அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்கப் போகும் 6 இந்தியர்கள்!
கொரோனாவால் வீழ்ந்து கிடக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீர்படுத்த வெள்ளை மாளிகை 6 இந்தியர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்?
கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளை ஒரு கை பார்த்து வருகிறது. ஒரு பக்கம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நோய் பரவல், உயிரிழப்புகள் என அமெரிக்கா விழி பிதுங்கி நிற்க மற்றொரு புறம் வேலையிழப்பு, பொருளாதாரச் சரிவு என தடுமாறிக் கொண்டிருக்கிறது.
வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை ஏற்றம் பெறச் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய அமெரிக்க கார்ப்பரேட் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். பல்வேறு துறைகளைச் சார்ந்த 200 முன்னனி அமெரிக்கத் தலைவர்களைத் தேர்வு செய்து 12 விதமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Great American Economic Revival Industry Groups என்ற அக்குழுவில் மைச்ரோசாப்ட் தலைமை நிறுவனர் சத்ய நாடெல்லா, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா,பெர்னோட் ரிச்சர்ட் துறையின் அன்ன் முகர்ஜி, மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியர்கள் தவிர ஆப்பிள் நிறுவனத்தின் டிம் கூக், ஆரகிளின் லேரி எள்ளிசன் மற்றும் முகநூல் நிறுவனத்தின் மார்க் ஜூகர்பர்க் உள்ளிட்டோரும் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை அரசுக்கு முன் வைப்பார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் 6 இந்தியர்கள் அடங்கிய குழுவில் ஒரு பெண்ணும் இடம்பெற்றிருக்கிறார். இவர்கள் அனைவரும் அறிவாற்றல் மிக்கவர்கள், தெளிவானவர்கள், சிறப்பாகச் சிந்திக்கக் கூடியவர்கள். இவர்கள் அளிக்கும் ஆலோசனைகள் பொருளாதாரத்தை சீர்படுத்த உதவும் என நம்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மதுரையைச் சேர்ந்தவர். ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா ஆந்திராவின் மேற்கு கோதாவரியைச் சேர்ந்தவர், மைக்ரான் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா உத்திரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர், பெர்னோட் ரிச்சர்ட்டின் தலைவரும், நிர்வாக அதிகாரியுமான அன்ன் முகர்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்தவர், மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா புனேவைச் சேர்ந்தவராவர்.
தமிழில் கட்டுரை : கஜலெட்சுமி