ஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 5
ஒரு தொழில்முனைவோராக என் ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான முதல் தேடும் பயணத்தில் நான் கற்ற பாடங்களும் அனுபவங்களும்...
இந்தியா போன்ற ஒரு நாட்டில் இரண்டு வருடங்களுக்கு மேல் தாக்குபிடித்த Start-up-ல் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம் என்று முன்பு எழுதி இருந்தேன். அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று ஒரு நண்பர் இன்பாக்ஸ்ஸில் கேட்டிருந்தார்.
ஏனென்றால் இங்கிருக்கும் சவால்கள் போன்று பிற வளரும் நாடுகளில் உள்ள தொழில்முனைவோருக்கு இல்லை. அதே சமயம் இங்கு சில சாதகமான அம்சங்களும் உண்டு.
குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்கள்:
• 120 கோடி பேர்கள் கொண்ட மிகப் பெரிய சந்தை.
• இந்திய மக்கள்தொகையில் 45% பேர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயம். சராசரி இளைஞரின் வயது 27.
• கல்வி, பொருளாதார ரீதியாக 32% இந்திய மக்கள் இணையதளத்தையும், மொபைலையும் பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள்.
பாதகமான அம்சங்கள் நிறைய உள்ளது. அதை பற்றி எழுதத் தொடங்கினால் இந்த கட்டுரை போதாது. இந்திய தொழில்துறையில் பாதகமான அம்சங்களை ஒரே வரியில் சுருக்கமாக சொல்வதென்றால் Easy of doing business Rank இல் இந்தியா 100-வது இடத்தில் இருக்கிறது இதுவும் 2018 ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் மதிப்பு. 2017 ஆண்டிற்கான அறிக்கையில் இது 130-வது இடம், அமெரிக்கா 8-வது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் முதல் நாற்பது இடங்களில் இருக்கிறது. இந்த புள்ளிவிவரத்தில் கணக்கில் எடுக்கப்படாத வேறு பல பிரச்சனைகள் இந்தியாவில் உண்டு.
இவை அத்தனையையும் மீறி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இரண்டு வருடத்திற்கு மேலாக தாக்குபிடிக்கிறது என்றால் Valley of Death என்ற சோதனையை தாண்டி வந்துவிட்டது என்று பொருள்.
அதென்ன Valley of Death? இது தான் ஒரு Startup--ன் சோதனையான காலம். எந்த ஸ்டார்ட்அப்பும் எடுத்தவுடன் லாபம் சம்பாதித்து விடாது. ஒரு ஐடியாவை உருவாக்கி, வளர்த்து எடுத்து ஒரு பொருளாகவோ, சேவையாகவோ மக்களிடம் சேர்த்து அவர்களின் அங்கீகாரத்தை பெற்று, அதை பரவலாக சந்தைபடுத்தி பணம் வரும் வழிகளை உருவாக்கி அதில் மக்களிடம் இருந்து பணத்தை வரவழைத்து, அந்த பணத்தில் இருந்து செலவுகளை சமாளித்து மீளத் தொடங்குவதற்குள் கண்ணை கட்டி உயிர் போய் உயிர்வந்துவிடும். இந்த இடம் தான் "மரணப் பள்ளத்தாக்கு". தகுதியான ஐடியாக்கள் மட்டுமே இந்த பள்ளத்தாக்கில் இருந்து மீண்டு வரும். அப்படி ஒரு நிறுவனம் மீண்டு வந்துவிட்டால் அது நிச்சயம் வெற்றி பெற்றே தீரும். தேவை ஆரம்ப முதலீடு எனும் ஒரு உந்து சக்தி.
இந்தியாவிற்கும், உலக நாடுகளுக்கும் உள்ள வித்தியாசமே இந்த மரணப்பள்ளத்தாக்கினை கடக்கவே மேற்குலக நாடுகளில் முதலீடு கிடைக்கும். இந்திய தொழில்முனைவோருக்கு அந்த வாய்ப்பு மிக மிகக் குறைவு. IIT, IIM-ல் படித்த இளைஞர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்த அளவிற்கு சந்தையின் பயன்பாடு குறித்த களநிலவரம் தெரிவதில்லை. அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கிடைக்கும் முதலீட்டினை கொண்டு துறைசார்ந்த ஆட்களை நியமனம் செய்து இந்த குறையை நீக்கிவிடுவார்கள். இருந்தும் இந்த Valley of Death-ல் மாட்டிய IIT/IIM Startupகள் கணக்கில் அடங்காதவை. ஆனாலும் இந்த ஸ்டார்ட்அப்புகளுக்கு எப்படி ஆரம்ப முதலீடு கிடைக்கிறது? காரணம் இதே உயர்கல்வி நிறுவனங்களில் படித்து பெரிய அளவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே ஏஞ்சல் இன்வெஸ்ட்மென்ட் பற்றி அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
பொருளாதார பலமிக்க பொதுசமூகத்தில் இருந்து ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட வரவே இல்லை என்று சொல்லலாம். இதை பற்றி சொல்லவும் எழுதவும் இங்கு போதிய ஆள் இல்லை. பிராந்திய மொழி பத்திரிக்கைகளில் இதை பற்றிய செய்தியே கிடையாது என்பேன். யுவர்ஸ்டோரி தமிழ் தளத்தில் மட்டுமே கொஞ்சம் காணக்கிடைக்கிறது.
இன்னொரு நண்பர் கேட்டார் “ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்தால் எனக்கு எத்தனை சதவீத லாபம் கிடைக்கும்”? என்று...
ஸ்டார்ட்அப்பில் நீங்கள் செய்யும் முதலீடுக்கு பின்னாளில் லாபம் என்பது சதவீதத்தில் கிடைக்காது பல மடங்குகளில் கிடைக்கும். அடுத்தடுத்த முதலீடு சுற்றுகளில் செய்யப்படும் முதலீடுகள் மூலமாக உங்களது லாபம் பல மடங்காகும். இதை தான் சென்ற வார தொடரில் கூகிள் முதலீட்டாளர் மூலம் பார்த்தோம்.
அதற்கு முன்பு ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்வதற்கு நிறுவனத்தின் மதிப்பீடை (Valuation) செய்வது எப்படி அளவிடப்படுகிறது என்ற புரிதல் வேண்டும்.
நிறுவனத்தின் தயாரிப்புகள், பயனாளிகளின் எண்ணிக்கை, தொழில் துறை, பயனாளிகளின் ரேட்டிங், நிறுவனர்களின் மதிப்பீடு, குழுவின் தகுதிகள் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளப்படும். நிறுவனம் தொடங்கப்படாமல் ஐடியா நிலையில் குறைந்தபட்ச மதிப்பீடு 400,000 டாலர்கள். அந்த நிலையில் நிறுவனம் Incubator எனப்படும் ஸ்டார்ட்அப் அடைகாப்பு முறையில் சென்றால் ஐந்து சதவீதம் விட்டுகொடுத்து 20000 முதல் 100,000 டாலர்களை திரட்டுவார்கள். அதன் பிறகு குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆரம்பமுதலீட்டிற்கு அதிகபட்சம் பத்து சதவீதம் விட்டுக்கொடுத்து, 100000 முதல் 2 மில்லியன் டாலர்களை திரட்டுவார்கள். இந்த நிலைகளில் நிறுவனம் தன்னை நிருபித்திருக்க வேண்டும். B2C என்றால் குறைந்தபட்சம் 20,000 பயனாளிகளை நிறுவனத்தின் பொருள் அல்லது சேவை சென்று சேர்ந்திருக்க வேண்டும். இப்படிதான் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. இது உலக தொழில்துறையின் சராசரி நிலவரம்
ஏஞ்சல் முதலீட்டாளர்கள் உள்ளே வரும்போது நிறுவனத்திற்கு உண்மையாகவே எவ்வளவு வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இந்த சுற்றில் ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 7 மில்லியன்களுக்கும் அதிகமாக மதிப்பு கணக்கிடப்பட்டு அதில் நிறுவனத்திற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு திரட்டி அதற்கேற்ற பங்கை கொடுக்கலாம். Angel.co தளத்தின் அறிக்கைப்படி இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சராசரி மதிப்பீடு 4.6 மில்லியன் டாலர்கள்.
நிறுவனத்தின் மதிப்பீடு 4 மில்லியன் டாலர்கள் = 100 சதவீதம் எனக் கொள்க. நிறுவனம் இந்த சுற்றில் கேட்கும் முதலீடு 400,000 டாலர்கள் என்றால் ஏஞ்சல் முதலீட்டாளர்க்கு கொடுக்க வேண்டிய பங்கின் அளவு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும்.
நிறுவனத்தின் தற்போதைய மதிப்பீடு/ ஏஞ்சல் சுற்றில் கேட்கப்படும் முதலீடு
= 4,000,000 / 400,000
= 10%
இந்த சராசரி அளவை தாண்டி நிறுவனம் மதிப்பீடு செய்யப்படும் போது மட்டும் நிறுவனம் அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்கவேண்டும். சராசரிக்கும் அதிகமாக சாதித்திருந்தால் அல்லது அதற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்தால் இந்த அளவீடுகள் மாறும்.
அடுத்த பதிவில் முதலீட்டிற்கு கொடுக்கப்படும் சான்றுகள் என்னென்ன? முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்படும் வேறு சிறப்பு சலுகைகள் என்னென்ன என்று பார்ப்போம்...
(கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், நிறுவனத்தின் நிறுவனர். இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)