52+ நாடுகள், 13மில்லியன்+ ஏக்கர்கள், 4மில்லியன்+ விவசாயிகள்: சர்வதேச அக்ரி நிறுவனத்தை நிலைநாட்டிய நண்பர்கள்!
இந்தியாவைச்சேர்ந்த வேளாண் நுட்ப நிறுவனமான, க்ரோபின் தரவுகள் ஆய்வு, ஏஐ ஆகிய நுட்பங்கள் உதவியோடு, 52 நாடுகளில் சேவை அளித்து விவசாயிகள் மத்தியில் தாக்கம் செலுத்தி வருகிறது.
அதிகம் பாராட்டிப் பேசப்படும் இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் மற்றும் புதுமையாக்கம் சார்ந்த பொருளாதாரத்தில், இதுவரை நுகர்வோர், இணையத்தின் எழுச்சி மற்றும் இ-காமர்ஸ், உணவு நுட்பம், போக்குவரத்து சார்ந்த நிறுவனங்கள் முன்னணியில் இருந்தன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நிதிநுட்ப நிறுவனங்களின் எழுச்சி முக்கியமாக இருந்தது என்றால், இந்த பத்தாண்டுகள் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம் மற்றும் அதில் வளர்ந்து வரும் நிறுவனங்கள் முக்கியமாக அமைய இருக்கிறது.
பெங்களூருவைச்சேர்ந்த நாட்டின் பழைமையான விவசாய ஸ்டார்ட் அப் நிறுவனமான க்ரோபின் (CropIn) நிறுவனர்கள் இந்த நம்பிக்கையை தான் கொண்டுள்ளனர். 2010ல் முதல் முறை தொழில்முனைவோர்களான கிரஷ்ணகுமார், குனால் பிராசாத் மற்றும் சித்தரஞ்சன் (2019ல் வெளியேறிவிட்டார்), க்ரோபின் நிறுவனத்தைத் துவக்கிய போது இந்தியாவில் யாரும் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை.
அதோடு, பன்னாட்டு வேலையை விட்டு விட்டு, விவசாயத்துறையில் ஒருவர் ஈடுபடுவதும் புதிதாக இருந்தது. ஆனால், க்ரோபின் நிறுவனர்களை அதை தான் செய்தனர். மென்பொருளை ஒரு சேவையாக அளிக்கும் SaaS சேவை மூலம் அவர்கள் இப்போது 52க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை அளித்து வருகின்றனர்.
இன்று, பாசல், ஆக்நெக்ஸ்ட், இண்டெலோலேப்ஸ், பார்ம்.இ.ஆர்பி, சென்ஸ்கிராஸ் உள்ளிட்ட வேளாண்நுட்ப நிறுவனங்களுடன், இந்த எழுச்சி மிகு துறையின் மையமாக க்ரோபின் திகழ்கிறது. வேளாண்நுட்பத் துறை 2025ல் 22 பில்லியன் டாலர் மதிப்பு மிக்கதாக திகழும் என்பதோடு, முதல் வேளாண்நுட்ப யூனிகார்ன் நிறுவனத்தையும் காணும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கடந்த பல ஆண்டுகளாக நுகர்வோர் இணையம் மற்றும் நிதி நுட்ப நிறுவனங்களில் கோடிக்கணக்கான டாலர்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் அடுத்த பத்தாண்டுகள் வேளாண் நுட்ப நிறுவனங்களுக்கு உரித்தானது. ஏனெனில் 2050ம் ஆண்டு வாக்கில் 9.7 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் எனில், பண்ணை செயல்திறன் 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்,” கிருஷ்ணா கூறுகிறார்.
பழைய, பாரிம்பரிய தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றம் வந்தால் தான் இது சாத்தியம். புதுயுக நுட்பங்கள் மற்றும் டேட்டா அறிவியல் பயன்படுத்தப்பட வேண்டும். இதை தான் க்ரோபின் செய்கிறது.
“சிக்கலான பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு கண்டு, பெரிய அளவில் தாக்கம் செலுத்த விரும்புகிறோம். பல்வேறு துறைகளை அலசிப்பார்த்து விவசாயத்தை தேர்வு செய்தோம். ஏனெனில், விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் நிலையாலும் அவர்களுக்காக யாரும் தொழில்நுட்பத்தை உருவாக்க முற்படவில்லை,” என்கிறார்.
வேளாண் நுட்பத்தின் தாக்கம்
துவங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில், CropIn உலக நாடுகளில் 13 மில்லியன் பண்ணை நில ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கியுள்ளது. இதன் 60 சதவீத வருவாய் சர்வதேச செயல்பாடுகள் மூலம் வருகிறது. நிறுவனம், பல்வேறு பருவநிலை சூழல்களில், 3,500 பயிர்கள் தொடர்பான கணிப்பு சேவையை உருவாக்கியுள்ளது.
வேளான் உள்ளீடு நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தகர்கள், காப்பீடு நிறுவனங்கள், அரசு ஆலோசனை அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் என 220க்கும் மேற்பட்ட பெரிய வேளாண் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
2020ல் கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியிலும் க்ரோபின் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டது. பிக்சல் நுணுக்க செயற்கைகோள் படங்கள், வானிலை தரவுகள், கணிப்பு ஆய்வு மற்றும் ஏ.ஐ உதவியுடன் ஏக்கர் அளவிலான பண்ணைநில மதிப்பை அதிகரிக்கச்செய்வதை க்ரோபின் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத சாஸ் சேவையான ஸ்மார்ட் பார்ம் மற்றும் ஸ்மார்ட் ரிஸ்க் மூலம் கிடைக்கும் தரவுகள் பண்ணை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. பயிர் தோல்வி, வானிலை பாதிப்பை ஆகியவற்றையும் குறைக்கிறது.
நிறுவனத்தின் மற்றொரு சேவையான ஏக்கர்ஸ்கொயர், வேளாண் தொழில்முனைவோர் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வழி செய்கிறது.
சர்வதேச செயல்பாடு
உலக அளவில் செயல்பட வேண்டும் எனில், இருப்பிடம் சாராத, ஒரு நிர்ணயம் கொண்ட சேவையை உருவாக்க வேண்டும் என நிறுவனம் அறிந்திருந்தது.
“சிறிய அளவிலான பயிரை தேர்வு செய்தால் பெரிதாக வளர முடியாது. பூகோளம் ஒரு தடையாக இருக்கும். பல்வேறு பகுதிகள் மற்றும் பயிர்களில் செயல்படக்கூடிய சீரான செயல்முறை மற்றும் சர்வதேச மொழியை உருவாக்க விரும்பினோம்” என்கிறார் கிருஷ்ணா.
நிறுவனம் 2016 முதல் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. அப்போது பி2பி வேளாண் நிறுவனங்கள் அதிகம் இல்லை. எனவே, விவசாய நிறுவனங்கள் க்ரோபின் சேவையை வரவேற்று ஆதரித்தன.
“மூலதனம் திரட்டுவதற்கு முன்னரே 13 நாடுகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். உங்கள் சேவை மதிப்பு அளிப்பதாக இருந்தால் பணத்திற்கு காத்திருக்க வேண்டாம். நடுத்தர நிறுவனங்கள் அல்லாமல் பெரிய நிறுவனங்களுடன் செயல்பட வேண்டும் எனத் திட்டமிட்டோம். இதன் மூலமே உலக அளவில் செல்ல முடியும் என நினைத்தோம். நிறுவன வழியை நாடியது பெரிய அளவில் உதவியது. இன்று உலக அளவிலான குழுவுடன் நிலத்தில் கால் பதிந்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் அவர்.
அண்மையில் இந்நிறுவனம் ஆம்ஸ்டர்டமில் அலுவலகம் துவங்கி, ஐரோப்பிய சந்தைக்கான வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. ஜனவரியில், சி சுற்று நிதியாக 20 மில்லியன் டாலர் திரட்டியது. ஏபிசி வேர்ல்டு ஏசியா தவிர ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.
CDC குழுமம் மற்றும் கிரிஸ் கோபாலகிருஷணனின் பிரதிதி இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட்டும் இதில் பங்கேற்றன. இதன் மூலம் நிறுவனம் 35 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.
இதற்கு முன்னர், Beenext, Ankur Capital, மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. நிறுவனம் இந்த நிதியை சர்வதேச விரிவாக்கம் மற்றும் தனது இயந்திர கற்றல் சேவையை மேடையை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
குழு உருவாக்கம்
ஸ்டார்ட் அப் பயணத்தில் அணி உருவாக்கம் தான் முக்கியம் என க்ரோபின் நிறுவனர்கள் கருதுகின்றனர்.
“நாங்கள் உருவாக்கியுள்ள அணி தான் எங்கள் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. சிறந்த வேளாண் சேவையை உருவாக்குவதோடு, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் சிறந்த திறமையை நாடுகிறோம்,” என்கிறார் இணை நிறுவனர்களில் ஒருவரான குனால்.
நிறுவனம் முன்னணி எம்பிஏ பட்டதாரிகள் மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறியாளர்களை ஈர்த்து வருகிறது.
தொழில்முனைவுப் பயணம்
ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்கி அதை உலக அளவில் கொண்டு சென்றுள்ள நிறுவனர்கள், இந்த கற்றல் முதல் முறை தொழில்முனைவோருக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர். நிறுவனத்திற்கு முதல் பணியாளர்களை அமர்த்திக்கொண்ட அனுபவத்தையும் கிருஷ்ணா பகிர்ந்து கொள்கிறார்.
“நீங்கள் முதல் பணியாளரை நியமிக்கும் போது மனிதவள அதிகாரியாக செயல்படுகிறீர்கள். நீங்கள் காலி அறையில் அமர்ந்தபடி இது பில்லியன் டாலர் நிறுவனம் என்று கூறுகிறீர்கள்,” என்கிறார் அவர்.
“முதல் வாடிக்கையாளருக்கு சேவையை விற்கும் போது நீங்கள் விற்பனையை கற்றுக் கொள்கிறீர்கள். உங்கள் நோக்கத்தை முதலீட்டாளருக்கு விற்கும் போது, நீங்கள் நிதியை கற்றுக்கொள்கிறீர்கள். இந்த பயணத்தில் நிறைய கற்றல் சாத்தியமாகிறது”.
விவசாயம் போன்ற பாரம்பரியத் துறையில் செயல்படும் போது குறைவாக பேசி, நிறைய செயல்பட வேண்டும் என்கிறார் குனால். இது ஒரு தொடர் கற்றல். இந்தத் துறை பிரச்சனைகளைப் பேசுவதால் நீங்கள் உற்று கவனித்தால், அது தீர்வுகளுக்கான உள்ளொளியை அளிக்கும் என்கிறார் அவர்.
சில நேரங்களில் சற்று மிகையாக செயல்பட்டு வாடிக்கையாளர்கள் சேவையின் தாக்கத்தை உணரச்செய்ய வேண்டும் என்பது மற்றுமொரு கற்றல் அனுபவம் என்கிறார். எனினும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே உண்மையில் பெரிய பாடம் என்கின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்- சைபர்சிம்மன்