ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆகிய 500 ஊழியர்கள்: Freshworks ஐபிஓ-வால் நிகழ்ந்த மாற்றம்!
மன நிறைவை தருவதாக Freshworks நிறுவனர் பெருமிதம்!
இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட Freshworks தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டை திறந்தது. இதன்மூலம், அமெரிக்காவில் பொது வெளியீட்டுக்கு வந்த முதல் இந்திய யூனிகார்ன் ஆனது Freshworks நிறுவனம்.
இந்த ஐபிஓ காரணமாக இந்தியாவில் B2B சாஸ் நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கின்றனர். இவர்களின் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு குறைந்தது ஒரு கோடி வரை இருக்கும் என்று Freshworks இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் மாத்ருபூதம் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.
”இது இன்று எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. ஏனெனில் இந்த ஐபிஓ மூலம் இன்று எங்களின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கும் என்னால் முடிந்த பொறுப்பை நிறைவேற்ற ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு வாய்ப்பு கிடைத்ததாக நான் கருதுகிறேன். கடந்த 10 வருடங்களாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து இவர்கள் Freshworks-க்கு பங்களித்துள்ளார்கள்," என்று செய்தியாளர் சந்திப்பில் கிரிஷ் நெகிழ்ந்தார்.
Freshworks-ன் சாஸ் நிறுவனம் புதன்கிழமை நாஸ்டாக் குளோபல் செலக்ட் மார்க்கெட்டில் அதன் ஐபிஓ இலக்கு வரம்பை விட அதிக விலையில் $1.03 பில்லியனை 10 பில்லியன் டாலர் மதிப்பில் திரட்டியது. நாஸ்டாக்கில் 'FRSH' என்ற டிக்கர் குறியீட்டின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள Accel மற்றும் Sequoia Capital-Backed SaaS நிறுவனம் தனது 28.5 மில்லியன் பங்குகளை, ஒரு பங்கை 36 டாலர் என்ற மதிப்பில் விற்றது.
இதன்மூலம் தான் ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கின்றனர். குறைந்தது 76 சதவிகித Freshworks ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களில் சமீபத்திய புதிய வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் என்றுள்ளார் கிரீஷ்.
“இந்த ஐபிஓ காரணமாக உருவாகியுள்ள 500க்கும் மேற்பட்ட புதிய கோடீஸ்வர ஊழியர்களில் குறைந்தது 70 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் பலர் சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் இருந்து புதிதாக நிறுவனத்தில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு செல்வத்தை உருவாக்கிக் கொடுப்பது உண்மையிலேயே இந்தியா அதிகம் செய்ய வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
இதற்கு அவர்கள் தகுதியானவர்கள். எங்கள் ஊழியர்கள் அனைவரும் இதனால் லாபமடைந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஏனெனில் இந்த ஊழியர்கள் அனைவரும் உண்மையிலேயே Freshworks வளர்ச்சிக்கு பங்களித்துள்ளார்கள், என்றார்.
’G' என்று அவரது சகாக்கள் மற்றும் நண்பர்களால் அழைக்கப்படும் கிரீஷ், 2010ல் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ ஷான் கிருஷ்ணசாமியுடன் ஃப்ரெஷ் டெஸ்க் என்று நிறுவனத்தை முதன்முதலில் தொடங்கினார். இன்று, இது ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஆக மாறி, இந்திய B2B சாஸ் யூனிகார்ன் மூலம் முதல் அமெரிக்க பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில்: டென்சின் பேமா | தமிழில்: மலையரசு