63 வருடங்களுக்கு முன்னரே சென்னை வந்த சீன அதிபர்: வியந்து சொன்னது என்ன தெரியுமா?
63 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய சீன அதிபர் சூ என்லாய், 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை வரவேற்பு புத்தகத்தில் அவர் வியந்து ஒரு வாசகத்தை எழுதிவிட்டு சென்றிருக்கிறார். அது என்ன தெரியுமா?
இந்திய சீன நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர் பாரம்பரிய மண வீசும் கலைநிகழ்ச்சிகளும் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்டி சட்டை வரவேற்பும் தென் தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகமெங்கும் எதிரொலிக்கிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் தான் முதன்முதலில் சென்னை வருகிறார் என்று நினைக்கிறீர்களா அது தான் இல்லை. 63 ஆண்டுகளுக்கு முன்னரே அப்போதைய சீன அதிபர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சென்னை வந்துவிட்டு சென்றிருக்கிறார்.
அப்போதைய சீன அதிபர் சூ என் லாய் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி சென்னை வந்திருக்கிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த என்லாய்க்கு அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவும் முதல்வராக இருந்த காமராஜரும் வரவேற்பு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து என்லாய்க்கு இன்றைக்கு நேரு உள்விளையாட்டு அரங்கமாக உள்ள இடத்தில் தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்பட்டது.
ஜெமினி ஸ்டூடியோவில் நடந்த படப்பிடிப்பை சுற்றிப் பார்த்த அவருக்கு ஒரு இந்தி படத்திற்கான நடனக்காட்சி படமாக்கிக் காட்டப்பட்டது. அந்தக் காட்சியில் பத்மினி நடனம் ஆடினார். பிறகு சீன அதிபரை ஸ்டூடியோவில் உள்ள பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்து ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் படப்பிடிப்பு நடைபெறும் விதம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இரண்டாவது நாளான டிசம்பர் 6ம் தேதி சென்னையிலுள்ள ஐசிஎஃப் வளாகத்தை பார்வையிட்டுள்ளார்.
ஐசிஎஃப் வளாகத்தின் வருகை பதிவேட்டில் இப்படி நவீனமாக ரயில் பெட்டி தயாரிப்பது சிறப்பாக உள்ளது. இந்தியா இதில் பெருமை கொள்ள வேண்டும் என்று சீனர்கள் இங்கு வந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன பிரதமர் சூ என்லாய் எழுதியுள்ளார்.
தொடர்ச்சியாக மாமல்லபுரம் சென்ற சூ என் லாய் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார். அவரிடம் மாமல்லபுரத்திற்கும் புத்தமதத்திற்கும் உள்ள வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கப்ப்டட போது அதனை குறிப்பெடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகளை பணித்துள்ளார்.
பின்னர் மாமல்லபுரம் அருகே 9 கிமீ தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் எனும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். பின்னர் டிசம்பர் 7ம் தேதி சீன அதிபர் சூ என் லாய் சென்னையிலிருந்து சீனா புறப்பட்டார்.
63 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்த சீன அதிபருர் சூ என்லாய்க்கும் சரி 2019ல் சென்னை வந்திருக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சரி சிறப்பான வரவேற்பை அளித்து உபசரிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன் மட்டுமே என்பதை நிரூபித்துள்ளனர்.
கட்டுரையாளர்: கஜலெட்சுமி