சென்னை வெல்கம்ஸ் சீன அதிபர்: வரலாற்றின் முக்கிய நாளை அலங்கரிக்க செம ஏற்பாடுகள்!
சென்னைக்கும் சீனாவிற்கும் இடையே இருக்கும் பந்தம் என்ன? இந்திய-சீன சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் என்ன கதை?
இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இன்று சென்னை வருவதால் வழக்கத்தை விட சென்னை படு சுறுசுறுப்பாக இருக்கிறது. இருபெரும் தலைவர்களின் வருகையால் சென்னை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சென்னைக்கு வருவதால் சீனா, சென்னை இடையேயான உறவு என்ன என்று பலரும் கூகுள் ஆண்டவரிடம் தேடிப்பிடித்து படித்துக் கொண்டிருக்கின்றனர்.
தென்தமிழகத்திற்கும் சீனாவிற்கும் மொழி அடிப்படையில் ஒரு பிணைப்பு இருப்பதாகவும், பண்டைய காலத்தில் மாமல்லபுரம் துறைமுகம் வாயிலாக இரு பிராந்தியங்களுக்கும் வர்த்தகம் நடைபெற்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே இந்தியப் பிரதமருடனான சந்திப்பு மாமல்லையில் நடக்க வேண்டும் என்று சீனா விரும்பியதாகவும் அதன் அடிப்படையிலேயே இன்றும் நாளையும் இரு தலைவர்களின் சந்திப்புகளும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப்பிரச்னை நிலவும் நிலையிலும் பரஸ்பர நல்லுறவும், வர்த்தக, கலாசார தொடர்புகளும் இருந்து வருகின்றன. சீனாவுடனான நட்புறவை வளர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்பும் நிலையில் இரு நாட்டு தலைவர்களும் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் 2 நாள் பயணத்தில் 5க்கும் மேற்பட்ட தனிப்பட்ட சந்திப்புகளுக்கும், ஆலோசனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனி விமானம் மூலம் இன்று பகல் 12.30 மணி அளவில் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
சீன அதிபர் ஜின்பிங் தனி விமானம் மூலம் பகல் 1.30 மணிக்கு சென்னை வருகிறார். அவருடன் 200 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள். மீனம்பாக்கம் பழைய விமானநிலையத்தில் சீன அதிபரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வரவேற்கிறார்கள். விமான நிலையத்தில் சீன முக்கியஸ்தர்களை வரவேற்க கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கும் ஜின்பிங், மாலை 4 மணிக்கு அங்கிருந்து காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் செல்கிறார். வான்வழி போக்குவரத்து பாதுகாப்பற்றது என்று சீன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததால் குண்டுகள் தளைக்காத 4 கார்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அதில் சீன அதிபர் சாலை மார்க்கமாக கிண்டியில் இருந்த மாமல்லை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ், சீன மொழியில் பேனர்கள்
சீன அதிபர் சாலை மார்க்கமாக செல்வதால் அவரை வரவேற்பதற்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில் விமான நிலையம் பகுதியில் ’வெல்கம் பிரெசிடென்ட்’ என்ற வாசகங்களுடன் டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓம்எம்ஆர் சாலையை கடந்து செல்லும் ஜின்பிங்கை வரவேற்பதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ராமானுஜம் ஐடி பூங்கா சீன மொழியில் வரவேற்பு வாசகங்களை வடிவமைத்துள்ளது.
மாமல்லபுரம் சென்றடைந்த பின்னர் அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடியே யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று சின்னங்களான அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிட உள்ளனர். இதற்காக மாமல்லபுரம் தூய்மை செய்யப்பட்டு புதுப்பொலிவோடு திகழ்கிறது. சென்னை இப்போது சுத்தமாக இருப்பதைப் பார்த்தால் தினந்தோறும் ஒரு உலகத் தலைவர் வந்து செல்ல வேண்டும் போல் இருக்கிறதே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளே சுட்டிக் காட்டியுள்ளனர்.
2 புராதான சின்னங்களை பார்வையிட்ட பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைநயத்தை ரசிக்கின்றனர். கடற்கரை கோவில் அருகே மாலை 6 மணி அளவில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு குண்டு துளைக்காத வகையில் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலாசேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் கண்டு களிப்பார்கள். தலைவர்களுடன் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாலை 6.45 மணிக்கு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். கடற்கரை கோவில் அருகே புல்தரையில் தனிமையில் இருவரம் பேசும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளதாக தெரிகிறது. இதன் பின்னர் ஜின்பிங் காரில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு திரும்புகிறார்.
தனிப்பட்ட ஆலோசனை
நாளை காலை மீண்டும் ஜின்பிங் கிராண்ட் சோழாவில் இருந்து தனது காரில் புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு 9.50 மணிக்கு செல்கிறார். அங்கு இரு தலைவர்களும் முதலில் தனியாக பேசிய பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினரும் கலந்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்பிறகு மோடியுடன் சேர்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு, ஜின்பிங் சென்னை விமானநிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.45 மணிக்கு நேபாளம் புறப்பட்டு செல்கிறார். ஜின்பிங்கைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் மதியம் 2 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு
சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை நகரமும், மாமல்லபுரமும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களின் வருகையால் சென்னை விமான நிலையத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுவதுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
35 இடங்களில் கலை நிகழ்ச்சி
சென்னை விமானநிலையத்தில் இருந்து கிண்டியில் ஜின்பிங் தங்க இருக்கும் நட்சத்திர ஓட்டல் வரையிலும், இதேபோல் அந்த ஓட்டலில் இருந்து அவர் மாமல்லபுரம் செல்லும் சாலைகள் முழுவதும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். சீனாவில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு படையினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
சாலை மார்க்கமாக செல்லும் சீன அதிபரை வரவேற்பதற்காக 35 இடங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஓட்டல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பள்ளி மாணவர்கள் நின்று சீன அதிபரை வரவேற்க உள்ளனர்.
தோரணங்கள், அலங்கார வளைவுகள்
சீன அதிபரை வரவேற்கும் விதமாக பழைய விமான நிலையத்தின் 5-வது நுழைவு வாயில் அருகே வாழை மரம் மற்றும் கரும்பால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் புதிதாக பசுமை புல்வெளியுடன் பூங்காவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களை வரவேற்கும் விதமாக பனை ஓலையால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
சீன அதிபர் சாலை மார்க்கமாக பயணிக்கும் போது சிறிது நேரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாமல்லபுரம் சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அந்த சாலையில் போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் என்பதால் பல ஐடி நிறுவனங்கள், வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு தங்கள் ஊழியர்களை கேட்டுக்கொண்டு உள்ளன. மேலும் அந்த சாலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
செந்தமிழ் பேசும் சீனப் பண்கள்
சீன அதிபரின் வருகைக்காக கொஞ்சும் மொழில் செந்தமிழ் பேசும் 3 சீனப்பெண்கள் சென்னை வந்துள்ளனர். அதிபரின் உரையை இவர்கள் மொழிபெயர்க்க உள்ளதாகத் தெரிகிறது. சீன ஊடக குழுவின் தமிழ் பிரிவு தலைவராக இருந்து வருகிறார் ஜாவோ ஜியாங். தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வத்தால் 2003ம் ஆண்டு முதல் முறையாக தமிழகம் வந்த ஜாவோ ஜியாங், தனது பெயரை கலைமகள் என மாற்றிக் கொண்டார்.
இவரைப் போன்றே தமிழ் மொழி மீது கொண்ட காதலால் இரண்டு பெண்கள் தங்களின் பூங்கோதை, நிலானி என மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி போல வேறு எந்த மொழிக்கும் இத்தகைய நீண்ட வரலாற்றை பெற்றிருக்கவில்லை. தமிழ் மொழி, சீன மொழியைப் போல பழமையானது, தமிழ் கற்றுக் கொண்ட பிறகு, இந்த மொழியுடன் பிணைப்பை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் இவர்கள்.