Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'லெட்ஸ்சர்வீஸ்'- இனி பைக் சர்வீஸ் நோ டென்ஷன்!

'லெட்ஸ்சர்வீஸ்'- இனி பைக் சர்வீஸ் நோ டென்ஷன்!

Saturday October 24, 2015 , 3 min Read

சொந்தமாய் பைக் வைத்திருப்பவர்களுக்கே தெரியும் அதை சர்வீஸ் விட்டு மீட்பது எவ்வளவு சிரமம் என்று. நம் ஏரியாவுக்கு அருகிலேயே அந்த சர்வீஸ் சென்டர் இருக்க வேண்டும். அதுவும் நம்பிக்கையான மையமாய் இருக்க வேண்டும். பின்னர் அங்கே சென்று விட்டுவிட்டு மணிக்கணக்கில் காத்திருந்து பிரச்சனைகளை தெரிந்துகொள்ள வேண்டும். சர்வீஸ் முடிந்தவுடன் மறக்காமல் போய் எடுக்க வேண்டும். இதற்கு நடுவில் நம் அன்றாட வேலைகள் வேறு. செல்போனும், பைக்கும் பழுதாகிவிட்டால் அன்று வேலையே ஓடாது என்ற நிலைமைதான் இங்கே பலருக்கும்.

image


"லெட்ஸ்சர்வீஸ்" நிறுவனத்தைத் தொடங்க சச்சின் ஷெனாய்க்கு அவரது சொந்த அனுபவமே கை கொடுத்தது. சொந்தமாய் தொழில் தொடங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சச்சின் அது தொடர்பாக தன் பைக்கில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அப்படி சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாளில் திடீரென அவர் வண்டி பழுதாக, சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றார். அடிக்கடி சர்வீஸ் விடாததால் சேதமடைந்திருந்த வண்டியின் பாகங்கள் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு வைத்தன. நாம் ஏன் வண்டியை அடிக்கடி சர்வீஸ் விடவில்லை? எது நம்மை தடுத்தது? என அவர் யோசிக்கத் தொடங்கியபோது பிறந்த ஐடியாதான் இந்த "லெட்ஸ்சர்வீஸ்" (LetsService).

தன் நண்பர்கள் சச்சின் ஸ்ரீகாந்த், கிரிஷ் கங்காதர், மனோஜ் பேராகம் ஆகியோரோடு இணைந்து இருசக்கர வாகனங்களுக்கென பிரத்யேகமாய் செயல்படும் இந்த சர்வீஸ் நிறுவனத்தை கடந்த செப்டம்பரில் பெங்களூருவில் தொடங்கினார் சச்சின். “உங்கள் பைக்குகளை எளிமையான முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம்” என உத்திரவாதம் தருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் சொல்லும் வழிமுறை மிக எளிமையானது. நீங்கள் லெட்ஸ்சர்வீஸ் இணையதளத்திற்கு சென்று பைக்கை சர்வீஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தை பதிவு செய்தால் போதும். லெட்ஸ்சர்வீஸிலிருந்து ஒருவர் உங்கள் வீட்டுக்கே வந்து பைக்கை ஆராய்வார். அதில் என்ன பிரச்னை, எவ்வளவு செலவாகும் போன்றவற்றை சொல்வார். பின் அவரே வண்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சர்வீஸ் சென்டருக்கு செல்வார். சர்வீஸ் முடிந்ததும் அங்கிருந்து வீட்டில் கொண்டுவந்து விட்டுவிடுவார். இதற்காகவே நிறைய சர்வீஸ் சென்டர்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளது லெட்ஸ்சர்வீஸ். உங்கள் பைக் வீட்டிலிருந்து சர்வீஸ் சென்று திரும்பும்வரை, அது எங்கெல்லாம் போகிறது என்ற விவரத்தை அவ்வப்போது உங்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

“லெட்ஸ்சர்வீஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வேலையை எளிமைப்படுத்துவதையே குறிக்கோளாய் கொண்டுள்ளது. பைக்கை சர்வீஸ் விடுவதற்கு நேரமில்லாமல் வேலையில் பிஸியாய் மூழ்கியிருப்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். மேலும் வாடிக்கையாளர்களின் வண்டிகளில் இருக்கும் பிரச்சனைகளை எளிமையாய் எடுத்துரைத்து புரிய வைக்கிறோம். மேலும், அந்த வண்டிகளின் காப்பீட்டை புதுப்பிப்பது உள்ளிட்ட சேவைகளையும் அளித்து இன்னும் இணக்கமான உறவை எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொள்கிறோம்” என்கிறார் சச்சின்.

லெட்ஸ்சர்வீஸ், சேவைக்கு வந்த இந்த ஒன்றரை மாதத்தில் அபார வளர்ச்சியை கண்டுள்ளது. 60 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் லெட்ஸ்சர்வீஸோடு கைகோர்த்திருக்கின்றன. இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாளைக்கு 20 வண்டிகளை பராமரிக்கிறார்கள். சீக்கிரமே இந்த எண்ணிக்கை எண்பதைத் தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் சச்சின்.

“இப்போது ஒரு வண்டிக்கு அடிப்படை கட்டணமாக 300 ரூபாய் வசூலிக்கிறோம். வண்டியை சர்வீஸுக்கு விடுவது மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் இதில் அடங்கும். வரும் நாட்களில் வருவாயை பெருக்க இன்னும் நிறைய யோசனைகள் வைத்திருக்கிறோம்” என்கிறார் சச்சின்.

20,000 அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை கட்டமைப்பது, தகுதியான ஆட்களை தேர்ந்தெடுப்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது என பல விதங்களில் இந்தத் தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது அடுத்தகட்டமாக சில பெரிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சக போட்டியாளர்கள்

பெங்களூருவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 60,000 பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது என்றும், ஒரு மாதத்திற்கு சராசரியாக 150,000 பைக்குகள் சர்வீஸ் சென்டர்களுக்கு வருகின்றன என்றும் தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

இதனால் இந்த ஒரு ஆண்டில், ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர்களுக்கான தேவை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, மோட்டார்எக்ஸ்பெர்ட்(MotorExpert ), மேரிகார்(MeriCAR), கார்டீஸன்(Cartisan) போன்ற நிறுவனங்கள் தோன்றியிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கென முதலீடுகளும் அதிகளவில் வருகின்றன.

மேரிகார் இணையதளத்தில் ராஜன் ஆனந்தன் என்பவரும், மை பர்ஸ்ட் செக்(My First Cheque) என்ற நிறுவனமும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

கடந்த ஜுலையில் மற்றொரு நிறுவனமான கார்டீஸனில் யூவீகேன்( YouWeCan), குலோபல் பவுண்டர்ஸ் கேப்பிட்டல்(Global Founders Capital), டாக்ஸிபார்ஸ்யூர்(TaxiForSure) ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

இப்படி கடுமையாக இருக்கும் போட்டி குறித்து கூறுகையில், “இந்த சந்தையைப் பொருத்தவரை தேவை அதிகமாக இருக்கிறது. சிறப்பான சேவையை அளிக்கும் நிறுவனம் சந்தையை கைப்பற்றும். அப்படியான ஒரு சிறப்பான சேவையை அளிக்க எங்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால் சீக்கிரமே இந்த ஆட்டோமொபைல் சர்வீஸ் சந்தை எங்கள் வசமாகும்” என்கிறார் சச்சின்.

இணையதள முகவரி: Lets Service