8 மில்லியன் உணவு: 4 கோடி மதிப்பில் உதவி: ‘செஃப் விகாஸ் கண்ணா'வின் கொரோனா எதிர்ப்பு!
மருத்துவப் பொருட்களும் இந்தியாவுக்கு ஏற்றுமதி!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பேரழிவு எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியாவின் பிரபல செஃப் விகாஸ் கண்ணா பங்கெடுத்துள்ளார். அதன்படி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிபிஇ கிட் கருவிகள் உள்ளிட்ட கொரோனா அவசர நிவாரணப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் முதல் அலையின்போது இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்த இந்த செஃப் விகாஸ் கண்ணா, இந்த தொற்றுநோயின்போது உதவ, சுமார் 10,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் 50,000 தீ-எதிர்ப்பு PPE கிட் கருவிகளை திரட்ட முயற்சி எடுத்து வந்தார்.
இந்த நிலையில் தான் சில நாட்கள் முன்பு 25,000 டாலருக்கும் (சுமார் ரூ.4 கோடி) அதிகமான பங்களிப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 650 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 5,000 பிபிஇ கிட் கருவிகளின் முதல் ஏற்றுமதி இந்தியாவை அடைந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். கூடவே, நம் தாய்நாட்டில் நடப்பதை பார்க்கும்போது பார்ப்பது முற்றிலும் மனம் உடைந்துவிட்டது என்றும் வேதனை தெரிவித்துள்ளார் செஃப் விகாஸ் கண்ணா.
தொடர்ந்து பேசிய அவர்,
"அடுத்த சில வாரங்கள் மிகவும் உணர்ச்சிகரமானதாகவும் கடினமானதாகவும் இருக்கும். தொலைவில் இருக்கும் நம் அனைவருக்கும் இது அதிர்ச்சிகரமானதாக இருக்கும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாம் அனைவரும் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். எங்கள் முயற்சிகள் மூலம், முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நோக்கத்தை அடையும் வரை நான் ஓய்வுப் பெறப்போவதில்லை. எதில் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் உயிரைக் காப்பாற்றுவதில் எந்த தாமதமும் இருக்க முடியாது," என்று கூறினார்.
கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட தன்னார்வக் குழுவான விபா உடன் இணைந்து செஃப் விகாஸ் கண்ணா, இந்தியா முழுவதும் விநியோகிக்க, மிகவும் தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பிபிஇ கிட் கருவிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான பணத்தை திரட்டினார்.
இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாட்களில் அரை மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்பட்டன என்பது பாராட்டத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. என்றாலும், இந்தியாவுக்கு கூடுதல் மருந்து பொருட்களை வாங்குவதற்கு ஒரு மில்லியன் டாலர்களை வசூலிப்பதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கு நிதியளிப்பதும் இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்கிறது இந்தக் கூட்டணி.
முன்னதாக கடந்த வருடம் FeedIndia என்ற இயக்கம் மூலம் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு, ரேஷன் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார் செஃப் விகாஸ் கண்ணா. தொற்றுநோயின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவலான பேரழிவை ஏற்படுத்தி உள்ளதால் மீண்டும் இந்த இயக்கத்தை நடத்தினார். அன்னையர் தினத்திலிருந்து தொடங்கி 8 மில்லியன் உணவுகளை விநியோகித்து உள்ளார்.
ஆங்கிலத்தில்: டென்சின் பேமா | தமிழில்: மலையரசு