செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா-வை குடும்பத்துடன் வீட்டுக்கு அழைத்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
Superstar Rajinikanth செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
ரஜினியிடம் வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா:
‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருது இல்ல’ என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடித் தீர்க்கும் திறமை ஆளுமையாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழில் மட்டுமின்றி இந்திய திரையுலகம் முழுவதுமே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் மற்றும் மார்க்கெட்டை கொண்டுள்ளார். திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல படங்கள், சாதனையாளர்கள், திறமையான சாமானியர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்.
‘அருவி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர்களைத் தொடர்ந்து சமீபத்தில் ‘இரவின் நிழல்’ படத்திற்காக இயக்குநர் பார்த்திபனை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். அதேபோல் நல்ல விஷயங்களையும், சாதனையாளர்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பாராட்டி வருகிறார்.
ராகவேந்திரா படம் பரிசளித்த ரஜினி:
இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பிரக்ஞானந்தாவுடன் அவரது தந்தை ரமேஷ்பாபு, தாய் நாகலட்சுமி, சகோதரி வைஷாலி ஆகியோரும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.
தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு ரஜினிகாந்த் ராகவேந்திரா படத்தை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா,
“மறக்க முடியாத நாள்!!! இன்று ரஜினிகாந்த் அன்கிளை சந்தித்தேன். மாபெரும் உயரத்தில் இருந்தபோதிலும் அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. மகிழ்ச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ‘சர்வதேச செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 343 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியா சார்பில் தமிழக செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவும் பங்கேற்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம் பிரக்ஞானந்தா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனையை நிகழ்த்திய பிரக்ஞானநந்தா, செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் முத்திரை பதிக்க வேண்டுமென ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த பிரக்ஞானந்தா?
சென்னை பாடியில் வசித்து வரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். தாய் நாகலட்சுமி. பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் பயிற்சி பெற்று 14 வயதுக்குக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.
5 வயதில் இருந்தே செஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பிரக்ஞானந்தா, 7 வயதில் உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட்மாஸ்டர், 14 வயதில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் என பட்டங்களை குவித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், ஆன்லைனில் நடைபெற்ற ’ஏர்திங்ஸ் மாஸ்டர்’ போட்டியில் உலகின் நெம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடிய பிரக்ஞானந்தா அவரை வீழ்த்தி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.
இளம் வயதிலேயே செஸ் சாம்பியனாக வலம் வரும் பிரக்ஞானந்தா, செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் சாதனை படைப்பார் என தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.