Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சிறந்த தலைவர்களுக்கு இருக்கும் முத்தான பத்து பழக்கங்கள்!

சிறந்த தலைவர்களுக்கு இருக்கும் முத்தான பத்து பழக்கங்கள்!

Saturday June 18, 2016 , 3 min Read

பல பில்லியன் டாலர் கம்பெனிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது பத்து ஊழியர்களைக் கொண்டு, ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி நிர்வகிப்பவராய் இருந்தாலும் சரி, சிறந்த தலைவராய் திகழ்பவர்களிடம் சில ஒற்றுமைகள் உண்டு.

எப்பொழுதும் திறமையுள்ள குழுவுடன் வேலை செய்யும் வாய்ப்பு, அவர்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், தன் குழுவிடம் இருந்து சிறந்த வெளியீட்டைப் பெறுவதில் அவர்கள் திறமையானவர்கள்.

பெரியபெரிய தலைவர்களில் பெரும்பாலானோர் கொண்டிருக்கும், ஒருவகைப்பட்ட பொதுவான பத்து பண்புகள் என்னென்னவென்று தெரிந்து கொள்வோம்!

1. 'நான் நானாய் இருப்பேன்' - சுயமானவர்கள்

நல்ல தலைவர்கள் ஒருபோதும் பிறரின் ஸ்டைலைப் பின்பற்ற மாட்டார்கள். விடாமுயற்சியினாலும் சுய அறிவாற்றலினாலும், அவர்களுக்கென அவர்களால் வடிவமைக்கப்பட்ட, தனித்தன்மை வாய்ந்த ஒரு வெற்றிக் கதை தலைவர்களுக்கு இருக்கும். வேறுபட்டு சிந்திக்கவும், மாற்றத்தை உருவாக்கவும் தைரியம் கொண்டு, வெற்றி நடைபோடுவார்கள்.

2. 'பதறிய காரியம் சிதறும்' - பொறுமை கொண்டவர்கள்

பொறுமை கொண்டவர்கள் என்பதால், வேலையை தள்ளி போடுபவர்கள் என்று அர்த்தமில்லை. வைக்கோல் போட சூரியன் பிரகாசிக்கும் வரை காத்திருப்பது போல ஆகும். தன் திட்டத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்த, தனக்கு சாதகமான சூழல் அமையும் வரை, விருப்பத்துடன் காத்திருப்பவர். 

லியோனார்டோ டா வின்சி, தனது புகழ்பெற்ற 'மோனா லிசா' ஓவிய கலைப்படைப்பை, உலகத்திற்குக் காட்ட 16 வருடம் தேவைப்பட்டது.

தலைவர்கள், தரம் தாழ்ந்த யோசனையோ அல்லது பொருளையோ கொண்டு, முதலில் வேலையை முடிப்பதை விரும்பமாட்டார்கள். அவர்களின் மாற்றத்தை உருவாக்க வல்ல கண்டுபிடிப்புகளை வெளிகாட்ட காலம் எடுத்துக்கொள்வர்.

3. அவர்களுக்கென தனி அடையாளம் உள்ளவர்கள்

தாம் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி காண, தலைவர்களுக்கு தனி அடையாளம் தேவையில்லை. அவர்களின் முயற்சிகளுக்கு, அவர்களே அடையாளம் ஆவர். "குறைவாய் பேசு, நிறையாய் வேலை செய்" என்பதை மனதில் கொண்டு, உறுதியான முடிவுகள் எடுப்பர். பிடித்ததை மட்டும் செய்யாமல், தான் செய்வதிலும் நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பர்.

4. குறையைக் காணமல் நிறைவாய் பணிசெய்வர்

வளங்கள் இல்லை என்றோ, வேலை செய்ய நல்ல சூழலும் வாய்ப்புகளும் இல்லை என்றோ, என்றுமே குறை கூற மாட்டார்கள் நல்ல தலைவர்கள்.

தானே நிறுவனத்தின் முழு செலவைப் பார்த்துக்கொள்ளும் நிலையிலும் சரி, அல்லது பிறர் முயற்சிக்க, தன் வெற்றிகளை சிறிது காலம் ஒத்திவைக்க நேரிட்டாலும் சரி, ஒரு சிறந்த முதல்வராய் சூழலை அவனே கையாள நினைப்பவன் தலைவன். எல்லாவற்றையும் விட, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கே முன்னுரிமை அளித்து, வெற்றியை அடைய குழுவுடன் சேர்ந்து பணிபுரிவான்.

5. நான் என்று சொல்லாமல், நாம் என்று சொல்வார்கள்

நல்ல குழு மற்றும் குழுவினரின் வலுவான பிணையத்தின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தவர்கள். மற்றவர்களுக்குள்ள பலவீனத்தை எதிர்கொள்ள, அவர்களுக்கு உதவி செய்து, நேர்மையான சூழலை மேம்படுத்துவர். தனது குறிக்கோளுக்கு இணங்க, அனைத்து ஊழியர்களையும் இணைத்து, ஒன்று கூடி பணிசெய்ய வைப்பது, தலைமைத்துவ பண்புகளில் முக்கியமான ஒன்றாகும்.

6. ஊக்குவிப்பதற்கு மாறாக, நோக்கத்தை உணர்த்துவர்

நம் ஆச்சரியதிற்கேற்ப, நல்ல தலைவர்கள் ஒருபோதும் ஊக்கத்தைப் பெற கட்டாயப்படுத்த மாட்டார்கள். தொழிலில் வெற்றி காணும் போது தான், உண்மையான உத்வேகம் தானாகவே கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு ஊழியரும் தங்கள் திறமையையும் வலிமையையும் தெரிந்து கொண்டு, பணியை விரும்பி செய்யுமாறு உறுதுணை புரிவர். ஊழியர்களைப் பாராட்டி, ஊக்கத்துடன் கூடிய சூழலை உருவாக்கி மேம்படுத்துவர்.

7. ரிஸ்க் எடுப்பது, அவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல

போட்டிபோட்டு ஓடிக்கொண்டே இருக்கும் உலகம் இது. ஆயினும், வரும் தடைகளைத் துணிந்து எதிர்கொள்ளும் பண்பைக் கொண்டு, நம்மை என்றுமே சிறந்த தலைவர்கள் ஆச்சரியப்படுத்துவர். அவர்களது வீழ்ச்சி மற்றும் வெற்றிகளை எப்பொழுதும் தெரியப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். தலைவர்கள் தங்கள் அறிவாற்றலைக் கொண்டு, நிறுவனத்தின் வெற்றிக்கு உள்ள தடைகளைத் தகர்த்தெறிவர்.

8. பிறரிடமிருக்கும் நற்குணங்களைக் கற்றுக்கொள்வர்

மிகுந்த செல்வாக்குள்ள தலைவர்கள் கூட, தங்களை ஒருபோதும் 'பாஸ்' என்று கருதமாட்டார்கள். 

தன்னைவிட இளையோராய் இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் நற்குணங்களை, திறந்த மனதுடன் கற்றுக்கொள்வர்.

 குழுவைத் தலைமை தாங்கியவராயினும், மற்றொரு பங்கேற்பாளர் போல நடந்து கொள்வர்.

9. விவாதம் செய்யமாட்டார்கள்

தன் பக்கம் நியாயம் இருந்தாலும், தலைவர்கள் அமைதியாய் இருப்பதை பார்த்திருப்போம். நாம் செய்தது நியாயம் என்றால், அதனை நிரூபிக்க விவாதத்தில் ஜெயித்து காட்ட வேண்டிய அவசியமில்லை. தலைவர்கள், நியாயத்திற்கும், சந்தோஷத்திற்கும் இடையே கோடு போட்டு வாழும், ஞானம் உள்ளவர்கள் ஆவர்.

10. முடங்கி போகாமல் முன்னிற்பவர்

பிரச்சனை என்று வந்துவிட்டால், அதனைத் தீர்க்க தானே முதலில் களம் இறங்குவர். சிறந்த திட்டங்களைத் தீட்டி, உன்னதமான தலைமைத்துவத்தோடு, அத்திட்டங்களைச் செயல்படுத்தி, எதிர்பாராது வந்த துன்பங்களை முறியடிப்பர்.

தலைவராக இருக்க வேண்டுமெனில், நல்ல குழு வேண்டும். ஆனால் குழுவை, வலிமையானதாகவும் பயனளிப்பதாகவும், ஒரு சிறந்த தலைவரால் மட்டுமே    மாற்ற முடியும்.

கட்டுரையாளர்: ஐஸ்வர்யா ராத்தோர் | தமிழில்: நந்தினி பிரியா

(பொறுப்பு துறப்பு: மேற்கூறியவை அனைத்தும், கட்டுரையாளரின் கருத்துகளாகும். யுவர்ஸ்டோரி-யின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)