‘இந்தியாவில் புதைபடிவ எரிபொருள் நுகர்வு 8% அதிகரிப்பு' - அறிக்கையில் தகவல்!
முந்தைய 2022ம் ஆண்டைக் காட்டிலும் 2023-ம் ஆண்டில் நிலக்கரி, பெட்ரோல் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள் நுகர்வு 8% அதிகரித்துள்ளது
மின்சார வாகனம், சூரிய ஒளி மின்சக்தி, காற்றாலை, அணுமின் சக்தி என்று இந்தியா பெருமளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்று இந்திய எரிபொருள் நுகர்வுச் சந்தை மாற்றம் கண்டு வந்தாலும் கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவில் புதைபடிவ எரிபொருள் நுகர்வு 8% அதிகரித்துள்ளதாக ‘எரிசக்தி கழகம்’ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது குறித்து எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய 2022ம் ஆண்டைக் காட்டிலும் 2023-ம் ஆண்டில் நிலக்கரி, பெட்ரோல் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள் நுகர்வு 8% அதிகரித்துள்ளது. 2023-ல் ஐரோப்பா, வட அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் பெரிய அளவில் நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் மொத்த எரிபொருள் நுகர்வு கடந்த ஆண்டில் உச்சத்தைத் தொட்டது. முந்தைய ஆண்டை விட இது 2% அதிகரித்தது. உலகளாவிய புதைபடிவ எரிபொருள் நுகர்வும் ஒன்றரை சதவீதம் அதிகரித்தது.
சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக எரிபொருள் பயன்பாட்டில் புதைபடிவ எரிபொருளின் பங்கு 81.5% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 82% ஆக இருந்தது. ஆகவே சற்றே குறைந்துள்ளது.
இதே ஆண்டில், சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் (நீர் மின்சாரம் தவிர) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 13% உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத உயர்வாகும் இது. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தின் பங்களிப்பு 7$% என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு நுகர்வு 2022ம் ஆண்டில் 13% சரிவு கண்டது. 2023-ம் ஆண்டில் இது 7 சதவீத சரிவாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் 2021-ல் ரஷ்யாவிலிருந்து 45% எரிவாயு இறக்குமதி செய்தது. ஆனால், உக்ரைன் போர் காரணமாக இது தற்போது 15% ஆகக் குறைந்துள்ளது..
அமெரிக்காவில் மொத்த எரிசக்தி நுகர்வில் புதைபடிவ எரிபொருள் நுகர்வின் பங்கு 80% ஆகக் குறைந்துள்ளது.