தொழில்முனைவோர்களின் ஸ்டார்ட் அப் வெற்றிக்கு வழிகாட்டும் 5 பட்ஜெட் குறிப்புகள்!
சிறிய ஸ்டார்ட் அப்களை வெற்றிகரமாக நடத்த தனி தொழில்முனைவோர்களுக்கு தேவையான பட்ஜெட் குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். நிதி நிலைத்தன்மைக்கு வழிகாட்டும் நடைமுறை குறிப்புகள் இவை.
தொழில்முனைவு பயணத்தை தனி தொழில்முனைவோராக மேற்கொள்வது உற்சாகமானதாகவும், சவாலானதாகவும் இருக்கும். சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தும் உற்சாகமான உலகில் வலம் வரும் போது, வரவு செலவு கணக்கை பராமரிப்பு வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய முக்கிய அம்சமாக அமையலாம்.
உங்கள் நிதியை சரியாக நிர்வகிப்பது என்பது, தொழில்முனைவு பயணத்தில் உற்ற துணை ஒருவரை பெற்றிருப்பது போல அமையும். இதன் மூலம் தொழில்முனைவு பயணத்தின் எதிர்பாராத திருப்பங்களை சமாளிக்கலாம்.
ஒரு தனி தொழில்முனைவோராக சிறிய ஸ்டார்ட் அப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழிகளை பார்க்கலாம்.
பட்ஜெட் என்றால் என்ன?
தொழில்முனைவோர்களுக்கு குறிப்பாக சிறிய ஸ்டார்ட் அப்களை நிர்வகிப்பவர்களுக்கு நிதி திட்டமிடலில் பட்ஜெட் முக்கியமாகும். உங்கள் வர்த்தக இலக்குகளை அடைய கைவசம் உள்ள நிதி வளத்தை எப்படி பிரித்தளிக்கிறீர்கள் என்பதற்கான விரிவான திட்டமிடலாக இது அமைகிறது. சிறந்த பட்ஜெட் தொழில்முனைவோருக்கு முக்கியம். ஏனெனில், இது ரொக்க வரத்தை நிர்வகித்து, தகவல் சார்ந்த நிதி முடிவுகளை எடுக்கவும், நீண்ட கால நோக்கில் நிலைத்தன்மையை அடையவும் வழிவகுக்கிறது,
பட்ஜெட் பலன்கள்
நிதி கட்டுப்பாடு
பட்ஜெட், நிதி சூழல் குறித்த தெளிவான பார்வை அளித்து, வருமானம், செலவுகள், லாபத்தை கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் சிறந்த முடிவுகளை எடுத்து, நிதி சவால்களை திறம்பட சமாளிக்கலாம்.
இலக்குகள், கண்காணிப்பு
வர்த்தக இலக்குகளை அடைவதற்கான வரைபடமாகவும் பட்ஜெட் அமைகிறது. நிதி இலக்குகளை வகுத்து, பட்ஜெட் செயல்பாட்டை கண்காணிப்பதன் மூலம், தொழில்முனைவோர்கள் தங்கள் இலக்குகளை ஏற்ற மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
நிதி ஒதுக்கீடு
தனி தொழில்முனைவோர் குறைந்த வளம் கொண்டிருக்கலாம். பட்ஜெட் மூலம் இவற்றை திறம்பட ஒதுக்கீடு செய்யலாம். முதலீடு, மார்க்கெட்டிங், தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து செலவிட வேண்டும்.
இடர் நிர்வாகம்
பட்ஜெட் மூலம் தனி தொழில்முனைவோர் இடருக்கான வாய்ப்புகளை அறிந்து, அவற்றை சமாளிக்க வழி காணலாம். இந்த அணுகுமுறை வாயிலாக நிதி நெருக்கடிகளை தவிர்த்து மாறும் சந்தை சூழலுக்கு ஏற்ப செயல்படலாம்.
மேம்பட்ட முடிவெடுத்தல்
பட்ஜெட்டை செயல்படுத்துவதால், தனி தொழில்முனைவோர்கள் செலவுகள், முதலீடு, வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து தகவல் சார்ந்த முடிவெடுக்கலாம். ஸ்டார்ட் அப் வெற்றிக்கான நிதி புரிதல் சாத்தியமாகும்.
சிறிய ஸ்டார்ட் அப்களுக்கான பட்ஜெட் குறிப்புகள்:
1. வருவாய் எதிர்பார்ப்பு
உங்கள் வருவாய் தொடர்பாக நடைமுறை நோக்கிலான எதிர்பார்ப்புடன் துவங்கவும். சந்தை போக்குகள், இலக்கு வாடிக்கையாளர்கள், செலவுகளை ஆகியவற்றை மனதில் கொள்ளவும். இது பட்ஜெட்டிற்கான அடிப்படையாக அமையும்.
2. செலவுகளை கண்டறிந்து முன்னுரிமை அளியுங்கள்
மாறக்கூடிய, நிலையான செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவசியமான மற்றும் தவிர்க்கக் கூடிய செலவுகளை கண்டறியுங்கள். வர்த்தக செயல்பாடுகள், வளர்ச்சிக்கு முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை அளிக்கவும். இதன் மூலம் தேவையில்லாத செலவுகளை தவிர்க்கலாம்.
3. அவசரகால நிதி
தனி தொழில்முனைவோர்கள் நிதியின் ஒரு பகுதியை எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க ஒதுக்க வேண்டும். அவசரகால நிதி இருப்பது பாதுகாப்பு அம்சமாக இருக்கும். எதிர்பாராத நெருக்கடிகள் வர்த்தகத்தை பாதிக்காமல் தடுக்கும்.
4. ஆய்வு, மாற்றம்
வர்த்தக சூழல் மாறக்கூடியது என்பதால் பட்ஜெட்டும் அதற்கு ஏற்ப மாற வேண்டும். பட்ஜெட்டிற்கு ஏற்ப நிதி செயல்பாடுகளை ஆய்வு செய்யவும். எதிர்பாராத செலவுகள், விலகல் இருந்தால் அதற்கேற்ப மாற்றம் தேவை.
5. தொழில்முறை ஆலோசனை
தனி தொழில்முனைவோர்கள் பலவற்றை கையாள வேண்டும் என்பதால் தொழில்முறை ஆலோசனையை நாடுவது நல்லது. நிதி ஆலோசகர் அல்லது தணிக்கையாளர், வரி சேமிப்பு உள்ளிட்டவை தொடர்பாக வழிகாட்டி, நீண்டகால இலக்குகளை அடைய உதவலாம்.
தொழில்முனைவு பயணத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், ஸ்டார்ட் அப் வெற்றியை நோக்கிய ஒரு சிறிய அடி என்பதை மனதில் கொள்ளவும்.
ஆங்கிலத்தில்: சானியா அகமது கான் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan