முந்திக்கொண்டு முன்னேற உதவும் முயல் வளர்ப்பு: ஆரம்ப முதலீடு ரூ.1 லட்சம், மாத லாபம் ரூ.1.50 லட்சம்!
பன்னாட்டு நிறுவன வேலைக்கு 'பை பை' சொல்லி, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து ‘பலே’ வருமானம் ஈட்டும் இளைஞர்.
படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவன வேலையோ, பாரீன் வேலையோ தேடிக்கொண்டு பல ஜீரோக்களில் சம்பளம் வாங்கும் இளைஞர் பட்டாளத்தில் பலரும் டெக் டைவர்ஷன் எடுத்து ஊரப்பக்கட்டு சென்று, ஆடு, கோழி என கால்நடை வளர்ப்பிலும், விவசாயத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஆயினும் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பில் கொடிக்கட்டி பறந்தாலும் முயல் வளர்ப்பு என்றாலே முந்திக் கொண்டு வேண்டாம் என்று மறுப்பவர்கள் அதிகம். அவர்களது மத்தியில் முயன்றால் முயல் வளர்ப்பிலும் முத்தான லாபம் ஈட்டி முன்னேறலாம் என்பதை நிரூபித்து முன்னுதாரணமாக விளங்குகிறார் சபரிநாதன், எக்ஸ் கார்ப்பரேட் ஊழியர்.
ஆரம்பித்தது என்னவோ ஆடு வளர்ப்பு தான், ஆனால் ஆடு கொடுத்த பெரும் அடியில் கிடைத்த வலிமையில், அதைவிட நஷ்டத்தை தரக்கூடியது என்று பரவலாக பேசப்பட்ட முயல் வளர்ப்பை முயற்சித்துள்ளார்.
முயற்சித்த முதல் ஆண்டில் சறுக்கலே. ஆனால், இன்று 1,400 முயல்களாக பெருக்கெடுத்து இருக்கும் அவருடைய பண்ணையில் இருந்து மாதத்துக்கு 1.5டன் கிலோ முயல்கள் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மதுரை மாவட்டம் அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள அரும்பனூர் கிராமத்தில் வயல்களுக்கு மத்தியில் செழிப்பாய் காட்சியளிக்கிறது சபரிநாதனின் ‘சாஸ்தா முயல் பண்ணை’.
பண்ணையில் ஒரு பக்கம் ஆடு, மறுபக்கம் நாட்டுக் கோழி, அதற்கடுத்து முயல், அதுக்கும் அந்தாண்ட வாத்து, வான்கோழி, காளான்வளர்ப்பு என பண்ணையே செம்மையாய் பராமரித்து வரும், சபரிநாதன் எம்பிஏ பட்டதாரி.
டிகிரி வாங்கிய கையோடு கேம்பேசில் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி வேலைக்கு தேர்வாகியுள்ளார். தொடர்ச்சியாய் எம்என்சி கம்பெனியில் சேல்ஸ் மேனேஜர் பணி. மாதம் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய்.
“சேல்ஸ் மேனேஜராக பணிப்புரிந்த இடத்தில், என்னிடம் ‘ஆடு வளர்ப்பு’ குறித்த புராஜெக்ட் செய்யக் கொடுத்தாங்க. ஐந்து மாதத்துக்கு மேல், விவசாயிகள், கால்நடை பல்கலைகழக பேராசிரியர்கள் என எல்லோரையும் நேரில் சந்தித்து தகவல் திரட்டி 480 பக்கத்துக்கு 7கோடி ரூபாய் பட்ஜெட்டில் பரண் மேல் ஆடு வளர்ப்பு புராஜெக்ட்டை தயாரித்தேன். ஆனால், அந்த கம்பெனி அம்முயற்சியை கைவிட்டுவிட்டது. ஆனால் என்னால் விடமுடியவில்லை. வேலையை ரிசைன் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி, ரூ 3 லட்ச முதலீட்டில் 40 கிடாக் குட்டிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன்,”
என்று கால்நடை வளர்ப்பில் கால் எடுத்து வைத்தது பற்றி பகிர்ந்தார் சபரிநாதன், பணியாள் கொண்டு ஆடுகளை பராமரித்துள்ளார். ஆனால், போதிய பராமரிப்பு இன்றி, ஆடுகள் இறக்க, பெரும் தோல்வியடைந்தது ஆடு வளர்ப்பு. 3 லட்ச ரூபாய் முதலீட்டில் மிச்சமாய் கையில் தங்கியது 50 ஆயிரமும் ஆட்டுக்கு போட்ட செட்டு மட்டுமே. அச்சமயத்தில், தோழி ஒருவர் முயல் வளர்ப்பில் ஈடுபட யோசனை வழங்கியுள்ளார். முயல் வளர்ப்பு என்றால் பலரும் பின்வாங்குவதை அறிந்த அவர், அதற்கான காரணத்தை தேடினார். முயல் பண்ணை தொடங்கியவர்கள் பலரும் விற்பனையிலே சறுக்கலை சந்தித்திருக்கின்றனர்.
எம்பிஏ படித்த தனக்கு மார்க்கெட்டிங்கில் சவால்கள் இருக்காது என்ற எண்ணத்தில், கையில் இருந்த 50,000 ரூபாயுடன், 50 ஆயிரம் கடன் பெற்று, 5 யூனிட் முயல்களை (1யூனிட் = 7 பெண் முயல் + 3 முயல்) கொண்டு பண்ணை அமைத்தார். முதல் ஈற்றிலே 170 குட்டிகள் கிடைத்தது. ஆனால், மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தி முயலை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தாதில் 150 குட்டிகள் இறந்துள்ளன. ஆனால், கடும் பிடிவாதத்துடன் வெறித்தனமாய் செயல்பட தொடங்கி, முன்னேற்றத்துக்கான பாதையை கண்டறிந்துள்ளார்.
இன்று, மாதத்துக்கு ரூ1,50,000 வருமானம் ஈட்டுவதுடன் தமிழ்நாட்டில் 200 பேர் முயல் பண்ணையாளராக ஆகியதற்கான காரணகர்த்தவாக விளங்கும் அவர் முயல் வளர்ப்பு குறித்து சகலத்தையும் விவரிக்கத் தொடங்கினார்.
கொட்டகையில் சுத்தம் முக்கியம் அமைச்சரே!
வீட்டு மொட்டை மாடித் தொடங்கி கிடைத்த குறைவான இடங்களிலும் முயல் வளர்ப்புக்கான கூண்டை அமைக்க முடியும். தரைப்பரப்பில் இருந்து 2 அடி உயரத்தில் கூண்டை அமைக்க வேண்டும். 10 அடி நீளம், 4 அகலம் கொண்ட பெரியக்கூண்டை, 2 அடி நீளம், 2 அடி அகலம், 1.5 அடி உயரம் என்ற கணக்கில் ஒரு முயலுக்கு தேவையான சிறு சிறு கூண்டுகளாக பிரித்து கொள்ளவேண்டும். தரைத்தளத்தில் இருந்து 2 அடி உயரத்தில் கூண்டுகள் இருப்பதால், கழிவுகளை சுத்தம் செய்வது எளிமையாக இருக்கும். கொட்டகையில் காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை உங்களால் உள்ளிருந்து வெட்கையை தாங்கிக் கொள்ள முடியும் என்றால், அதே வெட்கையை முயலும் தாங்கிக் கொள்ளும்.
காலையில் அடர்தீவனம், மாலையில் பசுந்தீவனம்...
முயலுக்கு தீவனம் காலையிலும், மாலையிலும் வைக்க வேண்டும். காலையில் வயிறு நிரம்ப முயல் முழுகட்டு கட்டிவிட்டது என்றால், அதற்கு பிறகு முழுக்க முயலுக்கு ரெஸ்ட்டு. தண்ணீர் மட்டும் பாத்திரத்தில் சுத்தமாக வைத்துவிட வேண்டும். மாலையில் பசுந்தீவனமாக முட்டைகோஸ் இலைகள், காலிப்ளவர் இலைகள், பசும்புற்கள் கொடுக்கலாம். அடர்தீவனம் கடைகளிலும் கிடைக்கிறது. வீட்டிலும் செய்து வைத்து கொள்ளலாம். ஒரு முயலுக்கு தினமும் 100கிராம் அடர்தீவனம் அளிக்கவேண்டும். அடர்தீவனத்தை நன்கு பிசைந்து, நல்லா தயிர்சாதம் பதத்தில் வைக்கவேண்டும்.
அமாவாசைக்கு அமாவாசை குட்டிப் போடும்!
பெண் முயல் பிறந்து 6வது மாதத்தில் பருவம் அடையும். ஆண் முயல் 9 மாதத்தில் பருவத்துக்கு வரும். நல்ல பெட்டை முயலானது நாலரை வருடங்கள் வரை நல்ல இனவிருத்தித் திறன் பெற்றிருக்கும். பெண் முயல் பருவத்துக்கு வந்தவுடன், அதிகாலை அல்லது அந்திமாலை நேரங்களில் ஆண் முயலுடைய கூண்டில் இனப்பெருக்கத்துக்கு விடலாம்.
முயல்களின் சினைக்காலம் 30 நாட்கள் ஆகும். ஒரு ஈற்றுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகிவிடும். ஆனால், பெண் முயலுக்கு ஒரு 5நாட்கள் ஓய்வு கொடுத்துவிட்ட, அடுத்த இனப்பெருக்கத்துக்கு விட வேண்டும். அப்படியானால், 35 நாட்களுக்கு ஒரு முறை குட்டி ஈனும். அதனால் தான், ஊரப்பக்கட்டு முயல் ‘அமாவாசைக்கு அமாவாசை குட்டிப் போடும்’னு சொல்லுவாங்க.
பிறந்த குட்டி 7 முதல் 10 நாள்கள் கழித்து கண் திறக்கும். குட்டிகள் பிறந்த சில நாட்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே முக்கிய உணவு. குட்டிகள் சரியாக பால் குடித்ததா என்பதை அது கண் திறக்கும் வரை அடிக்கடி கவனித்து கொள்ளவேண்டும். குட்டி பிறந்த 22ம் நாள் தாய் முயலிடமிருந்து குட்டியை பிரித்துவிடலாம்.
அதன் பிறகு 5 குட்டிகளை ஒரு கூண்டில் விட்டு, ஐந்து குட்டிக்கு சேர்த்து 100கிராம் அடர்தீவனம் வைத்துவிட்டால், பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளும். முயல் வளர்ப்பில் குட்டிகள் பராமரிப்பு மிகமுக்கியமான ஒன்று. முயல்களுக்கு நோய் என்று அடிக்கடி வருவது செமிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
10 முயல் வளர்ப்பில்... மாதம் ரூ10,000 வருமானம்...
பண்ணையாளர்ளுக்காக, செல்லப்பிராணிகளுக்காக, கறிக்காக... என்று முயல் விற்பனை செய்யலாம். கறிக்காக மொத்த விற்பனையில் ஒரு கிலோ உயிர் முயல் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்கின்றோம். நாங்களே சென்று இறக்குமதி செய்தால், ஒரு கிலோ 200ரூபாய். சில்லரை வர்த்தகத்தில் உள்ளூர் ஆட்கள் மற்றும் நாடி வருவோருக்கு ஒரு கிலோ உயிர் முயல் ரூ200 முதல் ரூ250 வரை விற்பனை செய்கிறோம். செல்லப்பிராணியாக ஒரு முயல் ரூ 800 முதல் 1000வரை விற்கப்படுகிறது.
இதெல்லாம், ஒரு புறம் இருந்தாலும், முயல் பண்ணைகளை பெருக்கும் எண்ணத்தில் பண்ணையாளர்களுக்கு இனப்பெருக்கத்துக்கு உகுந்த முயல்கள் ஒன்று ரூ1,600க்கு விற்பனை செய்கிறோம். கூண்டுடன் சேர்த்து ஒரு யூனிட், ஐந்து யூனிட் என்று தேவைகேற்றாற் போலும் விற்கிறோம். 3 யூனிட்டுக்குள் பண்ணை அமைப்பவர்கள் நுகர்வோருக்கு நேரடி விற்பனையே செய்ய முடியும்.
எப்போதும், வளர்ப்புக்கு முயல் வாங்கும் போது, முதல் ஈற்று நம்ம பண்ணையில் தான் ஈனவேண்டும். ஏனெனில், புதிய சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டு இனப்பெருக்கம் செய்ய நாட்கள் எடுத்துக் கொள்ளும். சில முயல்கள் இக்காரணத்தால் குட்டி ஈனாது.
முயல் பண்ணையை அமைப்பவர்கள் முதல் 6 மாதங்களுக்கு ஒரு ரூபாய்கூட வருமானமாக எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில், பண்ணையில் முயல் செட் ஆக 15 நாட்கள் ஆகும். முயலின் சினைக்காலம் 30 நாட்கள். ஈன்ற குட்டி 2கிலோ எடை பெற 4 நான்கு மாதங்கள் ஆகும். சோ, 6 மாதங்களுக்கு நோ வருமானம்.
ஒரு ஈற்றில் முயல் ஒன்று 3 குட்டிகள் ஈனுகிறது என்று கணக்கிட்டாலும் முதல் ஈற்றில் 7 முயல்களுக்கு 21 முயல்குட்டிகள் கிடைக்கும். 4 மாதங்களுக்கு பிறகு ஒரு முயல் 2கிலோ என்றால், சராசரியாய் 40 கிலோ முயல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 250ரூபாய் வீதம், 10 ஆயிரம் கிடைக்கும். முயல் பெருக பெருக, வருமானமும் பெருகும்.