'முதியோர்களின் நலன் காக்க நாங்கள் இருக்கிறோம்'-மூன்று நண்பர்கள் தொடங்கிய ‘Naamcare' முதியோர் சேவை நிறுவனம்!
’நாம்கேர்’ சென்னையின் முதல் முதியோர் பராமரிப்பு சேவை நிறுவனம். இந்நிறுவனம் முதியோர்களுக்கான அத்தியாவசியமான தேவைகளுக்கான சேவைகளை வழங்குகிறது. அத்துடன் வழக்கத்திற்கு மாறான பொழுதுபோக்கு சேவைகளையும் அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் அவர்களது வீட்டிலேயே வழங்குகிறது.
சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் மூத்த குடிமக்களுக்கு அவர்களது குடும்பம் வலுவாகும் விதத்தில் சமூகத்துடன் ஒருங்கிணைய ஊக்கமளிக்கும் வகையிலும் சுதந்திரமளிக்கும் விதத்திலும் சேவையளிக்கின்றனர் நாம்கேர். முதியோர்களின் ஆரோக்கியத்துடன் சமூக தேவைகளுக்கான தீர்வில் கவனம் செலுத்துகின்றனர்.
பெற்றோர்களுக்கான மருத்துவ மற்றும் மருத்துவமல்லாத அனைத்து தேவைகளுக்கும் அவர்களது குழந்தைகளின் சார்பாக நாம்கேர் செயல்படுகிறது. முதியவர்கள் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உடல் உபாதைகள் குறையும். எனவே இவர்களது சேவை வாயிலாக அவர்களை மகிழ்ச்சியை பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நாம்கேர் (Naamcare) நிறுவனம் 23-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. நவம்பர் மாதம் 2016-ம் ஆண்டு 13-ம் தேதியிலிருந்து தங்களது சேவைகளை சென்னையில் துவங்கியுள்ளனர்.
முதியோர் சேவைக்கான விதை உருவான தருணம்
நாம்கேர்-ன் மூன்று நிறுவனர்களுக்கும் முதியோர்கள் அனுபவிக்கும் வலி குறித்த தனிப்பட்ட அனுபவங்கள் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அனிதாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது நண்பர் வெளியூரில் இருப்பதாகவும் அவரது அப்பாவிற்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். உடனே அந்த நண்பரின் வீட்டிற்குச் சென்று ஆம்புலன்ஸை அழைத்து அருகிலிருந்த மருத்துவமனையில் அட்மிட் செய்தார் அனிதா. தனது நெருங்கிய நண்பரின் அப்பாவிற்கு இப்படி ஒரு நிலை ஏற்படும்போது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிப்பவர்களின் வயதான பெற்றோர் தனியாக வசித்து வரும் நிலையில் எத்தகைய பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்று அந்த தருணத்தில்தான் யோசித்தார். இந்த யோசனையின் விளைவுதான் ’நாம்கேர்’.
நிறுவனம் தொடங்க உந்துதல்
இன்றைய உலகில் குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினரின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
”வயது முதிர்ந்தோரின் பிரச்சனைகளை தீர்க்க வெகு சில முயற்சிகளே எடுக்கப்படுகின்றன. எனவே மூத்த குடிமக்களுக்கான சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் தீர்மானித்தோம். கூட்டுக்குடும்ப முறை வழக்கத்தல் இல்லாத இன்றைய நவீன சூழலில் முதியோர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர் என்பதை உணர்ந்தது இத்தகைய ஸ்டார்ட் அப் துவங்க உந்துதலாக அமைந்தது,” என்கிறார் அனிதா.
தற்போதைய சூழலில் முதியவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு சேவை புரியவேண்டும் என்கிற இவர்களது நோக்கம் உன்னதமானதாக இருப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவர்களுக்கு ஆதரவளித்தனர்.
சீனியர் சிட்டிசன்ஸ் சப்போர்ட் ஃபோரம் இவர்களது பயணத்திற்கு வெகுவாக ஆதரவளித்து ஊக்கமளித்து வருகிறது. பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் ஆகியோரும் ஆதரவளிக்கின்றனர்.
ஸ்டார்ட் அப் செயல்படும் பகுதி
ஹெல்த்கேர் சந்தையில் குறிப்பாக முதியவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். தற்போது இந்தியாவில் ஹோம் ஹெல்த்கேர் சந்தை 4 பில்லியன் டாலராக உள்ளது. 2022-ல் 10 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 10.30 கோடி முதியோர்கள் உள்ளனர். இதில் 1.06 கோடி முதியோர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இவர்களது முதல் வாடிக்கையாளர் குழு அமைக்கும் இலக்கு சென்னை. இங்கு 12.3 லட்சம் முதியோர்கள் உள்ளனர். வளர்ந்து வரும் இந்தச் சந்தையில் சில ஹோம் ஹெல்த்கேர் வழங்குவோர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் நாம்கேர் மட்டுமே மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத சேவைகளில் முழுமையான தீர்வை ஒரு முழுமையான அணுகுமுறையில் வழங்குகின்றனர்.
நாம்கேர் தீர்வளிக்கும் பிரச்சனைகள்
முதியோர்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் :
• தனிமை, மன அழுத்தம், மகிழ்ச்சியின்மை
• உடல்நலமின்மை, ஆரோக்கியமின்மை
• காயமேற்படுவதற்கான ஆபத்து நிறைந்த சூழல்
• ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு பாதுகாப்பற்ற உணர்வு
வெளிநாடுகளிலோ அல்லது அவர்களை விட்டு தொலைவிலோ இருக்கும் குழந்தைகளுக்கு இவை அனைத்தும் கவலை அளிக்கும் விஷயங்களாக இருக்கிறது.
தீர்வு
இந்த பிரச்சனைகளுக்கு ஒரு விரிவான தீர்வளிக்கின்றனர். இவர்களது சேவைகளை அத்தியாவசியமானவை மற்றும் தேவை சார்ந்தவை என வகைப்படுத்தியுள்ளனர்.
அத்தியாவசியமானவை – மருத்துவமல்லாதவை சேவை; தோழமையான ஒரு துணை, சமூகத் தொடர்பு, வீட்டிற்குள் பொழுதுபோக்கு, வீட்டுத் தேவைகள், முதியோர்களுக்கான பிரத்யேக உணவு போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவையில் இடம்பெறும்
தேவை சார்ந்தவை – மருத்துவ சேவை; தேவையான நேரத்தில் தக்க மருத்துவ வசதி, நர்ஸ், பராமரிப்பவர், பிசியோதெரபிஸ்ட் போன்றோர் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
”சில்வர், கோல்ட் மற்றும் ப்ளாடினம் என வருடாந்திர மெம்பர்ஷிப் பேக்கேஜ் வழங்குகிறோம். வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப சேவை எடுத்துக்கொள்ளலாம். முதியவர்களுக்கான பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மூத்த நிபுணர் தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளரை சென்று பார்வையிடுவார்கள்.”
மெம்பர்ஷிப் பேக்கேஜிற்கான கட்டணம் சில்வர் – மாதக்கட்டணம் 2,500 ரூபாய், கோல்ட் - மாதக்கட்டணம் 4,500 ரூபாய், ப்ளாட்டினம் - மாதக்கட்டணம் 6,000 ரூபாய் என்று வகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனர்கள் மற்றும் குழு விவரம்
நிறுவனர் மற்றும் சிஇஓ கே. அனிதா ஐடி, நிதி மற்றும் வங்கி பிரிவில் பத்தாண்டு அனுபவம் பெற்றவர். இணை நிறுவனரான நெமிநாதன் மார்கெட்டிங், செயல்முறை மற்றும் சேவை பிரிவில் 19 வருட அனுபவம் பெற்றவர். மற்றொரு இணை நிறுவனரான டாக்டர். வசந்தகுமார் 20 வருட மருத்துவ பயிற்சி பெற்றவர். ஐந்து வருட நோய்தடுப்பு பராமரிப்பு பிரிவில் அனுபவமும் தீவிர சிகிச்சை பிரிவில் 7 வருட அனுபவமும் பெற்றவர்.
ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளர், ஒரு நர்ஸ், இரண்டு பராமரிப்பாளர், துணையாக இருந்து ஆதரவளிப்போர் இருவர் என 6 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2 ஊழியர்களுடன் துவங்கி தற்போது 6 ஊழியர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நிறுவனர்கள் மூவர் மற்றும் 6 முழு நேர ஊழியர்கள் என தற்போது 9 உறுப்பினர்களுடன் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
முதலீடு மற்றும் வழிகாட்டிகள்
தற்போது இந்நிறுவனம் சுய நிதியில் இயங்கி வருகிறது. ஸ்ரீராம் பாரத்வாஜ் மற்றும் சுப்பராஜு, சீனியர் சிட்டிசன்ஸ் சப்போர்ட் ஃபோரம் செயலாளர் ஆகிய இருவரும் இவர்களது ஆலோசகர்கள். சுய நிதியில் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற சேவைகளை வழங்குவதே திட்டம். அதன் பிறகு நிதியை உயர்த்தி சென்னை மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளனர்.
சந்தித்த சவால்கள்
இவர்களது செயல்பாடுகளைத் துவங்குகையில் தரமான ஊழியர்களைக் கண்டறிவது முக்கிய சவாலாக அமைந்தது. நிறுவனத்தில் பணியிலமர்த்தும் ஒவ்வொரு ஊழியரும் சைக்கோமெட்ரிக் மதிப்பீட்டு முறை மற்றும் பிஜிசி பின்பற்றினர். இதனால் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடிந்தது.
அடுத்ததாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமான காரணத்தினால் அவர்களது தேவையை நிறைவேற்ற அதிகம் பங்களிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தரமான சேவை வழங்குவதில் நிலைத்தன்மையை ஊழியர்களிடையே பராமரிப்பது முக்கிய சவாலாக அமைந்தது.
”இப்படிப்பட்ட சூழல்களை திறம்பட எதிர்கொள்ள எங்கள் ஊழியர்களுக்கு முதியோர் பராமரிப்பு குறித்த பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இந்தத் துறையில் எங்களின் சேவை சிறப்பானதாக இருப்பதை தற்போது வாடிக்கையாளர்கள் உணர்ந்துள்ளனர்,” என்கிறார் நிறுவனர் டாட்டர் வசந்தகுமார்.
அங்கீகாரம்
சிலிக்கான் வேலி சார்ந்த ஸ்டார்ட் அப் ஆக்ஸலரேட்டரான ஃபவுண்டர் இன்ஸ்டிட்யூட் இவர்களுக்கு ஆதரவளித்து உதவுகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி அன்று நடைபெற்ற ஃபவுண்டர் இன்ஸ்டிட்யூட் பட்டமளிப்பு விழாவில் நாம்கேர் நிறுவனம் சிறந்த நிறுவனத்திற்கான விருதைப் பெற்றது. நேச்சுரல்ஸ் நிறுவனர் சி குமரவேல் மற்றும் கெவின்கேர் நிறுவனர் அசோக் குமார் ஆகியோரிடமிருந்து விருதினை பெற்றனர்.
IITM Research Pak-ல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி Be a Change ஏற்பாடு செய்திருந்த Pitchfest போட்டியில் முதலிடம் பிடித்து ’ரைஸ் இந்தியா’ விருதைப் பெற்றனர்.
”தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறோம், இரண்டு வருடங்கள் சென்னையில் சேவையை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு மூன்றாமாண்டிலிருந்து தென்னிந்தியாவின் மற்ற நகரங்களில் விரிவடைய திட்டமிட்டுள்ளோம்,” என்று இணை நிறுவனர் நெமிநாதன் கூறினார்.
பலனடைந்த வாடிக்கையாளர்கள் வாயிலாக நாம்கேர் சேவைக்கான சான்று
எஸ் ரங்கசாமி பகிர்கையில்,
“எங்களது குழந்தைகள் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். என்னுடைய மனைவிக்கு நீரிழிவு நோய் இருப்பதால் மருத்துவ கண்காணிப்பின் அவசியம் இருந்தது. நான் பணி விஷயமாக பயணிக்க நேர்ந்தபோது நாம்கேர் ஊழியர்கள் என்னுடைய மனைவியை சிறப்பாக கவனித்துக் கொண்டனர். அவர்கள் காட்டும் அக்கறை மற்றும் ப்ரொஃபஷனலான அணுகுமுறை காரணமாக எங்களது குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டனர்.”
திருமதி. பத்மா தன் அனுபவத்தை பகிர்கையில்,
”என்னுடைய அப்பாவின் வயது 92. அவரை எப்படி முறையாக கவனித்துக் கொள்வது என்று நினைத்து கவலைப்பட்டேன். அவரை கவனித்துக்கொள்ள அக்கறையுள்ள நபரை வழங்கி எனக்கு நாம்கேர் உதவிக்கரம் நீட்டியது,” என்றார்.
இன்று இருக்கும் இந்த அவசர யுகத்தில் அவரவரை கவனித்துக் கொள்ளவே நேரமில்லாமல் சுழலும் பலருக்கு தங்களின் பெற்றோர்களை, வீட்டு முதியோர்களை கவனிப்பதில் சிரமம் இருப்பது சகஜமே. உள்ளூரில் இருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும், பெற்றவர்களின் அவசரத் தேவைகளுக்கு உடனே ஓடிவரமுடியாத சூழலில், நாம்கேர் போன்ற சேவை மையங்களின் அவசியம் இருக்கத்தான் செய்கிறது. இவர்களை போன்ற நிறுவனங்கள் முதியோர் சேவையில் கட்டணத்தைத் தாண்டி இதை முழுமனதுடன் செய்தால் நிச்சயம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வெற்றி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வலைதள முகவரி: Naamcare