60 மில்லியன் பயனாளிகள்: ஆனால் Sharechat-ன் வருவாய் பூஜ்ஜியம்!
2019 நிதியாண்டில், மோசமான செயல்பாட்டை கொண்ட ஸ்டார்ட் அப்கள் பட்டியலில் ஷேர்சாட் நிறுவனம் சேர்ந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ’ஷேர்சாட்’ சேவையின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவெட் நிறுவனம் 2019 நிதியாண்டில் ரூ.415 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட ரூ.33.8 கோடி நஷ்டத்தைவிட இது 12 மடங்கு அதிகமாகும். நிறுவனம், கம்பெனிகள் பதிவாளரிடம் தாக்கல் செய்துள்ள தகவல்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
இதே நிதியாண்டில் நிறுவன வருவாய் ரூ.25.8 கோடியாக இருந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.1.7 கோடியாக மட்டும் இருந்தது. இந்த ஸ்டார்ட் அப் தனது செயல்பாடுகள் மூலம் பூஜ்ஜியம் வருமானத்தை தெரிவித்துள்ளதால், மொத்த வருவாயும் இதர வழிகள் மூலம் வந்துள்ளது.
பிராந்திய மொழிகளில் செயல்படும் இந்த சமூக வலைப்பின்னல் நிறுவனத்தின் அதிகரிக்கும் செலவுகள் காரணமாகவும் நஷ்டம் அதிகரித்துள்ளது. ஷேர்சாட் நிறுவனம், 2019 நிதியாண்டில் ரூ.440.50 கோடி செலவுகளை கொண்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.35.4 கோடியாக மட்டும் இருந்தது.
600 முதல் 650 மில்லியன் டாலர் மதிப்பு மிக்கதாக மதிப்பிட்டுள்ள இந்நிறுவனம் 60 மில்லியன் மாதாந்திர தீவிர பயனாளிகளைக் கொண்டுள்ளது.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஷேர்சாட் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. பைட்டான்ஸ் நிறுவனத்தின் ஹலோ செயலி இந்த பிரிவில் போட்டியை அதிகமாக்கியுள்ளது. இரு நிறுவனங்களுமே சந்தை பங்கை கைப்பற்ற அதிகம் செலவு செய்து வருகின்றன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஷேர்சாட் நிறுவனம், டி சுற்று நிதியாக 100 மில்லியன் டாலர் திரட்டியதாக அறிவித்தது. இந்த சுற்றில், டிவிட்டர் மற்றும் டிரஸ்ட் பிரிட்ஜ் பாட்னர்ஸ் ஆகிய முதலீட்டாளர்கள் புதிதாக சேர்ந்துள்ளன.
தற்போதைய முதலீட்டாளர்களில், ஷுன்வெய் கேபிடல், லைட்ஸ்பீட் வென்ச்சர் பார்ட்னர்ஸ், எஸ்.ஏ.ஐ.எப் கேபிடல், இந்தியா கோஷண்ட், மார்னிங்சைடு வென்சர் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் இந்த சுற்றில் பங்கேற்றன. இதன் மூலம் நிறுவனம் இதுவரை 224 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.
2015 ல், ஐஐடி பட்டதாரிகள் அகுஷ் சச்தேவா, பாஹித் ஆஷான் மற்றும் பானு சிங் ஆகியோரால் துவக்கப்பட்ட ஷேர்சாட், பயனாளிகள் தங்கள் தாய் மொழியில் கருத்துக்களை பகிர வழி செய்கிறது.
இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 14 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் | தமிழில் :சைபர்சிம்மன்