கடல் கழிவுகளை அகற்றும் கப்பலை வடிவமைத்துள்ள பள்ளி மாணவர்!
பள்ளி ப்ராஜெக்டின் ஒரு பகுதியாக அவர் இதை வடிவமைத்தார்.
ஹாசிக் காஜி ஒரு குழந்தை மேதை. இவர் கடலின் மேற்பரப்பில் இருக்கும் கழிவுகளை உறிஞ்சக்கூடிய ஒரு கப்பலை வடிவமைத்துள்ளார். இவர் தனது பள்ளியில் மேற்கொண்ட ப்ராஜக்டின் ஒரு பகுதியாக இதை வடிவமைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற #TEDxGateway நிகழ்வில் இவரது வடிவமைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
காஜி பள்ளியில் படிக்கும்போது ERVIS வடிவமைக்கவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. இண்டஸ் சர்வதேச பள்ளி ஒரு ப்ராஜெக்ட் உருவாக்கி அது குறித்து டெட் டாக் வழங்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து நேஷனல் ஜியோகிராஃபிக் சானலில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படங்களைக் கண்டு காஜிக்கு உந்துதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் கடலில் காணப்படும் ப்ளாஸ்டிக்கினால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து டச்சு கண்டுபிடிப்பாளர் போயன் ஸ்லாட் அவர்களின் டெட் டாக் கேட்டார் என ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.
”மனிதர்களாகிய நாம் உண்டாக்கிய சேதங்களை சீரமைக்கக்கூடிய ஒரு கப்பலை என்னால் உருவாக்கமுடியும் என நினைத்தேன். அப்போது உருவான திட்டம்தான் ERVIS,” என்றார் காஜி.
குழந்தை மேதை என அழைக்கப்படும்போது ஏற்படும் உணர்வு குறித்து காஜியிடம் கேட்டதற்கு,
“நான் இது குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. என் வாழ்க்கை வழக்கமாகவே கடந்து செல்கிறது. பள்ளி, பணிகள், வீடு, நண்பர்கள் என எதுவும் மாறவில்லை. சில சமயம் இந்த வடிவமைப்பு குறித்து மக்கள் பேசும்போது சிறப்பான உணர்வு ஏற்படும். ஆனால் மற்றவர்களிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளும் சுபாவம் இல்லாதவன் என்பதால் இது குறித்து பேச விரும்பமாட்டேன். சில நேரங்களில் நான் தீர்வு காண முயற்சிக்கும் பிரச்சனையை கற்பனை செய்து பார்க்கும்போது சற்று மகிழ்ச்சியாக உணர்வேன்,” என்றார்.
2016-ம் ஆண்டு முதல் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். 3டி ஆர்டிஸ்ட் ஒருவரின் உதவியுடன் ஒரு முன்வடிவத்தை உருவாக்குவதற்காக சில விஞ்ஞானிகளுடனும் வடிவமைப்பாளர்களுடனும் இணைந்துள்ளதாக Rediff தெரிவிக்கிறது. தனக்கு ஆதரவளித்த பெற்றோருக்கும் பள்ளிக்கும் நன்றி தெரிவித்த இவர்,
“ERVIS எனது கனவு. இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது,” என்றார்.
”ERVIS நான் தீர்வுகாண விரும்பும் பிரச்சனையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். கடலில் காணப்படும் கழிவுகள் பிரச்சனைக்கு கப்பல்கள் முக்கிய பங்களிக்கிறது என்பதை அறிவீர்களா?
கப்பல்களில் அதிக சல்ஃபர் கொண்ட எரிபொருள் பயன்படுத்தப்படும். இதனால் கடலில் கழிவுகள் கலக்கிறது. ERVIS கடலில் இருந்து கழிவுகளைச் சேகரிக்கச் செல்லும்போது ஹைட்ரஜன் அல்லது RNG போன்ற க்ளீனர் எரிபொருளைப் பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் என விரும்பினேன்,” என்றார்.
ERVIS சூரிய சக்தி, காற்று, RNG, ஹைட்ரஜன் போன்ற ஆற்றல்களைக் கொண்டு இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த கப்பல் பள்ளி ப்ராஜெக்டிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிடும் காஜி,
”உண்மையில் தற்சமயம் ERVIS வடிவமைப்பிற்கு எதிர்காலம் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. என் அம்மா எனக்கு உறுதுணையாக இருந்தார். எனக்கு ஆர்வம் இருந்த பகுதியில் காணப்படும் பிரச்சனைக்கு என்னுடைய சிந்தனையை செலுத்தியது குறித்து பெருமைப்படுகிறார்,” என்றார்.
காஜி மேலும் கூறுகையில், “இந்த பிரச்சனையின் தீவிரத்தன்மை இதில் மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ERVIS வாயிலாக நாம் உருவாக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்,” என்றார்.
எலன் மஸ்க் HyperLooop and Boring Company வாயிலாக மேற்கொள்ளும் பணியைக் கண்டு வியப்பதாக வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என Miss Malini தெரிவிக்கிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA