கேரளாவில் பள்ளிக்கூடம் அருகில் திறக்கப்பட்ட மதுபானக் கடையை எதிர்த்து போராடி அதை மூடவைத்த மாணவிகள்!
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கான தடை வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அமலுக்குவருகிறது. அதனால் பல மதுபான கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை ஹைவேசில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் கேரளாவில் ஒரு மதுக்கடை பேக்கர் சந்திப்பில் இருந்து நாதென்கோடுக்கு மாற்றப்பட்டது. ஆனால் புதிதாக இடமாற்றப்பட்ட அந்த இடம், மகளிர் பள்ளிக்கூடம் ஏஞ்சல்ஸ் கான்வெண்டில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ளதால் பிரச்சனை எழுந்தது.
பள்ளிக்கு அந்த கடை வழியே சென்று வருவது அந்த பள்ளி மாணவிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக நடந்து செல்லும் மாணவிகளுக்கு கஷ்டமாக இருந்ததால், அவர்களே தங்கள் கைகளில் இதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை எடுத்தனர். சுமார் 100 பள்ளி மாணவிகள் தங்கள் ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினருடன் இணைந்து அந்த மதுபானக் கடையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதுள்ள சட்டத்தின் படி, பள்ளிகள் அருகாமையில் சுமார் 150 மீட்டர் தூரம் வரை மதுக்கடைகள் இருக்கக்கூடாது. என்டிடிவி இடம் பேசிய அந்த பள்ளி மாணவி ஒருவர்,
“எங்கள் பள்ளிக்கு அருகில் ஒரு மதுக்கடை இயங்குவது பாதுகாப்பானது இல்லை. பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி என்பதால் மதுக்கடையை தாண்டி நடந்து செல்வது எங்களுக்கு அச்சத்தை தருகிறது. எங்களின் பாதுகாப்பு மிக முக்கியம்,” என்றார்.
அந்த பள்ளியின் முதல்வர் பேசுகையில்,
“எங்கள் பள்ளி மாணவிகளின் வருங்காலம் குறித்து கவலையாக இருந்தது. ஆனால் தற்போது நாங்களே இதற்து தீர்வு காண போராட்டத்தில் இறங்கியுள்ளோம்,” என்றார்.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை திறக்கப்பட அந்த மதுக்கடை, போராட்டத்தின் காரணமாக வியாழக்கிழமை மூடப்பட்டது. தற்காலிகமாக மூடிவிட்டு மீண்டும் கடை திறக்கப்படும் என்று செய்தி பரவியதால் கோவமடைந்த மாணவிகள், அமைச்சர் டிபி.ராமகிருஷ்ணனிடம் முறையிட்டனர். அதன்படி, அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த மதுப்பானக்கடையை நிரந்திரமாக மூட உத்திரவாதம் அளித்தார். துணிந்து நின்று போராடியதன் பலனை இன்று கண்டுள்ள மாணவிகள் மக்களின் குரலுக்கான தாக்கத்தை உணர்த்தியுள்ளனர்.
கட்டுரை: Think Change India