’சாய் பாயிண்ட்’ கண்டு உந்துதல் பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில்முனைவோர்!
இந்தியாவில் தேநீர் மிகவும் பிரபலம். நகர்புறங்களிலோ கிராமப்புறங்களிலோ உள்ளூர் தேநீர் கடைகளில் மக்கள் வழக்கமாக ஒன்றுகூடுவதைப் பார்க்கமுடியும். ’கடக்’ எனப்படும் இனிப்பான தேநீர் நம் வழக்கமான பணி அழுத்தத்திலிருந்து சற்றே விடுபட்டு உற்சாகம் பெற உகந்ததாகும். 35 வயது டெவலப்மெண்ட் தொழில்முறையினரான வினோத் பாண்டே இதில் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் பணியையும் இணைப்பது குறித்து சிந்தித்தார்.
இந்திய கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து செல்வோர் பாதிக்கப்படுவதை உணர்ந்து வினோத் ’ரோஜ்கர் தாபா’ (Rozgar Dhaba) என்கிற தேநீர் கடையை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷீஹோர் மாவட்டத்தின் நஷ்ருல்லாகனி ப்ளாக்கில் துவங்கினார். இங்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகள் கிடைப்பதுடன் வாழ்வாதாரம் அல்லது வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் நடக்கும் மையமாகவும் செயல்படுகிறது.
”நான் பீஹாரைச் சேர்ந்தவன். பீஹாரைச் சேர்ந்த பலர் வெவ்வேறு நகரங்களுக்கு வேலைதேடி, குறிப்பாக தினக்கூலிகளாக குடிபெயர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய உறவினர் ஒருவர் பஞ்சாபிற்கு குடிபெயர்ந்து சென்றார். அங்குள்ள நகரில் சரியான வேலை கிடைக்காததால் இறந்துபோனார். அவர் முறையான சுகாதார வசயின்றி குடிசைப்பகுதிகளில் வசித்தார். அந்த நகரில் சிறப்பாக பணிவாய்ப்பு பெற்று அவரால் வெற்றியடைய முடியாமல் போனது,” என்றார் வினோத்.
அப்போது 12 வயதான அவர் நகருக்கு குடிபெயர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவ தீர்மானித்தார். சமூக மேம்பாடு பிரிவில் முக்கிய கவனம் செலுத்திய வினோத் இந்தியாவில், குறிப்பாக டெல்லியில் உள்ள வேலையின்மை தொடர்பாக பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்தார்.
இந்த சமயத்தில்தான் ’ரோஜ்கர் தாபா’ உருவாக்கும் திட்டம் உதித்தது. எனினும் இந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க பத்தாண்டு காலம் ஆனது. அவர் பெங்களூரு சென்றபோது இந்த திட்டம் குறித்து மேலும் தகவல்கள் கிடைத்தது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கிருந்த ’சாய் பாயிண்ட்’ ஸ்டாலில் (Chai Point) பெரியளவில் கூட்டம் இருந்ததை கவனித்தார். அப்போதுதான் மக்களை ஒருங்கிணைப்பதில் தேநீருக்கு இருக்கும் வலிமையை உணர்ந்தார்.
”அனைத்து வர்க்கத்தை சேர்ந்த மக்களும் தாமாகவே ஒன்றுகூடும் இடமாக இருக்கவேண்டும். இங்கு வெவ்வேறு வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்தப்படவேண்டும். அத்தகைய தீர்வையே நாங்கள் எதிர்பார்த்தோம்,” என நினைவுகூர்ந்தார்.
தேநீர் மிகப்பெரிய அளவில் சமூகத்தை இணைக்கக்கூடிய வலிமை கொண்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. நான் படிக்கவோ அல்லது பணிபுரியவோ வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால் இத்தகைய சிந்தனையே என்னுள் தோன்றியிருக்காது. நீங்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கும் போதுதான் உங்களது சொந்த இடம், சொந்த நாடு, சொந்த நகரம் ஆகியவை குறித்த கண்ணோட்டம் கிடைக்கும். ’சாய் பாயிண்ட்’ வினோத்தின் முயற்சிக்கு உந்துதலளித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் ’சாய் பாயிண்ட்’ நிறுவனர் மற்றும் சிஇஓ-வான அமுலீக் சிங் பிஜ்ரால்.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட ரோஜ்கர் தாபா ஒரு மாதத்திற்கு 1,000-க்கும் மேற்பட்டோருக்கு சேவையளிக்கிறது. வேலைவாய்ப்பு தொடர்பான இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறது. ஐந்து வகையான விளைநிலை உற்பத்திகளை விற்பனைக்காக காட்சிப்படுத்துகிறது. அரசு ஏஜென்சிக்கள், திறன் மையங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மாவட்ட வேளாண் மையம், கிராமீன் மையங்கள், தொடர்ந்து வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கி வரும் உள்ளூர் வணிகங்கள் என 70-க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. தாபாவிலேயே 8,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை வருவாயுடன் கூடிய வேலைவாய்ப்பு சுமார் பத்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
தேவை
2018-ம் ஆண்டு பிப்ரவரி மாத விவரப்படி 31 மில்லியன் இந்தியர்கள் வேலைவாய்ப்புகளின்றி தவிப்பதாகவும், ஆனால் 6,00,000 பேருக்கான பணி வாய்ப்புகள் மட்டுமே காணப்படுவதாகவும் இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையமான CMIE அறிக்கை தெரிவிக்கிறது.
2011-ம் ஆண்டு சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பின்படி (SECC) சுமார் 833 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்புத் தேடி நகர்புறங்களுக்கு குடிபெயர்கின்றனர். 2011 - 2016 ஆண்டுகளிடையே இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான குடிபெயர்தல் ஆண்டிற்கு சுமார் 9 மில்லியனாக இருப்பதாக ’எகனாமிக் சர்வே ஆஃப் இண்டியா 2017’-ஆல் மதிப்பிடப்படுகிறது. அதே சமயம் நாட்டின் உள்ளூர் குடிபெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 139 மில்லியனாக இருப்பதாக ’சென்சஸ் 2011’ குறிப்பிடுகிறது. இதில் உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் பெரும் பங்களிக்கிறது. அதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர்காண்ட், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகியவை இடம்பெறுகின்றன. பெருமாலானோர் டெல்லி, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப்பிரதேசம், கேரளா அகிய மாநிலங்களைச் சென்றடைகின்றனர்.
துவக்கம்
இந்திய கிராமப்புறங்களில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் மக்கள் நகர்புறங்களுக்கு செல்வதில்லை என்பதையும் அருகாமையில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் மக்களுக்கு தெரியாத காரணத்தினாலேயே நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர் என்பதை வினோத் கவனித்தார். கட்டுமானம், பெயிண்டிங், எலக்ட்ரிக்கல் பணி, ப்ளம்பிங், கொத்து வேலை போன்றவற்றிற்கான தொழிலாளர்கள் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பணிபுரிவோரின் வருமானங்களில் ஏற்றதாழ்வுகள் காணப்பட்டாலும் கிராமத்தில் வசிப்பதால் கிடைக்கும் பலன்கள் இந்த வேறுபாட்டை சமன்படுத்திவிடும் என்கிறார் வினோத்.
”இந்திய கிராமப்புறங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கென பிரத்யேக வசதி ஏதும் இல்லாததை சமூகத்துடன் தொடர்பு கொள்கையில் தெரிந்துகொண்டோம். இங்குள்ளவர்களால் naukri.com அல்லது angelist.com போன்ற தளங்களையோ வேலை வாய்ப்புகள் குறித்த பட்டியலையோ அணுகமுடியாது. அதேபோல் பணியிலமர்த்துவோரும் பணி தேடுவோரும் இணையக்கூடிய வகையில் ஒரு பொதுவான தகவல் மையம் ஏதும் இல்லை,” என வினோத் விவரித்தார்.
தாபா
உள்ளுர் விற்பனையாளர்கள் மற்றும் முதலாளிகளிடம் இருந்து உள்ளூர் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களையும் வேலை தேடுவோரின் தகவல்களையும் ரோஜ்கர் தாபா சேகரிக்கிறது. விவசாய விளைச்சல்களின் விற்பனை குறித்த தகவல்களையும் அதேபோல் குறிப்பிட்ட விளைச்சலை வாங்க விரும்பும் நுகர்வோரின் தகவல்களையும் காட்சிப்படுத்துகிறது. விவசாய இயந்திரங்களை வாடகைக்கு வழங்க விரும்புவோரின் தகவல்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள், அரசாங்க திட்டங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றையும் இந்த மையம் வழங்குகிறது.
வேலை தேடுவோரின் திறன்கள், கல்வித்தகுதி போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை பணியிலமர்த்துவோர் அணுகலாம். இந்த கடையில் தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தகவல் பரிமாற்றம் இலவசமாகவே நடக்கிறது. வேலை அல்லது வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த தகவல்களை வாட்ஸ் அப் வாயிலாகவும் ரோஜ்கர் தாபா பரப்புகிறது. கடையில் உள்ள விளம்பரம் வாயிலாக வருவாய் ஈட்டுகிறது.
”நாங்கள் நிலையாக செயல்பட விரும்புகிறோம். வேலை தேடி பதிவிடுவோரின் எண்ணிக்கை மற்றும் மக்களால் அணுகக்கூடிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அம்சங்களைக் கொண்டே எங்களது வளர்ச்சி அளவிடப்படுகிறது,” என்றார்.
தற்போது இந்நிறுவனம் சுயநிதியில் இயங்குகிறது. வினோத் தனது தேநீர் கடை வாயிலாக வாடிக்கையாளர் நெட்வொர்க்கை உருவாக்கி வேலை வாய்ப்புகளுக்கான தொடர்பு மையமாக இவரது தேநீர் கடை செயல்படவேண்டும் என விரும்புகிறார். ”ரோஜ்கர் தாபாவிற்கு அதிகம் பேர் வந்தால் தேநீர் விற்பனை அதிகரித்து வருவாயும் அதிகரிக்கும்,” என்றார்.
கடைக்கு பெண்கள் வருகையை அதிகரிக்க ரோஜ்கர் தாபா பெண்களை பணியிலமர்த்த திட்டமிட்டுள்ளது. அதே போல் பெண்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளில் சிறப்பு கவனம் செலுத்தி கிராமங்களில் பட்டறைகள் ஏற்பாட்டு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
வருங்கால திட்டம்
ஷீஹோர் மாவட்டத்தில் தற்போது இரண்டு ரோஜ்கர் தாபாக்கள் செயல்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீஹார் என மேலும் 100 தாபாக்களை திறக்க வினோத் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் கிடைக்கும் லாபம் கிராமத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
அரசு தகவல் மையங்கள் (soochna centre) மற்றும் ஐடிசி-யின் e-chaupal போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ரோஜ்கர் தாபாவின் தகவல் பரிமாற்றம் விவசாயத்தை தாண்டி உள்ளதாக வினோத் தெரிவிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா