Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆரோகியமான காய்கறிகளை மக்களுக்கு அளிக்கும் ’நல்லகீரை’

ஆரோகியமான காய்கறிகளை மக்களுக்கு அளிக்கும் ’நல்லகீரை’

Thursday July 13, 2017 , 3 min Read

இந்த நவீன உலகத்தில் வாழும் மக்கள் உண்பது சத்தான உணவு என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். அனைத்து வகையான உணவு பொருட்களிலும் கலப்படம். அதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மரபணு மாற்றப்படும் விதைகள் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு விவசாயிகளே பயன்படுத்துவதாகும்.

இப்படி இருக்கும் நிலையில் நம்மால் ஆரோக்கியமான உணவை நினைத்துக் கூட பார்க்க முடியாது, என்று தனது ஆதங்கத்தையும், இயற்கை விவசாயத்தில் இளைஞர்களின் பங்கின் முக்கியத்துவம் பற்றியும் நம்மோடு பகிர்ந்தார் ’நல்லகீரை’ நிறுவனத்தின் நிறுவனர் ஜெகன்.

நல்லகீரை நிறுவனர்  ஜெகன்

நல்லகீரை நிறுவனர்  ஜெகன்


ஜெகன், சென்னைக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தார், சிறுவயதில் இருந்தே சமூக சிந்தனையோடு வாழ்ந்து வந்தார். தன் ஊர் மக்களுக்கு எதாவது ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று தினம் தினம் நினைத்துக் கொண்டிருந்தார். பள்ளி காலத்தில் வகுப்பில் சிறந்த மாணவனாக இருந்த ஜெகன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில், பொருளதாரம் மற்றும் வணிக பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கத்தொடங்கியுள்ளார். ஆனால் கல்வி அமைப்பில் ஆர்வமல்லாததால் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் ஜெகன்.

சாதியின் அடிப்படையால் இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை கேட்டு, தனது குரலை உயிர்த்தினார். பின்னர் தனது தோழமைகளுடன் இணைந்து சிறகுகள் எனும் குழந்தைகளுக்காக இயங்கும் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த கல்வி நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. ஒரு நாள் சிறகுகள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்காலர்சிப் அளிப்பதற்காக மாணவர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளார் ஜெகன். 

”ஒரு மாணவனின் வீட்டிற்கு சென்ற பொழுது, ஒரு விவசாயியான அவனின் தந்தை உண்ண உணவு இல்லாமல் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு இருந்ததை பார்த்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன்,” என்றார்.

விவசாய பூமியில் வாழும் விவசாயிகள் உண்ண உணவின்றி வாழும் அவலத்தை மாற்ற எண்ணினார். அதற்கு விவசாயிகளின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை கண்டு பிடித்து, பிறகு அதற்கான தீர்வாக தான் ’நல்லகீரை’யை உருவாக்கினார் ஜெகன்.

ஜே.சி.குமாரப்பா எழுதிய இந்திய பொருளதாரம் மற்றும் வணிக புத்தகங்களை படித்தும், காந்தியின் கிராம பொருளாதார கருத்துக்களை படித்தும் விவசாயத்துறையில் வர்த்தக ரீதியில் தன்னை மேம்படுத்திக் கொண்டார் ஜெகன். சந்தையில் நாம் பொருளை எப்படி விற்பது போன்ற யுத்திகளை புரிந்து கொண்டு களத்தில் இறங்கினார்.

நல்லகீரை 

நல்லகீரை என்பது விவசாயிகள் இயற்கை முறையில் தயாரிக்கும், மருந்துகள் எதுவுமின்றி வளர்க்கப்பட்ட காய்கறிகள், கீரைகள் ஆகும். இவை அனைத்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்று மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. அத்துடன் ஜெகன் முழுநேரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

”ஒரு நிலத்தை லீஸ்க்கு எடுத்து ஒரு குழுவுடன் இணைந்து அந்த நிலத்தை இயற்கை விவசாயம் செய்வதற்கு பதப்படுத்தி அதில் எல்லா வகையான காய்கறிகளையும் விவசாயம் செய்து வருகிறோம்,” என்றார். 
image


உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை லீசுக்கு வாங்கி அதனை இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு, அதை நான்கு பாகமாக பிரித்து ஒரு பாகத்திற்கு 25 சென்ட் என்ற விதத்தில் ஒவ்வொரு பாகத்திலும் காய்கறிகள், கீரைகள், நெல், பருப்பு வகைகள் என பயிர் இடுவார்கள். இவ்வாறு செய்வதால் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் உணவு பொருட்களை குறைக்க முடியும், இதனால் பொருள் வீணாவதையும் தடுக்கலாம். மேலும் வேறு உணவுப் பொருட்கள், தனியங்கள், போன்றவற்றை கூடுதலாக விளையவைக்க இயலும்.

ஜெகன் நல்லகீரையை துவங்குவதற்கு முன் விவசாயம் பற்றிய புரிதலுக்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்தித்தார். அப்போது நம்மாழ்வாரை சந்திக்கும் வாய்ப்பு எற்பட்டது, அவரின் அறிவுரைகளைக் கேட்டு விவசாயம் செய்ய, உதவாத நிலம் என மக்களால் ஒதுக்கபட்ட நிலங்களில் விவசாயம் செய்து, மக்களுக்கு தமிழ்நாட்டில் விளைநிலம் மட்டும் தான் இருக்கிறது என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜெகன்.

”தமிழ்நாட்டில் விவசாயத்தை தாராளமாகச் செய்யலாம், இயற்கை முறையில் விவசாயம் செய்ய முதலில் அந்த நிலத்தை பக்குவப்படுத்த வேண்டுமே தவிர விவசாயம் செய்ய உதவாதது என்று எந்த நிலமுமே இல்லை,” என்றார். 

நல்லகீரை சந்தைப்படுத்தல்

நல்லசந்தை எனும் நிறுவனத்தில் மூலம் விவசாயிகளிடமிருந்து காய்கறி வகை, கீரை வகை உணவுப் பொருட்களை வாங்கி ’ஃபார்ம் டூ கஸ்டமர்’ எனும் இணை நிறுவனத்தால் சந்தைபடுத்தி, நல்லகீரை மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. 

நல்லகீரை-க்கு தனி இணையதளம் இருக்கிறது, வாடிக்கையாளர்கள் தங்களை நல்லகீரை நிறுவனத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டு தங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவைப்படும் காய்கறிகள் என்னவென்று பதிவு செய்தால் போதும் அந்த வாரத்திற்கான உணவுப் பொருட்கள் அவர்கள் வீட்டிற்கே வந்து சேரும். இதற்கு 3 மாதம், 6 மாதம், 1வருடம் எனும் முறையில் சந்தா அடிப்படையில் பணம் செலுத்தமுடியும். 

நல்லகீரையில் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லலாம். இது வரை 3000-க்கும் மேற்பட்ட இணையதளம் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

image


வார இறுதி நாட்களில் விவசாயம் மீது ஆர்வம் உடையவர்கள் இயற்கை முறை விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜெகனின் இரண்டு, மூன்று நாள் வகுப்பில் கலந்து கொள்வார்கள். மேலும் இவரிடம் விவசாயிகள் சிலர் விவசாயத்தை திட்டமிட்ட அணுகுமுறையோடு எப்படி கையால்வது என்பதை வார இறுதி வகுப்பில் கலந்து கொண்டு தெரிந்து கொள்கிறார்கள். 

ஒரு திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வர்த்தக ரீதியில் விவசாயிகள் வெற்றி அடைய முடியும் என்கிறார் ஜெகன்.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் 40-திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு கெஸ்ட் லெக்சரராக சென்று மாணவர்களுக்கு வணிகம், பொருளதாரம், இயற்கை விவசாயம் போன்றவற்றை கற்றுகொடுத்து வருகிறார்.

முயற்சி என்பது விதை போல், அதை விதைத்துக் கொண்டே இரு 

முளைத்தால் மரம், இல்லையென்றால் மண்ணுக்கு உரம்...

- நம்மாழ்வார்

இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுத்தால் மட்டுமே, தமிழ்நாடு அழிவதிலிருந்து காப்பாற்ற முடியும். மென்பொருள் துறையை மேம்படுத்தியது போல, விவசாயத் துறையையும் மேம்படுத்த கைக்கோர்க்கவேண்டும்.