பர்ஸில் இருந்து கைப்பேசிக்கு இடம் மாறிய சில்லரைகள்!
ரூபாய் நோட்டுகளின் டிசைன் மற்றும் காகித அளவு வேறுபடுவதை போலவே, சில்லரை காயின்களும் வேறுபடுகின்றன. சில்லரை காயின்களின் சுற்றளவு மற்றும் டிசைனை கொண்டு அவற்றின் எடையும் வேறுபடுகின்றன. புதிய டிசைன் கொண்ட ஒரு ரூபாய் காயின் 4.85 கிராம் அளவு கொண்டதாகும். மேலும் இது போலவே இரண்டு ரூபாய் காயின் 5.62 கிராம் கணக்கும், ஐந்து ரூபாய் காயின் 6.00 கிராம் அளவும் மற்றும் பத்து ரூபாய் காயின் 7.71 கிராம் அளவும் கொண்டது. ஆமா இப்போ காயின்களைப் பற்றி எதற்கு இவ்வளோ விளக்கம் என்கிறீர்களா?
ஆம் இவ்வாறு பலவித எடை கொண்ட இந்த காயின்கள், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அவசியமாகத் தானே இருக்கிறது. எங்கு சென்றாலும் சில்லரைக் கேட்கும் கடைக்காரர்கள், ஒரு பொருளை வாங்கிவிட்டு மீதி சில்லரையை அளிக்கையில் 1 ரூபாய் குறைந்தால் அதற்கு மாறாக சாக்லெட்டை கொடுக்கின்றனர். ஆனால் அதே கடைக்கு வருபவரிடம் சில்லரை இல்லாத போது ஒரு ரூபாய்க்கு பதிலாக சாக்லெட்டை பெற்றுக்கொள்வதில்லை. இது போன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க துவங்கப்பட்டது தான் 'ஓய்ன்க்' செயலி (Oynk app).
ஓய்ன்க் செயலியின் துவக்கம் மற்றும் நிறுவனர்கள்
1000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து உபயோகித்து வரும் இந்த ஓய்ன்க் (oynk) செயலி மூன்று நிறுவனர்களால் நவம்பர் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எட்டு வருடத்திற்கும் மேலாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகளில் அனுபவம் உள்ள ஆர்த்தி நடராஜன், 12 வருடங்களுக்கு மேலாக வங்கி மற்றும் பெருநிறுவன நிதித் துறையில் அனுபவம் கொண்ட விக்னேஷ் ஷங்கர் மற்றும் 12 வருடங்கள் நிதி சேவைகள் துறையில் அனுபவம் உள்ள மதுசூதனன் ஆகியோரால் துவங்கப்பட்டு மக்களால் உபயோகிக்கப்பட்டு வருகின்றது இந்த ஓய்ன்க் செயலி. சில்லரைகளை எப்போதும் கைகளில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவும், சில்லரைக்கு பதிலாக வேறு பொருளை பரிமாற்றம் செய்து கொள்ளும் பழக்கத்தை கைவிடவும் இந்த செயலி துவங்கப்பட்டது. அஞ்சப்பர், சங்கீதா, அடயாறு ஆனந்த பவன், டோனட் ஹவுஸ் மற்றும் சங்கர நேத்ராலயா உட்பட 100க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயலியை செயல்படுத்தி வருகின்றனர். தங்களிடம் வரும் வாடிக்கையாளுக்கு சில்லரை அளிக்க காயின்கள் இல்லாவிட்டால் டிஜிட்டல் முறையில் அவர்களுக்கு ஓய்ன்க் செயலியை கொண்டு சில்லரை பரிமாற்றம் செய்கிறது இந்நிறுவனங்கள்.
ஓய்ன்க்-ல் பதிவு செய்யும் முறை
ஒரு பயனர் இந்த செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தப்பின், செயலியில் கேட்க்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பயனர் தங்களின் கைப்பேசி எண், பெயர் மற்றும் கடவுசொல் (password) ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மற்றொரு பாஸ்வர்டு கொண்ட எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அனுப்பப்பட்டுள்ள பாஸ்வர்டை ஓ.டி.பி (OTP - One Time Password) என்ற பகுதியில் டைப் செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த முறைகளை முடித்தப்பின் கைப்பேசியில் ஒருவருக்கான ஓய்ன்க் பிகி பேங்க் சேவை துவங்கப்படும். பின்பு துவங்கப்பட்ட இந்த சேவை மூலம் பயனர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடைகளில் சில்லரை வாங்குவதோ அளிப்பதோ அல்லது தங்களின் தனிப்பட்ட உபயோகத்திற்காக பணம் பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.
எவ்வாறு இயங்குகிறது
கடைக்களில் பொருட்களை வாங்கும் நபரிடம் சில்லரை இல்லையென்றால், அவர் ஓய்ன்க் உபயோகிப்பவராக இருந்தால் போதும். டிஜிட்டல் முறையைக் கொண்டு வாடிக்கையாளர் தனது ஓய்ன்க் செயலி மூலம் கடைக்காரரின் ஓய்ன்க் செயலிக்கு சில்லைறையை பரிமாற்றாம் செய்து கொள்ளலாம். ஆனால் இதில முக்கிய நிபந்தனையாக வாடிக்கையாளர் மற்றும் குறிப்பிட்ட கடை ஓய்ன்க் செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்திருந்தால், ஒருவேலை கடைக்காரரிடம் சில்லரை இல்லாத நிலையில் வாடிக்கையாளர் தனது தொலைப்பேசி எண் அதாவது ஓய்ன்க் செயலியில் பதிவு செய்திருக்கும் எண்னை கடைக்காரரிடம் கொடுக்க வேண்டும். அளிக்கப்படும் தொலைப்பேசி எண்ணிற்க்கு அந்த கடையில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சில்லரை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளரின் ஓய்ன்க் செயலியில் வந்து சேர்ந்துவிடும். இவ்வாறு ஒரு ஒரு ரூபாய்க்கும் சில்லரை இல்லாவிட்டால் வேறு எதையாவது வாங்கிக்கொள்வதை விட தனக்கு வந்தடைய வேண்டிய பணம் ஒரு பைசாவும் குறையாமல் வந்தடையும்.
செயலியின் பயன்கள்
ஓய்ன்க் செயலியில் டிஜிட்டல் முறையால் சில்லரை பரிமாற்றம் செய்துக்கொள்வதால் என்ன பயன் இருக்கக்கூடும். அதை வைத்து என்ன செய்வது போன்ற எண்ணங்கள் மக்களிடையே தோன்றும். ஒரு வேலை இந்த சில்லரைகள் பயனற்றது ஆகிவிடுமோ என்ற அச்சத்தை மக்கள் கொள்ளத் தேவையில்லை. ஓய்ன்க் செயலியில் வந்து சேரும் அனைத்து சில்லரைகளும் வீணாகாமல் உபயோகிக்கப்படலாம். ஓய்ன்க்கில் சேமிக்கப்படும் டிஜிட்டல் பணத்தைக் கொண்டு ஒருவர் தனது செல்போனின் ப்ரீபெய்ட் தொகை, போஸ்ட்பெயிட் தொகை மற்றும் தொலைக்காட்சியின் டி.டி.எச் தொகையையும் செலுத்தலாம். மேலும் செயலியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தை ஓய்ன்க் வாடிக்கையாளர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு தனது வங்கியின் கணக்கிற்கு பரிமாற்றாம் செய்து கொள்ளமுடியும். இதனுடன் ஒரு ஓய்ன்க் பயனர் மற்றொரு ஓய்ன்க் பயனருக்கு பணம் பரிமாற்றமும் செய்யலாம். இது போன்ற மற்ற பல சேவைகளும் இதில் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த செயலியை உபயோகிற்கும் பயனர்கள் இந்த செயலி தங்களுக்கு மிகவும் உபயோகமாகவும் எளிமையாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு சில்லரை அளிப்பதற்கு இந்த செயலி எளிமையாக இருப்பதாக கடைக்காரகளும் கூறுகிறனர். மேலும் சென்னையில் துவங்கப்பட்டு செயல்பட்டு வரும் முறையை போலவே அடுத்த மாதம் கோவையிலும் தொடங்க இருப்பதாக ஓய்ன்க் நிறுவனத்தை சேர்ந்தோர் குறிப்பிடுகின்றனர்.
இனி சில்லரை தொல்லை இல்லாமல், ஒய்ன்க் செயலியை பதிவிறக்கம் செய்து பர்சில் கனம் இல்லாமல் செல்லுங்கள்!
செயலி பதிவிறக்கம் செய்ய: Oynk
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
பைக், கார் பழுதடைந்து நின்று விட்டதா? 'GoBumpr' செயலி மூலம் மெக்கானிக்கை உடனே அழையுங்கள்!