இளம் வயதில் SIP-ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் 5 முக்கிய ஆதாயங்கள் என்ன?
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பதன் சுருக்கம்தான் SIP. முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளும் முறை.
இளம் வயது முதலீட்டாளர்கள் எவ்வளவு விரைவாக முதலீடு செய்ய தொடங்குகிறார்களோ அந்த அளவிற்கு அதிக ரிட்டர்னை பெறலாம் எனச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் முதலீடு செய்ய போதுமான நிதி அவர்கள் கைவசம் இல்லாமல் இருக்கலாம். அந்த சிக்கலை எதிர்கொள்ள உதவுகிறது SIP முதலீடு.
SIP முதலீடு எப்படிச் செல்வது?
அதென்ன SIP? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறைகளில் இந்த SIP-யும் ஒரு முறையாகும். இதனை ’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ (Systematic Investment Plan) என்பதாகும். அதன் சுருக்கம்தான் SIP. முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளும் முறை இது.
இதில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்ய முடியும். அது மாதம் அல்லது காலாண்டு என்ற கணக்கில் இருக்கலாம். அதே போல, மிகக் குறைந்த தொகையையும் இதில் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட கால முதலீட்டுக்கு SIP பயனுள்ளதாக இருக்கும். இதில் இளம் வயதில் முதலீடு செய்ய 5 முக்கியக் ஆதாயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
இளம் வயதில் முதலீடு செய்ய 5 முக்கிய ஆதாயங்கள்
Compounding சார்ந்த ஆதாயத்தை பெறலாம்: SIP முறையில் நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்தால் Compounding சார்ந்த ஆதாயத்தை முதலீட்டாளர்கள் பெற முடியும். அசல் முதலீடு மற்றும் ஏற்கனவே ரிட்டர்னாக பெற்ற தொகையையும் சேர்த்து முதலீடு செய்து அதில் கிடைக்கும் ரிட்டர்னை Compounding எனச் சொல்வார்கள். இதன் மூலம் சிறுக சிறுக முதலீடு செய்து வரும் SIP முதலீட்டை பெருக்க முடியும். அதனால் 30 வயதில் SIP முதலீட்டை மேற்கொள்பவர்களை காட்டிலும் 20 வயதில் இதை மேற்கொள்பவர்களுக்கு Compounding சார்ந்த ஆதாயம் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
செலவழிக்கும் விஷயத்தில் கவனம்: SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மேற்கொள்ளும் போது முதலீட்டாளர்கள் பணம் செலவழிக்கும் விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். ஏனெனில், இந்த வகை முதலீடு மேற்கொள்ளும் போது முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானியங்கு முறையில் முதலீட்டுக்கான தொகை பற்று வைக்கப்படும் என்பதால் இந்த கவனமாம். மேலும், இளம் வயதில் முதலீடு செய்வதால் செலவழிக்கும் விஷயத்தில் ஒரு தெளிவு இருக்கும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
நிதி சார்ந்த இலக்குகளை விரைந்து அடையலாம்: முதலீட்டாளர்கள் இளம் வயதில் முதலீடு செய்வதன் மூலமாக தங்களது நிதி சார்ந்த இலக்குகளை விரைந்து அடைய முடியும் எனச் சொல்லப்படுகிறது. அதுவே கொஞ்சம் தாமதமாக முதலீடு செய்யும்போது அது பெருகுவதற்கு போதுமான கால அவகாசம் இருக்காது என்பதே ஆகும்.
நிதி நெருக்கடியை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை போலதான் ஒருவரது நிதி சார்ந்த தேவைகளும் இருக்கும். வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் நிதி சார்ந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் போது முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலம் அதை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.
இழப்புகளை ஈடு செய்ய நேரம் இருக்கும்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. அதனால், இளம் வயதில் முதலீடு செய்வதன் மூலம் முதலீடு சார்ந்த தவறுகள் மற்றும் இழப்புகளில் இருந்து மீள கூடுதல் நேரம் கிடைக்கும். இதன் மூலம் முதலீடு சார்ந்த அச்சுறுத்தலை சமாளிக்கவும், சரிவுகளை ஈடு செய்யவும், முதலீடு சார்ந்த தப்பு கணக்கில் இருந்து தப்பிக்கவும், நிதி சார்ந்த இலக்கிறக்கு ஏற்ற வகையில் இதில் முதலீடு செய்யவும் முடியும்.
Explainer - ‘துணிவு’ படத்தில் காட்டுவது போல் Mutual Funds பாதுகாப்பானவை இல்லையா?
Edited by Induja Raghunathan