சசிகுமார், அமீரை 'செதுக்கினேன்'- நடிகர் ஆரியின் அரிய 'அவதாரம்'
தமிழ் சினிமாவில் 'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஆரியின் இன்னொரு அடையாளம் 'உடல் மாற்றப் பயிற்சியாளர் '. தியேட்டர் ஆர்டிஸ்ட், சினிமா நடிகர் என்றே அறியப்பட்ட ஆரி, உடல் மாற்றப் பயிற்சியாளர் ஆனதே ஒரு சுவாரஸ்யமான கதை!
தமிழ் யுவர் ஸ்டோரி யுடன் பிரத்யேக நேர்காணலில் உற்சாகமாகப் பகிரத் தொடங்கிய ஆரி...
"அப்போது நான் பழனியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பேன். அதனாலேயே என்னுடன் படிக்கும் மாணவர்கள் நான் திருப்பி அடிக்க முடியாது என்ற காரணத்துக்காக என்னை திரும்பத் திரும்ப அடிப்பார்கள். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை உருவாக்கியது. அவர்களை ஒரு நாள் திருப்பி அடித்தே தீருவேன் என எனக்குள் சபதம் எடுத்துக்கொண்டேன். நல்ல உடல் கட்டுடன் இருக்க வேண்டும். உடலில் வலு இருந்தால் மட்டுமே அடிக்க முடியும் என்று முடிவு செய்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அந்தக் குழந்தைத்தனமான முடிவுதான் என்னை உடல் மாற்றப் பயிற்சியாளராக உருவாக்கியது. சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது'' என்கிறார்.
பழனியிலிருந்து சென்னை பயணம்
பழனியில் இருந்த ஆரி, சென்னை வந்து உடல் மாற்றப் பயிற்சியாளர் ஆனதையும், அதனால் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததையும் விவரித்தபோது, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னை வந்தேன். வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தேன். அப்போதும் ஒரு நாள் கூட தவறாமல் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்தேன். வெயிட் லிஃப்ட போன்ற பயிற்சிகளை சுலபமாக செய்தேன். அப்போது அங்கு பயிற்சி செய்ய வருபவர்கள் நான் செய்யும் பயிற்சிகளை உற்று கவனித்தார்கள். அவர்களின் பயிற்சிக்கும், என்னுடைய பயிற்சிக்கும் வித்தியாசம் இருந்ததை கண்டுகொண்டார்கள். சில நாட்களிலேயே ஜிம் மேனேஜர் என்னிடம் இதைப்பற்றி விசாரித்தார்.
'சென்னையில் இருக்கும் பயிற்சியாளர்களை விட, உன் பயிற்சிகள் வேறு விதமாக, புதுமையாக இருக்கிறது. மூச்சு எப்போது விடுவது, எப்போது இழுப்பது என்பதில் நீ நிபுணராக இருக்கிறாய். விருப்பம் இருந்தால் இங்கு வரும் இளைஞர்களுக்கு நீ பயிற்சி அளிக்கலாம். நேர்முகத்தேர்வில் கலந்துகொள்கிறாயா?' என்று கேட்டார். 'சரி' என்றேன்".
அனுபவம் இருந்தாலும், ஏரோபிக்ஸ், ரீபோக் நிறுவனங்களிடம் நடைமுறை சிறப்புப் பயிற்சிகள் பெற்றேன். நிறைய புத்தகங்கள் மூலம் ஆழமான செயல்முறைகளுக்கான பரிசோதனை முயற்சிகளை செயல்முறைப்படுத்தினேன். இப்படி நிறைய விஷயங்களை தேடித் தேடிக் கற்றுக்கொண்டு தொழில் சார்ந்த நிபுணராக, நிறைவான பயிற்சியாளராக என்னை செதுக்கிக் கொண்டேன்" என்றார். இது 'பாடி ஸ்கல்ப்டிங்' என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.
தமிழ் சினிமாவில் 'பாடி ஸ்கல்ப்டிங்'
'பாடி ஸ்கல்ப்டிங்' எனும் உடல் மாற்றக் கலை, சினிமாவில் இருக்கும் எத்தனையோ துறைகளில் ஒன்றாகும். ஆனால், இதற்கு சிறப்பானதொரு எதிர்காலம் இருக்கிறது என ஆரி தெரிவித்தார். தொழில் சார்ந்த நிபுணர், சினிமா வெளிச்சம் என்ற இரண்டும் உடல் மாற்றக் கலைக்கு கிடைக்கும், அதனால் பாடி ஸ்கல்ப்டிங் வல்லுனர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக கூறுகிறார் ஆரி.
"பாடி ஸ்கல்ப்டிங் எனும் உடல் மாற்றக் கலை என்பது தேவைப்படும் சமயத்தில் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது. திரைப்படங்களில் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப உடலை வடிவமைத்துக்கொள்வது பாடி ஸ்கல்ப்டிங் முறை மூலம் தான். ஆனால், அதை சுலபத்தில் வரவழைக்க முடியாது. 45 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை அதற்காக முறையாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்" என்கிறார் ஆரி மேலும்.
உடற்பயிற்சி, உணவு முறைகள், பயிற்சித் திட்டம் இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால்தான் உடல் மாற்றத்தை உருவாக்க முடியும். உடல் மாற்றம் என்பது ஒரேயடியாக உடலை மாற்றுவது என்று அர்த்தமில்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உடலை கட்டுக்குள் கொண்டுவருவது என்று அர்த்தம் என்று விளக்குகிறார். அதற்காக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை உடற்பயிற்சி மூலம் மட்டுமே எரிப்பதுதான் பாடி ஸ்கல்ப்டிங். இதில் எந்த மாத்திரை, மருந்துகளும் செயற்கையாக உபயோகிப்பதில்லை. இதனால் பக்க விளைவுகளோ, ஆபத்தோ, உடலுக்கு எந்த நோயும் வராது என்றும் உறுதியாக கூறுகிறார்.
சினிமாவில் சில பேர் மட்டுமே இந்த உடல் மாற்றத்தின் தேவை உணர்ந்து பயிற்சி அளிக்கிறார்கள். என் பயிற்சி மட்டும் தனித்துவமாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது" என்று சொல்கிறார் ஆரி.
"ஒருவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவேண்டும் என்று வந்தால், நான் முதலில் அவரின் உடல் எடையையே ஒரு கருவியாக்குவேன். அந்த எடையை பாரமாகக் கருதாமல், இலகுவாக்குவேன். அதற்கேற்ப பயிற்சித் திட்டத்தை வடிவமைப்பேன். குறிப்பாக, மூச்சுப் பயிற்சி மூலம் உடல் சீரான இயக்கம் பெற உதவுவேன். என்னுடைய எல்லா பயிற்சித் திட்டத்திலும் மூச்சுப் பயிற்சிக்கு முக்கியத்துவம் இருக்கும்."
தற்செயலாகக் கிடைத்த வாய்ப்பு
ஆரி இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் பாடி ஸ்கல்ப்டிங் செய்ய ஏற்பட்ட வாய்ப்பு தற்செயலான நிகழ்வுதான். ஆனால், அது அவர் திறமைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசு என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களின் பயிற்சியாளராக இன்றும் ஆரி ஜொலிக்கிறார்.
"நான் நடிக்க வாய்ப்பு கேட்டு என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்துடன் இயக்குநர் சேரனை சந்தித்தேன். ஒவ்வொரு புகைப்படத்திலும் வித்தியாசமான உடல் கட்டுடன் இருப்பதைப் பார்த்து இந்த மாற்றத்தை எப்படிக் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார். பாடி ஸ்கல்ப்டிங் எனும் உடல் மாற்றக் கலையை விளக்கினேன். நான் அப்படி செய்யலாமா? எனக்கு பயிற்சி தருகிறீர்களா? என்று கேட்டார். தாராளமாக சம்மதித்தேன்.
'ஆட்டோகிராப்' படத்தில் கதாபாத்திரத் தன்மைக்காக சேரனுக்கு உடல் மாற்றப் பயிற்சி தந்தேன். பள்ளி மாணவி, குழந்தைகளின் அம்மா என்ற இரு வேறு தோற்றங்களுக்காக மல்லிகாவுக்கு பயிற்சி தந்தேன். அந்த பயிற்சி அப்படியே 'தவமாய் தவமிருந்து' படத்திலும் தொடர்ந்தது. சரண்யா பொன்வண்ணனுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் எடையை குறைக்க பயிற்சி கொடுத்தேன். பத்மப்ரியாவுக்கு கல்லூரி மாணவி, மனைவி என இரு தோற்றங்களுக்காக பயிற்சி கொடுத்து எடையைக் கூட்ட உதவினேன். சேரன் அண்ணன் செந்தில் கதாபாத்திரத்துக்கு 18 கிலோ எடையைக் குறைக்க பயிற்சி அளித்தேன். அதில் நடித்த ராஜ்கிரணுக்கும் பயிற்சி கொடுத்தேன் என்று அவரது ஆரம்ப அனுபவங்களை பகிர்கிறார்.
'சுப்பிரமணியபுரம்' சசிகுமார், 'யோகி' அமீர், 'மிருகம்' ஆதி, 'கற்றது தமிழ்' ஜீவா, 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்திபன், 'ஈரம்' சிந்து மேனன் என பலருக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார் ஆரி.
பொதுவாக இயக்குநர்களுக்கு கவலை, டென்ஷன் அதிகமாக இருக்கும். அவர்கள் எப்போதும் உடலை சரியாக கவனித்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அமீர் உடலை கவனித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். பயிற்சித் திட்டங்களில் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். அதனால் அவர் உடல் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளது என்று ஆரி அமீருடனான தனது அனுபவத்தை பகிர்கிறார்.
"அமீர், சசிகுமார் போன்ற இயக்குநர்களை கதாநாயகனுக்கான மெட்டீரியல் ஆக்கிய பெருமை போதும் எனக்கு." - இது ஆரியின் பெருமித ஸ்டேட்மென்ட்.
நாம் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறோம், நம் பயிற்சி எந்த அளவுக்கு மெருகேறி இருக்கிறது என்பதை திரையில் வரும் நடிகர்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதில் திருப்தியும், பெயரும், புகழும் கிடைக்கும்.
நடிகன் ஆன கதை
சேரன் சார் தான் 'ஆடும் கூத்து' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். நான், சேரன், நவ்யா நாயர் ஆகியோர் அந்த படத்தில் நடித்தோம். படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும், படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் தயாரித்த 'ரெட்டசுழி' படத்தின் நானும் அஞ்சலியும் நடித்தோம். அடுத்து நடித்த 'நெடுஞ்சாலை' படம் நல்ல வரவேற்பை எனக்குக் கொடுத்தது. நயன்தாராவும், நானும் நடித்த 'மாயா' ஹிட் ஆனது என்று பெருமை பொங்க தன் நடிப்புப் பயணத்தை பற்றி கூறுகிறார்.
இப்போது 'மானே தேனே பேயே', 'கடை எண் 6' படங்களில் நடிக்கிறேன். நடிப்புடன் பாடி ஸ்கல்ப்டிங் பயிற்சியும் தொடரும் என கண் சிமிட்டிச் சிரிக்கிறார் ஆரி.