சிறந்த தொழில்முனைவு ஐடியாவிற்கு 50 லட்ச ரூபாய் - ‘பணமரம்’ தரும் புதிய வாய்ப்பு!

By Sesu Gunaseelan
March 30, 2022, Updated on : Tue Apr 05 2022 11:50:31 GMT+0000
சிறந்த தொழில்முனைவு ஐடியாவிற்கு 50 லட்ச ரூபாய் - ‘பணமரம்’ தரும் புதிய வாய்ப்பு!
சிறந்த தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, ஊக்குவிக்க, Best Idea of the Month Contest நடத்தி, 50 லட்சம் ரூபாய்வரை முதலீடு அளிக்கும் திட்டம்
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சிறந்த தொழில்முனைவுக்கான வெறும் ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்து என்ன செய்வது என்ற கவலையா? Minimum Viable Product தயார் செய்வதற்கே மாதக்கணக்கில் நாட்களும் லட்சக்கணக்கில் ஆகும் செலவுக்கும் எங்கே போவது என்ற அச்சமா? உங்களுக்கு வாழ்த்துகள். எங்கள் நிறுவனம் மிகச்சரியாக உங்களுடைய இந்தப் பிரச்னைக்கான தீர்வை முன்வைக்கிறது.

பணமரம் செய்வது என்ன?

Addon Affiliate Services OPC Private Limited என்ற எங்கள் நிறுவனம், ’பணமரம்’ என்ற பிராண்டின்கீழ் செயல்படுகிறது. தொழில்முனைவு ஆர்வத்துடன் ஏதேனும் ஸ்டார்ட்அப் ஐடியா குறித்து நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தால், முன்னணி முதலீட்டாளர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்கள் அப்பாய்ண்ட்மெண்ட்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.


இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு உங்கள் ஐடியா மிகச்சிறப்பானதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அணுகும் முதலீட்டாளருக்கு அந்த ஐடியா பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. வழக்கமான இந்த investor-first பாதையில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. உங்கள் ஐடியா குறிப்பிட்ட முதலீட்டாளருக்கு பிடித்துப்போய், அவர் கோடிக்கணக்கில் முதலீடுகூட செய்யலாம்.

panamaram

ஆனால், மார்க்கெட்டுக்கு அந்த பொருளோ/சேவையோ வரும்போது, மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வதாகவோ அல்லது முற்றிலும் தேவையற்றதாகவோ மாறும் அபாயமுண்டு.


கோடிக்கணக்கான மக்களுக்கு என்ன வேண்டும், என்ன தேவையிருக்கிறது, என்பதை யாரோ ஒரு சிலர் மட்டுமே முடிவுசெய்வதுதான் இந்த பிரச்னைக்குக் காரணம். இதுதான் இந்திய தொழில்முனைவோர் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானதாகக் கருதுகிறோம். எனவே, இதனையே ஒரு தொழில்முனைவு வாய்ப்பாக கருதி, எங்கள் நிறுவனம் இதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறது.

அதாவது, தொழில்முனைவு ஆர்வலர்கள் முன்மொழியும் ஐடியாக்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக ‘பணமரம்’ என்ற பெயரில் ஒரு இணையதளம் உருவாக்கி இருக்கிறோம். இங்கே வாடிக்கையாளர்களே சிறந்த ஐடியாக்களை தேர்வு செய்வார்கள்.

இந்த வாதத்தின்படி, முதலீட்டாளர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற தொனி தோன்றலாம். ஆனால், முதலீட்டாளர்களை குறைசொல்லும் எண்ணமில்லை. வழக்கமான பாதையில் உள்ள போதாமையை குறிப்பிடுகிறோம்.


விதைப்பந்து பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். மரம் வளர்க்கும் நோக்கில், விதைகளை தேர்வு செய்து ஒவ்வொரு விதையையும் மண் மற்றும் உரத்தில் வைத்து தேவைப்படும் இடங்களில் வீசியெறிவதைக் காணலாம். அவ்வாறு வீசியெறிப்படும் விதைப்பந்துகளில் சில முளைத்துவந்து மரமாகலாம். சில பாறைகளில் விழுந்து வீணாகலாம். முளைத்து வந்தால் வரட்டும் என்ற ஒரு விட்டேத்தி மனநிலை இம்முறையில் அதில் இருப்பதை மறுக்கமுடியாது.


மேலும், ஒரே நேரத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தாக்க நிறுவனங்களில் அவர்களது கவனம் dilute ஆகும் அபாயமும் இருக்கிறது. மாறாக, தேர்ந்த விதையை கவனமாக பொறுக்கியெடுத்து, தகுந்த சூழலில் விதைத்து, தேவையான கவனம் செலுத்தி, வளர்த்தெடுக்கும் விவசாய முறையை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம். இங்கே ஒரு நேரத்தில் ஒரே ஒரு நிறுவனம். முழு கவனமும் அதில் மட்டுமே. எனவே, இதில் மகசூல் பொய்ப்பது குறைவு.


கோடிக்கணக்கில் முதலீடு பெற்றபிறகும், முதலில் முன்னெடுத்த ஐடியா சரியாக போகாதபோது, pivot செய்யும் நிறுவனங்கள் அல்லது முற்றிலுமாக இழுத்துமூடிவிட்டு செல்லும் எத்தனையோ இருக்கின்றன. காரணம் முறையான market research செய்யாதது.

தொழில்முனைவோருக்கும் ஒரு சில முதலீட்டாளர்களுக்கும் பிடித்துப்போகும் ஒரு ஐடியா, கோடிக்கணக்கானவர்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் என்ற உத்தேச கணக்குதான் தவறு என்கிறோம். புதிய தொழில்முனைவு முயற்சிகளில் துவக்கத்திலிருந்தே வாடிக்கையாளர் கருத்தை முன்னிலைப்படுத்துவதுதான் எங்கள் முதன்மை நோக்கம்.

செயல்திட்டம்

சிறந்த தொழில்முனைவுக்கான ஐடியாவை தேர்ந்தெடுக்கும் போட்டியை, ‘Best Idea of the Month’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் எங்கள் இணையதளத்தில் நடத்துகிறோம். ஒவ்வொரு மாதமும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து தொழில்முனைவோர்கள் அவரவர் ஐடியாக்களை Jury Panel முன்பாக pitch செய்வார்கள். பின்னர், நடுவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் திருப்திகரமான பதில் அளிக்கவேண்டும்.


பின்னர், ஒவ்வொரு தொழில்முனைவோரின் ஐடியா குறித்த முழுவீடியோவும் தனித்தனியாக இணையத்தில் பதிவேற்றப்படும். எமது இணையதளத்திற்கு ஆண்டு சந்தா செலுத்தியிருக்கும் பயனாளர்கள், ஒவ்வொரு போட்டியாளரின் ஐடியா மற்றும் ஜூரி குழுவினர்களின் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கங்களை எல்லாம் பரிசீலித்து, இறுதியாக அவர்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு ஐடியாவிற்கு தங்கள் வாக்கை செலுத்துவார்கள்.


வாக்காளர்களின் (அதாவது வாடிக்கையாளர்களின்) ஏகோபித்த ஆதரவை/வாக்குக்ளைப் பெறும் வெற்றியாளருக்கு, போட்டியின்போது அவர்கள் கோரிய முதலீட்டுத்தொகை seedfund (அதிகபட்சம் ஐம்பது லட்சம்வரை) அளிக்கப்படும்.


யாரோ ஒருவருடைய தொழில்முனைவு கனவுக்காக, சம்பந்தமே இல்லாத வாடிக்கையாளர் ஏன் சந்தா செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம். எங்கள் இணையதளத்திற்குள் நுழைவதற்கே சந்தா செலுத்தவேண்டும் என்பதல்ல. இறுதிவரை கட்டணமில்லாமல் பார்வையாளராகவும்கூட இருக்கலாம்.

Best Idea of the Month Contest

ஆனால், பங்கேற்க அதாவது உங்கள் ஐடியாவை எங்களிடம் சமர்ப்பிக்க, பிடித்த ஐடியாவிற்கு ஓட்டுப்போட, பங்கேற்கும் நிறுவனங்களிடம் உங்கள் தொழில்வாய்ப்புகளை சந்தைப்படுத்த, franchisee பெற, அல்லது வேலைதேடுவதற்கென ஆண்டு சந்தா செலுத்த வேண்டியிருக்கும்.


சந்தாதொகை கேட்காமல்கூட இதனைச் செய்யலாம். ஆனால், சிறந்த பாடகர்/நடனக்கலைஞர்களை அடையாளம் காண நடைபெறும் தொலைகாட்சி பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகளில் வேண்டுமானால், பார்வையாளர்கள் ஓட்டுப்போடுவது இலவசமாக இருக்கலாம். நாங்கள் முன்னெடுப்பது தொழில்முனைவுப் போட்டி.

இதில் பங்கேற்கும் தொழில்முனைவோர்களுக்கு முதலீடு அளிப்பதுகூட இரண்டாம் பட்சம்தான். டார்கெட் வாடிக்கையாளர்களை மட்டுமே இதில் பங்கேற்க வைத்து, அவர்களுடைய கருத்தை நேரடியாக பெற்றுத் தருவதுதான், போட்டியாளர்களுக்கு நாங்கள் செய்யும் முதல் நன்மையாக இருக்கமுடியும். வாடிக்கையாளரை முதன்மைப்படுத்துவதுதான் எங்களின் USP-யே.

மேலும், தகுதியான தொழில்முனைவை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க, தொழில்முனைவில் ஆர்வம்கொண்ட, சென்சிபிளான தமிழ்நாட்டு மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்கள் மட்டுமே எங்கள் இலக்கு. அத்தகைய வாக்காளர்களை தேர்வுகள்மூலம் தேர்ந்தெடுக்க முடியாது.


எனவேதான், குறைந்தபட்ச கட்டணமாக வருடாந்திர சந்தாவாக ரூ.100 வசூலிக்கிறோம். புதிய தொழில்முனைவு முயற்சிகள் குறித்து அறிந்துகொள்ளவும், பங்குபெறவும், ஓட்டுப்போடும் சிறப்புரிமை பெறவும், வெற்றிபெறும் பொருள்/சேவைகளை முதலில் பெறும் பயனாளர்களாக தெரிவுபெறவும் மேற்படி கட்டணம் அவசியமாகிறது.


வாடிக்கையாளர்களிடம் இருந்து நன்கொடைப்பெற்று அதனை முதலீடு செய்யும் crowdfunding வழி இது என புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பும் இருக்கிறது. Venture Capital நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. உயர் வருவாய் கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிதிபெற்று corpus fund உருவாக்கி, அதிலிருந்து ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்கிறார்கள். அதனை Mass crowdfunding என்று யாரும் சொல்வதில்லையே! நாங்கள் இதனை சற்றே உருமாற்றி, வாடிக்கையாளர்களிடமிருந்தே நிதியைப் பெறுகிறோம், நன்கொடையாக அல்ல, எங்கள் சேவைக்கான கட்டணமாக.

startup idea

போட்டி/சவால்கள்

எங்களுக்கு போட்டி என்றுப் பார்த்தால், ஷார்க்டேங்க் போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள். ஆனால், அடிப்படையிலேயே ஷார்க் டேங்க் நிகழ்ச்சிக்கும் எங்கள் முன்னெடுப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முதலில், விளம்பரங்களுக்கு நடுவில் நடக்கும் sponsored நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் பங்கேற்பு என எதுவுமில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல, நடுவர்களில் ஆறில் ஒருவருக்கு பிடிக்கும் ஒரு பொருள்/சேவை, கோடிக்கணக்கான வாடிக்கையாளருக்கும் பிடிக்கும் என்ற கட்டாயமில்லை.


ஓரிரு முதலீட்டாளர்களைக் கவர்வதைக் காட்டிலும் லட்சக்கணக்கானோர் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் ஒரு பொருள்/சேவை, சந்தையில் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமல்லவா?


அடுத்து, ஆத்துல போட்டாலும் Adல போட்டாலும் அளந்துதான் போடவேண்டும். மில்லியன் டாலர்களை மூதலீடாக பெறும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவர, விளம்பரம் மற்றும் ஆஃபர்களாக. நிறைய செலவு செய்யவேண்டியிருக்கும். பணமரத்தின் முன்னெடுப்பின்படி, நேரடியாக வாடிக்கையாளர்களே ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும்போது, customer acquisition மற்றும் விளம்பர செலவு போன்றவை அவ்வளவாக இருக்காது.


இவை எல்லாவற்றையும்விட, தொழில்முனைவின் துவக்கப்புள்ளியான ஐடியாவை மெருகேற்ற, validate செய்ய, prototype/minimum viable product தயார் செய்ய முதலீடு அளிப்பவர்கள் இந்தியாவில் குறைவு. பணமரம் நிறுவனம் அடிநாதமாக நிவர்த்தி செய்ய நினைப்பது இந்த குறையைத்தான். சிறந்த ஐடியாவிற்கே 50 லட்சம் ரூபாய் வரையில் முதலீட்டை உறுதி அளிக்கிறோம்.


ஒரு ஐடியா அல்லது ஸ்டார்ட்அ-ப் நிறுவனம் வெற்றிபெற இந்த 50 லட்சம் ரூபாய் முதலீடு மட்டும் போதுமா, என்றால் இல்லை. முதலீடு மட்டுமல்ல, தொழில்முனைவு ஊக்குவிப்பிற்கென தமிழகமெங்கும் இருக்கும் incubators மற்றும் mentorகளுடன் கைகோர்த்திருக்கிறோம். நல்ல ஐடியாவை மெருகேற்றி தருவதையே முதன்மையான நோக்கமாக செயல்படும் நிறுவனங்கள் இவை.


எனவே, எங்களிடம் முன்வைக்கப்படும் சிறந்த யோசனைகளுக்குக் கிடைப்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, துறைசார் வல்லுநர்களின் ஆலோசனையும் கூடவே அவர்களின் வழித்துணையும். இவற்றை எல்லாம்விட மிகமுக்கியமாக, பொருள்/சேவையை உற்பத்தி செய்தபிறகு, வாடிக்கையாளர்களை தேடிப்போகவேண்டிய நிலை இல்லை.


பொருளோ/சேவையோ உற்பத்திக்கு முன்பே வாடிக்கையாளர் தயாராக இருப்பார்கள். முதலீடு, ஆலோசனை, வாடிக்கையாளர் என எல்லாமும் ஒரே இடத்தில் கிடைப்பதால், we are a one-stop startup supermarket.


இந்தத் திட்டம் துவக்க நிலையில் இருந்தபோது, யாரை முன்வைத்து இந்த முன்னெடுப்பை துவக்குவது என்ற கேள்வி எங்கள் அலுவலகத்தில் எழுந்தது. தமிழ்நாட்டில் தொழில்முனைவில் முன்னணியில் உள்ள சிலரின் பிரபல்யத்தை பயன்படுத்தக் கோரலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.


ஆனால், எங்கள் தொழிமுனைவின் அடிநாதமே வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்துவதுதான் எனும்போது, அந்த முயற்சியை எங்களிடமிருந்தே தொடங்குவதுதானே சரி?

funding

எனவே, நாங்கள் முதலில் எங்கள் வாடிக்கையாளர்களிடம் செல்ல இருக்கிறோம். After all, customer is God for any venture. எந்த ஒரு புதிய முயற்சியிலும், பூஜ்யத்திலிருந்து முதல் அடி எடுத்து வைப்பதுதான் மிகக்கடினமானதும் மிகமுக்கியமானதும். எனவேதான், எங்களின் இந்த முயற்சியில் முதன்முதலில் வந்து இணைந்து எங்களை ஊக்குவிக்கும் Early Bird சந்தாதாரர்களுக்கு, மிகச்சிறந்த சலுகைகளை எங்களின் நன்றியாக அளிக்கவிருக்கிறோம். முதலில் சந்தா செலுத்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் அனுமதி அதில் முக்கியமான ஒன்று.


ஏற்கெனவே வெளிநாடுகளில் வெற்றிபெற்ற ஐடியாக்களை இந்தியதன்மைப்படுத்தும் ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே வரவேற்பும் முதலீடும் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. எங்களுடைய இந்த புதிய தொழில்முனைவுக்கு திரட்டவேண்டிய ஆதரவு குறித்தும் திட்டங்கள் வகுத்திருக்கிறோம்.


ஏன் இந்தியாவில் சொந்தமாக நிறைய பில்லியன் டாலர் ஐடியாக்கள் உருவாவதில்லை என்ற கேள்விக்கு ரத்தன் டாட்டா ஓர் நேர்காணலில், ”புதிய ஐடியாக்களை ஊக்குவிக்கும் மனப்பாங்கு இந்தியர்களுக்கு இல்லை, யாரேனும் புதிய ஐடியாவோடு வந்தால், அவர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, இதெல்லாம் தேவையில்லாத விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது, இந்தப் போக்கு மாறவேண்டும்,” என்கிறார்.


வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்டுகளை, தனித்தனி புட்டிகளில் போட்டு அடைத்துவிட்டு, இந்திய நண்டுகளை அடைத்திருக்கும் புட்டியை மட்டும் திறந்தே வைத்திருக்கும் ஜோக் தெரியுமல்லவா? மூன்று பக்கமும் நீராலும் நான்கு பக்கமும் நண்டுகளாலும் சூழப்பட்டதுதான் இந்தியா என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனாலும் நல்முயற்சிகளை கைதூக்கிவிடும் ரத்தன் டாடா போன்று தனிநபர்களும், நிறுவனங்களும் இருக்கவே செய்கிறார்கள். புதுமையான தொழில்முனைவுகளை அடையாளம் காணவும், கைதூக்கி விடுவதிலும் வரும் சவால்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.


வெறும் ஐடியாவிற்கு 50 லட்சம் பெரிய ரிஸ்க் என்பதால், போட்டியில் கலந்துகொள்வோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற அச்சம் தேவையில்லை. நாங்கள் வெறும் முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, தொழில்முனைவோர் சந்திக்கும் சில முக்கியப் பிரச்னைகளில் ஒன்றை தீர்க்க சரியான திட்டத்தை முன்மொழியும் நாங்களும் ஒரு தொழில்முனைவோரே.


StartupIndia மற்றும் StartupTN அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். தொழில்முனைவை ஊக்குவிக்க எங்களால் இயன்ற பங்களிப்பு இது. இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றிபெற்று, ஒருவேளை தோற்றால்கூட, அதே தொழில்முனைவரிடமிருந்து அடுத்தடுத்த முயற்சிகளையும் நாங்கள் ஊக்குவிப்போம்.


Its okay to fail. அதேநேரம், பல்துறை நிபுணர்களின் குறுக்கு விசாரணை மற்றும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றபிறகு துவக்கப்படும் ஒரு நிறுவனம் எப்படி தோற்கும்?


போட்டி குறித்த எல்லா விதிகளும் விரிவாக எமது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படையான தேர்தல்மூலம் போட்டி நடைபெறும் என்பதே தொழில் முனைவோர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் அளிக்கும் உறுதி. வெறும் நூறு ரூபாய் சந்தாவில் உங்கள் தொழில்முனைவு கனவை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை, ஆர்வமுள்ள அத்தனை தொழில்முனைவோரும் பெற்றுக்கொள்ள அழைக்கிறோம்.(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையை எழுதியிருப்பர், ‘பணமரம்’ நிறுவனத்தின் நிறுவனர். இதில் குறிப்பிட்டுள்ளவை அவரின் சொந்த கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பாகாது.)

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற