44th Chess Olympiad - சதுரங்கப் பலகைகள் முதல் சாப்பாடு வரை... ஏற்பாடுகள் என்னென்ன?
தமிழகத்தில் முதன் முறையாக நடக்க உள்ள சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தீவிர ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்க உள்ள சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தீவிர ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்திருக்க வேண்டிய செஸ் ஒலிம்பியாட் போட்டி உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், போட்டி களம் முதல் வீரர்களுக்கான உணவு வரை... பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் பார்வையாளர்களுக்கான வசதிகள் வரை என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என விரிவாக அறிந்து கொள்ளலாம்.
செஸ் ஒலிம்பியாட் மைய ஏற்பாடுகள்:
இந்திய வரலாற்றில் முதல் முறையாக 188 நாடுகள் பங்கேற்கின்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் (44th Chess Olympiad) போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி, அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் சர்வதேச தரத்திலான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன.
- முதல் அரங்கில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாவது அரங்கில் அதிகபட்சமாக 1000 வீரர்கள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 1400 பேர் அமர்ந்து விளையாடக்கூடிய வகையில் அரங்கு தயாராகி வருகிறது.
- மொத்தமாக 1404 வீரர்கள் அமர்ந்து விளையாடக்கூடிய வகையில் 702 டிஜிட்டல் சதுரங்கப் பலகைகள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
- செஸ் போர்ட்கள் அனைத்தும் எலெக்ட்ரானிக் பலகைகள் என்பதால் மூவ் அனைத்துமே உடனுக்குடன் இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் அப்டேட் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் மையத்தில் மருத்துவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
- போட்டி நடைபெறும் இடத்தில் நுழைவாயில் அலங்காரப் பதாகைகள், இரண்டு சர்வதேச தரத்திலான அரங்கம், விளையாட்டு வீரர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகனம் நிறுத்துமிடம், பின்னிணைப்புகள் கொண்டு ராட்சச ஜெனரேட்டர்கள், விளக்குகள் பொருத்திய கம்பங்கள், வண்ண விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. உணவு அருந்தும் இடம் தயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடைய உள்ளன.
போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவேந்தன், மெய்யநாதன் ஆகியோருடன், அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவருகின்றன.
போட்டி நடைபெறவுள்ள இடத்தில் நடைபெற்று வந்த பணிகள் அனைத்தும் பெரும்பான்மையான அளவிற்கு முடிவுற்ற நிலையில் நேற்று முதல் சோதனை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
வீரர்களுக்கான தங்குமிடம் முதல் உணவு வரை:
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட 2,500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 2500 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வீரர்களுக்கு 47 வகையான உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு நாட்டு வீரர்களின் பராம்பரிய உணவு முதல் வீரர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய உணவுகளையும் தயாரித்துக் கொடுக்க செஃப்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவுகள் தயார் செய்து கொடுக்கப்படும் என்றாலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே வீரர்களுக்கு உணவு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே இடத்தில் குவிய உள்ளதாலும், தற்போது கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்களை வரவேற்கும் விதமாக, நமது கலையை பறைசாற்றும் விதமாகவும் ஆகஸ்ட் 3, 4 மற்றும் 5 ம் தேதி பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4 ம் தேதி போட்டி எதுவும் இல்லாமல் ஓய்வு நாள் என்பதால் அன்றைய தினம் வீரர்களை சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலாத்துறை சார்பில் சொகுசு பேருந்துகள் மற்றும் டூரிஸ்ட் ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வீரர்களை அழைத்துச் சென்று, நமது கலை மற்றும் பராம்பரியம் குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெளிநாட்டைச் சேர்ந்த 100 நடுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளதால், மொழிப் பிரச்சனையை தவிர்க்கவும் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் மொழியுடன், இந்திய மொழிகளையும் பேசக்கூடிய 100க்கும் மேற்பட்ட மொழிப்பெயர்ப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வீரர்களையும் போட்டிக்கு அழைத்து வருவதற்காக தனித்தனி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வீரர்கள், பயிற்சியாளர்கள், பிரதிநிதிகள் என அனைவரையும் போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து வருவதற்கான தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வீரர்கள் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு செல்ல ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, போட்டி நடைபெற உள்ள தினங்களில் வீரர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்காக அந்த சாலைகள் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா, வியட்நாம், உருகுவே, உஸ்பெகிஸ்தான், நார்வே, நைஜீரியா, டோகே, செர்பியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த 32 வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். இருப்பினும் டாப் 10 நாடுகளைச் சேர்ந்த உலகின் சிறப்பான வீரர் மற்றும் வீராங்கனைகள் ஜூலை 26 மற்றும் 27ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி வருகை:
வரலாற்று சிறப்பு மிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வரும் 28ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். அன்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் வர உள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எஸ் விமான தளம் செல்கிறார். பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 6 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள செஸ் ஒலிமியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர், 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜ் பவனுக்குச் சென்று அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர், மறுநாள் காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நிகழ்ச்சிக்குப் பின் சுமார் 11.30 மணியளவில் மீண்டும் சாலை மார்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து 12 மணியளவில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அடையார் ஐ.என்.எஸ் ஆகிய இடங்களைச் சுற்றி 6 ஆயிரம் போலீசாரைக் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக நிகழ்ச்சி நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் 2500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், மாநகருக்குள் பிரதமர் மோடி செல்லும் வழித்தடங்களில் 100 மீ இடைவெளிவிட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பயணிக்க உள்ள வழித்தடங்களில் உள்ள உயரமான கட்டிடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், குறிப்பிட்ட இரண்டு நாட்களும் சென்னை மாநகருக்குள் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தம்பி டூ நேப்பியர் பாலம் வரை:
மாமல்லபுரத்தில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னையில் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ‘தம்பி’ என்கிற குதிரை சிலை, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமாக திகழ்கிறது.
தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக வேட்டி, சட்டை அணிந்த வண்ணம் வணக்கத்துடன் அனைவரையும் வரவேற்கும் ‘தம்பி’ சிலை சென்னை முழுவதும் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிற்பங்களை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று, 50-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு இரவு பகல் பாராமல் உருவாக்கி வருகிறது.
‘தம்பி’ குதிரை சிலைக்கு அடுத்த படியாக சென்னை மெரினா கடற்கரைக்கு அருகேயுள்ள நேப்பியர் பாலம் செஸ் தீம் வடிவில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் சக்கைப் போடு போட்டு வருகிறது.
சென்னை நேப்பியர் பாலம் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு - வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் செஃல்பி எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடல் வெளியானது. ‘வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை’ எனத் தொடங்கும் பாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த தீம் பாடல் வீடியோவை விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது முதல் இன்று வரை வைரலாகி வருகிறது.
இந்திய வீரர், வீராங்கனைகள் யார், யார்?
இந்தியா சார்பாக ஆண்கள் பிரிவில் 3 அணியும் மற்றும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம் காண உள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கு ஆலோசகராக செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 188 அணிகள் மோதும் ஓப்பன் பிரிவில் இந்திய அணிகள் 2வது, 11வது மற்றும் 17வது இடத்தில் உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த அணி முதலிடத்தில் உள்ளது.
- இரண்டாம் நிலை இந்தியாவின் முதல் அணியில் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (2,714), பி. ஹரிகிருஷ்ணா (2,720), அர்ஜுன் எரிகைசி (2,689), எஸ்.எல். நாராயணன் (2,659) மற்றும் சசிகிரண் கிருஷ்ணன் (2,638).
- இந்தியா-2ம் அணியில் நிஹில் சரின் (2,651), டி. குகேஷ் (2,684), பி. அதிபன் (2,598), ஆர். பிரக்ஞானந்தா (2,648) மற்றும் ரௌனக் சத்வானி (2,611) ஆகியோர் உள்ளனர்.
- உலக ஜூனியர்களள் பிரிவில் அர்ஜுன், குகேஷ் மற்றும் சரின் ஆகியோர் முறையே இரண்டாவது, ஆறாவது மற்றும் 10வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
- இந்தியா-3 அணியில் சூர்ய சேகர் கங்குலி (2,608), எஸ்.பி.சேதுராமன் (2,623), அபிஜீத் குப்தா (2,627), கார்த்திகேயன் முரளி (2,613) மற்றும் அபிமன்யு பூராணிக் (2,612) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- பெண்கள் பிரிவில், இந்தியாவின் முதல் அணியில் 2,486 எலோ ரேட்டிங் உடன் முதலிடத்திலும், இந்தியாவின் 2வது அணி 11வது இடத்திலும் (சராசரி மதிப்பீடு 2,351), இந்தியா-3 அணி 16வது இடத்திலும் (சராசரி மதிப்பீடு 2,318) உள்ளன.
- இந்திய முதல் அணியில் கோனேரு ஹம்பி (2,586), டி. ஹரிகா (2,517), ஆர். வைஷாலி (2,442), டானியா சச்தேவ் (2,399), பக்தி குல்கர்னி (2,373) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- இந்தியா-2 இன் உறுப்பினர்கள் வந்திகா அகர்வால் (2,371), சௌமியா சுவாமிநாதன் (2,335), மேரி ஆன் கோம்ஸ் (2,324), பத்மினி ரௌட் (2,374) மற்றும் திவ்யா தேஷ்முக் (2,319).
- இந்திய பெண் வீராங்கனைகளுக்கான 3வது அணியில் ஈஷா கரவாடே (2,339), சாஹிதி வர்ஷினி எம் (2,312), பிரத்யுஷா போடா (2,310), நந்திதா பி வி (2,312) மற்றும் விஷ்வா வஸ்னாவாலா (2,305) ஆகியோர் உள்ளனர்.
உலகின் முதல் இரண்டு அணிகளான - ரஷ்யா மற்றும் சீனா- ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்த முறை ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவில்லை, இது இந்தியாவுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரை மீதான ராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) ரஷ்ய மற்றும் பெலாரஸ் தேசிய அணிகளுக்கு அதன் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.
பார்வையாளர்களுக்கு இலவச பேருந்து சேவை:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 முதல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச பேருந்து சேவை வரும் 25ம் தேதி முதல் ஒருமணி நேரத்துக்கு ஒரு பேருந்து சென்னை முதல் மாமல்லபுரம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
28ம் தேதி தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.