சென்னை டூ அமெரிக்கா- எம்ஐடி-ன் தலைவர் ஆகியுள்ள அனந்த சந்திரசேகரன்!
அனந்த பி சந்திரசேகரன், தற்போது மாசச்சூசெட்ஸ் இன்ஸ்டிடூயூட் ஆப் டெக்னாலஜியில் (MIT) உள்ள பொறியியல் பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994-ல் எம்ஐடி-ல் எலெக்ட்ரிக்கல் எஞ்னியரிங் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் துறையில் ஆராய்ச்சிப் பணியில் சேர்ந்தார்.
போர்டபிள் கம்யூட்டர்களில் பயன்படுத்த இவர் உருவாக்கிய குறைந்த சக்தி சிப்புகளை இன்றைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் கருவிகளில் பயன்படுத்த முன்னோடியாய் இருந்துள்ளது. குறைந்த மின்னனு கொண்டு இவர் பல தொழில்நுட்பங்களை உருவாக்கிட பல ஆராய்ச்சிகளை செய்தவர்.
சென்னையைச் சேர்ந்த அனந்த சந்திரசேகரன், கல்லூரி பருவத்தில் அமெரிக்காவுக்கு சென்றார். அவரின் தாயார் ஒரு ப்யோகெமிஸ்ட். 1989-ல் பட்டம் பெற்ற சந்திரசேகரன், பெர்கிளேவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்துக்காக சேர்ந்தார். எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் துறையில் டாக்டரேட் பெற்றவுடன் 2006 ஆம் ஆண்டு MTL-ல் (Microsystems Technology Laboratories) இயக்குனராக சேர்ந்தார். 2011-ல் EECS-ன் தலைவராக பதவியேற்றார். தற்போது பெல்மோண்டில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கிறார்.
”என் அம்மா என்னை ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் ஈடுபட தொடர்ந்து ஊக்கமளித்தார். நான் பட்டம் படித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு பேராசிரியராக ஆவேன் என்று முடிவெடுத்துவிட்டேன்,” என்கிறார் சந்திரசேகரன்.
தன் புதிய பொறுப்பு பற்றி பேசிய சந்திரசேகரன்,
“இதுதான் எனக்கு இந்த பணியில் பிடித்த ஒன்று. நிர்வாக பணி ஏற்பது உற்சாகமாக உள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய வாய்ப்புகளை, தொழில் தொடங்கும் ஊக்கத்தை, ஆராய்ச்சி மற்றும் பல முயற்சிகளை மாணவர்கள் எடுக்க உதவுவேன். ஒரு டீனாக மாணவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க திட்டமிட்டுள்ளேன்,” என்கிறார்.
எம்ஐடி-ல் சந்திரசேகரன் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில் பல முக்கிய ப்ராஜக்டுகளை கையாண்டுள்ளார். மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். எம்ஐடி தலைவர் ரபேல் ரெயிப் கூறுகையில்,
”அனந்தா அதிக உற்சாகமான அறிவாளியாவார். பிறர் சொல்வதை ஆழ்ந்து கவனித்து, புதியவற்றை கற்றுக்கொண்டு பிறருடன் இணைந்து அவர்களின் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து செயல்படுபவர். பல சிக்கல்களை சமாளித்தவர் என்கின்ற முறையில் நல்ல தலைமையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை,” என்றார்.
பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற இவர் பல ஆய்வறிக்கைகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.