'ஊழியர்களை பணிநீக்கம் செய்யவில்லை' - மன அழுத்த நடவடிக்கை குறித்து yesmadam விளக்கம்!
மன அழுத்தம் தொடர்பான சர்வே நடத்தி ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளான யெஸ் மேடம் நிறுவனம், யாரையும் நீக்கவில்லை, விழுப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி என விளக்கம் அளித்துள்ளது.
மன அழுத்தம் தொடர்பான சர்வே நடத்தி ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளான YesMadam நிறுவனம், யாரையும் நீக்கவில்லை என்றும், விழுப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த விளக்கம் சமூக ஊடகத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஷார்க் டாங்க் போட்டியில் பங்கேற்ற ’யெஸ் மேடம்’ நிறுவனம், தனிநபர் ஆரோக்கியம் மற்றும் இல்ல சலூன் பிரிவில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், அண்மையில் ஊழியர்கள் மத்தியில் மன அழுத்தம் தொடர்பான சர்வே ஒன்றை நடத்தியதாக செய்தி வெளியானது. இந்த சர்வேயில் மன அழுத்தம் இருப்பதாக தெரிவித்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
பணி நீக்கம் தொடர்பாக நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பியதாக கருதப்படும் இ-மெயிலின் ஸ்கிரீன்ஷாட்டும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வைரலானது. இதை அடுத்து சமூக ஊடகத்தில் விவாதமும் வெடித்தது.
நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மன அழுத்தம் தொடர்பாக சர்வே நடத்தி விட்டு, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடுமையானது, என பெரும்பாலானோர் குற்றம்சாட்டினர்.
இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யெஸ் மேடம் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில்,
"ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. மன அழுத்தம் தொடர்பான சர்வே நடத்தியது உண்மை என்றாலும், அதில் கருத்து தெரிவித்த ஊழியர்களுக்கு விடுப்பு உள்ளிட்டவை தான் அளிக்கப்பட்டதே தவிர யாரும் நீக்கப்படவில்லை," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கையை ஒரு போதும் மேற்கொள்ள மாட்டோம் என்றும், நாங்கள் ஒரு குடும்பம் என்றும் தெரிவித்துள்ளதோடு, இந்த சமூக ஊடக பதிவுகள், பணியிட மன அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டு வெளியிடப்பட்டவை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவுக்கு ஆவேசமாக பதில் வினை ஆற்றியவர்களுக்கு நன்றி என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவன விளக்கம், ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என தெளிவுபடுத்தியிருந்தாலும், பலரும் இந்த திட்டமிட்ட நடவடிக்கையை குறை கூறியுள்ளனர்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, கண்டங்கள் வந்ததும் முடிவை மாற்றிக்கொண்டு விளக்கம் அளிப்பது மோசமான செயல்பாடு என, ஒரு சிலர் கூறியுள்ளனர்.
இது திட்டமிட்ட முயற்சி என்றால், இ-மெயிலில் ஏன் கடினமான வார்த்தைகள் இருந்தன என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி என்றாலும், இந்த உத்தியை ஏற்றுக்கொள்ளமுடியாது, என்றும் சிலர் கடுமையாக கூறியுள்ளனர்.
இந்த சர்ச்சையின் உண்மையில் நிகழ்ந்தது என்ன என்பது ஒரு பக்கம் இருக்க, சமூக ஊடக பதிவுகளை பார்த்துவிட்டு, கருத்து தெரிவிப்பதில் நிதானம் காட்டுவது அவசியம் எனும் பாடமும் உணர்த்தப்பட்டிருப்பதாக கருதலாம்.
மன அழுத்தமா? ஆமாம் எனச் சொன்ன ஊழியர்களை பணி நீக்கம் செய்த சலூன் நிறுவனம் - வெடித்தது விவாதம்!
Edited by Induja Raghunathan