுகிறார்:
வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்த துறையில் வல்லுனராக தேவைப்பட்ட திறன் மற்றும் அறிவாற்றல் பேச்சாற்றல்
ஒரு வருடத்திற்கு எனது செலவுகளுக்குத் தேவையான பணம் (இல்லத்தில் நான் மட்டுமே சம்பாதித்து வந்தேன்)
தொழில் துவங்க மற்றும் அதில் உதவ தேவையான நட்பு மற்றும் சுற்றுவட்டம்
எனது தொழிலுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்குவது மற்றும் எனது பயிற்சி வகுப்புகளை பிரபலப்படுத்துவது
இவ்வாறு மேல் கூறியவற்றை பற்றி நன்கு சிந்தித்து முடிவெடுத்திருந்தேன். எனவே முடிவு கடினமானதாக இல்லை.
கேள்வி: தொழில்முனைவின் ஆரம்பத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன ?
பதில்: முதலில் மனதில் பல யோசனைகள் இருந்தன, அனைத்து யோசனையும் சரி என மனதில் பட்டது. பல தொழில்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் மனதில் இருந்தது. ஆனால் சிறிது காலம் கழித்தே முழு கவனத்தையும் முதலில் ஒரு துறையில் குவித்து பயணிப்பதே சிறந்தது என உணர்ந்தேன். அதன் பின்னரே "கரியர் கோச்சிங்" அதாவது பணி வாழ்க்கை பயிற்சியாளர் துறையில் கவனம் செலுத்தினேன்.
தொழிலில் வரவு செலவுகளை கணக்கிடுவது கடினமான காரியமாக இருந்தது. ஒரு நிறுவனத்தில் சம்பளம் வாங்கியவரை எனது வரவு செலவுகளை நான் கணக்கிட்டதில்லை. ஆனால் சற்று முயற்சித்து தற்போது அந்நிலையை மாற்றியுள்ளேன். ஆனால் தற்போதும் நான் சில விஷயங்களை கவனிக்கத் தவறுவதாக எனது கணக்காளர் என் மீது குற்றம் சொல்வதுண்டு..!
அடுத்ததாக நான் தொழில் துவங்கியவுடன் என்னிடம் பயிற்சி பெற மக்கள் அதிக அளவில் வருவார்கள் என எண்ணினேன். அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது கடினமாக இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் நான் தொழில் துவங்கிய போது வெறும் நான்கு பேர் தான் பயிற்சி பெற வந்தனர். அதில் இருவர் என் நண்பர்கள், மற்றொருவர் என் மனைவி, மீதம் இருந்த ஒரு நபர் மட்டுமே கட்டணம் செலுத்தி பயிற்சி பெற வந்தவர். எனவே தொழில் முனைவது நாம் நினைப்பது போன்று சுலபமல்ல என்பதை உணர்ந்தேன்.
கேள்வி: நீங்கள் பலருக்கு முன்மாதிரியாக திகழுகிறீர்கள். உங்களுக்கான உத்வேகத்தை எங்கிருந்து பெருகின்றீர்கள்?
பதில்: உங்கள் கேள்விக்கு பதில் எனது புத்தக வாசிப்பு பழக்கமே என்று சொல்வேன். பல தலைப்புகளில் நான் படிப்பதுண்டு. சுவாமி விவேகானந்தா, முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சாஹீத் பகத்சிங், இவர்களை போன்று வாழும் பொழுதே பல சாதனைகளை புரிந்த மனிதர்களை நான் முன்மாதிரியாகப் பின்பற்றுகின்றேன்.
மேலும் என்னிடம் பயிற்சி பெற வருபவர்களிடமிருந்தும் எனக்கான உத்வேகம் கிடைக்கின்றது. பயிற்சி வகுப்பு முடித்து 1 வாரமோஅல்லது 1 மாதமோ கழித்து, அப்பயிற்சி அவர்களை எப்படி மாற்றியுள்ளது என்பதை பற்றி என்னிடம் அவர்கள் கூறுகையில், இக்காரியத்தை தொடர்ந்து செய்வதற்கான ஊக்கம் தன்னாலே அமைந்து விடுகிறது.
கேள்வி: தங்களது மாஸ்ட்டரிங் மைன்ட் அகாடமியை பற்றி சில வார்த்தைகள்?
பதில்: உண்மையைக் கூறவேண்டும் என்றால், தற்போது மாஸ்ட்டரிங் மைன்ட் அகாடமி, கணக்கு வழக்குகளுக்காக காகிதத்தில் உள்ள நிறுவனமே. என் கவனம் முழுதும், எனது அனுபவங்களை, ஆர்வத்தை, கவனத்தை ஒரு புள்ளியில் குவித்து, பேச்சாற்றல், பயிற்சியளித்தல், வாழ்வியல் மற்றும் கரியர் பற்றி பயிற்றுவித்தல் ஆகியவற்றில் வல்லுனராக இருப்பது மட்டுமே.
கேள்வி: உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு?
பதில்: என் பயிற்சி வகுப்புகள் முடித்த பின்பு பல பாராட்டுகள், அதை பற்றிய கருத்துகள் என பல கிடைக்கும். ஆனால் அவற்றுள் மறக்க இயலாதது ஒரு சிறுமியின் தாய் கூறியதே..
"கரியர் மாஸ்டரி இண்டென்சிவ்" என்ற 3 நாள் பயிற்சி வகுப்பிற்கு பின்பு அதில் பயிற்சி பெற்ற ஒரு சிறுமியின் தாய், என்னிடம் வந்து,
"உங்கள் வகுப்பில் பயிற்சி பெறும் வரை என் மகள் தன் வாழ்வில் என்ன செய்வது என்பது பற்றி சரியான ஒரு புரிதல் இல்லாமல் இருந்தாள். ஆனால் பயிற்சி பெற்ற பின்பு, சரியான புரிதலோடு, கல்லூரியில் ஒரு படிப்பை தேர்வு செய்து, தற்போது அவளின் நீண்ட கால கனவுகளை நனவாக்க முயற்சித்து வருகிறாள். நாங்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளோம். அவளிடம் ஒரு தெளிவு பிறப்பதற்கு உங்கள் பயிற்சி வகுப்பேக் காரணம். உங்களுக்கு நன்றி" எனக் கூறி சென்றார்.
இன்று வரை அந்த ஒரு பாராட்டு என்னால் மறக்க இயலாதது. பல பாராட்டுக்கள் கிடைத்தாலும், அது பொக்கிஷமாக இன்றும் மனதுக்குள் உள்ளது.
கேள்வி: தற்போது எழுத்தாளர் ஆக முயலுபவர்களுக்கு நீங்கள் கூறுவது?
பதில்: எழுத்தாளன் மற்றும் புத்தக ஆசிரியர் என்று நான் என்னை கூறிக்கொள்வதற்கு இன்னும் பல தூரம் கடக்கவேண்டியுள்ளது. நான் முதலில் எழுதிய ஒரு வலைப்பதிவே பின்னர் "பிக்கம் ஆன் இன்ஜினியர் நாட் ஜஸ்ட் ஆன் இன்ஜினியரிங் க்ராஜூவேட்" என்ற எனது முதல் புத்தகத்தை எழுத வைத்தது. மேலும் அந்த புத்தகம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே எழுத நினைப்பவர்களுக்கு நான் கூறுவது உடனடியாக நீங்கள் எழுத ஆரம்பியுங்கள் என்பதே. மேலும் உங்கள் கருத்துகளை சரிவர வெளிபடுத்த கற்றுக்கொள்ள வேண்டும். மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவு செய்துவைத்தல் அவசியம். பின்னர் எழுதும் நேரத்தில் அவை பயனளிக்கும்.
மேலும் அவர் கூறும் சில குறிப்புகள்:
* எழுத ஆரம்பியுங்கள்
* உங்களுக்கு மிகவும் பிடித்தது பற்றி எழுதுங்கள்
* முடிவு கச்சிதமாக இருப்பது பற்றி கவலை வேண்டாம்
* பொறுமையாக இருத்தல் அவசியம். குறுக்குவழிமூலம் நல்ல எழுத்து பிறக்க வழி இல்லை
* நீங்கள் எழுதுவதை பற்றி நிறைய படிக்கவும்
* எழுதிக்கொண்டே இருங்கள்
கேள்வி: உங்கள் எதிர்கால திட்டங்கள்?
பதில்: இத்தொழிலில் வல்லமை பெற்று இந்தியாவின் தொழில்முறை பேச்சாளர்கள், வாழ்வியல் மற்றும் கரியர் பயிற்சியாளர்கள் மத்தியில் முதலிடம் பெறுவது. மேலும் எனது கனவெல்லாம், இங்குள்ள இளைஞர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் என்ன தேர்வு செய்வது என்பது பற்றிய தெளிவான புரிதலோடு இருக்க வேண்டும் என்பதே. இதுவே சிவகுமார் பழனியப்பன் ஆகிய என்னுடைய நோக்கம் மற்றும் லட்சியம்.
கேள்வி: பொது மேடைகளில் பேசுவது உங்கள் தனிச்சிறப்பு. அங்கே நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் பொன்மொழிகள் என்ன?
பதில்: அப்படிப் பார்த்தால் நிறைய உள்ளன. ஆனால் சிலவற்றை நான் மிக அதிகமாக உபயோகிப்பேன். அவை:
"மரக்கிளையில் அமர்ந்துள்ள பறவை, கிளை உடைவதை பற்றிக் கவலை கொள்வதில்லை. அது கிளையை நம்புவதில்லை. தன் இறக்கையை நம்புகிறது."
"எழுவீர், விழிப்புடன் இருப்பீர், உங்கள் குறிக்கோளை அடையும் வரை நிற்காதீர்."
"எந்த மனிதனும் ஒரே ஆற்றில் இருமுறை இறங்குவதில்லை. ஏன் என்றால் அவன் அதே மனிதனும் அல்ல, ஆறும் அதே ஆறும் அல்ல."
கேள்வி: பொது மேடைகளில் பேசுவதற்கு என்ன மாதிரியான அடித்தளத்தை ஒருவர் அமைத்துக்கொள்ள வேண்டும்?
பதில்: இதேக் கேள்வியை பலர் என்னிடம் கேட்கின்றனர். "நான் தொழில் முறை பேச்சாளன் ஆக என்ன செய்ய வேண்டும்? என்று, எனது பதில், கீழ் வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டுபிக்க இயன்றால் போதும் என்பேன்...
எதை பற்றி பேசுவீர்கள் ?
என்ன பேசுவீர்கள்? பொது மேடைகளில் பேசிய பழக்கம் உள்ளதா உங்களுக்கு?
நீங்கள் பேசும் தலைப்பில் உங்களுக்கு அனுபவம் உள்ளதா?
நீங்கள் பேசுகையில் யார் கேட்பார்கள்? அவர்கள் ஏன் கேட்கவேண்டும்??
நீங்கள் பேசுவதை கேட்க அவர்கள் கட்டணம் செலுத்துவார்களா?
இவற்றுக்குப் பதில் கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் பதில் கிடைக்கும்.
கேள்வி: ஒரு வாழ்வியல் மற்றும் கரியர் கோச் ஆக எதை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்; தொழில் முனைவா? அல்லது மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பதா?
பதில்: ஒரு கரியர் கோச் ஆக, பொதுவாக நான் யாருக்கும் அறிவுரை கூற இயலாது. தனிமனிதனின் கற்கும் திறன், உழைக்கும் திறன், பொருத்து பதில் மாறுபடும். மாத சம்பளத்திற்கு உழைத்தல், தொழில் முனைதல் இரண்டிலும் அவற்றுக்கு ஏற்ப விழைவுகள் உள்ளன. எனினும் இன்றைய உலகில் வாய்ப்புகள் நிறைந்துள்ளன. அவற்றை வைத்து இளைஞர்கள், தங்களுக்கான ஒரு பொருளை உருவாக்கி, வெற்றி பெற இயலும். எனவே தொழில் முனைவதை பற்றி நன்கு ஆராய நான் பரிந்துரைப்பேன். ஏன் என்றால் அதில் உங்களுக்கான ஒன்றை நீங்கள் உருவாக்க பல வழிகள் உள்ளன.
சிவகுமார் பழனியப்பன் வலைத்தளம்