அமெரிக்காவின் சுயமாக சம்பாதித்த பணக்காரப் பெண்கள்: Forbes பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள்!
கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்ஸ் தலைவர், சி.இ.ஓ ஜெயஸ்ரீ உல்லால், ஐடி ஆலோசனை நிறுவனமான சிண்டெல் இணை நிறுவனர் நீரஜா சேத்தி மற்றும் ஸ்டிரீமிங் டேட்டா நிறுவனமான கன்புளுயண்ட் இணை நிறுவனர் நேஹா நார்கடே, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் சுயமாக சம்பாதித்த பணக்காரப் பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளையைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தாங்களே உருவாக்கிக் கொண்ட புதிய வர்த்தக பாதையில், வரம்புகளை உடைத்து, சாதனைகளை நிகழ்த்தி, செல்வத்தை உருவாக்கியுள்ளதாக இந்த பெண்களை ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது.
கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்ஸ் தலைவர் மற்றும் சி.இ.ஈ ஜெயஸ்ரீ உல்லால், ஐ.டி.ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான சிண்டெல் (Syntel) இணை நிறுவனர் நீரஜா சேத்தி மற்றும் ஸ்டிரீமிங் டேட்டா தொழில்நுட்ப நிறுவனமான கன்புளுயண்ட் (Confluent) இணை நிறுவனர் நேஹா நார்கடே ஆகியோர், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பணக்கார சுயமாக சம்பாதித்த பெண்கள் ('America's Richest Self-Made Women 2019') பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த படியலில் டயனா ஹென்ரிக்ஸ் முதலிடம் வகிக்கிறார். இவர் ஏபிசி சப்ளை எனும், கூரை மற்றும் ஜன்னல் விநியோக நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். 72 வயதான இவரது நிகர மதிப்பு 7 பில்லியன் டாலராகும்.
பட்டியலில் 14 வது இடத்தில் உள்ள, ஜெயஸ்ரீ உல்லாக், 1.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்டுள்ளார். 58 வயதான இவர, அரிஸ்டாவின் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
"லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த, ஜெயஸ்ரீ, அமெரிக்காவின் பணக்கார பெண் அதிகாரிகளில் ஒருவராக திகழ்வதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிடுகிறது.
நீரயா சேத்தி, 23 வது இடத்தில் உள்ளார். இவர் சிண்டெல் நிறுவனத்தை, 1980ம் ஆண்டு தனது கணவர் பரத் தேசாயுடன் இணைந்து, 2,000 டாலர் முதலீட்டில் நிறுவினார். இவரது தற்போதைய நிகர மதிப்பு ஒரு பில்லியன் டாலராகும். பிரான்ஸ் ஐடி நிறுவனமான, அடோஸ் எஸ்.இ, இந்நிறுவனத்தை 2018 ல், 3.4 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதில் சேத்திக்கு 510 மில்லியன் டாலர் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நார்கடே 60 வது இடத்தில் உள்ளார். அவரது நிகர மதிப்பு 360 மில்லியன் டாலராகும். 2.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட, கன்புளயண்ட் நிறுவனம், கோல்ட்மன் சாக்ஸ், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை வாடிக்கையாளராக கொண்டுள்ளது.
லிங்க்டுஇன் மென்பொருள் பொறியாளரான நார்கடே (34), இந்த தளத்திற்காக அதிக தரவுகளை கையாள்வதற்கான அப்பாச்சி காப்காவை உருவாக்கினார். 2014 ம் ஆண்டு இரண்டு சகாக்களுடன் இணைந்து தனது நிறுவனத்தை உருவாக்கியதாக ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது.
இந்த பட்டியலில், ஓபரா வின்பிரே (10), ஃபேஸ்புக் தலைமை செயல்பாட்டு அதிகாரி ( 12), ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கெய்லி ஜென்னர், (23), பாப் நட்சத்திரம் ரிஹானா (37), மடோனா (39), பியான்ஸ் (51), டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (80) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகமான பெண்கள், புதிய வர்த்தகத்தை உருவாக்கிச் செல்வம் சேர்த்து வருவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
”இந்த பட்டியலில் உள்ள சாதனையாளர்கள் தங்கள் சொந்த பாதையை வகுத்துக் கொண்டுள்ளனர்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் 21 வயது முதல் 92 வயதானவர்களாக இருக்கின்றனர். மொத்தம் 81.3 பில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கான குறைந்த பட்ச நிகர மதிப்பு 225 பில்லியன் டாலராகும்.
ஆதாரம்: பிடிஐ செய்தி நிறுவனம் | தமிழில் : சைபர்சிம்மன்