3 லட்ச முதலீடு; 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு, ரூ.2.20 கோடி வருவாய்- மேன்பவர் நிறுவனம் நடத்தும் ஆனந்த லட்சுமி
ப்ளஸ்2 வரை மட்டுமே படித்துள்ள ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆனந்தலட்சுமி, மணம் முடிந்து குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பங்களிக்க 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ஏஆர் மேன்பவர் இன்று நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது.
சராசரி நடுத்தரக் குடும்பங்களில் பிறக்கும் பல பெண்களுக்கு கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்பதெல்லாம் இன்னும்கூட பெரும் கனவாக இருக்கிறது. குடும்பச் சூழல், உடன்பிறந்தோர் என பலக் காரணங்களுக்காக தங்களின் படிப்பை பாதியில் விட்டுவிட்டு திருமணம் முடித்து, கணவர், குழந்தை என செட்டில் ஆகி அதிலேயே தங்கள் சந்தோஷத்தை தேடிக் கொள்ளும் பெண்கள் இன்னமும் அதிகமாகத் தான் இருக்கின்றனர். ஆனால் இதில் ஒருசிலர் மட்டுமே மாறுப்பட்டு, தங்களுக்கென ஒரு அங்கீகாரம், நிதிசுதந்திரம், கணவர்-குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் தங்களின் முயற்சி மூலம் ஒரு தாக்கத்தையும் அதே சமயம் பொருளாதார அளவிலும் வெற்றி காண நினைத்து, எப்படியோ ஒரு ஏணிப்படியை பிடித்து மேல் ஏறி உயரப் பரக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நான் அண்மையில் சந்தித்த ஆனந்தலட்சுமி.
ஊருணி வழங்கிய உழைக்கும் பெண்கள் விருதாளர்களில் ஒருவரான இவரிடம் பேசினால், அவரினுள் இருக்கும் வெகுளி கலந்த தன்னம்பிக்கை நம்மை ஆட்கொள்ளும். தன்னை அறியாமலேயே இச்சமூகத்துக்கு, குறிப்பாக வாய்ப்பில்லாமல் தவிக்கும் சாதாரண கிராமத்துப் பெண்களுக்கு இவர் ஏற்படுத்தியுள்ள வேலைவாய்ப்பும், வாழ்க்கையும் இவரின் பணிகளை பறைசாற்றும். ஆனந்த லட்சுமி தொடங்கிய ‘ஏஆர் மேன்பவர்’ எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு நிறுவனமாக வெற்றியோடும், சமூகத்துக்கும் ஒர் நல்ல முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
அவரின் கதை இதோ...
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த ஆனந்த லட்சுமிக்கு உடன்பிறந்தவர்கள் ஒரு அக்கா, இரண்டு தங்கை மற்றும் ஒரு தம்பி. 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்து நிலையில் 21 வயதில் அவருக்கு திருமணம் முடிந்தது. கணவர் பார்த்தசாரதியின் உந்துதலால் திருமணத்திற்குப் பிறகு பி.ஏ பொருளாதாரம் படிக்கத் தொடங்கினார் ஆனந்தலட்சுமி. ஆனால் அவரால் படிப்பை முடிக்கமுடியவில்லை.
”என் கணவர் 2000 ரூபாய் சம்பளத்துடன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்குத் தேவையான பொருட்களைக்கூட எங்களால் வாங்க முடியவில்லை. அவளுக்கு பால் சூடு செய்து கொடுக்கக்கூட விறகு அடுப்பை பயன்படுத்துவோம். அப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் வாழ்ந்தோம்,” என்கிறார் ஆனந்தலட்சுமி.
மிகவும் கஷ்டமான காலங்களில் ஒரு மகன் பிறந்தவுடன் வேலைக்கு போகலாம் என நினைத்தேன். என் மாமியாரை பார்த்துக்கொள்ளச் செய்துவிட்டு வேலைக்கு சென்றதால் பிரச்சனை ஏற்பட்டது. என்னால் தொடர்ந்து வேலைக்கு போகமுடியவில்லை என்கிறார்.
குடும்பப் பாரத்தை தானும் சுமக்க எண்ணிய ஆனந்தலட்சுமிக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்று புரியாமல் இருந்த பொழுது, 2002-ல் WEED-NGO மூலமாக மகளிர் குழுவில் சேர விருப்பம் ஏற்பட்டது.
“என் கணவரும் இன்னும் எத்தனை காலம் வீட்டிற்குள்ளேயே இருப்பாய் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அதன் படி புதுவசந்தம் என்ற மகளிர் குழுவில் சேர்ந்து நிறைய பயிற்சிகளில் கலந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல் நான் 2005-ம் ஆண்டு ஸ்மார்ட் என்ற செக்யூரிட்டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். 3000 ரூபாய் சம்பளத்தோடு மேன்பவர் எப்படி கம்பெனிகளுக்கு கொடுக்கிறார்கள் எனக் கற்றுக் கொண்டேன்,” என்றார் உற்சாகமாக.
தொழில்முனைவோர் பயிற்சிகளில் கலந்துகொண்ட ஆனந்தலட்சுமிக்கு தாமும் ஏன் தொழில்முனைவராகி பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன் அடிப்படையில் 2007-ம் ஆண்டு AR Manpower Allied Services என்ற நிறுவனத்தை தொடங்கினார். தன்னுடைய நிறுவனத்தில் அதிகமான பெண்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என முடிவெடுத்து அதன் அடிப்படையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் அவரால் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை. 2009-ம் ஆண்டு மேலும் ஒரு தொழில்முனைவோர் பயிற்சியில் கலந்து கொண்ட போதுதான் அவர் மனதில் தெளிவு ஏற்பட்டது என்கிறார்.
அதுவரை என்னைவிட மேல்மட்டத்தில் உள்ள பெண்களை மட்டுமே பார்த்தேன். ஆனால் என்னைவிட மிகவும் கஷ்டப்படுகிற பெண்களைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அப்போதுதான் ஒரு முடிவிற்கு வந்தேன். கண்டிப்பாக என்னாலும் வெற்றியடைய முடியும் என முடிவெடுத்து இன்னும் அதிகமான தன்னம்பிக்கையுடன் வேலை செய்ய ஆரம்பித்தேன்,” என்றார்.
மீண்டும் தன் மேன்பவர் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுத்து, பல நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை சப்காண்ட்ராக்ட் அடிப்படையில் அனுப்பத் தொடங்கினார். விரைவில் இவரின் உழைப்பிற்கு நேரடியான காண்ட்ராக்ட் கிடைக்கும் என்று தன்னம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.
என் நம்பிக்கை வீண் போகவில்லை. 2011-ம் ஆண்டு பார்லே ஆக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் HR-டிஜிஎம் திரு.ராமகிருஷ்ணன் சாரை சந்திக்க நேர்ந்த போது, அவர்களுக்குத் தேவையான மேன்பவரை கொடுக்கக் கேட்டார். நானும் மகளிர் குழுவில் அதிக பெண்களை எனக்குத் தெரியும், நீங்கள் கேட்கும் ஆட்களை என்னால் உங்களின் நிறுவனத்திற்குக் கொடுக்க முடியும் என உறுதி அளித்தேன்.
AR Manpower Allied Services என்று பிஎஃப், ஈஎஸ்ஐசி, சேவை வரி போன்ற ஆவணங்களை பெற்று சரியான நிறுவனமாக அதை 2011-ல் தொடங்கினார் ஆனந்தலட்சுமி.
அன்று தொடங்கிய இந்நிறுவனம் இன்று வரை சீராக செயல்பட்டு, இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் குடும்பங்கள் பயன் அடையவும், அப்பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு கிடைத்திடவும் உதவியுள்ளது.
பேரம்பாக்கம், காலம்பாக்கம், நரசிங்கபுரம், பிச்சிவாக்கம், இறையமங்களம், வெள்ளரிதாங்கல், கொப்பூர், மோளூர்குப்பம், அயப்பாக்கம், மன்னுர், மப்பேடு போன்ற சிறிய ஊர் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு பெரு நிறுவனங்களான; பார்லே ஆக்ரோ, அமேசான், இண்ட்-டெக் போன்ற நிறுவனங்கள் மற்றும் ஃபேக்டரிகளில் வேலைவாய்ப்பை வழங்குகிறது ஏஆர் மேன்பவர். அவர்களுக்கு முறையாக பிஎஃப் பிடிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதாக ஆனந்தலட்சுமி கூறுகிறார்.
”தற்சமயம் என் கம்பெனியின் மூலம் 100 பெண்கள் வேலையில் இருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஊர்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தகுந்த வேலை, இருப்பிடம் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்,” என்றார்.
இதுமட்டுமின்றி WEEDS-NGO மூலமாக, பெண்கள் பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏஆர் மேன்பவர் வளர்ச்சி
3 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆனந்தலட்சுமி தொடங்கிய ஏஆர் மேன்பவர் நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
“கடந்த 8 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி ஆண்டிற்கு 2.20 கோடி வருவாய் ஈட்டும் அளவிற்கு உயந்துள்ளது,” என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறார் ஆனந்த லட்சுமி.
கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் பணியமர்த்தப்படுவதால், அவர்கள் இந்த பணியின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை நம்பியே இருக்கின்றனர். இதை புரிந்து கொண்டுள்ள ஆனந்தலட்சுமி மாதம் 7-ம் தேதிக்குள் அவர்களுக்கு சம்பளத்தை தவறாமல் வழங்கிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நிறுவனங்களிடம் இருந்து இவரது மேன்பவர் அக்கவுண்டுக்கு பணம் வர தாமதம் ஆனாலும், வெளியில் கடன் பெற்றாவது தன் மூலம் பணியில் இருக்கும் பெண்களுக்கு நேரத்திற்கு சம்பளம் வழங்கிவிடுகிறார்.
எதிர்காலத் திட்டம்
என்னுடைய நிறுவனத்தின் மூலம் வேலை செய்யும் அனைத்து பெண்களுக்கும் சமூகத்தில் நல்ல வளர்ச்சியும், மதிப்பும் கிடைக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கவேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் பெண்களுக்கு வராதபடி அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கொடுக்கவேண்டும். இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை AR Manpower செய்யவேண்டும் என்று தன் வருங்கால இலக்குகளை அடுக்கிக்கொண்டே போகிறார் ஆனந்த லட்சுமி.
”ஒரு பெண் உண்மையான உழைப்பை கொடுக்கும்போது அவளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்,” என்பதில் தீர்கமான நம்பிக்கைக் கொண்டிருக்கும் ஆனந்த லட்சுமி போன்றோர், பெண் சமுதாயத்துக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் எனலாம்.