இந்த தீபாவளிக்கு இயற்கை மற்றும் ஆரோக்கிய இனிப்புகளை உண்டு மகிழலாமா?
சர்க்கரை இல்லா இயற்கை பொருட்கள் அடங்கிய கலர்கள் சேர்க்கப்படாத ஆரோக்கிய ஸ்வீட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பற்றிய தொகுப்பு...!
பண்டிகை என்றாலே இனிப்பு மற்றும் பலகாரங்கள் தான். அதிலும் தீபாவளி என்றால் பட்டாசுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது தீபாவளி இனிப்புகள். ஆனால் இப்பொழுது நீரிழிவு போன்ற நோயால் இனிப்பை நம்மால் பார்க்க மட்டுமே முடிகிறது. அதனால் மற்ற வருடங்கள் போல் இல்லாமல் இந்த வருடம் உடல் நலம் கருதி சந்தையில் அறிமுகமாகியுள்ள, நம் பாரம்பரியம் கலந்த ஆரோக்கிய மற்றும் இயற்கை இனிப்புகள் பக்கம் நம் கவனத்தை திருப்பலாம்.
இனிப்புக்கு முக்கியமாக தேவைப்படும் மைதா மற்றும் சர்க்கரைக்கு பதில் பல இயற்கை பொருட்களை வைத்து இனிப்புகளை செய்யலாம். அதாவது கம்பு லட்டு, கருப்பட்டி எள் உருண்டை, ஜீரக சம்பா அரிசி ஜிலேபி மற்றும் பல...
பல தானிய லட்டு, கம்பு லட்டு, கேழ்வறகு லட்டு..
பொதுவாக செய்யும் லட்டு போல் அல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமான நாம் மறந்த பாரம்பரிய தானிய வகைகளை வைத்து சுவையான லட்டுகளை செய்யலாம். இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லப்பாகு, கருப்பட்டி போன்றவற்றை சேர்த்து ஆரோக்கியமான லட்டை சுவைக்கலாம். தற்பொழுது பல சிறு தொழில்முனைவோர்கள் இது போன்ற ஆரோக்கியமான உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்கின்றனர்.
சர்க்கரை இல்லா தேங்காய் லட்டுவும் இன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. சர்க்கரை நோய் பற்றிய கவலை இன்றி இந்த இனிப்புகளை சுவையுங்கள்.
சிவகாசியைச் சேர்ந்த தேன்கனி வாழ்வியல்மையம் என்ற 50 சிறு இயற்கை விவசாயிகள் அடங்கிய அமைப்பினர், முழுக்க முழுக்க ஆர்கானிக் எண்ணெயை வைத்து பாரம்பரிய இனிப்பு வகைகளை தயாரிக்கின்றனர்.
நவதானிய ஹல்வா, தினை அதிரசம், கம்பு லட்டு, போன்ற இனிப்புகளில் செயற்கை இனிப்பை சேர்க்காமல் கருப்பட்டியை வைத்து செய்கின்றனர். 500 கிராம் மற்றும் 1 கிலோ பாக்ஸ்களில் இந்த இனிப்பு வகைகளை பேக் செய்து ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்கின்றனர். இவை 350 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடையில் பேக் செய்து விற்கும் இனிப்புகளுக்கு பதில் இந்த சிறுதொழில்முனைவோர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யும் இனிப்புகளை நாம் வாங்கலாம்.
கம்பு ஹல்வா, ராகி, கோதுமை ஹல்வா..
இதிலும் சர்க்கரை சேர்க்காமல், வெல்லம் மற்றும் கருப்பட்டியை வைத்து சுவையான ஹல்வாவை ருசிக்கலாம். முளை கட்டிய கம்பில் இருந்து பால் எடுத்து செய்யப்படும் ஹல்வா சுவையோடு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. அதே போல் ராகி மற்றும் கோதுமையில் செய்யப்படும் ஹல்வாவும் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. ஆரோக்கியத்துடன் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.
கோவையைச் சேர்ந்த விஜய் ஸ்வீட்ஸ் எனும் இனிப்பு தயாரிக்கும் நிறுவனம், கம்பு, கேழ்வரகு, கோதுமை என தானியங்களை வைத்து பல இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கருப்பட்டி நெய் மைசூர்பாகு, கருப்பட்டி முந்திரி கேக், கருப்பட்டி எள் உருண்டை
சர்க்கரையை விட உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு கருப்பட்டி, கருப்பட்டியை வைத்து நீங்கள் வீட்டில் செய்யும் அனைத்து இனிப்புகளையும் செய்யலாம். கரூரைச் சேர்ந்த நேடிவ் ஸ்பெஷல் எனும் பிரபல ஸ்டார்ட்-அப் இது போன்ற பல ஆரோக்கிய உணவுகளை இந்த தீபாவளிக்கு அறிமுகம் செய்துள்ளது.
இங்கு பாரம்பரிய ஆரோகிய இனிப்புகளை பெறலாம்!
இலந்தவடை சாக்லட், ஆர்கானிக் சாக்லட்
நேடிவ் ஸ்பெஷல் இந்த தீபாவளிக்கு புதுமையாக இலந்தவடை சாக்கலேட்களை அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட்டுகளை தயக்கம் இன்றி கொடுக்கலாம், போரிங்கான பழைய இனிப்புகளுக்கு பதில் ஆரோக்கியமான சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
கீட்டோ இனிப்பு வகைகள்
இப்பொழுது பலவகை டயட் முறைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில டயட்கள் பால், முட்டை போன்ற வெள்ளைப் பொருட்களை தவிர்த்தும், இன்னும் சில வெண்ணெய், சீஸ் என வெள்ளைப் பொருட்கள் மட்டுமே கொண்டும் உண்ணுகின்றனர். அது போல் சர்க்கரை மற்றும் பால் வகைகளை அறவே தவிர்க்கும் கீட்டோ டயட்டிற்கு ஏற்ற இனிப்புகளும் இங்கு கிடைக்கிறது.
Awesomechef இந்த இனிப்பு வகைகளை வழங்குகிறது.
மேலும் வீகன் இனிப்புகள், ஆர்கானிக் கார வகைகள், தானிய வகை இனிப்பு மற்றும் காரம் என பல ஆரோக்கிய உணவுகளை இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் தீபாவளியை இனிப்புகளுடன் ஆரோக்கியமாக கொண்டாடுங்கள்!