Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

10 பேர் டு 10 ஆயிரம் பேர் - ஆர்கானிக் பொருட்கள் விற்பனையின் வெற்றி ரகசியம் பகிரும் செந்தில்நாதன்!

பட்டம் படித்துவிட்டு கட்டுமானப் பணி செய்து கொண்டிருந்தவர் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்நாதன். பாரம்பரிய விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டவர் இன்று ஈரோட்டில் ஆர்கானிக் பொருட்கள் நேரடி விற்பனையகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

10 பேர் டு 10 ஆயிரம் பேர் - ஆர்கானிக் பொருட்கள் விற்பனையின் வெற்றி ரகசியம் பகிரும் செந்தில்நாதன்!

Friday December 22, 2023 , 5 min Read

உயிரில் கலந்திருக்கிறது இயற்கை, உணவில் மட்டுமே ஏன் செயற்கை? ஒரு விதை மரமாகிறதா மண்ணிற்கு உரமாகிறதா என்பதை இயற்கையே முடிவு செய்கிறது.

அத்தகைய இயற்கையை பேணிப் பாதுகாத்து பாரம்பரியங்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்கிற உயர் கொள்கையைக் கொண்டவர் நம்மாழ்வாரின் வழித்தோன்றலான ஈரோடு மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதன்.

சிறு வயது முதலே அப்பா, தாத்தா என எல்லோரும் விவசாயம் செய்வதையே பார்த்து வளர்ந்தவர். அவ்வப்போது இவரும் வயல்களில் வேலைகளைச் செய்திருக்கிறார். பள்ளிப் படிப்பு முடிந்து, பட்டம் பெற்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ueir organics

செந்தில்நாதன், நிறுவனர் & சிஇஓ, உயிர் ஆர்கானிக்ஸ்

விவசாயத்திற்கு திரும்பியது ஏன்?

நம்மாழ்வார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த செந்தில்நாதன், 40வது வயதிற்குப் பின்னர் விவசாயத்திற்கே திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். கட்டுமானப் பணியை விட்டுவிட்டு தனக்கு சொந்தமான நிலத்திலேயே இயற்கை விவசாயத்தைத் தொடங்கலாம் என்று தீர்மானித்துள்ளார்.

”எங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தது, செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தை கெடுப்பதோடு, நஞ்சான விளைபொருளை உற்பத்தி செய்யவும் எனக்கு விருப்பமில்லை. லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் இயற்கை விவசாயம் செய்து முழு ஆத்ம திருப்தியோடு வாழ வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன்.”

தொடக்கத்தில் இயற்கை வேளாண் விவசாயிகளின் கூட்டங்கள் என்ற அளவிலேயே விவசாயிகள் நாங்கள் ஒன்று சேர்ந்து செயற்கை தெளிப்பான்கள் இல்லாமல் எப்படி மகசூல் செய்வது என்பன போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வந்தோம். எங்களது அடுத்தடுத்தக் கூட்டங்களின் நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஒருவருக்கு ஒருவர் விலைக்கு வாங்கிக் கொள்வது என்கிற முதல் அடியை எடுத்து வைத்தோம்.

ரசாயனக் கலப்பில்லாத உணவுப் பொருட்களின் நற்பலனை நாம் மட்டுமே அனுபவிக்காமல் மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்தோம். அதற்கேற்றாற் போல எங்களது கூட்டத்தின் போது அங்கிருக்கும் பொதுமக்கள் விளைபொருட்களை தாங்களும் வாங்கிப் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தனர்.

”அதனால் எங்களுக்குத் தேவையானது போக எஞ்சியிருப்பதை மக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினோம்,” என்று உயிர் ஆர்கானிக்ஸ் துளிர் விடத் தொடங்கியதை விவரிக்கிறார் செந்தில்நாதன்.
இயற்கை விவசாயிகள்

இயற்கை விவசாயப் பயிற்சியில் உயிர் ஆர்கானிக்ஸ்

எதற்காக நேரடி விற்பனையகம்?

இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்க மக்கள் தயாராக இருக்கின்றனர், அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகம் என்பதே ஆகும். மகசூல் குறைவு, அதிக வேலைப் பளூ என்று அதிக விலையில் ஆர்கானிக் பொருட்கள் விற்கப்படுவதற்குக் காரணம் சொல்லப்பட்டாலும், உண்மை என்னவெனில் விவசாயியின் பொருள் நேரடியாக வாடிக்கையாளரைச் சென்றடையவில்லை.

அதே போல், வாடிக்கையாளர் கொடுத்து வாங்கும் விலை அதில் இருக்கும் லாபம் முழுவதுமாக விளைபொருளுக்கு சொந்தக்காரரான விவசாயியை சென்று அடைவதில்லை. இயற்கை விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் இருக்கும் இந்த இடைவெளியை குறைப்பதற்காகவே ஒரு விற்பனைகயத்தைத் தொடங்கலாம் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது.

2016 முதல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும் உயிர் ஆர்கானிக்ஸ் விவசாயிகள் உற்பத்தி நிலையம் (Ueir organics farmer production company limited) என்னும் நிறுவனத்தைத் தொடங்கி ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நிலையம் என்கிற ஒரு அங்காடியை முதன்முதலில் தொடங்கினேன் என்கிறார் செந்தில்.

தனித்துவ தயாரிப்புகள்

பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், சிறுதானியங்கள், நாட்டு பயறு வகைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள் என இயற்கை விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டு பொருட்கள் அனைத்து இந்த விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் ஈரோட்டில் தொடங்கிய விற்பனை நிலையமானது இப்போது சேலம், கோவையிலும் இயங்கி வருகிறது. சிறு தானியங்கள், மளிகை பொருட்கள் என இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் பொருட்கள், உடல் ஆரோக்கியம் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான முடவாட்டுக் கிழங்கு, நோனி சாறு எங்களின் தனித்துவமான பொருட்கள் என்று சொல்லலாம். இவை ஆரோக்கியத்திற்கும் அடுத்த தலைமுறைக்கு நோயில்லா வாழ்வளிக்கும் சிறப்புகள் நிறைந்த பொக்கிஷங்கள்.

நாங்கள் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்கள் அனைத்தும் புதுவரவு இயற்கை விவசாயிகளால் தயாரிக்கப்பட்டவை அல்ல. பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்கின்ற சான்றளிக்கப்பட்ட விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி சிறுதானியங்களின் அவல் வகைகள், சிறார்களுக்கான ஆரோக்கியம் தரும் சிற்றுண்டிகளையும் தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றை சந்தைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம்.

இது மட்டுமின்றி எங்களின் சொந்த தயாரிப்புகளாக சாதப் பொடி வகைகள், மசாலாப் பொடிகள், சாம்பார் பொடி, ரசப்பொடி உள்ளிட்டவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி தயாரிக்கப்படுகிறது, எந்தவித செயற்கை கலப்பும் இல்லாததால் தரத்திற்கும் உடல் நலனிற்கும் உத்திரவாதம்.

இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை மட்டுமின்றி எங்களின் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பயிற்சி பாசறைகளையும் நாங்கள் குழுவாக நடத்தி வருகிறோம். உயிர் அமைப்பின் மூலம் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சிகளையும் பெற்றுள்ளார்கள்.

“சுமார் 175க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை நானே நேரடியாக நடத்தியுள்ளேன். சொல்லப்போனால் 2016ல் முதன் முதலில் உயிர் ஆர்கானிக்ஸ் தொடங்கிய போது இயற்கை விவசாயப் பயிற்சிக்கே முக்கியத்துவம் அளித்தோம்,” என்று கூறுகிறார் செந்தில்நாதன்.
உயிர் அங்காடி

10 பேர் டூ 10 ஆயிரம் பேர்

கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பயணித்து இயற்கை விவசாயத்தில் எங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்.

2016ல் ஊன்றிய இந்த விதை 2018ல் சிறு அங்காடி என்கிற அளவில் சில்லரை விற்பனை வணிகமாகத் தொடங்கினேன். அதன் பின்னர், 4 மாவட்டங்களில் கடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இணையவழி விற்பனை மூலம் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது உயிர் ஆர்கானிக்ஸ்.

வாடிக்கையாளர்களே எங்களின் மார்க்கெட்டிங் பிரதிநிதிகள். ஒருவர் மூலம் ஒருவர் என இந்த வட்டம் விரிவடைந்தது, தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைப் பெறுவது சிரமமாகத் தான் இருந்தது. வீடுகளுக்குத் தேடிச் சென்று பொருட்களைத் தருவது, கண்காட்சிகளில் அரங்குகள் அமைத்து எங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்துவது போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது உயிர் ஆர்கானிக்ஸ்.

“10 வாடிக்கையாளர்கள் என்கிற விகிதத்தில் இருந்து தொடங்கினோம் சொல்லப்போனால் பண்ட மாற்று முறை போல ஒரு விவசாயியின் பொருளுக்கு மாற்றாக மற்றொரு விவசாயியின் விளைபொருள் என்கிற அளவில் இருந்தது இன்று ஒவ்வொரு இயற்கை விவசாயிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்,” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் இந்த இயற்கை விவசாயி.

அக்கறை கொண்டுள்ள மக்கள்

சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளோடு, அன்றாட விவசாய உற்பத்திகளான காய்கறி, பழங்கள், கீரை வகைகளுக்கும் கூட இப்போது எங்களிடம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திருச்சி, சென்னை, பெங்களூர் என இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் கூட ஆன்லைன் மூலம் ஆர்டர்களைப் பெற்று டெலிவரி செய்து வருகிறோம். பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு 2016ஐ விட தற்போது அதிகரித்து இருக்கிறது.

பாரம்பரிய அரிசி சத்துமாவுகள், சிறுதானிய அவல் வகைகள் மற்றும் சேமியா வகைகளையும் வாங்கி குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றனர் பெற்றோர். பாக்கெட் உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு மாற்றாக இயற்கை விவசாயப் பொருட்கள் நஞ்சில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் உத்திரவாதம் அளிப்பதால் பலரும் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

”மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வால் தினசரி 50 புதிய வாடிக்கையாளர்கள் எங்களை அணுகி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இயற்கை விவசாயிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் என்கிற விதையில் தொடங்கி என்னுடைய சொந்த முதலீடாக ரூ.17லட்சத்தில் உயிர் ஆர்கானிக்ஸ் தொடங்கினேன்.”
உயிர் ஆர்கானிக்ஸ்

நோக்கம் நிறைவேறியது

தொடக்கத்தில் இதில் இருந்து லாபம் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்திருக்காமல், அதிக அளவில் இயற்கை விவசாயப் பொருட்கள் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதையே இலக்காக வைத்தேன். ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் அந்த நோக்கமானது நிறைவேறிக் கொண்டு வருகிறது.

இயற்கை சார்ந்த விவசாயப் பொருட்கள் என்பதால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது, இருப்பினும் அவற்றை மாற்றுப் பொருட்களாக்கி விற்பனைக்கு வைக்கிறோம்.

”உதாரணத்திற்கு கீரை வகைகளை காய வைத்து சூப் பொடிகளாகவும், காய்கறிகளை வற்றல் வகைகளாகவும் மறுஉருவாக்கம் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம், இதன் மூலம் 40 சதவிகிதமாக இருந்த பொருட்கள் சேதம் என்பது 10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. உயிர்ச்சத்து நிறைந்தது என்பதால் இயற்கை விவசாயப் பொருட்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது, இதனால் தேவைக்கு ஏற்ப பொருட்களை சுத்தம் செய்து விற்பனைக்கு வைக்கிறோம்,” என்று நஷ்டமின்றி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார் செந்தில்.

அடுத்த இலக்கு

என்னுடைய சொந்த ஆர்வத்தின் காரணமாக இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனையகத்தை தொடங்கியதால் ஆரம்பத்தில் நான் மட்டுமே பொருட்களை வாங்கி வைப்பது தொடங்கி பில் போடுவது வரை அனைத்தையும் செய்தேன். தமிழகம் மற்றும் தென்தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை சேகரித்து விற்பனைக்குத் தருகிறேன்.

அது மட்டுமின்றி, புதுவரவு இயற்கை விவசாயிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கான கருப்பட்டி கடலைமிட்டாய் எங்களின் தனித்துவமான ஸ்நாக்ஸ் இதற்கெனவே தனி வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர்.

“உள்ளூரில் மட்டுமே விரிவடைந்து கொண்டிருந்த ’உயிர் ஆர்கானிக்ஸ்’ இந்தியா முழுவதும் அமெரிக்காவிற்கும் பிரத்யேகமாக ஏற்றுமதி சேவையை தொடங்கி இருக்கிறது. 20 சதவிகித லாபம் ரீட்டெயில் சந்தை மூலம் கிடைக்கிறது எஞ்சிய 80 சதவிகித வருமானம் ஆன்லைன் சந்தையில் இருந்தே பெறப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் அயல்நாடுகளிலும் எங்கள் பொருட்களுக்கான வாடிக்கையாளர்கள் வட்டத்தை மேலும் விரிவடையச் செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்துடன் செயல்படுவதாக,” கூறுகிறார் செந்தில்நாதன்.