கூலித் தொழிலாளியின் மகன் மணிகண்டன் ஐஏஎஸ் தேர்வை தமிழில் எழுதி வெற்றி பெற்ற ஊக்கமிகு கதை!
‛வறுமை என்னை ஜெயிக்கக் கூடாது என்று தீர்க்கமா இருந்தேன்!'
இந்த கனவோடு கடந்த 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை தமிழிலேயே எழுதி தமிழிலேயே நேர்காணலையும் எதிர் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் நெய்வேலியை அடுத்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். தேசிய அளவில் 332 ரேங்கு பிடித்துள்ள அவர் முசோரியில் பயிற்சி எடுக்கவுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூரைச் சேர்ந்த ஆறுமுகம், வள்ளியின் மகன் மணிகண்டன். ஆறுமுகம் நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளியாகவும், அவரது மனைவி வீட்டுவேலை மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்கள். 27 வயதாகும் மணிகண்டன் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நெய்வேலி என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார்.
தந்தை ஆறுமுகம் உடல்நலம் பாதிக்கப்பட்டு பணிக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியபோது, தாயார் வள்ளியுடன் பள்ளி விடுமுறை நாட்களில் மணிகண்டனும் கூலி வேலைக்குச் செல்வார். வறுமையின் காரணமாக தங்கை சத்யாவின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது. வானம் பார்த்த பூமியில், கூரை வீட்டில் மணிகண்டனின் குடும்பம் வசிக்கின்றது. பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கோவையில் பி.பார்ம் பட்டமும், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பார்ம் முதுகலையும் முடித்துள்ளார்.
ஐஏஎஸ் கனவு
மணிகண்டனுக்கு ஐஏஎஸ் கனவு வெகுநாட்களாக இருக்க, 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு எழுதினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் தொடர்ந்து தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.
அந்த சமயத்தில்தான் அவரது தமிழ் ஆசிரியர் முத்துசாமி, மணிகண்டனுக்கு அளித்த ஊக்கமும், ஆக்கமும் அவரது ஐஏஎஸ் கனவு எட்ட உதவியாக அமைந்தது. அதன் படி கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வை தமிழிலேயே எழுதி தமிழிலேயே நேர்காணலையும் எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளார். வறுமையைத் தோற்கடித்து ஐ.ஏ.எஸ் ஆன மணிகண்டன்,
''எனது படிப்பில்தான் எனது வாழ்க்கையும் குடும்பத்தினரின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. நான் படிக்க வேண்டுமென்பதற்காக எனது தங்கை தனது படிப்பைத் தியாகம் செய்தார். எனது கனவை நனவாக்க நல்ல நண்பர்களின் உதவியும் தக்க நேரத்தில் கிடைத்தது. நண்பர்கள் அளித்த ஆலோசனையும் உதவியும் என்னைத் தேர்வை சிறப்பான முறையில் எதிர்கொள்ளவைத்தது,”
என்று விகடன் பேட்டியில் கூறியுள்ளார்.
மணிகண்டன் வீட்டில் முதல் பட்டதாரி என்பதால் ஐஏஎஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டே பகுதி நேர வேலை செய்தார். பல பயிற்சி மையங்களுக்கு சென்று வகுப்புகள் எடுத்து வந்தார். தமிழ் ஹிந்து பேட்டியில் தன் வெற்றியை பற்றி கூறிய மணிகண்டன்,
“332-வது ரேங்க் பெற்று தமிழில் தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவன் நான் தான் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்திலேயே எனக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டால் அதுவே பெரிய மகிழ்ச்சி,” என்றார்.
வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த ஊக்கம் தான் தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தது என்றார். ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி சாரங்கி, புதுச்சேரி வருமானவரித் துறை இயக்குநர் விவேகானந்தன் ஆகியோரும் எனக்கு உதவியாக இருந்தனர். தனது தமிழாசிரியர் முத்துசாமி கொடுத்த ஊக்கத்தால் தமிழிலேயே தேர்வை எதிர் கொண்டு வெற்றிப்பெற்றேன் என்று கூறி அவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் மணிகண்டன்.
தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 பேர் வரை ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் இந்த ஆண்டு 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தன் கனவை மெய்பிக்க தோல்விகள் பல அடைந்தும் தொடர்ந்து முயற்சித்து வெற்றிக்கண்டுள்ள மண்கண்டன் விரைவில் ஒரு சிறந்த அதிகாரியாக தமிழ்நாட்டுக்கு வர நமது வாழ்த்துக்கள்.