ஆன்லைன் சேவைகள் மூலம் சர்வதேச அளவில் வளரும் ஆன்மீக ஸ்டார்ட் அப்கள்!
இணையவழி ஜோதிடம் மற்றும் பக்தி சேவைகளுக்கான தேவை சர்வதேச அளவில் பெருகி வரும் நிலையில், அஸ்ட்ரோடாக் மற்றும் ஆப்ஸ்பார்பாரத் போன்ற செயலிகளில் வென்சர் கேபிடம் நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.
வெளிநாடுகளில் வாழும் பல இந்தியர்களுக்கு, தங்கள் வேர்களுடன் தொடர்பில் இருப்பதும், ஆன்மீக செயல்முறைகளில் ஈடுபடுவதும் சவாலானது. தொலைவு, நேர வேறுபாடு, நேரடியாக பங்கேற்க முடியாத தன்மை உள்ளிட்டவை தடைகளாக அமைகின்றன.
ஆனால், இப்போது பயனாளிகள் தங்கள் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்பு கொள்ள டிஜிட்டல் மேடைகளை நாடத்துவங்கியுள்ளனர். இந்த மேடைகள், ஆன்மிக சேவைகள், ஆலோசனைகள், சமூக தன்மை உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. பயனாளிகள் தங்கள் அபிமான ஆலையங்களுக்கு மெய்நிகர் விஜயம் செய்ய முடிகிறது. ஜோதிடரை நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது.
'ஆஸ்ட்ரோடாக்' (Astrotalk) மற்றும் 'ஆப்ஸ்பார்பாரத்' (AppsForBharat) போன்ற ஆன்மீக செயலிகள் ஆன்மிக சேவைகள், ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, முதலீட்டையும் ஈர்த்து வருவாய் நோக்கிலும் வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்த இரண்டு செயலிகளுமே இப்போது, சர்வதேச சந்தையில் விரிவாக்கம் செய்து வருகின்றன. அதற்கேற்ப தேவையும் அதிகரித்திருக்கிறது.
அஸ்ட்ரோடாக், இணையவழி ஜோதிட ஆலோசனை, பூஜைப்பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் சேவை, இணைய வழி பூஜை மேடை ஆகிய சேவைகளை அளிக்கிறது. ஆப்ஸ்பார்பாரத், செயலியின் முதன்மை சேவையாக 'ஸ்ரீமந்திர்' செயலி அமைகிறது. இதன் மூலம் விரும்பிய ஆலையத்தை மெய்நிகராக தரிசிக்கலாம். பூஜை மற்றும் பிராத்தனைகளை மேற்கொள்ளலாம். பயனாளிகள் ஆன்மிக குருக்களுடன் பேசக்கூடிய வசதியையும் அளிக்கிறது.
ஆன்மீகம் சார்ந்த இந்திய ஸ்டார்ட் அப்கள்
'ஆப்ஸ்பார்பாரத்' நிறுவனரான பிரசாந்த் சச்சன், பல முக்கிய சேவைகள் ஆன்லைனுக்கு மாறியுள்ள நிலையால், பக்தி செயல்முறை பாரம்பரியம் சார்ந்ததாகவே இருக்கிறது, என்கிறார். இந்த இடைவெளியை உணர்ந்து, தொழில்நுட்பத்தை ஆன்மிகத்துடன் இணைத்து, தனிநபர்கள் மத செயல்முறையில் ஈடுபடுவதற்கான எளிய வழியை வழங்க தீர்மானித்தார்.
“இப்போதைக்கு எங்கள் சர்வதேச வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். நிறுவனத்தின் ஆரம்ப ஆண்டுகளில் மார்க்கெட்டிங்கிற்காக டாலரில் அதிகம் செலவிடவில்லை. ஆனால், கடந்த ஒராண்டுக்கும் மேலாக வெளிநாட்டு விரிவாக்கத்தில் தீவிரமாக இருக்கிறோம். பல்வேறு நாடுகளில் மார்க்கெட்டிங் செய்து, வேகமாக வளர்ந்து வருகிறோம்,” என்கிறார் ஆஸ்ட்ரோடாக் இணை நிறுவனர் அன்மோல் ஜெயின்.
ஆண்டுக்கு சர்வதேச வர்த்தகம் மூலம் ஆறு மடங்கு வருவாய் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். தற்போது அஸ்ட்ரோடாக்கின் வருவாயில் 20 சதவீதம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வருகிறது.
இதே போல, மற்ற நாடுகளுக்கு சேவையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை வருவதாக ’ஆப்ஸ்பார்பாரத்' சச்சன் கூறுகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான வர்த்தகத்தை துவங்கியது.
தற்போது கனடாவில் வசிக்கும் மொரூஷியசைச் சேர்ந்த ராதா, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு மாதங்களாக ஸ்ரீமந்திர் செயலியை பயன்படுத்துகிறார். அவர் தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்த நிலையில், ஃபேஸ்புக்கில் விளம்பரம் பார்த்து இந்த செயலியை முயற்சித்தார். இந்த மேடை மூலம் தொடர்பு கொண்ட ஜோதிடர் அவரது தனிப்பட்ட பிர்ச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கி, பூஜை செய்யவும் வழி காட்டினார்.
“ஜோதிடர் ஆலோசனைகள் வழங்கியதோடு, எப்போதும் உதவ தயாராக இருக்கிறார். இந்த செயல்முறை ஆன்லைனில் நிகழ்வதால் நம்பிக்கை ஏற்படுவது முக்கியம். இது சாத்தியமாகியுள்ளது. பல்வேறு பூஜைகளுக்கு பெரிய தொகை அனுப்புகிறேன்,” என்று யுவர்ஸ்டோரியிடம் ராதா தெரிவித்தார். அவர் இதுவரை 10 பூஜைகளை மேற்கொண்டிருக்கிறார்.
“கோயிலுக்கு செல்வது கடினமானது, இந்தியா போல இங்கு பல்வேறு கோயில்கள் கிடையாது. என் வாழ்வில் எது நடந்தாலும், எனக்காக பூஜை செய்ய ஸ்ரீமந்திர் செயலி இருக்கிறது,” என்கிறார். இந்த செயலிக்கான எண்ணற்ற வெளிநாட்டு பயனாளிகளில் ஒருவராக அவர் விளங்குகிறார்.
“உத்தேசமாக இப்போது 25 சதவீத தேவை வெளிநாடுகளில் இருந்து வருகிறது, என்கிறார் சச்சன்.
இந்தியாவை விட வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகம் வேகமாக வளர்வதாக இரண்டு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. கடந்த 12 மாதங்களில், ஆப்ஸ்பார்பாரத் செயலி மூலம், 27 லட்சம் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்ட்ரோடாக் ஆக்ஸ்ட் மாதத்தில் 1.7 மில்லியன் பரிவர்த்தனைகளை கொண்டிருந்தது. அதன் மாத பயனாளிகள் எண்ணிக்கை 7 மில்லியன் அளவில் இருக்கிறது.
இரண்டு நிறுவனங்களுமே தங்கள் வெளிநாட்டு சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
இந்தியாவுக்கு வெளியே 30 சதவீத கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், இது சேவைகளுக்கு ஏற்ப அமைவதாக சச்சன் கூறுகிறார். அதே போல, ஆஸ்ட்ரோடாக்கும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக கட்டணம் பெறுவதாக ஜெயின் கூறுகிறார்.
சந்தையில் மாற்றம்
இந்த பரப்பு வாடிக்கையாளர்களை மட்டும் ஈர்க்கவில்லை. இதன் வளர்ச்சியை பல வென்சர் கேபிட்டல் நிறுவனங்கள் ஆர்வத்தோடு கவனிக்கின்றன. வளர்ந்து வரும் இந்த சந்தையில், முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. ஆன்மிக, ஜோதிட செயலிகளுக்கான தேவையை உணர்ந்துள்ளன.
“ஜோதிடம் 15 பில்லியன் டாலர் மதிப்பு உள்ள சந்தை. இதை ஆன்லைனுக்கு கொண்டு செல்வது ஏற்றது. ஏனெனில், ஜோதிடரை நேரில் சந்திக்க வேண்டியதில்லை. ஆன்லைனிற்கு காத்திருந்த துறைகளில் ஒன்றாக ஜோதிடம் அமைகிறது,” என்கிறார் Elev8 வென்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவன நிர்வாக பங்குதாரர் நவீன் ஹானாகுடி.
நிறுவனம் அஸ்ட்ரோடாக்கில் 300 மில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு அடிப்படையில் 9.5 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. மேலும், நந்தன் நிலேகனியின் பண்டமண்டம் நிறுவனமும் இந்த பரப்பில் முதலீடு செய்துள்ளது. செப்டம்பரில் ஆப்ஸ்பார்பாரத் நிறுவனத்தில் பி- சுற்று 18 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு தலைமை வகித்தது.
“பக்தி அல்லது ஜோதிடம் நம் ஜிடிபியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மேலும் அதிகரித்து வருகிறது. பிள்ளைகள் விரிவாக தன்னிச்சையாக வாழத்துவங்குவதால், பக்தி, நம்பிக்கை மையமாக இருப்பதை விரும்புகின்றனர். ஏனெனில், எல்லாவற்றையும் அவர்களே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இது மேலும் வளரும். இளம் பயனாளிகள் பலர் இந்த மேடையை பயன்படுத்துவதை பார்க்கலாம்,” என்று பண்டமண்டம் இணை நிறுவனர், பொது பார்ட்னர் ஆசிஷ் குமார் தெரிவித்தார்.
இந்த பிரிவில் பல நிறுவனங்கள் இருந்தாலும் எல்லாவற்றாலும் பெரிய அளவில் நிதி திரட்ட முடியவில்லை.
2018 முதல் 2019ல் இந்த பிரிவில் 20 முதல் 25 நிறுவனங்கள் உருவாயின, என்கிறார் நவீன். பல நிறுவனங்கள் விதை நிதி திரட்டினாலும், கோவிட் காலத்திற்கு பிறகு ஒரு சில மட்டுமே வளர்ந்தன, என்கிறார்.
“ஆஸ்ட்ரோடாக், ஆப்ஸ்பார்பாரத் ஆகிய நிறுவனங்கள் சிக்கலான புள்ளியை கடந்து, தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றன. விசி முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனங்கள் அளித்துள்ள உறுதி மேலும் முதலீட்டை ஈர்க்கின்றன,“ என்கிறார்.
“வாடிக்கையாளர்கள் டாலர் அல்லது பவுண்டில் பணம் செலுத்துவதால் வெளிநாட்டு சந்தை மிகவும் ஈர்ப்புடையதாக உள்ளது. எனவே, இந்த நிறுவனங்கள் ஆண்டு தொடர் வருவாயாக ரூ.200 கோடியை கடந்துள்ளன. அமெரிக்கா 50-55 சதவீத வர்த்தகத்திற்கு பங்களிக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடியதை விட அதிகமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் பெற முடிகிறது. அதே போல, அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு ஆலோசனை சொல்லும் ஜோதிடர்களுக்கான தொகையும் அதிகமாக உள்ளது,” என்கிறார்.
வருவாய் செழிப்பு
ஆஸ்ட்ரோடாக் மற்றும் ஆப்ஸ்பார்பாரத் தேவையை கண்டறிந்து அதற்கேற்ப தங்கள் தொழில்நுட்ப மேடையை தயார் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றின் லாப எண்ணிக்கையிலும் இது பிரதிபலிக்கிறது.
நொய்டாவைச் சேர்ந்த அஸ்ட்ரோடாக், 2023ம் நிதியாண்டில் ரூ.283 கோடி வருவாய் பெற்றிருந்த நிலையில், 2024 நிதியாண்டில் ரூ.651 கோடி வருவாய் பெற்றுள்ளது. நிகர லாபம் பத்து மடங்காக ரூ.94 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ.847 லட்சமாக இருந்தது.
பெங்களூருவைச் சேர்ந்த ஆப்ஸ்பார்பாரத், 2024ம் நிதியாண்டில் ரூ.18.5 கோடி வருவாய் பெற்றது. முந்தைய ஆண்டு இது ரூ.3.5 கோடியாக இருந்தது. நிறுவனம் இன்னும் லாபம் ஈட்டவில்லை என்றாலும், செலவிடுவதை விட அதிக வருமானம் வருவது லாப பாதையின் அறிகுறி என்கிறார் சச்சன்.
எதிர்காலத்தில் ஆன்மிகத்தில் மேலும் பல பிரிவுகள் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக குமார் தெரிவிக்கிறார். மத சுற்றுலா மற்றும் பிற மதங்களுக்கான செயலிகள் உருவாகும், என்கிறார்.
“இந்தப் பிரிவில் இப்போது பொதுவான ஆர்வம் உள்ளது. இதில் பலவகையான நிறுவனங்கள் உருவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆஸ்ட்ரோடாக் இதில் ஒன்று. இந்நிறுவனம் ஜோதிட பரப்பில் அதிகம் செய்துள்ளது. ஆப்ஸ்பார்பாரத் பக்தி பிரிவில் செயல்படுகிறது. நாளடைவில் ஒவ்வொரு நிறுவனமும் மற்ற நிறுவன பரப்பில் நுழையும் வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் தீர்வு காணப்படாத வேறு பல பிரிவுகளும் உள்ளன,” என்கிறார் குமார்.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
ரெடிமேட் பூஜை, இ-அர்ச்சனை, கூரியரில் பிரசாதம்; ஆன்மீக சேவைகள் வழங்கும் தஞ்சை நிறுவனம்!
Edited by Induja Raghunathan