விவசாயிகளின் விளைச்சல் மற்றும் வருவாயை பெருக்க உதவும் 5 அக்ரி-டெக் நிறுவனங்கள்!
இந்தியாவில் விவசாயத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்படும் நிலையில் விவசாய செயல்முறைகளை எளிதாக்கி உற்பத்தி திறன் அதிகரிக்க உதவும் 5 ஸ்டார்ட் அப்களை யுவர்ஸ்டோரி தொகுத்துள்ளது.
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு. உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் நம் அடிப்படைத் தேவைகள். நம் தட்டில் வந்து சேரும் உணவின் பின்னால் எத்தனையோ விவசாயிகளின் கடுமையான உழைப்பு அடங்கியிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் உடலுழைப்பு சார்ந்த பெரும்பாலான வேலைகள் எளிதாக்கப்படுகின்றன. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகள்?
இத்தனை இருந்தும் விவசாயத் துறை எந்த அளவிற்கு மாறியுள்ளது? புதிய தொழில்நுட்பங்கள் விவசாயத்தையும் அந்தத் தொழிலையே சார்ந்திருக்கும் விவசாயிகளின் நிலையையும் மேம்படுத்தியிருக்கிறதா?
விவசாயத் துறையில் உள்ளவர்கள் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் பழைய இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளன. சந்தையை எளிதாக அணுகமுடிவதில்லை. இடைத்தரகர்கள் தலையீடு. மிகக்குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்படி எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இவை ஒருபுறம் இருக்க சமீக காலமாக தொடங்கப்பட்டு வரும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேளாண் துறையில் கவனம் செலுத்துவது பாராட்டிற்குரியது. இந்நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கவும் விவசாயிகள் லாபம் ஈட்டவும் உதவுகின்றன.
இவ்வாறு விவசாய செயல்முறைகளை எளிதாக்கவும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் உதவும் 5 ஸ்டார்ட் அப்களை யுவர்ஸ்டோரி பட்டியலிட்டுள்ளது.
1. Agrostar
ஷர்துல் ஷேத், சிதான்ஷு ஷேத் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது அக்ரோஸ்டார். புனேவைச் சேர்ந்த இந்நிறுவனம் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- விவசாயிகளுக்கான ஆன்லைன் சந்தைப்பகுதியாக செயல்படுகிறது.
- நிபுணர்களைக் கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறது.
- பயிர்களை முறையாக நிர்வகிக்கவும் விளைச்சல் அதிகரிக்கவும் வழிகாட்டுகிறது.
- விவசாயிகள் உயர்தர வேளாண் உள்ளீடுகளைப் பெறுவதில் இருக்கும் இடைவெளியை நிரப்புகிறது.
அக்ரோஸ்டார் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் என ஐந்து மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு சேவையளிக்கிறது. தற்போது விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
டிஜிட்டல் ரீதியாக இந்தியா முழுவதும் செயல்பட்டாலும்கூட ஐந்து நகரங்களில் நேரடித் தொடர்பில் இருப்பதாக அக்ரோஸ்டார் இணை நிறுவனர் & சிஇஓ ஷர்துல் ஷேத் தெரிவிக்கிறார்.
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஸ்டார்ட் அப் 70 மில்லியன் டாலர் சீரிஸ் டி சுற்று நிதி திரட்டியுள்ளது. இந்த நிதித்தொகை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2. DeHaat
அம்ரேந்திர சிங், ஷ்யாம் சுந்தர், ஆதர்ஷ் ஸ்ரீவத்சவ், சஷாங்க் குமார் ஆகியோர் இணைந்து இந்த ஸ்டார்ட் அப்'பை நிறுவியுள்ளனர். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் இந்திய விவசாயத் துறையில் காணப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தின்கீழ் ஒட்டுமொத்த வேளாண் மதிப்பு சங்கிலியையும் கொண்டு வந்து தீர்வளிக்க விரும்புவதாக சஷாங்க் குமார் தெரிவிக்கிறார்.
2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஸ்டார்ட் அப் 115 மில்லியன் டாலர் சீரிஸ் டி சுற்று நிதி திரட்டியுள்ளது. தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்தவும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
3. CropIn
கிருஷ்ணா குமார், குணால் பிரசாத், ரூபேஷ் கோயல் ஆகியோர் இணைந்து இந்த ஸ்டார்ட் அப்பை நிறுவியுள்ளனர். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகள் சார்ந்த விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ஆகும்.
- உலகளவில் விவசாயத் தொழில்களுக்கு SaaS தீர்வுகளை வழங்குகிறது.
- தரவுகள் சார்ந்து செயல்படும் இந்நிறுவனம் விவசாய தொழில்களும் உற்பத்தியாளர்களும் கூடுதல் மதிப்பைப் பெற உதவுகிறது.
- உலகளவில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பார்டனர்களாக இணைந்து 16 மில்லியன் ஏக்கர் விளைநிலத்தை டிஜிட்டல்மயமாக்கி உள்ளது.
- ஏழு மில்லியன் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.
- 56 நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பயிர் வகைகளுக்கு 400-க்கும் மேற்பட்ட அறுவடைகள் தொடர்பான நுண்ணறிவை உருவாக்கியுள்ளது.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஸ்டார்ட் அப் 20 மில்லியன் டாலர் சீரிஸ் சி சுற்று நிதி திரட்டியுள்ளது. சர்வதேச அளவிலான விரிவாக்கப் பணிகளுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
4. Fasal
சைலேந்திரா திவாரி, ஆனந்தா வர்மா ஆகியோர் இணைந்து இந்த ஸ்டார்ட் அப்’பை நிறுவியுள்ளனர். 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஐஓடி சாஸ் தளம்.
- விவசாயிகளுக்கு அவர்களது மொழியிலேயே விளைச்சல் தொடர்பான விவரங்களை வழங்குகிறது.
- விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைகளை திட்டமிட்டு ஆய்வு செய்ய உதவும் வகையில் இந்த ஸ்டார்ட் அப் செயலியைப் பயன்படுத்துகிறது.
- பாரம்பரிய செயல்பாடுகளைத் தாண்டி விவசாயிகள் லாபம் ஈட்டத் தேவையான நுண்ணறிவு வழங்கப்படுகிறது.
2021-ம் ஆண்டு இந்த விவசாயத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் 4 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்தியாவிலும் தெற்காசியாவிலும் விரிவடையவும் நிர்வாகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பம் போன்றவற்றை வலுப்படுத்தவும் இந்த நிதித் தொகை பயன்படுத்தப்படும்.
5. Intello Labs
மிலன் ஷர்மா, ஹிமானி ஷா, நிஷாந்த் மிஷ்ரா, தேவேந்திர சாந்தினி ஆகியோரால் இந்த ஸ்டார்ட் அப் நிறுவப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
- இந்நிறுவனம் டிஜிட்டல் பிராடக்ட்ஸ் உருவாக்கியுள்ளது.
- இதன் மூலம் சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் போன்றோர் காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தை மதிப்பீடு செய்யலாம்.
- காய்கறி அல்லது பழம் சாப்பிடத் தயார்நிலையில் உள்ளதா, வீணாகிவிட்டதா என்பன போன்ற முழுமையான விவரங்களை வழங்குகிறது. இதற்காக இந்த ஸ்டார்ட் அப்பின் மொபைல் செயலி செயற்கை நுண்ணறிவையும் இமேஜ் அனாலிடிக்ஸையும் பயன்படுத்துகிறது.
2020-ம் ஆண்டு இந்த ஸ்டார்ட் அப் 50 மில்லியன் டாலர் சீரிஸ் ஏ நிதி திரட்டியுள்ளது. அமெரிக்கா, ஆசியா பசபிக் போன்ற பகுதிகளில் விரிவாக்கம் செய்ய இந்த நிதித்தொகை பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: பூஜா மாலிக் | தமிழில்: ஸ்ரீவித்யா