பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிவிடி லிமிடெட்
மெத்தைத் தொழிலில் புதுமை புகுத்திய தொழில் கூட்டாளிகள்
அவர், கல்லூரியில் பட்டம் பெற்ற நாள் முதலே மெத்தைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். முப்பதாண்டுகள் கழித்து தனது 55 ஆம் வயதில் தொழிலில் முக்கியமான திருப்பம். தற்போது ஸ்பிரிங் மெத்தைத் தயாரிப்பில் இந்தியாவில் முன்னோடியாகத் திகழ்கிறார். இந்திய ஸ்பிரிங் மெத்தை சந்தையில் பெப்ஸ் மேட்ரஸ் 55 சதவீதம் நிலையாகப் பங்கு வகிக்கிறது. மக்களின் தூங்கும் தரத்தை உயர்த்த தன்னால் முடியும் கருதுகிறது.
பெப்ஸ் மேட்ரஸின் நிர்வாக இயக்குனரும் இணை நிறுவனருமான திரு கே.மாதவனுடன் யுவர் ஸ்டோரி பேசிய போது தனது நிறுவனத்தைக் கட்டமைத்ததையும், அதன் பயணத்தையும் நம்மிடம் விளக்கினார்.
துவக்கியது எப்போது
ஸ்பிரிங் மெத்தைத் தயாரிப்பதற்கு வசதியான ஒரு தொழிற்சாலை விற்பனைக்கு வர இந்நிறுவனத்தைத் துவக்குவதற்கான ஒரு தங்கமான வாய்ப்பு தானாகக் கைகூடியது. ‘’2005 – 6 காலகட்டத்தில் ஸ்பிரிங் மெத்தைத் தயாரிப்பில் மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை’’ என்று தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார் மாதவன். அவரது தொழிற் கூட்டாளிகளும், மாதவனும் இணைந்து ஸ்பிரிங் மெத்தைத் துவக்குவது என்று கூட்டாக முடிவு செய்தனர். முதலில் தொழிற்சாலையைத் துவக்குவதில் கவனம் செலுத்தினார்கள். பிறகு மாற்றுமுறை நார் மெத்தைத் தயாரிப்பில் இறங்கினர். விரைவில் 2005 இல் அது ஸ்பிரிங் மெத்தைத் தயாரிப்பாக மாறியது. ‘’அப்போது நாங்கள் மட்டுமே அதில் இறங்கி இருந்ததால் எங்களுக்கான வாய்ப்புகள் நீலக் கடல் போல விரிந்து கிடப்பதாகத் தோன்றியது’’ என்று ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார்.
இவர்கள் சாதித்தது என்ன
பெப்ஸின் வளர்ச்சி சீரானது. முதலாம் ஆண்டு சுமார் 8700 மெத்தைகள் தயாரித்தார்கள். காலப்போக்கில் 2013 – 14 ஆண்டு அவர்களது உற்பத்தி 1.48 லட்சத்திற்கும் மேல். இது 2010-11 இல் இருந்து அவர்களது வளர்ச்சி விகிதத்தை 2013 – 14 இல் 38% க்குக் கொண்டு வந்து நிறுத்தியது. ‘’மாற்றுமுறை மெத்தைக்கு உள்ள சந்தைக்கும் மேலாக ஸ்பிரிங் மெத்தைக்கு உருவாக்க வேண்டும் என்ற வேட்கை எங்களுக்கு இருந்தது. தூக்க உலகம் 77% மெத்தையில் தான் இருக்கிறது. ஆண்டிற்கு 35 லட்சம் இந்தியர்கள் வெளி நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். எத்தனை அருமையான சந்தை வாய்ப்பு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கட்டுப்படியான விலையில் ஆடம்பரமான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தான்’’ என்கிறார் மாதவன். அவர்களது வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம் வாடிக்கையாளர்களுக்கு மெத்தையைக் கொண்டு சேர்க்கும் முறை. முன்னர் வெறும் 47 விற்பனையாளர்களுடன் சுருங்கி இருந்தவர்கள், இப்பொழுது நாடு முழுவதும் 9050 விற்பனையாளர்களைக் கொண்டுள்ளனர்.
பெப்ஸ், அதன் இணை இயக்குனர்கள் கே.மாதவன், ஜி.சங்கர்ராம், தொழில்நுட்ப இயக்குனர் பி.மஞ்சுநாத் ஆகிய மூவரால் துவக்கப்பட்டது. ‘’நாங்கள் மூவருமே மெத்தைத் தொழிலில் இருந்து வந்தவர்கள். அதேபோல் மூவருமே ஆதார உற்பத்தித் துறையைப் பின்னணியாகக் கொண்டவர்கள். வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கேற்றவாறு உற்பத்தியும் செய்யக் கூடியவர்கள் நாங்கள். உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுவது என்ன என்பதும் எங்களுக்கு மிகச் சரியாகத் தெரியும்’’ என்றார் மாதவன். இவர்கள் மூவரும் 20 ஆண்டுகளாகக் கூட்டாகத் தொழில் புரிகிறார்கள்.
மெத்தை உற்பத்தியில் ஒரு பகுதி ரெஸ்டோனிக் எனப்படும் அமெரிக்கத் தொழில் நுட்பத்தையும், மீதியொரு பகுதி சொந்தத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
ஆரம்பநிலை சிக்கல்கள்
ஆரம்ப கட்டத்தில் டிரியோ ஸ்பிரிங் மெத்தைத் தயாரிப்பில் குறிப்பிட்ட ஒரே வகை மாதிரியே பொருத்திப்பட்டு வந்தது. எளிதில் துவண்டு போகிற அசௌகர்யமான சோபா-மெத்தையைத் தான் மக்கள் பரவலாக ஸ்பிரிங் மெத்தை என்று புரிந்து கொண்டிருந்தார்கள். அதிலும் அது நீடித்து உழைப்பதில்லை. ‘’பயன்படுத்தத் துவங்கிய ஆறு மாதங்களிலேயே ஸ்பிரிங் வெளியே புடைத்துக் கொண்டு வருவதை உங்களால் பார்க்க முடியும். அது கொஞ்சமும் வசதிப்படாது’’ என்று விளக்கினார் மாதவன். இன்னொரு முக்கியமான அம்சம் மெத்தையின் விலையும் கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து கொண்டே போனது. ‘’ஒரு ஸ்பரிங் மெத்தை வாங்கும் விலையில் மூன்று மாற்றுமுறை மெத்தை (sofa cum bed) வாங்கி விடலாம் என்று நினைத்தார்கள் மக்கள்’’ என்றார் மாதவன்.
மக்களின் கண்ணோட்டத்தை மாற்றியாக வேண்டிய நெருக்கடியான சூழலில் தான் மெத்தையின் அடுத்த வடிவத்தை அறிமுகம் செய்தார்கள். மாற்றுமுறை மெத்தையுடன் ஒப்பிடுகையில் விலையில் நடுவாந்திரமாகவும் தரத்தில் உலகத் தகுதியிலுமாக ஒரு மெத்தை வகையை அறிமுகம் செய்தார்கள். அதனை அவர்கள் கட்டுப்படியான ஆடம்பரம் என்றழைக்கிறார்கள். அவர்கள் தயாரித்த மற்றொரு வகை விலையைப் பொருட்படுத்தாத, முற்றிலும் உலகத் தரமானது. இது ஆடம்பர விரும்பிகளுக்கானது. இந்த வகைகளைச் சந்தைப்படுத்தும் முகமாக மெத்தை வழங்குனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். எனவே அவர்களால் பிற தயாரிப்புகளுக்கும், பெப்ஸ் மெத்தைக்கும் இடையிலான வேறுபாடுகளையும், இதன் சாதக அம்சங்களையும் வாடிக்கையாளர்களிடம் பொருத்தமான வகையில் எடுத்துரைக்க முடிந்தது. ‘’ எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்தோம். அவர்களது பட்ஜட்டிற்குப் பொருந்தும் வகையிலும் கொண்டு வந்து நிறுத்தினோம். விற்பனையாளர்களைப் பயிற்று வித்தோம்’’ என்று பெருமிதமாகக் கூறுகிறார்.
இவர்களது மெத்தைகள் அவற்றின் தரத்திற்காகப் பரவலாக மக்களால் அறியப்பட்டுள்ளன. பொருத்தமான விலை, நீடித்த உழைப்பு ஆகியவை பற்றியும் பெப்ஸ் மெத்தை வாங்குவதற்கான காத்திருப்புக் காலம் ஏழு நாட்கள் என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். ‘’இதை 24 மணிநேரமாகக் குறைப்பது இப்போதைய முதன்மைக் குறிக்கோள்’’ என்றார்.
விளம்பரம்
‘’முதல் நான்கு வருடங்களாக நாங்கள் விளம்பரத்திற்கென்று எதுவுமே செய்யவில்லை. வாடிக்கையாளர்களுடனும், எங்கள் நிறுவன ஆட்களுடனும் நேரடி உறவை பலப்படுத்துவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தோம். சமீப ஆண்டுகளாகத் தான் விளம்பரம் செய்து வருகிறோம். பெப்ஸ் தனது முதல் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்தது கடந்த ஆண்டில் தான். சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேசில் நடந்த ஆசியக் கோப்பை போட்டிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது.
‘’துவக்கத்தில் நான் பஞ்சு மெத்தை தயாரித்தபோது மக்களின் மனப்பான்மை தூக்கத்திற்கு இவ்வளவு பணம் செலவளிக்க வேண்டுமா என்பதாகத் தான் இருந்தது’’ என்று மாதவன் நினைவு கூர்ந்தார். ஒரு வாடிக்கையாளர் தயாரிப்புப் பொருளை வாங்கும் போது பெரிதாக ஈடுபாடு காட்டாத ஒன்றாகத் தான் இருந்தது மெத்தைத் தயாரிப்புத் துறை. ‘’எந்த விதமான மெத்தையில் நீங்கள் தூங்குவீர்கள், எத்தனை கால இடைவெளியில் மெத்தையை மாற்றுவீர்கள் என்று ஒரு வாடிக்கையாளரைக் கேட்டால் அல்லது எத்தனை வகையான மெத்தைகள் இருக்கின்றன என்று அவர்களிடம் கேட்டால் பெரும்பாலான மக்களிடம் அதற்கான பதிலே இருக்காது’’ என்று கூறினார் வருத்தத்துடன்.
வழக்கமான தூங்கும் முறை என்ன என்பது குறித்து பெப்ஸ் நகரங்கள் அளவில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சராசரியான அளவு தூங்கும் நேரம் பெங்களூரில் மிகவும் குறைந்து நாலரை மணி நேரமாக இருக்கிறது (காலை எழுப்பு மணியுடன் அலாரம்) போராடிக் கொண்டிருப்பவன் நான் மட்டுந்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்) ‘’ஆழ்ந்த தூக்கம் போதுமான அளவு இல்லையென்றால் அது அவர்களின் ஆற்றலைப் பாதிக்கும் என்ற உண்மை குறித்து மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இல்லை’’ என்கிறார் மாதவன்.
கவனிக்க – இந்தக் கணக்கெடுப்பு உலகக் கோப்பை கால்பந்து துவங்குவதற்கு முன், படுக்கப் போகும் நேரம் 11.30 ஆக இருந்தபோது எடுக்கப்பட்டது.
பெயர் உருவாக்கம்
தங்கள் தயாரிப்பின் பெயரை மக்கள் மனதில் பதியச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்து மெத்தை நிறுவனம் என்ற சொல்லிற்குப் பதிலாக தூக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் பெப்ஸ் தனித்திறமை பெற்றுள்ளது. இவர்களது சில்லறை விற்பனையாளர்கள் கூட தங்கள் நிலையத்தின் பெயரை ‘த கிரேட் ஸ்லீப் ஸ்டோர்ஸ்’ (the great sleep stores) என்றே வைத்துக் கொள்கின்றனர். கடையின் கட்டமைப்பைக் கூட படுக்கை அறையைப் போன்றே அமைத்துள்ளனர். ‘’எங்கள் வாடிக்கையாளர்கள் மெத்தையில் படுத்துப் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறோம், எனக்கு சௌகர்யமாகத் தோன்றும் ஒரு மெத்தை உங்கள் உடலுக்கும் சௌகர்யமாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. போய் மெத்தையில் படுத்து உடலைத் தளர்த்திப் பாருங்கள். எனக்குப் பொருத்தமான ஷூ உங்களுக்கும் பொருந்தும் என்று உங்களால் சொல்ல முடியுமா..?’’ என்று குறிப்பிட்டுக் கேட்கிறார். த கிரேட் ஸ்லிப் ஸ்டோர் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை போன்ற பிற படுக்கைச் சாதனங்களையும் விற்பனை செய்கின்றன. ‘’ படுக்கைத் தயாரிப்பு என்பதே ஒரு கலை. பலரது தூங்கும் இயல்பு உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பதில்லை. பாதிக்கும் மேற்பட்டவர்கள் படுக்கை விரிப்பு கூட இல்லாமல் தூங்குகிறார்கள்’’ என்று வேதனையுடன் கூறுகிறார். கடையில் உள்ள விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுக்க உதவும் வகையில் விற்பனையாளர்கள் சரியாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மெத்தையை விற்பதற்குக் காட்டும் அதே அக்கறையை ஒரு தலையணை விற்பதற்கும் காட்டுகிறார்கள்.
தற்சமயம் பெப்ஸின் விற்பனைச் சந்தை தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு ஆகிய பகுதகளில் மிகப் பலமாக உள்ளது. ‘’நாங்கள் மகாராஷ்ட்ரா, கர்நாடகா சந்தையைப் பிடிக்க விரும்புகிறோம். அது ஒன்றும் கடினமான செயல் என்று நான் நினைக்கவில்லை’’ என்கிறார் மாதவன். இப்போது தான் மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் நுழைந்திருக்கிறார்கள். வெகு விரைவில் அஸ்ஸாமிலும் விற்பனையைத் துவக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் நேரடியாக மெத்தை விற்பனை செய்வது போக விருந்தினர் இல்லங்களுக்கும் விற்பனை செய்யும் முயற்சியில் நட்சத்திர விடுதிகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பெப்ஸின் வேலைப்பண்பு
‘’இங்கு கட்டொழுங்கான வேலைக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறோம். ஆனால் அதிகாரி – ஊழியர் என்ற தொழில் உறவை விட வழிகாட்டி – சீடர் என்ற உறவைப் பேணவே விரும்புகிறோம். தொடர் விற்பனையை உறுதிப்படுத்தக் கூடிய முறைகளிலும், செயல்பாடுகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்று விளக்கினார்.
ஆலோசனைகள்
ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்கு முனைப்பும் உறுதியும் இருக்குமானால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள். ஏதேனும் செய்ய வேண்டும் என்று உங்கள் மனதில் ஏற்படும் துடிப்பை விட முக்கியமானதல்ல உங்கள் தொலை நோக்கு. எங்கும் தேங்கி விடாதீர்கள். ஒவ்வொரு சூழலின் தேவைகளும் வேறு வேறு. எனவே நீங்கள் உங்களை இணக்கமான ஒருவராக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வயதிலும் என்னை தகுதிப் படுத்திக் கொள்ளும் கற்றலுக்காக நிறைய நேரம் செலவளிக்கிறேன்.