ஆயிரமாயிரம் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் வழிகாட்டியாய் திகழும் விஜயலக்ஷ்மி தேவராஜன்
மனமிருந்தால் மார்கமுண்டு என்று நம்பிக்கையை விதைப்பவரின் அனுபவம்...
பெண்களுக்கு சமூகத்தில் பல கொடுமைகள் அன்றாட நிகழ்வாகவே உள்ளது, அதிலும் நடுத்தர வர்க்கம் சந்திக்கும் பிரச்சனைகள் பல வெளியே வருவதேயில்லை. சரியான வழிகாட்டுதல் தக்க சமயத்தில் கிடைத்தால், வாழ்கையின் போக்கையே மாற்றியமைக்க உதவும். இத்தகைய மாற்றத்தை தினம் தினம் கையாண்டு பல பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை சற்றும் தொய்வின்றி செய்து வருகிறார் விஜயலஷ்மி தேவராஜன்.
அவரின் இத்தகைய தன்னலமற்ற செயல், குடியரசு தலைவருடன் தேனீர் விருந்து அழைப்பு வரை அவரை இட்டுச்சென்றுள்ளது. மாற்றத்தை உருவாக்கும் 100 பெண்களில் ஒருவர் என்ற அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றைய தலைமுறை பெண்கள், இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி நம்மிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.
புரிதல் இல்லாமை
இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கும் சரி இளம் வயதினருக்கும் சரி, புரிதல் இல்லாததே எல்லாப் பிரச்சைனைக்கும் அடிப்படை. குழந்தைகளின் பார்வையிலிருந்து பிரச்சனையை பெற்றோர்கள் அணுகினாலே பல்வேறு விஷயங்களுக்கு எளிதாக தீர்வு காணலாம். இன்றைய காலகட்டத்தில் அதாவது மூத்தவர்கள் வீட்டில் வழிகாட்ட இல்லாத சூழலில், இளம் பருவத்தினருக்கும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பெரும்பாலும் தன் வயதையொட்டிய நபர்களை மட்டுமே அணுகும் சூழல் உள்ளது.
"மென்டரிங்’ இல்லாதது மிகப் பெரிய பிரச்சினை. இளம் வயதினர் சமூக வலைதளம் கடந்து அழகிய வாழ்க்கை உள்ளது என்பதை உணர வேண்டும். பிரச்சனையை சந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்," என்கிறார் விஜயலஷ்மி.
துணிச்சலுடன் வெளிப்படுத்த வேண்டும்
பெண்களுக்கு நேரும் கொடுமைகளில் நாம் அன்றாடம் கேள்விப்படும் எண்ணிக்கை என்பது மிகக் குறைவே. நமக்கு தெரியாத வெளியே வராத நிகழ்வுகள் பல உள்ளன. பெண்கள் தமக்கு நேரும் கொடுமைகளை பற்றியும் அவதூறுகள் பற்றியும் தைரியமாக வெளிக்கொணர வேண்டும். அப்பொழுது தான் இதற்கு தீர்வு காண முடியும்.
"நம் நீதி அமைப்பில் பெரும் மாற்றம் வர வேண்டும். தண்டனை பற்றிய பயமில்லாதது, சட்டம் பற்றி சாமனியர்களுக்கு அதிக புரிதல் இல்லாதது நமக்கான பெரும் பின்னடைவு."
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என முதலில் தீர்கமாக நம்பிக்கை வைக்க வேண்டும். பெண்கள் தங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளும் அவசியமில்லாத வேலியை உடைத்தெரிந்து நம்மால் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும். இத்தகைய மனநிலை அமைப்பது கீழ்மட்ட மக்களுக்கு மிக அவசியம், இவர்களின் வருங்கால சந்ததியினர் வளர இது உதவும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் இந்த மனோபாவத்தை உடைத்தெரிவது பற்றி விஜயலக்ஷ்மி கூறுவது, அவரின் இன்றைய வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
கடந்து வந்த பாதை
பத்தொன்பது வயதில் அம்மாவை இழந்து, இளம் வயதிலேயே சுயமாக தன் வாழ்வை வழி நடத்தும் சூழல். IAS படிக்க வேண்டும் என்ற கனவை முன்னெடுத்து செல்ல இயலாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. கஷ்டம் என்பதை உணர்ந்ததால், தான் சம்பாதிக்கும் தொகையிலிருந்து தினமும் நான்கு அல்லது ஐந்து முதியோர்களுக்கு சாப்பாடு வாங்கித்தருவதை பழக்கமாகக் கொண்டார். இன்றும் அதை பின்பற்றுகிறார்.
28 வயதில் திருமணம், ஒரே ஆண்டில் கைக்குழந்தையுடன் கணவரை விட்டு பிரியும் சூழல். தனி மனுஷியாக பல கஷ்டங்களை தன்னம்பிக்கையுடன் கடந்து, அந்த உந்துதலை பல பெண்களுக்கு ஊட்டுகிறார்.
வேலை நிமித்தமாக பல இளம் பெண்களை சந்திக்க நேர்ந்தது. அவர்களின் கஷ்டங்களை அவர்கள் பகிர்ந்து கொண்ட பொழுது அவர்களுக்கான ஆறுதலையும் அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையும் தரத் தொடங்கினார். மாற்றங்களை கொண்டு வர நேர்ந்ததால் கவுன்சலிங் பிடித்துப் போனது. இப்படி ஆரம்பித்த சமூக சேவை இன்று வரை ஐம்பது கல்லூரிகளில் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு பெர்சனல் மற்றும் ப்ரொஃபஷனல் கவுன்சிலிங் தந்துள்ளார்.
சின்ன சின்ன உதவிகள் ஏற்படுத்தும் மாற்றம்
சமூக சேவையென்றால் பெரிய மாற்றங்கள் தான் என்பதல்ல. மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னாலான உதவி, கல்லூரி கட்டணம், இரத்தம் தேவையெனில் அதை ஏற்பாடு செய்து கொடுத்தல் என எந்த உதவி முடியுமோ அதை செய்து தருகிறார்.
லட்சியத் திட்டம்
அயராது பலருடைய வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் இவருக்கு, அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்பதே இலக்கு. 2017 டிசம்பர் மாதத்திற்குள் 3000 பிள்ளைகளுக்கு கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்கை மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்களும் கவுன்சலிங் கொடுப்பதற்கு பயிற்சி பெற வேண்டியது அவசியம் என்று கூறும் விஜயலக்ஷ்மி
“ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கவுன்சலிங் ஹப் இருப்பது அவசியம்,” எனக் கூறுகிறார்.
இதைத் தவிர விவசாயிகள் மீதுள்ள பற்றால் ஒரு கிராமத்தை தத்தெடுத்து தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரு மாதிரி கிராமமாக கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பும் உள்ளதாக தன் லட்சியத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு தனி மனிதனாலும் மாற்றத்தை நிகழ்த்த முடியும், நம் அனைவரும் இதனை செய்ய முற்படும் பொழுது, நிறைவான சமூகத்திற்கு வித்திடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.