பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை நாட்டியம் மூலம் மேம்படுத்தும் அருட் தந்தை சாஜு
தன்னைக் கலைக்கும் அடித்தட்டு மக்களுக்கும் அர்ப்பணித்துக் கொண்ட ஃபாதர் சாஜு சேரி இளைஞர்களுக்கு நாட்டியப் பயிற்சி அளித்து விமானத்தில் அனுப்பி வைக்கிறார் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு
வரவிருக்கும் 2016 ஆண்டு மேற்குவங்கம் தெற்கு 24 ஆம் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் நாட்டியக் குழு ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரிய நாடுகளுக்குத் தொடர் நாட்டிய நிகழ்ச்சி நடத்தப் பயணம் செய்கிறது. தெற்கு 24, பர்கானா நேபால்குஞ்ச் என்ற பகுதியில் வசிக்கும் சத்யன், பன்டானா, பர்பாடி, அகான்ஷா, குளோரியா ஆகிய இளைஞர்கள் தேர்ந்த நாட்டியக்காரர்கள். கல்கத்தாவின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர்கள், பெரிய கலை ஈடுபாடு ஏதும் இன்றி விளையாட்டுப் போக்காக இந்த நுண்கலையைக் கற்றுக் கொண்டார்கள். ஆனால பின்னர் இந்த இளைஞர்களும், இளைஞிகளும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அருட் தந்தை சாஜுவிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஐம்பது வயது நிரம்பிய ஃபாதர் சாஜு நாட்டிய திருச்சபையைச் சேர்ந்தவர். இவரிடம் பயிற்சி பெற்ற இளம் நாட்டிய திறனாளர்கள் தற்போது உள்ளூர் நர்சரிப் பள்ளிகளில் நாட்டிய ஆசிரியப் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பிப்லாப் மொண்டல், சுரேஷ் மொண்டல், பிராபிர் தாரா, பிமல் பாக் ஆகியோரின் குடும்பங்களும் இதே 24 பர்கானாப் பகுதியில் தான் வசிக்கின்றன. கிடைக்கிற வேலையைச் செய்து அன்றாடக் கூலிகளாக இருந்து கொண்டு, மிகவும் நெருக்கடியான ஒற்றை அறை மண் வீட்டில் காலம் தள்ளுகின்றனர். இவர்கள் படும் கஷ்டங்கள் எண்ணிலடங்காது. குறிப்பாக மழைக்காலத்தில் மூங்கில் கூரை காற்றில் பறந்து விடும், மண் சுவர் சரிந்து விழும். இரண்டுவேளைச் சாப்பாட்டிற்கே வருமானம் போதாத நிலையில் இடிந்த வீட்டை சரிப்படுத்த ஏது வழி. ஃபாதர் சாஜு ஜார்ஜை அவர்களுக்குத் தெரிகிற வரைதான் அவர்களது வாழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதற்குப் பிறகு எல்லாமே சுலபம் ஆகிவிட்டது. ஃபாதர் சாஜு அளித்த நிதி உதவியுடன் தங்களது சொந்த பங்களிப்புடன் செங்கல்லும், சிமிண்ட்டும் வைத்து புக்கா வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.
அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்கு சாஜு கடவுளாகத் தோன்றினார். நாட்டிய சபையைச் சேர்ந்த சாஜு தன்னார்வம் மிக்கவர். அர்ப்பணிப்பில் இன்பம் காண்பவர். சுவாமி விவேகானந்தா, ரபீந்தரநாத் தாகூர், அன்னை தெரஸா போன்ற ஆளுமைகளின் தாக்கம் பெற்றவர். ஏழை எளியவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவே தனது பூர்வீகமான கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டம், சாந்திபுரம் கிராமத்தை வி்ட்டு கொல்கத்தாவிற்கு வந்து விட்டார். ”கொல்கத்தா ஏழை மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இங்கு போதகராக வந்து விட்டேன். ஞானியாகவும், முனிவராகவும் மாறி அடித்தட்டு மக்களுக்குச் சேவையாற்றுவது எங்களது குடும்பத்தில் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. முன்னர் கொல்கத்தா தொண்டு இல்லத்தில் இருந்து கொண்டு கஷ்டப்படும் ஏழை மக்களுக்குத் தொண்டாற்றும் ஆண்கள் பிரிவில் சேவை புரிந்தேன். அதன் பிறகு ஓராண்டு கழித்து இளம் ஞானிகளுக்கு ஆன்மீகம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மூன்றாண்டுகள் கற்றுத் தரும் அமைப்பான தியானாஷ்ரமத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்” என்கிறார் சாஜு.
சிறுவயது முதலே அவருக்கு நாட்டியத்தின் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான பாலபாடத்தை தனது மூத்த சகோதரி செலின் சார்லஸிடமிருந்து கற்றுக் கொண்டார். 1985 ஆம் ஆண்டு திருச்சபையில் சேர்ந்த பின்னர் அங்கு அவருக்கு நாட்டிய பயிற்சி பெற மிகப்பெரும் ஊக்கம் கிடைத்திருக்கிறது. கொல்கத்தா ரபீந்திர பாரதி பல்கலைக் கழகத்தில் குச்சிப்புடி விரிவுரையாளராகப் பணியாற்றும் பிரபல நாட்டியாச்சார்யா குரு எம்.சி.வேதாந்த கிருஷ்ணாவின் கீழ் 1988 முதல் குச்சிப்புடி கற்றுக் கொண்டார். அதன் பிறகு 1991 முதல் சென்னையில் கலாக்சேத்திராவில் பரதநாட்டிய குரு கே.ராஜ்குமாரிடம் தீவிரப் பயிற்சி பெற்றார். அதையடுத்து தத்துவ மற்றும் கலாச்சாரக் கல்லூரியான சத்தியா நிலையத்தில் இரண்டாண்டு நாட்டியத்தில் பட்டயக் கல்வி பயின்றார். பட்டப்படிப்பை கொல்கத்தா செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் முடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு வந்து புனித இறையியல் கல்லூரியில் த த்துவத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். வளர்ந்து கொண்டிருந்த அவரது நாட்டியத்தின் மீதான ஆர்வம் பரத நாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற கொல்கத்தா ரபீந்தரநாத் பல்கலைக் கழகத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டது.
“கற்றுத் தரும் அளவிற்குத் தயாரானதும் செயிண்ட் சேவியர் கல்லூரியில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் தத்துவத் துறையில் ஒருங்கிணைப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு தென் கொல்கத்தா அடித்தட்டு சிறுவர்களுக்காக திருச்சபை அருட் தந்தையரால் நடத்தப்படும் சாந்தி நிர் இல்லத்தில் 2008 ஆம் ஆண்டு சேர்ந்தேன். இதன் இயக்குனர் என்ற வகையில் இந்த இல்லத்தில் வசிக்கும் 200 குழந்தைகளின் கல்வி மற்றும் ஒட்டுமொத்தமான மேம்பாட்டிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். நாட்டியமும் அவர்களது உணர்வை வெளிப்படுத்துவதற்கான ஊடகத்தை நிகழ்த்தும் கலையின் மூலமாகவும் கற்றுத் தரப்படுகிறது. தங்களது வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குள் மூழ்கிக் கிடந்த அவர்களுக்கு எங்களது இல்லத்தில் அளிக்கப்படும் அனைத்தும், புதிய காற்றை சுவாசிப்பது போல் புத்துணர்வு ஊட்டியது” என்று விளக்கினார் ஃபாதர் சாஜு.
சாஜு ஜார்ஜ், கலாக்சேத்திரா மற்றும் பீஸ் பவுண்டேசன் போன்ற பல்வேறு கலை கலாச்சார அமைப்புகளின் இயக்குனராகவும் இருக்கிறார். ”கலாக்சேத்திராவில் நான் விருப்பமானவர்களுக்கு நிகழ்த்து கலை பயிற்சி கற்றுத் தருகிறேன். குறிப்பாக சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருபவர்களுக்கு. மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பன்முக அறிவு உள்ளது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறேன்” என்கிறார் ஃபாதர் சாஜு.
தனது நாட்டியம் மற்றும் நாடகங்கள் நிகழ்த்துவதற்காக 25 க்கும் மேலான நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள ஜார்ஜின் நாட்டியமும் அவரது நிகழ்ச்சியும் உலகமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனது கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக திரட்டிய பணத்தைக் கொண்டு சமீபத்தில் 24 தெற்கு பர்கானாவில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறேன். அதில் கலைக் கல்லூரி, குறிப்பாக நிகழ்த்து கலைக்கான கலைக்கல்லூரி ஒன்று கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஏழைகள் என்பதோடு வாழ்வின் செழுமையான பக்கங்கள் மறுக்கப்பட்டவர்களும் கூட. அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டியம் மற்றும் நாடகம் போன்ற நிகழ்த்து கலைக்கான பட்டயக் கல்வியைத் துவக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கடுத்து படிப்படியாக இளநிலைப் பட்டமும் தொடர்ந்து முதுநிலைப் பட்டமும் துவக்கவுள்ளேன்.