நமது உணவை ஏழைகளுடன் பகிர்வோம்!
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விடுதி உணவை ஏழை மக்களுடன் பகிர்வது பற்றிய புதிய தகவல்
அர்பன் ராய்க்கு பிறந்தநாள் வந்தது. அதை வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுடன் கொண்டாடுமாறு கூறினர் ராயின் பெற்றோர். அப்போதுதான் வாழ்க்கை எத்தனை கஷ்டமானது என்பதை உணர முடியும். அத்துடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வறியவர்களுக்கு உதவுவதை நமது பண்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். அர்பன் பெற்றோரின் விருப்பப்படியே செய்தான். அவனது மாணவப் பருவம் பெரும்பகுதி ஒடிஸா, காலகண்டிப் பகுதியில் தான் கழிந்தது. அங்குள்ள மக்கள் வாழ்க்கையை வறுமையுடன் போராடி கழிப்பவர்கள்.
2012 ஆம் ஆண்டு அர்பன் மகாராஷ்ட்ரா தலிஜ்பூர் டாடா அறிவியல் நுட்பக் கழகத்தில் (TISS) பயின்று வந்தான். அங்கு விடுதி மாணவர்கள் தங்கள் உணவின் கணிசமான பகுதியை வீணாக்கி வருவதைக் கவனித்தான். ‘’ நான் செய்தித் தாள்’ வாசிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதால் மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆண்டு தோறும் 3000, 4000 பேர் பட்டினியால் இறக்கும் செய்தியைப் படித்திருந்தேன். அதே சமயத்தில் எனது விடுதியில் உணவு வீணாகிக் கொண்டிருக்கும் காட்சி என் மனதை வருத்தியது. எங்களுக்குள் தொண்டர்களை ஏற்பாடு செய்து யாரெல்லாம் உணவை வீணாக்குகிறார்கள் என்பதைக் கவனித்து முடிந்த மட்டிலும் உணவு வீணாவதைத் தவிர்த்தோம்’’ எவ்வளவோ முயற்சித்தும் வீணாகிக்கொண்டு தான் இருந்தது. இது அர்பன் மனதைத் தொடர்ந்து குடைந்துக் கொண்டே இருந்ததால் சட்டென்று ஒரு சிந்தனை உதித்தது”.
‘எதுவாக இருந்தாலும் அதை உன்னிலும் அதிகமாகத் தேவைப்படுவோருக்குக் கொடுத்துப்பழகு’’ என்று சிறுவயதிலேயே அர்பனின் பெற்றோர் கற்றுக் கொடுத்ததில் இருந்து அவனுக்கு அந்தச் சிந்தனை தோன்றியது. அர்பனும் தொண்டுள்ளம் கொண்ட அவனது நண்பர்களும் அவ்வப்போது ஒருநேரம் உண்பதைத் தவிர்த்து விட்டு அந்த உணவை விடுதி வளாகத்திற்கு அருகில் வசிக்கும் பட்டினியால் வாடும் பிள்ளைகளுக்கு அளிக்க முடிவெடுத்தார்கள். அவர்கள் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் தங்கள் உணவை ஏழை எளியோருக்குத் தரத் தயாரானார்கள். அர்பன் மேலும் கூறுகிறார் ‘"உணவு வழங்குவது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பு நடத்தி விட்டு கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் நாங்கள் ஓர் அனாதை இல்லத்திற்குச் சென்றோம். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். வெறும் காய்ந்த ரொட்டி நீர் விட்டுக் கரைத்த மிளகாய்த் தூள். அது தான் அவர்களது உணவு. இதைத் தான் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நேரமும் சாப்பிடுவார்கள்’’
அர்பன் தொடர்ந்து கூறுகிறார் ‘"மக்கள் எய்ட்ஸ், புற்று போன்ற நோய்களில் மடிவதைக் காட்டிலும் மிக அதிகமாக இந்தியாவில் ஆண்டுதோறும் 25000 பேர் பட்டினியால் சாகிறார்கள். ஒவ்வொரு இரவும் 5.3 கோடிப்பேர் பட்டினியுடன் படுக்கச்செல்கிறார்கள்’.’
2012 ஜூன் 18, அவர்கள் முதன் முறையாகத் தங்கள் உணவைத் தவிர்த்து விட்டு பசியால் இரையும் வயிறுகளுக்கு விநியோகம் செய்தார்கள். இப்போது தலிஜ்பூர் விடுதி வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 300 பேர் ஒவ்வொரு சனிக்கிழமையும் தாங்கள் உண்ணாமல் அந்த உணவை வயிறு பசித்த பிறருக்கு அளிக்கிறார்கள்.
இயக்கமாக மாற்றுதல்
அர்பன் கூறுகிறார், தான் உணவைத் தவிர்ப்பதற்குக் காரணம் தன்னார்வத் தொண்டு நிறுவனம் போல பதிவு செய்வதற்காக அல்ல. இந்த முயற்சியை நாடெங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் எடுத்து செல்லும் மாணவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ‘’இந்தக் கருத்து மாணவர்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டு ஒரு இயக்கமாகச் செயல்பட வேண்டும். நிதி திரட்டி உணவளிப்பதற்கு மாறாக இளைஞர்கள் தங்கள் உணவைத் தியாகம் செய்து அதைப் பசித்தவர்களுக்கு அளிக்கும் உத்தியை மேற்கொள்ளும் போது அது வேகமாகப் பரவலடையும் என்று நம்புகிறோம்’’.
தற்போது சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜும், புதுதில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் காலேஜும் தங்கள் உணவை அருகாமைப் பகுதியில் உள்ள வீடற்றவர்களுக்கும், பசித்தவர்களுக்கும் வழங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். ‘"இதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உறைவிடக் கல்லூரிகளும் தங்கள் உணவை அருகாமைப் பகுதிகளுக்கு வழங்கும் திட்டத்தைப் பின்பற்றும் போது அரசின் கொள்கைக்கு அப்பால் பசியைத் துடைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி விட முடியும். இது நாம் நாட்டிற்கு முற்றிலும் நன்மை தருவதாக இருக்கும்’’ என்கிறார் அர்பன்.
தங்களைப் பற்றி புறம் பேசுபவர்கள் குறித்துக் கூறுகிறார் அர்பன் – ‘’பார்ப்பவர் கண்களுக்கு ஒருநேர உணவு இளக்காரமாகத் தோன்றலாம். குடிக்க ஒரு சொட்டுத்தண்ணீர் கூட இல்லாமல் தெருவோரம் வறண்டு கிடப்பவர்களுக்கு ஒருநேர உணவு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். மெய்யான கருணையாக இருக்கும். ஏதுமற்றதாக இருப்பதை விட சிறிதளவாவது கிடைப்பது எத்தனையோ உத்தமம். கல்லூரி விடுதிகள் மட்டுமல்லாமல் ஓட்டல்கள், கல்யாண விருந்துகள் ஆகியவற்றில் மீந்ததைப் பெறும்போது அதுவொரு கணிசமான அளவாக இருக்கும். பல மனங்களின் கருத்தொத்த சிந்தனையும், மிகச் சில கைகளும் இணைந்தால் போதும். தங்கள் அருகாமைப் பகுதியில் உணவின்றித் தவிப்போர்க்கு மேற்படி உணவை பகிர்ந்தளிப்பதன் மூலம் இரண்டு தீமைகளைக் களையலாம். ஒன்று பசித்த வயிற்றுக்கு உணவு மற்றது வீணாவதைத் தவிர்ப்பது’’.
கல்வியும் வலிமை சேர்த்தலும்
ஒரு நேர உணவு தவிர்த்த மாணவர்கள் குழுவினர் அந்த நேரத்தில் அனாதை இல்லத்திற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளைப் பார்ப்பதாகக் கூறுகிறார் அர்பன். இப்போது அந்தக் குழு கல்வி அளிப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. "அந்தக் குழந்தைகளுக்கு கல்விக்கும் மேலாக மேலும் சிலதுதேவைப்படுவதாக உணர்ந்தோம். அவர்கள் தங்கள் எதிர்கால நல் வாழ்க்கைக்காக கடினமாகப் படிக்கவும் உழைக்கவும் வேண்டியிருக்கிறது. நாங்கள் இப்போது கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் எங்கள் கவனத்தைத் திருப்பி இருக்கிறோம். எங்கள் அமைப்பு அனாதைப் பிள்ளைகளின் ஆங்கிலத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது முதல் கட்டமாக. அதற்கான வேலைகளையும் துவக்கி விட்டோம். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே அந்தப் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்திற்கும் மேலாகத் தேவைப்படுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குக் கலை நுட்பம், கைத் தொழில் நுட்பம் போன்றவற்றைக் கற்றுத் தரும் நடவடிக்கையில் இறங்குவோம்’’
அர்பனும் அவரது சகா க்களும் கிராம ப் புற பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுத் தரச் செல்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் தங்கள் பாடங்களை கற்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்தப் பாடத்திட்டம் நமது கிராமப்புற மாணவர்களை மனதிற் கொண்டு தயாரிக்கப்பட்டவை அல்ல. அர்பன் சொல்கிறார் ‘’இப்பாடத் திட்டம் நகர்ப்புற மாணவர்களின் தேவையை ஈடு செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டவை. இப்போது நாங்கள் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமான மாற்று வடிவத்தில் பாடத் திட்டத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்’’
அதுவும் கூடப் போதுமானதல்ல. இந்தக் குழு இன்னும் இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்தவிருக்கிறது. அவை குழந்தைகளின் நல்லுணர்வை மேம்படுத்துவது மற்றொன்று வீடற்றவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது. அர்பன் கூறுகிறார் ‘’வீடற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய திறன் பயிற்சித் திட்டங்களைத் தயாரிக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதன் மூலம் உணவு அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களை வலிமை மிக்கவர்களாக மாற்றுவதும் எங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது’’.
இன்னும் வலிமையுடன்
அர்பன் இப்போது பட்டம் பெற்று விட்டார். இருந்தாலும் அவர் அடியெடுத்து வைத்த பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டுள்ளார். ஆண்டிற்காண்டு ஒத்த கருத்துள்ள மக்கள் எங்களுடன் இணைவது அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தங்கள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாகக் கூறுகிறார் அர்பன். தங்களிடம் போதிய நிதி வசதி இல்லாததால் எப்போதும் உதவக் கூடிய கைகளை அதிகம் எதிர் நோக்குவதாகக் கூறுகிறார் அர்பன். இருந்தாலும் தங்கள் திட்டம் விரிவடையும் என்பதில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
உணவைத் தவிர்க்கும் திட்டத்தில் பல கல்லூரிகள் இணைந்து கொண்டுள்ளன. வாரந்தோறும் 1300 பேருக்கு உணவளிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை 2012 ஆம் ஆண்டு துவக்கியது முதல் இன்று வரை நாடெங்கிலும் மூன்று மாநிலங்களில் 53000 பேருக்கு உணவளிக்கப்பட்டுள்ளது. அர்பன் கூறுகிறார் ‘’எங்களது இலக்கு அடுத்த நூற்றாண்டு தலைமுறையையும் எங்கள் திட்டத்தில் இணைப்பது. உலக நாடுகளில் மக்கள் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் இந்தியா மக்களின் சராசரி வயது இன்னமும் 28 ஆக இருக்கிறது. உலகத்தின் பெரும்பகுதிக்கு நாம் தான் உழைப்புச் சக்தியைத் தரவிருக்கிறோம். இளம் வயதில் இருப்போரால் மட்டுமே நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளுக்கு புதுவிதமான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.அ
பெரிதாகக் கனவு காண்பதையே விரும்புகிறேன். முதியோர், இயலாதோர், வீடற்றோர், பெற்றோரில்லாத பிள்ளைகள் ஆகியோருக்கான இல்லம் ஒன்றைக் கட்ட விரும்புகிறேன். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமூகத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்த பிள்ளைகளானாலும் சரி, அவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அர்பன்.