தொண்டூழியத்தில் முன்னணியாக விரும்பும் 'let’s volunteer'
தொண்டுபுரிய விரும்புவோருக்கும் தொண்டுபுரியும் அமைப்புகளுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது let's volunteer இணைய தளம்
"கூகுள் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டிருந்தேன். இன்று நமக்கு ஜொமாட்டாவில் உணவுத்தேடல், வாடகைக் கார்களுக்கு உபேர், வேலைகளுக்கு நோக்ரி என்றாகிவிட்டது. அதேப்போல் நாம் தொண்டுணர்வை உருவாக்கும் "லெட்ஸ் வாலன்டியர்" இல் தன்னார்வளர்களாக மாறுவோம் என்கிறார் தீபக்.
ஹரிஷ் சிரிகுருராஜு, தீபக் பரிபதி இருவரும் 27 வயதினர், தன்னார்வளர்களை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்திருக்கிறார்கள். "லெட்ஸ் வாலன்டியர்" (let’s volunteer) என்பது தன்னார்வளர்களை அதற்குரிய மெய்யான அர்த்தத்தில் உருவாக்க விரும்பும் ஒரு அமைப்பு அதே நேரத்தில் பலன் தரக்கூடியதும் ஆகும். தீபக், ஒரு பெரு நிறுவனத்தில் தொழில் ஆய்வராகப் பணியாற்றுகிறார். ஹாரிஷ் தற்போது தஸ்ராவில் பணியாற்றுகிறார்.
கேள்விக்குக் கிடைத்தது விடை
கல்லூரியில் இளநிலைப் பட்டம் பயின்று கொண்டிருந்தபோது ஒரு இரவு நேரம் தீபக், பொது நிகழ்ச்சி ஒன்றில் தொண்டாற்றி விட்டு விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். தாங்கள் மேற்கொள்ளும் முன் முயற்சிக்குத் தேவையான தொண்டு புரியக் கூடியவர்களைக் கண்டடைய முடியாமல் அமைப்புகள் பலவும் சிரமப்படுவதை அப்போது உணர்ந்தார். அதே நேரம் அதன் மறுபக்கத்தையும் காணத் தவறவில்லை. தொண்டுபுரிய விரும்புகிற இளைஞர்கள் பலர் அதற்கு பொருத்தமான அரங்கம் ஒன்று வாய்க்காமல் இருப்பதும் அவருக்குத் தெரிந்தது. தான் பெற்றிருந்த தகவல் நுட்பப் பின்னணி அவருக்குக் கை கொடுத்தது. தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னார்வளர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவது என்று முடிவெடுத்தார்.
அதே நேரத்தில் மறுபுறம் ஹரிஷ், கல்விப் பயிற்சி அளித்தல், வாழ்க்கைத் தொழில் பயிலரங்குகள் நடத்துதல், இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு திறன்களுடன் தன்னார்வத் தொண்டு புரிந்து வந்தார். தனது தொண்டூழியத்தில் பெற்ற அனுபவம் அவரது வாழ்க்கைப் பாதையை மறு சிந்தனைக்கு உள்ளாக்கத் தூண்டுகோலாக விளங்கியது. வளர்ச்சித் துறையில் முதலீடு செய்யும் வங்கி வேலையை விட்டு விலகினார். இதுதான் அவர் “lets volunteer” என்ற தன்னார்வ தொண்டர்களை உருவாக்கும் அமைப்பைத் துவக்குவதற்கு உந்து சக்தியாக விளங்கியது.
ஹரிஷ் கூறுகிறார் – “நகரங்களில் மக்கள் பலர் தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவே விரும்புகின்றனர். குறிப்பாக கல்வி, ஆரோக்கியம் தொடர்பான அம்சங்களில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். இது எமது ஆய்வின் மூலமாகவும் உறுதிப்பட்டது. ஒவ்வொரு அமைப்புகளும் தங்களுக்குத் தேவையான தன்னார்வத் தொண்டர்களை எளிதாகப் பெற முடிகிறது. ஒத்த கருத்துள்ள மனிதர்களை தம்முடன் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் செய்து தருகிறார்கள். தங்கள் நிகழ்ச்சிகளை கேளிக்கை மிகுந்ததாகவும் அவர்களால் மாற்றிக் கொள்ள முடிகிறது. பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் வேடிக்கை மிக்கதாக இருப்பதால் இளைஞர்களுக்கு பொதுச் சமூக வளர்ச்சி இலக்கு என்பது இனிய அனுபவமாக அமைந்து விடுகிறது.
பயணப்பாதை
ஒரு சோதனை முன்னோட்டமாக முகநூல் பக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துவக்கினோம். அது எதிர்பாராத மகத்தான வெற்றியை அளித்தது. தீபக் கூறுகிறார் – “100 க்கும் மேலான தன்னார்வளர்கள் மும்பையில் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று 300 மணி நேர உழைப்பைச் செலுத்தினார்கள்” 2015 பிப்ரவரியில் தங்களது இணையதளத்தின் முதல் பதிப்பை அறிமுகம் செய்தனர். அதற்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தீபக் கூறுகிறார் – “நாங்கள் இணைய தளத்தை அறிமுகம் செய்த உடனே 100க்கும் மேலான தன்னார்வளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியுடன் எங்களது இணைய தளத்தில் பதிவு செய்து கொண்டனர். 20 க்கும் மேற்பட்ட அமைப்புகளும் எங்களது இணைய தளத்தில் தங்களைப் பதிவு செய்து மும்பை மற்றும் பெங்களூரில் 13 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். தன்னார்வளர்களின் 105 மணிநேர தொண்டுழைப்பு அந்நிகழ்ச்சிகளில் செலவிடப்பட்டது”.
தன்னார்வளர்களுக்கும் அமைப்புகளுக்குமான ஒரு மேடை
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொண்டு நிறுவனங்கள் எங்களது இணையத் தளத்தில் தங்களது மின்னஞ்சல் முகவரியுடன் எங்களிடம் கட்டணமில்லாமல் பதிந்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யும் அமைப்புகள் தங்களது பின்புலத்தையும் தெரிவிக்க வேண்டும். அவை பிறகு நிர்வாகிகளின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். நிர்வாகிகள் முதலில் நம்பகத் தன்மையையும், அடுத்து பின்புலத்தையும் ஆராய்வார்கள். நிர்வாகிகளின் ஒப்புதல் தொண்டு அமைப்புகளின் இணையதளத்தில் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து அமைப்புகள் தாங்கள் நடத்தவுள்ள நிகழ்ச்சிகளையும், தாங்கள் அதனை விபரங்களையும், தொண்டர்களுக்கான அழைப்பையும் அஞ்சல் செய்வார்கள். எந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்க விரும்புகிறார்கள் என்பதை தொண்டர்கள் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ததும் அது தானியக்கத்தின் மூலமாக அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
தொண்டர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதைக் குறிப்பிட்டு, இணைய தளத்தில் பதிந்து கொள்ள வேண்டியது அவசியம். தங்களது உழைப்பைச் செலுத்தச் சாத்தியமான இடம், சூழல், தேதி ஆகியவற்றை இணைய தளத்தில் தேடிக் கண்டடையலாம்.
தன்னார்வளருக்கு பொருத்தமான நிகழ்ச்சி நடக்கும் நாளில் அமைப்பின் வரவேற்பாளர் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் தன்னார்வளரைச் சந்திப்பார். நிகழ்ச்சி நடத்தி முடித்த பின் தொண்டரைப் பற்றிய கருத்தை தெரிவிக்கும், வருகைப் பதிவில் குறிப்பிடப்படும். அதேபோல் தொண்டருக்கு, அமைப்பு ரகசிய புள்ளிகளை அளிக்கும்.
தன்னார்வளர்களுக்கு மகிழ்வூட்டும் ரகசியப் புள்ளிகள்
நிகழ்ச்சி முடிந்ததும் தொண்டர்களுக்கு புள்ளிகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு தொண்டு ஏற்கும் நிறுவனங்கள் அவர்கள் புரிந்த தொண்டை நேரத்தின் அடிப்படையில் புள்ளிகள் வழங்குவார்கள். அப்புள்ளிகளைப் பெருக்குவதன் அடிப்படையில் எண்ணிக்கை சேர்க்கப்படும்.
ஆனால் இந்தப் புள்ளிகள் தன்னார்வளர்களுக்கு எப்படி ஊக்கத்தை அளிக்கும்? அந்தப் புள்ளிகளின் அடிப்படையில் புதிதாகத் துவங்கும் நிறுவனங்கள் பொருட்களின் தள்ளுபடிக் கூப்பன்களை அளிப்பார்கள். அந்தக் கூப்பன்களை ரகசியப் புள்ளிகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். Lets volunteer அமைப்பு பெங்களூரில் உள்ள சலூன்களிடம் கூட தொடர்புறவு வைத்துள்ளது. அச்சலூன் தன்னார்வத் தொண்டர்களுக்கு 50% தள்ளுபடி வழங்குகிறது.
வருமான வடிவம்
Lets volunteer, நெருக்கடியில் உள்ளது. அடுத்த 6-8 மாதங்களுக்கு எந்த வருமானத்தையும் எதிர்நோக்கி இல்லை. ஆனால் வருமானம் ஈட்டுவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டுள்ளது.
• வலைப்பின்னலில் இணைவதற்கான உறுப்பினர் கட்டணம் நிகழ்ச்சிகள் தளத்தில் அஞ்சல் செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை வசூலிக்க உள்ளது. உறுப்பியம் பெற்றுள்ள காலம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அமைப்புகள் செய்யும் அஞ்சல் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளது.
• தொண்டர்களின் புள்ளிகளுக்கு ஏற்ப தள்ளுபடிக் கூப்பன்கள் வழங்கும் மூன்றாம் நிலை பங்காளிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்த உள்ளது. அது குறித்து தீபக் விளக்குகிறார் “மூன்றாம் நிலைப் பங்காளிகளுக்கு எங்களது தொண்டர்கள் மூலமாக விற்பனை வருமானம் ரூபாய் 10000 கிடைக்குமானால் அதில் 5% lets volunteer க்கு அளிக்கப்பட வேண்டும், உதாரணமாக 500 ரூபாய் அளிப்பது என்கிற திட்டத்தை முன் வைக்க இருக்கிறோம்.
இன்றைய நிலையில் தங்களது இணைய தளத்தில் பதிந்து கொள்ளும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமாக உள்ளது. தங்களது அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்காக தங்களது கூட்டாளி அமைப்புகளுடன் பேச்சுவார்தை நடத்திக் கொண்டுள்ளனர்.
பரவலான கூற்று அவர்கள் வித்தியாசமானவர்கள். பிற அமைப்புகளைப் போலில்லை. இவர்கள் நிதி திரட்டுவதில்லை. அல்லது தங்களது இணைய தளத்திற்காக நன்கொடைகள் வாங்குவதில்லை. தொண்டூழியம் குறித்து நம் மக்களிடம் நிலவும் மனோபாவத்தை அகற்ற மனதார முயற்சிக்கிறார்கள். ஹரிஷ் கூறுகிறார் “தொண்டூழியம் என்பது அரசுசாரா அமைப்புகளுடையதோ அல்லது சமூகப் பிரச்சனைகளுக்கானது மட்டுல்ல. தொண்டூழியம் குறித்து முழுமையான மெய்யான அர்த்தத்தை மக்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. தொண்டூழியம் தேவைப்படும் இடத்திற்குரிய பல்வேறு சாத்தியங்களை நாங்கள் உருவாக்கித் தருகிறோம். விலங்குகள் நலவாழ்வு துவங்கி கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் விளையாட்டு, மனமகிழ் நிகழ்வுகள், வர்த்தக நிகழ்வுகள், பெண்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு இதுபோன்ற பல தேவைகள் உள்ளன”.
Lets volunteer இன் கைபேசி செயலிகளை விரைவில் அறிமுகம் செய்யும் திட்டம் வைத்துள்ளனர். அனைத்துவிதமான தொண்டூழிய வாய்ப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியங்களை நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். நகர இளைஞர்கள் மத்தியில் தொண்டுணர்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் தயாரித்துக் கொண்டுள்ளனர்.
இணையதள முகவரி: Lets Volunteer