வீழ்ந்தெழுந்து எழுப்பும் பயிற்சி மையம்- சென்னையைச் சேர்ந்த அர்ஜூனா விருது வீரரின் கனவு!
மெதுவாக நடந்துகொண்டே அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்தவாறு என்னை அந்த அகாடமிக்குள் அழைத்து செல்கிறார் சந்திரசேகர். டேபிள் டென்னிஸ் மட்டை மற்றும் பந்தின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே மாணவர்கள் செய்யும் சின்ன சின்ன ஷாட் தவறுகளை திருத்தியப்படி விளையாட்டை கவனித்த சந்திரசேகர், 1970, 80 களில் கொடிகட்டி பறந்த தேசிய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவார்.
இன்று நிதானமாகவும், அமைதியாகவும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பட்டறையை எழுப்பி விளையாட்டில் தன்னுடைய சுவடை பதித்து வரும் இவர், தன்னுடைய பயிற்சி மையத்தை எடுத்து வருவதில் பெரும் சிக்கல்களை சந்திப்பது ஏன்? பாதி கட்டியும், கட்டாத நிலையில் இருக்கும் மையத்தின் கதை என்ன? தேசிய வீரரான இவர் இன்று அடி மேல் அடி வைத்து மெதுவாக செயல்பட என்ன காரணம்? என்ற பல கேள்விகளோடு அவரை சந்தித்தோம்.
தமிழ் யுவர்ஸ்டோரிக்காக சந்திரசேகர் பகிர்ந்துக்கொண்டது..
விளையாட்டாக ஆரம்பித்த விளையாட்டு
தற்போது, 50 வயதை தாண்டியுள்ள சந்திரசேகர் வேணுகோபால் முதல் முதலில் டேபிள் டென்னிஸ் விளையாடியது அவருடைய 12 வயதில். "என்னுடைய தாத்தா வீட்டில் இருந்த டேபிள் டென்னிஸ் செட்டை கொண்டு சும்மா விளையாடினேன். தானாக விளையாடி, வீட்டில் இருப்பவர்களுடன் மேட்ச் போல விளையாடி, அவர்களை வெல்லவும் செய்தேன். நான் தான் பெஸ்ட் என்ற எண்ணத்தோடு, ஒரு ஓபன் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொண்டேன். எல்லா வயதினரும் ஒரு சேர கலந்துக்கொள்ளும் அந்த போட்டியில், தன்னை எதிர்த்து ஆடிய 53 வயது போட்டியாளரிடம் தோல்வி அடைந்ததாக, தன்னுடைய முதல் போட்டியின் அனுபவத்தையும் தோல்வியையும் பகிர்ந்துக்கொள்கிறார்.
ஒரு வேளை நான் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், டேபிள் டென்னிஸ் விளையாட்டை முழு வீச்சில் எடுக்காமல் இருந்திருப்பேன். 53 வயது நபரே வெற்றி பெறும் போது நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணமே, என்னை ஒரு முறையான பயிற்சியை நோக்கி இழுத்துச் சென்றது, என்கிறார்.
பின், அடையாறு பயிற்சி மையத்தில் எடுத்துக்கொண்ட பயிற்சி மூலம், 1970ம் ஆண்டு மாநில ஜூனியர் போட்டிகளில் வெற்றி பெற்றார். மாநில அளவிலான போட்டிகளை கடந்து, 1974-76 ஆண்டுகளில் ஜப்பான், கொரியா போன்ற வெளிநாடுகளிலும் சரியான பயிற்சிகளை எடுத்துக்கொண்ட சந்திரசேகர், அதன் பின் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக்கொள்ள ஆயத்தமானார்.
1977 முதல் 1984 வரை
19 வயதே நிரம்பிய சந்திரசேகர், 1977ம் ஆண்டு முதல், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டார். தேசிய போட்டிகளில் மூன்று முறை சாம்பியன்ஷிப் பட்டம் மட்டுமல்லாமல், இந்தியாவின் சார்பாக பல உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு முறை வெண்கலம், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம், தவிர, பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் சார்பாக 'குட்வில்' டேபிள் டென்னிஸ் கேப்டனாகவும் பல போட்டிகளில் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார் சந்திரசேகர்.
"அப்போது டேபிள் டென்னிஸ் விளையாட்டை பற்றி விழிப்புணர்வு அவ்வளவாக இல்லையென்றாலும், பிரபலமாக பல பேரிடையே பேசப்பட்டது. தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாத அந்த காலங்களிலும், மக்கள் டிக்கெட் பெற்று விளையாட்டை நேரில் வந்து பார்ப்பது வழக்கம்."
குறிப்பாக இவருடைய ஆட்டங்களில் கூட்டம் நிரம்பி இருப்பது மட்டுமல்லாமல், மக்கள் தொடர்ந்து சந்திரா... சந்திரா... என்று இவருடைய பெயரைச் சொல்லி உற்சாகப்படுத்துவது வழக்கமாம். 7 வருடங்களில் பல போட்டி மற்றும் பரிசுகளை தட்டிச்சென்ற சந்திரசேகர், யூஎஸ் ஓபன் போட்டியிலும் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். கோப்பைகள், பட்டங்கள் ஒரு புறம் இவரைச் சேர, இந்திய அரசாங்கமும் இவரது 26வது வயதில் சந்திரசேகருக்கு அர்ஜூனா விருதை அளித்து கெளரவித்தது. தவிர, 1999ம் ஆண்டில் வாழ்நாள் சாதனை விருதும் இவருக்குத் தரப்பட்டது.
சிகிச்சையின் பலன்
1984ம் ஆண்டில் சந்திரசேகர் விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்த யூஎஸ் ஓபன் போட்டியே தனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்பதை சந்திரசேகர் அப்போது கனவில் கூட நினைக்கவில்லை. ஒரு சின்ன மூட்டு சிகிச்சைக்காக சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனஸ்தீஷியா அளிப்பதில் ஏற்பட்ட தவறால், மூளை பாதித்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் வரை கோமா நிலையில் இவர் இருந்தார்.
"சாதாரண மூட்டு அறுவை சிகிச்சையாக மட்டுமே இருக்க வேண்டிய அந்த சிகிச்சை, 4 மாதங்கள் வரை கோமாவில் என்னை தள்ளியது. மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைபட்டதால், உடனே மூளை செல்கள் பழுதடைந்தது."
"மூளை செல்கள் பாதிப்பு என்றால், அதை சரி செய்வது மிகவும் கடினம். பழுதான செல்களை ஒரளவிற்கு சரி செய்வது சாத்தியம். ஆனால், அழிந்த செல்களை மீண்டும் செயல்படுத்த வைப்பது மிகவும் கடினமான ஒன்றே. கோமாவிலிருந்து நினைவுக்கு வந்து கட்டிப்போட்டதை போல இருந்த என்னுடைய நாட்கள் மிகவும் கடினமானது என்றே சொல்லலாம்.
கோமாவில் இருந்த போது என்னைச் சுற்றி பாம்புகள் இருப்பதை போல் தோன்றும், மேலிருந்து விழுவதை போன்ற நினைவுகள் அடிக்கடி வந்துப்போகும். நினைவு வந்ததும், நான் மிகவும் முரடாக இருந்தேன். என்னை சங்கிலி கொண்டு கட்டிபோட்டு வைத்திருந்தனர்." என்று பழைய நினைவலைகளை பகிர்ந்துக்கொள்கிறார் சந்திரசேகர்.
மூளையின் செரிபெல்லம் என்ற பகுதியில் பாதிப்பு என்பதால், மூளை மற்றும் உடல் ஒருங்கிணைப்பு தடைபட்டது. உடல் உழைப்பு குறைந்தது மட்டுமல்லாமல், பார்வையிலும் பிரச்னைகள் இவருக்கு ஏற்பட்டதைத் தவிர, நரம்பு மணடலமும் பாதிப்படைந்தது. "அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எனக்கு தரபட்டாலும், முற்றிலுமாக பாதிக்கப்பட்ட மூளை செல்களுக்கு நவீன மருத்துவம் தேவைப்பட்டது. அமெரிக்கா சென்று பல நவீன சிகிச்சைகளுக்குப் பின், என்னை ஒரளவு நடமாடும் நிலைக்குக் கொண்டுவந்தனர்.
எனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் என்னால் மீண்டும் விளையாட முடியுமா என்று கேட்டேன், இந்த அளவிற்கு நீங்கள் செயல்படுவதே அதிசயம். உங்களால் இனிமேல் விளையாட முடியாது என்று கூறினார்கள்."
தன்னுடைய பயணத்தை ஆங்கிலத்தில், My Fight back from Death's Bed என்றும் தமிழில் 'ஒவ்வொருநாளும் சவால்' என்றும் புத்தகங்களாக எழுதியுள்ளார் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி மையமும் நீதிமன்ற வழக்கும்
சாதாரணமாக, ஒரு மனிதனின் மூளை ஆக்சிஜன் இல்லாமல் 4 நிமிடங்கள் வரைதான் செயல்பட இயலும். ஆனால் மருத்துவர்கள் அதை கவனிக்கத் தவறியதால், 'மெடிக்கல் நெக்லிஜன்ஸ்' (Medical Negiligence) என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இவரால் தொடரப்பட்டுள்ளது. கோமாவிலிருந்து நினைவுக்கு வந்தாலும், தானாக செயல்பட முடியாத நிலைக்கு சந்திரசேகர் ஆளானார். இன்றும் கூட மெதுவான நடை, 70 சதவிகிதம் கண்பார்வையின்மை என்றிருந்தாலும் தன்னுடைய கனவு ப்ராஜெக்டான தன்னுடைய அகாடமி அமைக்கும் பணியில் முழு வீச்சாக செயல்பட்டு வருவது இவருடைய அபரிதமான தன்னம்பிக்கையை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. கிட்டத்தட்ட 11 வருடங்கள் வரை நடந்த இந்த வழக்கின் இறுதியில், உயர்நீதிமன்றம் மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத்திலும் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வர, நஷ்ட ஈடும், தமிழக அரசாங்கம் 'லீஸ்' முறையில் நிலமும் இவருக்கு வழங்கியுள்ளது.
நஷ்டஈடுக்காக இந்த வழக்கை நான் தொடரவில்லை. தவறான ஒரு செயல் கவனிக்கப்படாமலும், அதற்கான தண்டனையைப் பெற்றுத்தராமலும் இருக்கக்கூடாது. அது பல பேருக்கு ஒரு சரியான விழிப்புணர்வையும் தரும், என்கிறார்.
அந்த நிலத்தில் இன்று 'சந்திராஸ் டிடி அகாடமி' எழுப்பப்பட்டுள்ளது. லீஸ் நாட்களை மேலும் நீட்டிப்பதற்கும், கட்டிடம் மற்றும் விளையாட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் பல சவால்களை சந்திரசேகர் சந்தித்துள்ளார். மெடிமிக்ஸ் நிறுவனம் அளித்த முதல் நிதி 35 லட்சம் கொண்டு நிலத்தை சரி செய்வது, கட்டிடம் எழுப்புவது போன்ற ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றது.
சென்ற வருடம் ஏப்ரல் 22ம் தேதி ஆரம்பித்த இந்த பயிற்சி மையத்தில் தற்போது கிட்டத்தட்ட 50 மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர். 5 பயிற்சியாளர்கள், பல ஸ்டேட் மற்றும் ஜூனியர் சாம்பியன்களை உருவாக்கி வரும் சந்திரசேகரால் பழைய மாதிரி விளையாட முடியாமல் போனாலும், மாணவர்கள் செய்யும் தவறுகளை காதால் கேட்டபடியும், அவர்களுடைய அசைவுகளைக் கொண்டு தவறுகளை சரியாக கண்டறிந்தும் பல ஆலோசனைகளை வழங்க முடிகிறது.
"அவர் விளையாடிய நாட்களிலிருந்து எனக்கும் அவருக்கும் பழக்கம் உண்டு. ஒரு மாணவன் விளையாடும் விதத்தை பார்த்து மட்டுமே, அவனுக்கு எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும், எந்த மாதிரியான மட்டையை வைத்துக்கொள்ளலாம், என்று எல்லா விதமான அறிவுரைகளையும் கச்சிதமாக அவர் தருவார். அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நாங்கள் மாணவர்களுக்கு பயிற்சி தருகிறோம்." என்கிறார் கோச் அண்ட்ருஸ்.
பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் சந்திரசேகரின் பயணத்தில் பெரும் அங்கமாக இருப்பது முயற்சி என்ற ஒரே விஷயம் தான்.
"முடிந்தவரை முயற்சிப்பது தான் என்னுடைய எண்ணம். அடிக்கடி கீழே விழுவது எனக்கு பழகிப்போய்விட்டது. ஆனால், நானே எழுந்து செல்வேன். விழுந்ததற்காக வருத்தப்படும் வகையறா நான் இல்லை. அப்படி வருத்தப்பட்டால் இன்று என்னால் நடமாடும் நிலையில் இருந்திருக்கவே முடியாது. வாழ்க்கையிலும் கீழே விழுந்தாலும், அங்கிருந்து எழுந்து அடுத்த கட்ட விஷயங்களை நோக்கிச் செயல்படுவது தான் ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றுகிறது." என்ற தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.
இவருடைய பயிற்சி மையத்திற்கு இன்னும் சில நிதிகள் தேவைப்படுகிறது. நிதியுதவி செய்ய விரும்புவோர் இங்கு க்ளிக் செய்து உங்களுடைய பங்களிப்பை தரலாம்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
தன் குறையை மாற்றியமைத்து வெற்றி கண்ட மாதவி லதாவின் பயணம்!
வலி, வாதம், பரிதாபம்; இவற்றுகான பதிலை கண்டறிந்து அதை பிறருடன் பகிர்ந்து மகிழ்கிறார்...