'வேற்றுமைகளின் கொண்டாட்டமாகவே கலாசாரத்தைக் காண்கிறேன்'- ஜெயந்தி சங்கர்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஜெயந்தி சங்கர் நேர்காணல் !
உலகின் எந்த மூலையில் இருந்தும் தமிழில் படைப்பு எழுதி வெளியிட முடியும் என்பதை இணையத்தொடர்புகள் நமக்கு கொடுத்தபிறகு, ஏற்பட்ட நவீன அலையில் உருவான முக்கிய படைப்பாளி 'ஜெயந்தி சங்கர்'. தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். சிங்கப்பூரில் வசிக்கிறார். அதனால்.. அங்கிருக்கும் வாழ்க்கை முறையையும், சீன இலக்கியத்தையும் தமிழில் அறிமுகப்படுத்திவதிலும் தமிழ்-சீன இலக்கியத்திற்கு இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகிறார். அதிலும் பெண்ணிய நோக்கிலான பல சீனப்படைப்புகளை தமிழுக்கு அறிமுகம் செய்துவருகிறார். அவருடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ...
நாம்: உங்களின் சிறுவயது பற்றிச் சொல்லுங்களேன்?
ஜெயந்தி சங்கர்: அப்பா மத்திய அரசு பொறியாளராக இருந்த காரணத்தால், மதுரையில் பிறந்த போதிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வளர்ந்தவள். நால்வரில் மூத்தவள். சிறுவயதில் பாடநூல்கள் கடந்து அதிக வாசிப்பு இருந்ததென்று சொல்வதற்கில்லை. வாசித்த கொஞ்சமும் ஆங்கிலத்தில். பல்லினக் கலாசாரம் சிறுவயது முதலே, குறிப்பாக, ஷில்லாங்கில் பயின்ற மூன்றாண்டுகளில் அறிமுகமாகியிருந்தது. அதனால், 26 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தபோது நான் இந்த ஊரை, இந்த சமூகத்தைப் பார்த்த பார்வை நேரடியாக தமிழகத்திலிருந்து இங்கே வந்தவர்களிலிருந்து முற்றிலும் வேறாக இருந்தது.
அப்பா வாசிப்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர். அம்மாவோ நேர் எதிர். அம்மாவுக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கூடாதென்று அவ்வயதில் திடமாக நம்பிய நானும் பாடநூல்கள் தாண்டி வாசிக்க முயலவில்லை. இருந்தாலும், இளமையில் எனக்குள் வாசிக்கும் விருப்பம் இருந்திருக்கிறது என்பதைப் பிற்காலத்தில்தான் உணர்ந்து கொண்டேன்.
தந்தையார் மாநிலம் விட்டு மாநிலம் பலமுறை மாற்றப்பட்டதில், கடைசியாக கோயம்புத்தூரில் இரண்டாம் மொழியாகப் படித்த தமிழ் மொழிப்பாடமும் ஏழாம் வகுப்போடு நின்று போனது. அதன் பிறகு வடமாநிலங்களில் பள்ளி முதல் திருச்சியில் கல்லூரி வரை மொழிப்பாடங்கள் ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்றே அமைந்தன. மணமாகி இரண்டாண்டுகள் கேரளத்தில் வாழ்ந்த போது ஒருவித சுதந்திரம் வாய்த்திருந்தது. இருப்பினும், ஆங்கில நாளிதழ்கள் தவிர வேறு வாசிப்பிற்கு இசைவான சூழல் அமையவில்லை. நிறைய புதிய மனிதர்களைச் சந்திக்க முடிந்ததால், இயல்பாகவே மனிதர்களைக் கூர்ந்து வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மீண்டும் திருச்சி, சென்னை என்று குடிபெயர்ந்த போதும் கிடைத்த சில ஆங்கில நூல்களை மட்டும் வாசித்த நினைவுண்டு. இணையம் இல்லாத இறுதி 80கள் அவை. வாசிப்பு எனக்கான ஓர் உலகமானது 1990ல் சிங்கப்பூர் வந்த பிறகுதான்.
நாம்: எழுத்தில் ஆர்வம் வந்தது எப்படி? எப்போதிலிருந்து எழுதத்தொடங்கினீர்கள்?
ஜெயந்தி சங்கர்: தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இளமையில் வாசித்தவை மிகக்குறைவு. ஆலிஸ்டர் மேக்லின், வுடவுஸ், கல்கி, சாவி, மணியம் என்று உதிரியாக வாசித்த மிகச்சொற்பமும் அப்பா அறிமுகப் படுத்தியவை. அவர் என்றைக்குமே நேரடியாக வாசி என்றோ வாசித்தாயா என்றோ கேட்டதில்லை. குழந்தைகளுடன் பேசவோ விவாதிக்கவோ செய்தால் அம்மா விரும்ப மாட்டார் என்று எண்ணினார் போலும். தன்னுடைய வாசிப்பனுபவத்தை சித்தப்பா அல்லது அப்பாவின் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கேட்க நேரும். அதுவே நூல்களையும் ஆசிரியர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தும். ஓவியம், ஃபோட்டோகிராபி, ஹிந்திப்பாடல்கள் போன்று பரந்து விரிந்த ரசனை அப்பாவுடையது. அவருக்கென்று பிடித்த எழுத்தாளர்கள் பலர் இருந்தனர்.
ஜெயகாந்தனின் எழுத்தும் ஆளுமையும் அவருக்குள் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன என்பதை அவர் ஒருமுறை தன் நண்பரிடம் பேசியதைக் கேட்டு உணர்ந்தேன். ’சிங்கத்தின் பிடறிமயிர்’ போன்ற ஜெயகாந்தனின் கேசத்தை அவரது கம்பீர எழுத்துடன் இணைத்துப் பேசினார் என்ற நினைவுண்டு. ‘அக்னிப்பிரவேசம்’ குறித்து யாருடனோ சர்ச்சையில் ஈடுபட்டதைக் கேட்டு அதென்ன அப்படியொரு கதை என்று வியந்திருக்கிறேன். அப்போது வாசிக்க வாய்க்கவில்லை. பொன்னியின் செல்வன், வாஷிங்டனில் திருமணம் போன்றவற்றைதான் வாசித்திருக்கிறேன். வுடவுஸ்ஸின் நுண்ணிய நகைச்சுவையில் பாதியும் அந்த வயதில் புரிந்ததில்லை. வாசிப்புக்கு அதுகுறித்த உரையாடல் விவாதம் போன்றவை எத்தனை முக்கியம் என்பது கூடப் புரியாத வயது.
1990ல் சிங்கப்பூரில் நூலகக் கிளைகளில் என்னுடைய வாசிப்பு தொடங்கியது. ஐந்தாறு ஆண்டுகள் எந்தவித வழிகாட்டுதலோ, நட்பு வட்டமோ இல்லாமல் வாசிப்பனுபவத்திற்காக மட்டுமே வாசித்தேன். ஓரிரு ஆண்டுகளில் மெதுவாக புனைவெழுத்துக்களின் வகைமைகள் பிடிபட்டன. பிறகு, பிடித்த/பிடிக்காத வகைகளும் தெளிவாகின.
1990 முதல் 1995 வரை தமிழ்முரசு நாளிதழில் வார இறுதிகளில் பிரசுரமாகும் சிறுகதைகளை வாசிக்கும் வழக்கமேற்பட்டது. சிலவற்றை மிக ரசித்தும் சிலவற்றை மனதிற்குள் சற்றே மாற்றியெழுதியும் எனக்குள் செய்து வந்த சோதனைகள் நிறைய. ஒரு கட்டத்தில், ‘கட்ன வீட்டுக்கு எட்டு கோளாறு எல்லாரும் தான் கண்டுபிடிக்கலாம், கட்டிப் பார்த்தால்ல தெரியும்’, என்று எனக்குள் ஓடிய சுயவிமர்சனம் தான் முதல் முயற்சியை நோக்கிச் செலுத்தியது.
1995 மத்தியில் விளையாட்டு போல ‘திருப்பு முனை’ என்ற ஒரு சிறுகதையை எழுதி தமிழ்முரசுக்கு அனுப்பி விட்டு மறந்தே போனேன். ஆனால், அடுத்த வார இறுதியில் அது அச்சேறியதும், சின்ன கூச்சமும் பெரிய ஆச்சரியமும் ஏற்பட்டன. அச்சிறுகதை சில நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் என் கனவில் விரிந்த, நனவுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ஒரு நாடகக் காட்சியின் பெருமளவு புனைவு கலந்த எழுத்து வடிவம்.
பிரசுரம் செய்த அதே வாரத்தில் அப்போது தமிழ் முரசு ஆசிரியராக இருந்த திரு.அரசு அவர்கள் அழைத்து இருபது நிமிடங்களுக்கு மேல் பேசினார். தானே அறிமுகப்படுத்திக் கொண்டு என்னுடைய பின்னணி, கல்வி போன்ற சிலவற்றைக் கேட்டறிந்து அவர் பேசியது இன்று கூடக் காதில் ஒலிக்கிறது.
“நிறைய எழுதிருக்கீங்களா? எப்பலருந்து எழுதறீங்க?” என்பதை கேட்டுவிட்டுப் பின்னர், “தொடர்ந்து விடாம எழுதுங்க. எழுத வருமா வராதான்றத அனுபவத்துல எங்களால அடையாளம் காண முடியும். உங்களுக்கு புனைவெழுத்து வரும்” என்றார்.
பெரிய ஊக்குவிப்பாக அமைந்தது. அப்போது அதிலிருந்து எழுத ஆரம்பித்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. தொடர்ந்து பல சோதனை முயற்சிகள் மேற்கொண்டேன். தொடர் வாசிப்பும் கைகொடுத்தது. புதிதாய் பேசக் கற்ற குழந்தை போல எழுத்தே மொழியான காலகட்டமது. எழுத்து/வாசிப்பு சார்ந்து சில நேரடி நட்புகள் ஏற்பட்டன. தமிழ் முரசு தவிர சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கை சுடர் ஆகிய இதழ்களில் எழுதும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எழுத்தை வாசித்து விட்டு தொடர்பு கொண்ட மேலுமதிக நண்பர்கள் கிடைத்தனர்.
நாம்: நீங்கள் கதை, கட்டுரை என்று தொடந்து எழுதிக்கொண்டிருப்பவர். மொழிபெயர்ப்பு பக்கம் எப்படி கவனம் சென்றது. நீங்கள் மொழிபெயர்த்த முதல் படைப்பு எது?
ஜெயந்தி சங்கர்: மொழிபெயர்த்த முதல் படைப்பு 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற சீனக் கவிதைகள் தொகுப்பு. செம்மொழிகளுள் ஒன்றான சீனம் தமிழுக்கு இணையான பழமையும் செழுமையும் கொண்டிருக்கிறது. கவிதையிலும் அதே அளவிலான பழமையும் செழுமையும் கொண்டிருக்கிறது. சீனக்கவிதையுலகமானது ஒரு பிரமாண்ட கடல். பிற பழம்இலக்கிய வகைகளில் இருக்கக்கூடிய இருண்ட காலமோ, தொடர்பின்மையோ சீனக்கவிதையுலகத்தில் இல்லை. இடைவெளியற்ற செயல்பாடுகளைக் கொண்டிருப்பது தான் அதன் தனிப் பெருஞ்சிறப்பு. 'பெருஞ்சுவருக்குப் பின்னே' எழுதும் போது ஒரு சில கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டிவந்தது. முதலில் கவிஞர்கள் யாரிடமாவது செய்துகொடுக்க வேண்டிக்கொள்வோமா என்றே நினைத்திருந்தேன். நான் கவிதை எழுதியதில்லையெனினும் சில ஆண்டுகளாகவே கவிதைகளை, முக்கியமாக தமிழ் நவீனகவிதைகளை வாசித்து வந்திருந்தேன். சோதனை முயற்சியாக நானே அவற்றை மொழிபெயர்த்துப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆறேழு கவிதைகளை மொழிபெயர்த்ததில் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக திருப்தியாக அமைந்து என் தன்னம்பிக்கையைக் கூட்டியது. பின், அவற்றிலிருந்து மூன்றை மட்டுமே அந்நூலுக்குத் தேர்ந்தெடுத்திருந்தேன்.
இப்படியாக, 'ஏழாம் சுவை' தொகுப்பின் 'ஆவிகள் புசிக்குமா?' கட்டுரையிலிருந்து அறிந்து கொண்ட 'சீனத்தில் பெண் ஆவிகளுக்கு படையல் இல்லை' என்ற விஷயம் 'சீனப்பெண்களின் நிலைதான் என்ன?' என்ற கேள்வியை என்னில் எழுப்பி எப்படி 'பெருஞ்சுவருக்குப் பின்னே' நூலுக்கு எப்படி வழிவிட்டதோ, அதேபோல் 'பெருஞ்சுவருக்குப் பின்னே'யில் ஏற்பட்ட கவிதை மொழிபெயர்ப்பு அனுபவம் அந்நூலுக்குக் காரணமாகிப் போனது. சீனத்தின் கவிதைகள் எனக்குள் எதிர்பார்த்தேயிராத புதுவித அனுபவத்தைக் கொணர்ந்தது. அதன்பின், சீனக்கவிதைகளின் மீது இருந்த ஈர்ப்பு மொழிபெயர்த்திடும் ஆசையாக மெதுவாக மாற்றமடைந்தது. கைக்குக் கிடைத்த சீனக்கவிதையின் மொழிபெயர்ப்புக்களை எல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன் சென்ற ஆண்டில். அப்போது மொழிபெயர்ப்பில் நிலவும் வேறுபாடுகள் போன்ற வாசகப்பார்வை மட்டுமே இருந்தது.
சீனக்கவிதைகளைப் படிப்பதும், துய்ப்பதும், அறிவதும் ஓர் இனிமையான அனுபவம். அதே வேளையில், ஒரே காலகட்டத்தில், ஒரே கவிதை வகையில் எண்ணற்ற கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் தொகுப்பதும் மொழிபெயர்ப்பதும் மிகமிகக் கடினம் என்பதை சீக்கிரமே அறிந்தேன். சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. கடலிலிருந்து ஒரு சிறுதுளி போல ஓர் அறிமுகமாக மட்டுமே கொடுக்க முடியும் என்று தெள்ளெனப் புரிந்து போனது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் பல நூல்களாகக் கூடிய அளவில் சீனக்கவிதையுலகு வான்வெளியென விரிந்து பரந்து என்னை பிரமிக்க வைக்கிறது. எங்குதொடங்கி எங்குமுடிக்க என்று பலகட்டங்களில் குழம்பி, சிலவேளைகளில் மிரண்டே போனேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், காலச்சுவடு வெளியிட்ட 'என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி', கயல்கவின் வெளியிட்ட 'இறந்தவளுக்குத் திருமணம்' ஆகிய இரு சீனச் சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகின. சீனத்துச் சிறுகதைகள், தமிழ்வாசகன் தன்னை எளிதில் பொருத்தி ரசிக்க முடியக் கூடிய ஒற்றுமைகளுடனும் அதேவேளையில் நம் கலாசாரத்துடனான சீனச் சமூகத்தின் மெல்லிய வேற்றுமைகளையும் உணர்ந்து சுவைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. பல இடங்களில் நகைச்சுவையுணர்வுடன் இருக்கும் இந்தச் சிறுகதைகள் நமது கலாசாரத்துடன் அதிக ஒற்றுமைகளையே கொண்டிருக்கின்றன என்பதை உணரலாம். கிராம வாழ்க்கை, நகரமயமாக்கல் மற்றும் அது கொணரும் மாற்றங்கள், உறவுகள், விருப்பின்மையைக் கடந்த பரிவு, ஜப்பானியர் ஆக்கிரமிப்பின் போதான அராஜகங்கள், அரசியல் மாற்றங்கள் சமூகத்தில் கொணரக் கூடிய மாற்றங்கள், சிற்றூர் முரடர்கள், பால்ய பருவம், மூடநம்பிக்கைகள், மூதாதையர் விட்டுச் சென்ற வீடு, கிராமத்தானின் குறுகுறுப்பு, கம்யூனிசச் சீனத்தில் எளிய மக்கள் எதிர்கொண்ட சவால்கள், சுரங்கத் தொழிலாளர், ராணுவத் தளபதி போன்றவர்களின் வாழ்க்கை, அமானுஷ்யம், அரசியல் மாற்றங்கள் சமூகத்தில் கொணரக் கூடிய மாற்றங்கள், கோட்பாடுகளின் பல்வேறு சமூக கோணங்கள், கொள்கையளவில் மிகச்சிறப்பாகத் தோன்றும் கோட்பாடுகள் நடைமுறையில் கொள்ளும் அபத்தங்கள் போன்றவற்றைப் பேசுகின்றன சீனச் சிறுகதைகள்.
சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் மொத்தமாக ஆயிரம் பக்க முழுத்தொகுப்பாக இவ்வாண்டு இறுதியில் 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற பெயரிலேயே பிரசுரம் காணும் என்று நினைக்கிறேன். தொகுப்புப் பணியைத் தொடங்கிவிட்டேன்.
எனினும், வாசிக்கவும் எழுதவும் எனக்கு எப்போதுமே புனைவு தான் பிடிக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எழுத ஆர்வமுள்ளவர்கள் கவிதையில் தொடங்குவதையே நாம் அதிகமாகக் காண்கிறோம். இருப்பினும், எழுத்துப்பயணம் எனக்கு சிறுகதையில் துவங்கியது. சிறப்பாக இருக்கிறது என்று மேலோட்டமான பொதுக்கருத்து முதல் துல்லிய வாசகப்பார்வை வரை பல விதமான எண்ணற்ற விமர்சன்ங்கள் என்னை வந்தடைந்தன. பெரும்பாலோர் சொன்னது- இதுவரை எழுதியவர்களைக் காட்டிலும் சிங்கப்பூரை ஆகச் சிறப்பாக எழுதுகிறீர்கள். மறுபுறம், விதிவிலக்குகளாக எழுதுகிறார் என்றும் பேசினார்கள். பலருக்கும் பிடித்த ‘ஈரம்’, ‘நாலேகால் டாலர்’, ‘அக்கா’, ‘ஜேட் வளையல்’, ‘நுடம்’, ‘மெலிசாவின் தேர்வுகள்’, ‘முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்’, ‘ஓடிப்போனவள்’ போன்ற பல சிறுகதைகள் நான் எழுதும் போது எதிர்பார்த்ததை விட அதிக கவனத்தையும் பாராட்டையும் பெற்றன. அதே வேளையில் எழுதி முடித்ததும் என்னுள் திருப்தி ஏற்படுத்திய, ‘தையல்’, ‘பின் சீட்’, ‘கணக்கு’, ‘மனுஷி’, ‘கடத்தல்காரன்’, ‘தேநீரகம்’ போன்ற பல சிறுகதைகள் எதிர்பார்த்த கவனத்தைப் பெறத் தவறின. இதெல்லாமே ஒரு சுவாரசியத்தையே ஏற்படுத்தின; தொடர்ந்து, நுட்பமானதொரு தேடலையும் கூட.
சிறுகதைகள் முழுத்தொகுப்புக்குப் பிறகு நான் எழுதிய 'உன் பெயர் என்ன?', 'புலியூரின் ஓவியங்கள்', 'கை' 'புலியூர் வந்த காவலன்' உள்ளிட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும் பிரசுரத்திற்குத் தயாராக இருக்கிறது.
நாம்: தற்போது ஆங்கிலத்திலும் நேரடியாக எழுதத்தொடங்கி உள்ளீர்கள். அந்த அனுபவமும், வாசகர்களிடமிருந்து ஆங்கில பிரதிக்கு கிடைக்கும் வரவேற்பும் எப்படி உள்ளது?
ஜெயந்தி சங்கர்: ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்திலும் கொஞ்சம் எழுதினேன். ஓரிரு ஆண்டுகளிலேயே, ஒரு மொழியில் கவனம் செலுத்துவதென்று முடிவெடுத்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டுமானால் ஆங்கிலத்தில் முயற்சிக்கலாம் என்று தோன்றிவிட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலத்தில் எழுதிய ‘Read Singapore’ என்ற சிறுகதை உள்ளூர் காலாண்டிதழில் பிரசுமானது. அதை இரண்டாண்டுகள் கழித்து எதேச்சையாக வாசித்த Kirill Cherbitski என்ற ரஷ்ய எழுத்தாளர் மிகவும் விரும்பி ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து விட்டு, ஊடகங்களில் பிரசுரிக்கும் முன்னர் இதழாசிரியர் மூலம் அனுமதி கேட்டு என்னை அணுகினார். அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுகதை To Go To S'pore. Contemporary Writing from Singapore (978-1-938781-17-9) ரஷ்யமொழித் தொகுப்பில் இடம் பெற்றது. அந்நூல் அமெரிக்காவில் பிரசுரமானது. அதே சிறுகதை The Epigram Books Collection of Best New Singaporean Short Stories: Volume One (978-981-07-6234-6) தொகுப்பில் இடம் பெற்றது. இந்தச் சிறுகதை இன்னும் ஓரிரு மாதங்களில் திசை எட்டும் இதழில் 'வாசிப்போம் சிங்கப்பூர்' என்ற பெயரில் சீரிய தமிழாக்கத்தில் பிரசுரிக்கப் படும் என்றறிகிறேன்.
‘Read Singapore’ என்ற சிறுகதையின் வெற்றிதான் தற்போது ஆங்கிலத்தில் அதிகமாக எழுத வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. நிறைய எழுத வேண்டியுள்ளது. விமர்சனம், வரவேற்பு போன்றவற்றை இனிமேல்தான் சந்திக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய 17 சிறுகதைகள் அண்மையில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பெற்று Loss and Laws என்ற பெயரில் பிரசுரமாகியுள்ளது. இதே போன்ற இன்னொரு தொகுப்பு அடுத்து வரக்கூடும்.
நாம்: தமிழில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள்? மொழிபெயர்ப்பாளர்கள் யார் யார்? அவர்களின் பிடித்த படைப்புகள்?
ஜெயந்தி சங்கர்: தி.ஜாவின் ‘பாயசம்’ போன்ற சிறுகதைகளும் புதுமைப்பித்தனின் பல சிறுகதைகளும் கச்சித வடிவமைப்பால் என்னை வெகுவாக ஈர்த்தன. ஜெயகாந்தனின் ‘அக்னிபிரவேசம்’, அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ போன்ற பல சிறுகதைகள் சிந்தனைக்குச் சவால் விட்டன. நானாக இருந்தால், எப்படி எழுதியிருப்பேன் என்று ஒருகட்டத்தில் உள்ளுக்குள் ஓடிய எண்ணம் என்னையே ஆச்சரியப்படுத்தியது. அதே பயணத்தில் பிரபஞ்சன், அசோகமித்ரன், கந்தர்வன், இரா.முருகன் உள்ளிட்ட பல பிடித்த எழுத்தாளர்களையும் கண்டு கொண்டேன். விமர்சனங்கள் உள்ளுக்குள் அவ்வப்போது எழவே செய்தன. சின்ன சுவாரசியத்தையும் கொணர்ந்தன. வண்ணதாசனின் ‘கிருஷ்ணன் வைத்த வீடு’, நாஞ்சில் நாடனின் ‘மோகித்தே’, பாவண்ணனின் ‘பொம்மைக்காரி’ போன்ற பல எளிய சிறுகதைகள் ஒருவருக்குள் இருக்கக்கூடிய எல்லையே இல்லாத அன்பின் வெளியை மையிலிறகால் வருடியது போல் காட்டிச் சென்றன.
பசித்த மானுடம், மோகமுள், செம்பருத்தி எனத் தொடங்கி புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள், நித்யகன்னி, கிருஷ்ணப்பருந்து, பள்ளிகொண்டபுரம், மானுடம் வெல்லும், மூன்றாம் விரல், புயலிலே ஒரு தோணி என என அடுத்த நிலைக்குக் கடந்து சாயத்திரை, காடு, ஏழாம் உலகம், நெடுங்குருதி, உபபாண்டவம், ரத்த உறவு, கங்கணம், தகப்பன்கொடி, மாதொருபாகன், புலிநகக் கொன்றை, அஞ்சலை, எட்டு திக்கும் மதயானை, உண்மை கலந்த நாட்குறிப்புகள், ஆழிசூழ் உலகு, கால்கள், குற்றப்பரம்பரை என நாவல்கள் பட்டியல் தொடர்ந்து நீண்ட படி இருக்கிறது.
மொழிபெயர்ப்பில் ஷைலஜா, குறிஞ்சிவேலன் போன்றவர்களின் மொழியாக்கங்களை நான் நிறைய வாசித்திருக்கிறேன். சி.மோகனின் ஓநாய் குலச்சின்னம் என்னை மிகவும் கவர்ந்த மொழியாக்கப்படைப்பு. தமிழுக்கு முற்றிலும் புதியதோர் அந்நிய நிலப்பரப்பைச் சொன்ன போதிலும் மொழிபெயர்ப்பு என்பதே உணர முடியாதபடி அமைந்து புரிந்துகொள்வதற்கு எளிதாக, நல்ல வாசிப்பனுபவத்தை நல்கிய ’ஓநாய்குலச்சின்னம்’ நான் சமீப ஆண்டுகளில் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் என்று சொல்வேன். அடிமையின் மீட்சி என்ற மொழிபெயர்ப்பு நாவலும் சிறப்பாக இருந்தது.
அதைத் தவிர, ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்படும் ஹருகி முரகமி போன்றவர்களின் புதினங்களை வாசிக்கிறேன். முரகமியின் Elephant vanishes, Dancing dwarf, Sleep உள்ளிட்ட பல சிறுகதைகளும் Kafka on the shore, 1Q84 உள்ளிட்ட புதினங்களும் அடுக்கடுக்கான அர்த்தங்களுடன் நம்மைப் புதிய உலகிற்குள் இட்டுச் செல்லக்கூடியன. போர்ச்சுகல் மொழியில் எழுதி ஆங்கிலத்திற்கு வரும் Jose Saramago எழுத்துகளும் என்னைக் கவர்கின்றன.
நாம்: நேரடியாக படைப்பு எழுதுவதைவிட, மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினமானது. மொழிபெயர்ப்பில் சவாலாக நீங்கள் கருதும் விஷயங்கள் என்னென்ன?
ஜெயந்தி சங்கர்: ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்து மிகவும் பாதிக்கப்பட்டு இந்நூல் கண்டிப்பாக தமிழுக்கு வர வேண்டும் என்று ஒரு நூலை ஓரிரு அத்தியாயங்கள் மட்டும் மொழிபெயர்த்து விட்டு பதிப்பாளர் அமையாத நிலையில் அப்படியே வைத்திருந்தேன். சீனத்திலிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மொழிகளுக்குச் சென்றுள்ள நூல் இது. தற்போது நல்லதொரு பதிப்பாளர் அமைந்துள்ள நிலையில் அதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
ஆக, பதிப்பிப்பது என்பது முதல் சவால். மின்னூல்கள் தமிழில் அதிகரித்து வருவதும் பல்வேறு தீர்வுகளைக் கொண்டு வருமென்று நம்புகிறேன். மொழிபெயர்ப்பு என்றெடுத்துக் கொண்டால் தேவைதானா, விட்டுவிடுவோம் என்று நினைக்குமளவுக்கு நிறையவே சவால்கள் உள்ளன.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும் போது அதுவும், சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய் அதிலிருந்து தமிழுக்கு எனும் போது சிக்கல்கள் நிறைய வரும். இது போன்ற மொழிபெயர்ப்பு உண்மையில் மூல மொழியின் முழுமையான கலை அம்சத்தைக் கொண்டு வந்து விடாது. அதாவது பரவாயில்லை. ஒரே சீனக் கவிதை ஆங்கிலத்திற்குப் போகும்போது ஒவ்வொருவரின் திறன், அறிவு, அனுபவம், ரசனைக்கு ஏற்ப மொழிபெயர்ப்பும் மாறுபடும் என்று என்னுடைய சீனத் தோழிகள் எடுத்துக்காட்டுகளுடன் கூறினர். கட்டுரை, மொழிபெயர்ப்பு தொடர்பான என் ஐயங்களைக் கேட்டு செரா, லியூ ஃபங் ஆகிய இருவரையும் நான் நிறையவே தொந்தரவு செய்திருக்கிறேன். அவர்களுக்கே தெரியாத நிலையில் அவர்களின் நண்பர்கள் எனக்கு உதவினர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து புத்தகங்களில் நட்பு வட்டங்களில் கேட்டும் சிலவற்றைத் தெளிவு படுத்தினர். பல இடங்களில் இதனால் வேலையில் முன்னேற்றம் தடைபட்டதுண்டு. இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்தப் பணியைக் கையிலெடுத்தேன். சில சந்தேகங்கள் தெளிவு படாத காரணத்தால் சிலகவிதைகளை தொகுப்பில் சேர்க்காமல் விட்டேன். இந்தச் சிரமங்களால்தான் சில மொழிபெயர்ப்புப் பணிகளை, குறிப்பாக கவிதைகளை நிறுத்தி வைத்தேன்.
சீன நண்பர்கள் உதவினர். சீனம் பேசினால் ஓரளவிற்குப் புரியுமே தவிர எழுத்தெல்லாம் எனக்குத் தெரியாது. ஆங்கில மொழிபெயர்ப்பைக் காட்டித் தான் சீன நண்பர்களிடம் நான் கலந்தாலோசித்தது. பெரும்பாலும் சீன மூலப் பிரதியை வைத்துக் கொண்டு அவர்கள் ஆங்கிலச் சொற்களின் துல்லியத்தைக் கணித்து எனக்குச் சொன்னார்கள். அவர்களுக்கு சந்தேகம் தட்டிய கவிதைகளை நான் ஒதுக்கினேன். குழந்தையுடையது போன்ற ஓர் ஆர்வத்தினால்தான் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலமாகத் தமிழில் மொழிபெயர்த்தேன்.
ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தபோது மொழிபெயர்ப்பாளர்கள் சந்தித்திருக்கக்கூடிய சவால்கள் எனக்குப் பிடிபட்டன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணரும் முயற்சி எவ்விதத்திலும் குறைவானதில்லை சவால்களில். தேர்ந்தெடுத்தெடுக்கும் போது பாடுபொருள், மொழிபெயர்ப்பில் வரக்கூடிய முழுமை, ஒவ்வொரு கவிஞரின் கவிதைகள் குறைந்தது ஒன்றேனும் என்று பல்வேறு அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. வாசித்ததில் பாதியைச் சேகரித்து அதில் பாதிக்கும் குறைவாவே தேர்ந்தெடுத்தேன். மேலும் சிலவற்றை நூலின் தொகுப்பின் போது நிராகரிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்தினூடே தமிழுக்கு வந்திருக்கும் இக்கவிதைகளில் மோனையோ, சித்திர எழுத்து எண்ணிக்கையோ, பழமையோ, சீர்மையோ, நாட்டுப்புறத்தன்மையோ கூட இம்மொழிபெயர்ப்பின் மூலம் நாம் அறிய வழியில்லை என்பதே நிதர்சனம். இருப்பினும், எதிர்காலத்தில் யாரேனும் ஆய்வு நோக்கில் இந்நூலைப் பயன்படுத்தினார்களேயானால், உபயோகமாக இருக்கும் எனக்கருதியே, வகைப் படுத்தியிருப்பதை அப்படியே கொடுத்திடும் நோக்கில் கொடுக்க முடிவெடுத்தேன்.
சீனக்கலாசாரப் பின்னணி ஓரளவிற்கு அறிந்திருப்பதே எனக்குள் மொழிபெயர்க்கத் தேவையான தன்னம்பிக்கையைக் கொணர்ந்திருந்தது. சில கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்யும் போதே சுவாரஸியத்துடன் மிரட்சியும் ஊக்கக்குறைவும் சேர்ந்தே வந்தன. தேர்ந்தெடுப்பது எளிதான வேலையில்லை. ஆனாலும், என்னில் இருந்த ஈர்ப்பு குறையவே இல்லை என்பதைக் கண்டு எனக்கே ஆச்சரியம். எந்த வேலையிலும் மனம் ஓட்டாமல் சதா சீனக் கவிதைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு என் மேலேயே சந்தேகம் வந்தது. போர்க்களங்களையும், ஆறுகளையும், சீனக்கோட்டைகளையும், குதிரைகளையும், கோபுரங்களையும் நினைத்துக் கொண்டே இருந்தேன். காலம் மாறமாற கவிதையின் வடிவம் கொண்ட மாற்றம், அவற்றின் அழகுகள் என்று எப்போதுமே மாதக்கணக்கில் இதே நினைப்பு.
நூலை முடித்ததுமே நான் அதுவரை இருந்த விநோத மனநிலையிலிருந்து மீண்டேன். தொடர்ந்து பலமாதகாலம் மொழிபெயர்த்து தொகுத்து எழுத மட்டுமே எடுத்திருக்கிறேன். பொதுவாக, சில நவீன கவிதைகளை மொழிபெயர்ப்பது பழங்கவிதைகளை மொழிபெயர்ப்பதை விட சவாலாக அமைந்தது. இது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. மொழிபெயர்ப்பு என்று தெரிந்த கவிதைகள் மொழிபெயர்ப்பாளரின் பெயரோடு கொடுக்கப்பட்டிருக்கும். நான் என்வரையில் நெடுகவே மொழியாக்கத்தை மிகக்கவனமாகத் தவிர்த்தேன். இதற்கு முக்கியகாரணமே, நூல் முழுவதும் சமச்சீராக இருக்கட்டும் என்று நான் நினைத்தது தான். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்திடும் கவிதைகளை அதன் தெளிவைக் கொண்டே என்னால் உணர்ந்திட முடிந்ததைப்போல வாசகர்களாலும் உணர முடியும். சிங்கப்பூரின் கலாச்சாரவாசத்தை வாசகன் மேலும் கொஞ்சம் நுகரட்டும் என்ற நோக்கில் சிங்கப்பூரின் சீனக்கவிதைகளைத் தவிர சில ஆங்கிலக்கவிதைகளை நூலின் இறுதியில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
நாம்: சமீபத்தில் வந்த உங்களின் கட்டுரைத் தொகுப்புப் பற்றி வாசகர்களுக்கு ஓர் அறிமுகம் கொடுங்களேன்.
ஜெயந்தி சங்கர்: ஓர் ஆர்வத்தில் எழுதிய தென்கிழக்காசியக் கலாச்சாரக் கட்டுரைகளைத் தொகுத்து ஏழாம் சுவை என்ற கட்டுரைத் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டது. சீனர்கள் 'பசித்த ஆவிகள்' மாதம் என்று நமது ஆடி மாதத்தை ஒட்டி அனுட்டிப்பர். அவர்களுடைய நம்பிக்கையின் படி அந்த மாதத்தில் ஆவிகள் பூவுலகில் திரியும். படையல், கூத்து போன்ற பல வழிகளில் அவற்றை நல்லபடியாக கவனித்து, மகிழ்வித்து, அனுப்பி வைப்பர். இது குறித்து அறிய தேடித் தேடி வாசித்தேன். சுவாரசியமான அதே நேரம் மூட நம்பிக்கை என்று சிலர் கருதக்கூடிய ஏராளமான தகவல்கள் கிடைத்தன. உயிர்மை இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியான 'ஆவிகள் புசிக்குமா?' என்ற கட்டுரையை எழுதினேன். அப்போது தான் சில சதாப்தங்கள் முன்னர் வரை நடைமுறையில் பெண் ஆவிகளுக்கு படையல் இல்லை என்ற விஷயம் அறிந்தேன். அப்படியானால், சீனக் கலாசாரத்தில் பெண்கள் நிலை என்ன என்று அறியும் ஆர்வத்தில் வாசித்த போது அரிய தகவல்கள் கிடைக்கவே, 'பெருங்சுவருக்குப் பின்னே' (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) என்ற நூலை எழுதி, அதுவும் உயிர்மையில் பிரசுரமானது. ஒவ்வொரு கட்டுரையும் தனிநூலாகக் கூடியது. அந்த நூலுக்காக ஓர் ஆதிகவிதை ஒன்றை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதைச் செய்யும்போது சீனக் கவிதை வெளிக்கான இன்னொரு வாயில் திறந்தது. மிகப்பெரிய உலகம் அது. சீனக் கவிதை உலகிற்கு ஓர் அறிமுகமாக மட்டுமே தொகுக்க முடியும் என்று சீக்கிரமே புரிந்தது. பண்டையகாலம் முதல் சமகாலம் வரை ஒரு வரலாற்று நோக்கில், ஒரு ஒட்டு மொத்தப்பார்வையாக விளங்கும் ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ உயிர்மையில் பிரசுரமானது. 'பெருஞ்சுவருக்குப் பின்னே', 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' ஆகிய இருநூல்களுக்கும் குறைந்தது நாலைந்து ஆண்டுகள் எடுத்திருப்பேன்.
நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான ‘பறந்து மறையும் கடல்நாகம்’ புத்தாண்டு அன்றைக்கு திருவான்மியூர் பனுவல் அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது.
பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் எங்கள் அடுக்கத்தில் வசித்த மத்திய வயது தமிழ்ப் பெண்மணி வழியில் என்னைப் பார்த்து சடாரென்று தோள்பிடித்து நிறுத்தி, “அமாவாசை, பௌர்ணமின்னா கத்தை கத்தையா இதுங்க எரிக்கறதெல்லாம் கருஞ்சாம்பலாப் பறந்து சன்னல் வழியா வீட்டுக்குள்ள வந்துருது, இல்ல? என்ன ஜென்மங்களோ என்ன எனமோ,” என்று சலித்துக் கொண்டார். அதிக பழக்கம் கூடக் கிடையாது. நானும் தலையாட்டி ஆம் என்பேன் என்று எதிர்பார்த்திருக்கலாம். நானோ அடுத்த மாதத்திலிருந்து ‘பசித்த ஆவிகள்’ விழா வரும்போது இவர் என்ன சொல்வரோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
அந்த சாதாரண உரையாடல் சின்னதொரு தேடலை எனக்குள் விதைத்தது. ‘பசித்த ஆவிகள்’ விழா குறித்து நூலகத்திற்குச் சென்று நிறைய தேடித்தேடி வாசித்தேன். கிடைத்தவை எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தன. நுட்பமும் தொன்மையும் கொண்ட அந்தக் கலாசாரத்தின் ஆழமும் அகலமும் பிடிபட்டது.
‘ஆவிகள் புசிக்குமா?’ கட்டுரை எழுதுகையில், அண்மைக்காலம் வரை சீனத்தில் பெண் மூதாதையருக்குப் படையல்கள் இருந்திருக்கவில்லை எனும் சிறுவிவரம், பெருஞ்சீனக் கலாசாரத்தில் பெண்ணின் நிலை எப்படித்தான் இருந்திருக்கிறது என்பதை அறியத் தூண்டியது. மூதாதையருக்கான படையல் சீனர்களுக்கு மிக மிக முக்கியம் என்ற பின்னணியில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நிறைய வாசித்தேன். சில சுவாரசியமாகவும் சில மிகுந்த மனச் சோர்வளிப்பவையாகவும் இருந்தன. எனினும், தொகுக்காமலே வைத்திருந்தேன். அப்போதுதான் சீனப் பெண்கள் குறித்து ஜெயந்தி ஏதும் எழுதியிருக்கிறாரா என்று ஜெயமோகன் கேட்டதாக மனுஷ்யபுத்திரன் மடலில் தெரிவித்திருந்தார். அதுவே ஓர் உந்துதலாக அமைந்து, கையில் இருந்த வேறு இரண்டு முக்கியப் பணிகளை அப்படியே தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு குறிப்பெடுத்தவற்றைத் தொகுக்க ஆரம்பித்தேன். ஒற்றைக் கட்டுரையாக இல்லாமல் ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ என்ற முழு நூலாகவே விரிந்து, உயிர்மை பிரசுரமாக அச்சாகி பரவலான கவனத்தையும் பெற்றது.
நூலாக வராத 'கல்யாண ஒப்பாரியும் மரணக்கோலாகலமும்', 'பாலழித்தல்' போன்ற சில கட்டுரைகளின் ஆராய்ச்சியும் தொகுப்பும் முற்றிலும் வேறோர் உலகை என் விரித்தன.
சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான நண்பர் ரவி ஷங்கர் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்குள் நடக்கும் உள்நாட்டு இடப்பெயர்வுகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளாக எழுதுவீர்களா என்று மடலிட்டுக் கேட்டார். அது எனக்கு இன்னொரு திறப்பாக அமைந்தது. ஏற்கெனவே அது குறித்து அறிந்திருந்த போதிலும் நிறைய வாசிக்க வேண்டியிருந்தது. பத்து கட்டுரைகளுக்கு பல மாதங்கள் எடுத்தன. அந்தப் பத்து நெடுங்கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம்' என்ற நூலாக அம்ருதா வெளியிட்டது.
சீனக் கலாசாரம் எனும் பெருங்கண்டிலிருந்து சீராக இழை பிரித்து தனித்தனியே சிறுசிறு கட்டுரைக் கண்டுகளாகத் தொகுத்து வந்திருக்கிறேன் என்பது பின்னோக்கிப் பார்க்கையில், புரிகிறது.
மானுடவியல் சார்ந்து என் சிந்தனை விரிந்ததன் பயனாகவே இந்தநூல் உருவானது என்பேன். வேறுபாடு, மாற்றம் ஆகிய இரண்டு பொதுத் தளங்களையும் கொண்டதாக இருப்பதே கலாச்சாரம் என்பதை மானுடவியலாளர்கள் வரையறுக்கிறார்கள். வேறுபட்ட இன்னொரு கலாசாரத்தை குழந்தையின் ஆர்வத்துடன் அறிய முனைவது என்பது உண்மையில் எல்லை கடந்த ஒரு சிந்தனைதான். அவ்வாறு அறிந்துகொள்வதால் என்ன பலன், அவற்றை கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்குவதால் என்ன பயன் என்றெல்லாம் ஒன்றுமே யோசிக்காமல் வெறும் ஆர்வம் மட்டுமே செலுத்தியதில் விளைந்த கட்டுரைகள் இவை. இதற்கான நோக்கங்கள் என்று ஒன்றுமே இருக்கவில்லை.
தன் குடும்பம், தன் தெரு, தன் ஊர், தன் இனம், தன் மாநிலம் என்று மட்டுமே யோசிக்காமல் மிக விலாசமாக யோசிக்கும்போதுதான் பிற கலாசாரங்களை அறிவதன் முக்கியத்துவமே விளங்கும். காலாசாரங்களுக்கு இடையே நிலவும் ஒற்றுமை, வேற்றுமைகளை அறிந்து கொள்ளும் ஒருவரால் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையையே மேம்படுத்திக்கொள்ள முடியும். மாற்றக்கூடியதும் மாற்றமுடியாததுமாக தலைமுறை தலைமுறையாக வந்ததே கலாசாரம்.
மிக எளிமையாகச் சொல்வதென்றால், ஒரு குறிப்பிட்ட இனம், சமூகத்தின் நடைமுறைகள், நம்பிக்கைகள் போன்றவை ஒன்று சேர்ந்து கலாசாரமாகின்றது என்பார்கள். மனிதன் அறிந்தவற்றை மீண்டும் சமூகத்தில் பொருத்திப் பார்த்து தனது கலாசாரம் அடுத்தகட்டப் பரிணாமத்தை எட்டுவதற்குப் பயன்படுத்துகிறான். பிற கலாசாரங்களை அறிவதும் நம்முடையதுடன் அதனை ஒப்பிட்டுக்கொள்வதும் பல்வேறு வாயில்களைத் திறக்க வல்லது. ஒற்றுமை வேற்றுமைகளை உற்று நோக்கும் போது சிந்தனையில் மாற்றமும் விரிவும் ஏற்படும். குறிப்பாக, இன்றைய உலகில் அது போன்ற தேடல்களும் அறிதல்களும் மிகவும் முக்கியமாகிறது. வேற்றுமை என்பதை அறிந்து மறந்த ஒருத்துவம் என்பதே இன்றைய உலகிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வாசிக்க மனமும் பொறுமையும் குழந்தையின் ஆர்வமும் ஈடுபாடும் இருந்த 15 ஆண்டு காலத்தில் உருவான நூல். மீண்டும் இது போன்ற நூல் உருவாகலாம்; உருவாகாமலும் போகலாம். காலம்தான் சொல்லும் அதற்கான பதிலை. இந்த நூலுக்குமே எந்தத் திட்டமிடலும் இருக்கவில்லை.
இது ஓர் அரிய நூலா என்றால் ஆமாம். முக்கியமான நூலா என்றால் கண்டிப்பாக முக்கிய நூல்தான். இருந்த போதிலும் ஆர்வம் இருந்தால் யாருமே எழுதிவிடக்கூடிய நூல்தான் என்பதே என்னுடைய உறுதியான கருத்து. நூலாசிரியர் பெயராக யாருடைய பெயரையும் இந்த நூலில் போட்டு விட முடியும். ஏனெனில், இது புனைவு கிடையாது. நேர்த்தியாகத் தொகுத்து எழுதினேன் என்பதைத் தவிர இதில் எங்குமே நான் இழுக்க வழியில்லை. இவ்வாறு எனக்குத் தோன்றக் காரணமும் உண்டு. புனைவல்லாத எழுத்து, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கடந்து என் மனம் எப்போதுமே புனைவெழுத்தை வாசிப்பதிலும், எழுதுவதிலும் மட்டுமே மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்கிறது.
வேற்றுமைகளின் கொண்டாட்டமாகவே நான் கலாசாரத்தைக் காண்கிறேன். வேற்றுமைகளில் தான் வலிமை உண்டு, ஒற்றுமைகளில் அல்ல என்பதே எனது கருத்து. கற்பவை, அறிபவை, அவற்றை மனதுக்குள் தொகுத்து சிந்திப்பவை என்று பலவும் நம் எல்லோருக்குள்ளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. பலவும் பறந்து மறைந்து போய்விடவே செய்கின்றன. நேர்த்தியான நூலாக்கத்தில் கடல்நாகம் ஒன்று பறந்து மறைந்து விடாமல் தமிழுக்கு வந்துள்ளது.
எழுத்தாளரின் இணையதளம்: ஜெயந்தி சங்கர்