700 டன்களுக்கு மேல் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி: மாநிலங்களுக்கு முகேஷ் அம்பானியின் உதவி!
கொரோனாவை கட்டுப்படுத்த ஆலையை மறுவடிவமைப்பு செய்த ரிலையன்ஸ்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையே, இந்தியாவின் பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வருகிறார்.
அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 700 டன்களுக்கு மேல் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒரு நாளைக்கு 700 டன்களுக்கு மேல் மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி திறனை மேம்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆரம்பத்தில் 100 டன் மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வந்தன.
இந்தநிலையில், அதிகரித்து வரும் கொரோனா சூழ்நிலை காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி 700 டன்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இந்த உதவியின் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 70,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையின் காரணமாக, மருத்துவ தர ஆக்ஸிஜன் உற்பத்தித் திறனை 1,000 டன்னாக உயர்த்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸின் ஜாம்நகர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் மருத்துவ தர ஆக்ஸிஜன் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இங்கு இது கச்சா எண்ணெயை டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் போன்ற பொருட்கள் சுத்திகரிப்பு மட்டுமே நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், ரிலையன்ஸ் நிறுவனம், இங்கு முறையான கருவிகளை நிறுவி மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்குவதற்கான செயல்முறைகளை அமைத்துள்ளது.
மைனஸ் 183 டிகிரி செல்சியஸில் சிறப்பு டேங்கர்களில் போக்குவரத்து உட்பட ஆக்ஸிஜனின் முழு விநியோகமும் மாநில அரசுகளுக்கு எந்த செலவும் இன்றி செய்யப்படுகிறது, இது நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள அந்நிறுவன அதிகாரி ஒருவர்,
“ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 700 டன் ஆக்ஸிஜன் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இது 70,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தினமும் ஆக்சிஜன் அளிக்கும்.”
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஆகியவையும் தங்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு 150 டன் ஆக்சிஜன் செலவில்லாமல் வழங்கத் தொடங்கியுள்ளதாக ஐஓசி திங்களன்று தெரிவித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நைட்ரஜன் உற்பத்திக்கான காற்று பிரிக்கும் ஆலைகளில் குறைந்த அளவு தொழில்துறை ஆக்ஸிஜனை உருவாக்க முடியும். கார்பன் டை ஆக்சைடு போன்ற பிற வாயுக்களைத் துடைப்பதன் மூலம் அதை 99.9 சதவீத தூய்மையுடன் மருத்துவ பயன்பாட்டு ஆக்ஸிஜனாக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ரிலையன்ஸ் அறக்கட்டளை பிரஹன், மும்பை மாநகராட்சி (பிஎம்சி) உடன் இணைந்து நாட்டின் முதல் கோவிட் மருத்துவமனையை மும்பையில் அமைத்தது. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை இரண்டு வாரங்களில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது விரைவில் 250 படுக்கைகள் வரை மேம்படுத்தப்பட இருக்கிறது.
இதேபோல், ரிலையன்ஸ் மகாராஷ்டிராவின் லோதிவலியில் நவீன கருவிகளுடன்கூடிய மற்றும் தனிமைப்படுத்தும் வசதியுடன் கொண்ட மருத்துவமனையை கட்டி மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தவிர, மும்பையில் உள்ள ஸ்பான்டன் ஹோலிஸ்டிக் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்க ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆதரவளித்தது.
மேலும், டெல்லியின் சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்தில் டிஜிட்டல் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் சார்பில் மேம்படுத்தியும் கொடுக்கப்பட்டது.
சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை பி.எம்.சி உடன் இணைந்து மும்பையின் எச்.பி.டி டிராமா மருத்துவமனையில் பிரத்தியேகமாக 10 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மையத்தை அமைத்தது. பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான பல மைய மருத்துவப் பரிசோதனையின் ஒரு பகுதியாக ஐ.சி.எம்.ஆரால் அடையாளம் காணப்பட்ட மகாராஷ்டிராவில் முதல் நிறுவனம் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை ஆகும்.
இதேபோல், முன்களப் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு நாளைக்கு 1,00,000 பிபிஇ கிட மற்றும் ஃபேஸ் மாஸ்க்களையும் ரிலையன்ஸ் உற்பத்தி செய்கிறது. இதுபோன்று கொரோனாவை கட்டுப்படுத்த ரிலையன்ஸ் பலஉதவிகளை செய்து வருகிறது.