ஐடி பணியாளர்களின் வாழ்க்கை– உங்கள் எதிர்பார்ப்புகளும் நீங்கள் எதிர்கொள்வதும்!
ஐ டி - ஓர் எச்சரிக்கை! ஆம் உங்களின் உச்சரிக்கை சரியே!
இந்தக் கட்டுரையின் நோக்கம் ஐ டி உலகிற்கு வருவதற்கு எண்ணிக்கொண்டிருப்பவர்களின் எண்ணங்களை மாற்றுவதல்ல, ஐ டி உலகின் மீதான அவர்களுடைய எதிர்பார்ப்புகளை மாற்றுவதுதான்.
திரைப்படங்களில் பார்த்ததிலிருந்து ஐடி உலகை பற்றிய அபிப்ராயம் வைத்திருந்தால் அவ்வனைத்தும் பொய் என்று புரிவதற்கு உங்களுக்கு வெகு காலம் ஆகாது. இன்னும் தமிழ் சினிமாவில் உண்மையான ஐடி வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் திரைப்படம் வெளியாகவில்லை என்பதே உண்மை.
ஐ டி நிறுவனங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) மற்றும் தொடக்க நிலை (Start-Up) நிறுவனங்கள்
முதலில் பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி பார்ப்போம்:
நாம் பெரும்பாலும் சினிமாவில் பார்க்கும் ஐடி வாழ்க்கை, பன்னாட்டு நிறுவனங்களின் பணியாளர்களுடையதே .
பன்னாட்டு நிறுவனத்தில் நீங்கள் புதியவராக நுழையும் ஆரம்ப காலத்தை தேன் நிலவு காலம் என்பார்கள். இந்தக்காலங்களில் நீங்கள் திரையில் பார்த்த வளமான ஐடி வாழ்க்கையை திரை இல்லாமல் நேரடியாக பார்க்க முடியும், சில சமயங்களில் அப்படி இருக்கக்கூட முடியும். இந்த ஆரம்ப நேரத்தில் நீங்கள் உங்கள் பாதையை தீர்மானிக்கும் முன்பு நிறுவனம் உங்கள் பாதையை தீர்மானித்திருக்கும்.
ஆடம்பரம் ஆடும் ஆட்டம்:
ஆடம்பரத்திற்கும் ஐ டி வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இங்கு பலரின் ஆடம்பரம் அவர்களுக்காக இல்லாமல் அடுதவர்களுக்காவும் இருக்கலாம். ஆடம்பரமான பலரால் ஆடம்பரம் அற்ற சிலருக்கு ஆடம்பரம் அவசியமாகிறது.
வேலை நேரம்:
எந்த நாட்டு கடிகார நேரத்தையோ நம் நாட்டில் பின்பற்றி அதற்கேற்ப வேலை செய்ய வேண்டிய நிலை வரலாம், பெரும்பாலும் அலுவலக நேரம் அமெரிக்காவின் நேரமாகக் கூட இருக்கலாம். அறிவியலும் ஆராய்ச்சிகளும் உருவாக்க முடியாத இரவு பகல் பாராத இயந்திர மனிதனை, இந்த ஐடி நிறுவனங்கள் என்றோ உருவாக்கி விட்டன.
அலுவலக அரசியல்:
18 வயதில் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது உலக அரசியலுக்கு மட்டும் அல்ல அலுவலக அரசியலுக்கும் சேர்த்துத் தான்.
கற்றதும் பெற்றதும்:
இன்றைய நான் நேற்றைய என்னை விட ஒரு படியாவது முன்னேறியிருக்க வேண்டும் என இங்கு எண்ணிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை போல அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருக்கும்.
குறிப்பு: இங்கு முன்னேற்றம் என்று நான் குறிப்பிட்டது பொருளாதார முன்னேற்றம் அல்ல .
தகவல் அறியும் உரிமைச் சட்டம்:
நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தும் நாம் அதிகம் பயன்படுத்தப்படாமல் போய்க்கொண்டிருக்கும் தகவல் உரிமைச் சட்டம் ஒருவேளை அலுவலகத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக பயன்படுத்தி இருப்போம் என எனது நண்பன் நகைச்சுவையாக சொல்வதுண்டு.
19 ஆம் நூற்றாண்டில் கேள்விகள் கேட்டவர்கள் எவ்வாறு அந்நியமாக பார்க்கப்பட்டார்களோ அதுபோலத்தான் அலுவலகத்தில் இன்றும் கேள்வி கேட்பவர்கள் அந்நியமாக பார்க்கப்படுகிறார்கள்.
இதுவரை பன்னாட்டு நிறுவனங்களின் சில பகுதிகளை பார்த்துவிட்டோம், இனி தொடக்க நிலை (Start-Up) நிறுவனங்களைப் பற்றியும் பார்க்கலாம் .
தொடக்க நிலை நிறுவனங்கள்:
ஒரு சிலரின் வெற்றி, பலரின் முயற்சிகளுக்கு காரணமாகிறது.கடந்த சில ஆண்டுகளில் புது நிறுவனங்கள் தொடங்கியவர்களின் எண்ணிக்கை எதிர் பார்க்காத அளவிற்கு அதிகரித்துள்ளது .
இதில் பெரும்பாலான நிறுவனங்கள் அதன் முதல் மூன்று ஆண்டுகளை கடந்து வருவதற்குள் காலாவதி ஆகிவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு .
ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தல்:
நாம் வேலை செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் படைப்புகளையும், அதன் நிறுவனர்கள் மற்றும் இயக்குனர்களின் செயல்பாடுகளையும் பெரிதும் சார்ந்ததே.
முதல் வேலை காலங்களில், நாம் சந்திக்கும் உடன் பணியாளர்களின் பாதிப்பு நம்முடைய எதிர் வரும் காலங்களில் பிரதிபலிக்கும் எனவே சிறந்த நிறுவனர்களிடம் பணியாற்றுவது நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் .
திருப்தி மற்றும் அதிருப்தி:
தொடக்க நிறுவனத்தில் செய்யும் வேலைகளுக்கு குறைவு இருக்காது, ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதன் சம்பளத்தில் குறைவாக இருக்கும். சில சமயம் இதற்கு எதிர்மாறாகக்கூட பன்னாட்டு நிறுவனத்தில் இருக்கும்.
வாய்ப்புகளும் வாழ்த்துகளும்:
ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் நாம் வேலை செய்வதற்கு வாய்ப்புகளும், அதை சிறப்பாக செய்யப்படும் போது வாழ்த்துக்களும் தாராளமாக கிடைக்கும், ஒருவேளை இதுமட்டும் தான் இலவசம் என்பதால் கூட இருக்கலாம்.
இத்துடன் இந்த இரண்டு வகையான நிறுவனங்களை பற்றி தனித்தனியாக பார்த்தது போக , சில பொதுவான பண்புகளை பார்ப்போம்.
உலக ம(மா)யமாக்கல்:
உலகமயமாக்கலினால் இலவச இணைப்பாக நம்முடன் இணைந்து கொண்டது மேலை நாட்டு கலாச்சாரமும் அதன் விழாக்களும். நமக்கு கொண்டாடத் தெரியாத விழாக்களுக்கு விடுமுறையும், நமது பகுதி விழாக்களின் போது பணியும் இருக்கும் போது தோன்றும் நமது ஊரின் பொங்கலையும் புத்தாண்டையும் உலகமயமாக்கியிருக்க வேண்டும் என்று.
இப்படி இருந்தும் ஐயமில்லாமல் ஏன் ஐடி யை தேர்ந்தெடுக்க வேண்டும்?
திறமையானவர்களுக்கு ஐடி என்பது பாம்பில்லாத பரமபதம் விளையாட்டைப் போன்றது, வளர்ச்சிக்கு எப்பொழுதும் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் உங்களை புதுமைப்படுத்திக் கொள்ளும் வரை ஐடி நிறுவனங்கள் உங்களை வரவேற்றுக்கொண்டே இருக்கும்.
இந்திய ஐடி உலகின் அடையாளம் இன்ஃபோசிஸ் நாராயணன் அவர்களின் கூற்றுப்படி "உங்கள் பணியை விரும்புங்கள், உங்கள் நிறுவனத்தை அல்ல."
இறுதியாக,மேற்சொன்ன நிகழ்வுகளில் பெரும்பாலானவை ஐடி தவிர எந்த துறைக்கு சென்றாலும் நிகழ வாய்ப்பிருக்கும் போது இங்கு ஐடி துறையைப் பற்றி மட்டும் நான் குறிப்பிட்டதற்கான காரணம், ஐடி துறை மீது மக்களும் மாணவர்களும் கொண்டுள்ள தவறான கண்ணோட்டம் தான். உங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கட்டுரையை பல குட்டுகளை வெளிப்படுத்தும் குட்டுரையாக எழுதிவிட்டேன்.
அன்றும் இன்றும் என்றும் ஐடி துறையில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது அதற்கு தகுதியானவர்களுக்கு.
(இக்கட்டுரையை எழுதியவர் எஸ்.ரகுபதி. இவர் ஒரு டெவலப்பர் மற்றும் தொழில்நுட்ப ப்ளாகர். இக்கட்டுரையில் உள்ள கருத்துக்களுக்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது)
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
மொபைல் போன் பயன்பாட்டிற்கு அடிமை ஆகிவிட்டீர்களா? அதிலிருந்து விடுபட சில டிப்ஸ்!