‘திருச்சி டூ நாஸ்டாக், கனவு நினைவனாது’ - Nasdaq-இல் அறிமுகமாகும் முதல் இந்திய சாஸ் நிறுவனம் Freshworks

அமெரிக்காவின் நாஸ்டெக் பங்குச்சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள பிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம் அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய வர்த்தக ’சாஸ்’ யூனிகார்ன் நிறுவனம் எனும் சிறப்பை பெற்றுள்ளது.
31 CLAPS
0
“இன்று என் கனவு நினைவாகியுள்ளது- திருச்சியில் எளிய பின்னணியில் துவங்கியதில் இருந்து நாஸ்டாக்கில் Freshworks நிறுவன ஐபிஓவுக்கான மணி ஒலி வரையான பயணமாக இது அமைகிறது. இந்த கனவில் நம்பிக்கை கொண்ட எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களுக்கு நன்றி..."" என அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியிலடப்படும் முதல் இந்திய வர்த்தக ’சாஸ்’ நிறுவனம் எனும் சிறப்பை 'பிரெஷ் ஒர்க்ஸ்' பெற்றுள்ள நிலையில் அதன் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஈ கிரிஷ் மாத்ருபூதம் கூறியுள்ளார்.

Freshworks நிறுவனம், 10 பில்லியன் டாலருக்கு மேலான சந்தை மதிப்பீட்டில், 1.03 பில்லியன் டாலர் நிதி திரட்டும் இலக்குடன் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குசந்தையில் புதன் கிழமை அன்று தனது பொதுப் பங்குகளை அறிமுகம் செய்தது.

ஆக்சல் மற்றும் செக்கோயா ஆதரவு பெற்ற நிறுனம், ‘FRSH’ எனும் அடையாளக் குறிப்புடன் நாஸ்டாக் சந்தையில் அறிமுகமாகி, 36 டாலர் விலையில் 28.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தது. இதன் ஐபிஓ விலை 32- 34 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாஸ்டாக்கில் இப்போது பிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம் FRSH என வர்த்தகம் செய்யப்படுவது கண்டு பெருமிதம் கொள்கிறேன். இதை அடைவத்தற்கான பயணத்திற்கு 11 ஆண்டுகள், கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை தேவைப்பட்டுள்ளது,” என கிரிஷ் மாத்ருபூதம் கூறியுள்ளார்.

அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய வர்த்தக யூனிகார்ன் நிறுவனம் என்ற முறையில் பிரெஷ் ஒர்க்ஸ் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.

“அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய சாஸ் யூனிகார்ன் நிறுவனமாக இன்று Freshworks விளங்குகிறது. ஆர்வமான துவக்கத்தில் இருந்து ஐபிஓ வரையான இவர்களின் பயணம் உலகம் முழுவதும் உள்ள தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும். அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய வர்த்தக சாஸ் யூனிகார்னாக நிறுவனம் விளங்குகிறது,” என நிறுவனர்கள் கிரிஷ் மாத்ருபூதம், ஷான் கிருஷ்ணசாமி மற்றும் நிறுவன குடும்பத்தினருக்கான வாழ்த்துச்செய்தியில் ஆக்சல் நிறுவன சமீர் காந்தி கூறியுள்ளார்.

மெக்கின்சி நிறுவன அறிக்கையின் படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்திய சாஸ் நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி டாலரை அடையும் வாய்ப்பை கொண்டுள்ளன. தற்போது 1,000க்கும் மேற்பட்ட இந்திய சாஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

2010ல் ’Freshdesk’ எனும் பெயரில் துவங்கப்பட்டு 2017ல் Freshworks என மாறிய நிறுவனம் ஐடி சேவை நிர்வாகம், சிஆர்.எம் மென்பொருள் சேவைகளை வழங்கு வருகிறது. 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 52,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நிறுவனம் டிஜிட்டல்மயமாக்கலின் விளைவாக, வர்த்தகத்தில் 49 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. ஐரோப்பாவில் இருந்து 42 சதவீத வருவாய் வருகிறது. முன்னணி ஐரோப்பிய நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டுள்ளது.

“வருவாய் மற்றும் வளர்ச்சியை விட, மிகவும் செயல்திறன் வாய்ந்த முறையில் வளர்ச்சி மற்றும், வருவாயை அடைந்துள்ள வெகுசில நிறுவனங்களில் ஒன்றாக நிறுவனம் விளங்குகிறது,” என கிரிஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.

“கடந்த 12 மாதங்களில் ரொக்க புழக்கமாக 25 மில்லியன் டாலர் பெற்றுள்ளோம். எனவே வருவாய் உயர்வு, வளர்ச்சி, செயல்திறன் ஆகியவை பொது நிறுவனமாக எங்கள் வளர்ச்சியை தொடர உதவுவதோடு, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வர்த்தகத்தை எளிதாக்கும் எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற வழிவகுக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

( பிரெஷ் ஒர்க்ஸ் ( பிரெஷ்டெஸ்க்) டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் 2015ல் யுவர்ஸ்டோரி டெக் 30 பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிகழ்வாக அமையும், நிகழ்ச்சி இந்தியாவின் 30 முன்னணி துவக்க நிலை ஸ்டார்ட் அப்களை அடையாளம் காட்டி வருகிறது. )

ஆங்கிலத்தில்: டென்சின் பெமா | தமிழில்: சைபர் சிம்மன்